Wednesday 13 January 2016

ஒரு சொல் – தமிழ்ச்சொல் - கயிறு


ஒரு சொல் – தமிழ்ச்சொல் - கயிறு
தழை ஆடைகளை இடுப்பில் கட்டிக்கொள்ளத் தேவையான கொடி வகைகளைக் கையால் இறுக்கிக்கட்டியதால் கை+இறு – கையிறு – கயிறு என அழைக்கத்தொடங்கி, நாளடைவில் இறுக்கிக் கட்டப் பயன்படுகிற எல்லாவற்றுக்குமே கயிறு எனப் பொதுப்பெயர் ஏற்பட்டது. அதைத் தயாரிக்கப் பயனாகிய மூலப் பொருளின் அடிப்படையில் தென்னை நார்க் கயிறு, தென்னங்கயிறு, பனங்கயிறு, தாழங்கயிறு, கற்றாழைக் கயிறு, நூல் கயிறு, சணல் கயிறு, துணிக்கயிறு, ரப்பர் கயிறு, நெகிழிக்கயிறு எனப் புழக்கத்தில் வர, கலப்பைக் காலின் நுனியை நுகத்தில் கட்டப் பயனாகும் கயிறு மாட்டின் தொடைப்பகுதி வார்களால் தயாரிக்கப்பட்டதால் தொடைக்கயிறு என்றும் அழைக்கப்படுகிறது. பயன்பாட்டு அடிப்படையில் ஊஞ்சல் கயிறு, தொட்டில் கயிறு, பிடித்து ஏறப் பயன்படும் பிடிகயிறு, வாளிக்கயிறு, இறைவட்டிக் கயிறு, கப்பிக் கயிறு, தூண்டில் கயிறு, தூக்கிலிடுவதால் தூக்குக்கயிறு, மாடுகளை நுகத்தில் பூட்டுவதால் பூட்டாங்கயிறு, சுருக்குப் போட்டுப் பிடிப்பதால் சுருக்குக் கயிறு, தாலியைக் கோர்த்தணிவதால் தாலிக்கயிறு, இடுப்பில் அணியும் இடுப்புக் கயிறு, அரைஞாண்கயிறு, என அழைக்கப்படுகிறது.  மாட்டின் கழுத்தில் கட்டும் கழுத்துக்கயிறு, மூக்கில் பூறிக் கட்டும் மூக்கணாங்கயிறு, கொம்புகளைச் சுற்றிக் கட்டும் கொம்புக்கயிறு, மூன்றையும் இணைத்துக் கையில் பிடித்து மாட்டின் தலையை இழுத்துக் கட்டுப்படுத்துவதால் தலைக்கயிறு  எனக் கயிற்றின் புழக்கம் ஏராளம். கயிறே மூலப் பொருளாகும் கயிற்றுக் கட்டில், கயிற்று மெத்தை, கயிற்றுத் தொட்டில், கயிற்றுப் பாலம், கயிற்று ஏணி, காற்று, கருப்பு அண்டாமல் தடுக்கும் காப்புக்கயிறு, மந்திரித்துக் கட்டும் மந்திரக்கயிறு என கயிறு பயன்படும் இடங்களும் ஏராளம். கயிறு இழுத்தல், கயிறு துள்ளல் என்ற விளையாட்டுகளும் தச்சுத் தொழில் மற்றும் கட்டுமானத் தொழில்களில் கயிறு கொண்டு கோடுபோடுவதைக் கயிறடித்தல் என்பதும் வழக்கமாகிவிட்டது. கயிறா அரவா எனத் தெரியாத மயக்கநிலைக்குக் கயிற்றரவு ஆயிற்று. புதுமைப்பித்தனின் `கயிற்றரவு` ஒரு அற்புதச் சிறுகதை. இத்தனையும் போக, எமன் கையில் பாசக்கயிறு என்றும் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியான இந்தத் தமிழ்க் கயிற்றினை பேச்சு வழக்கில் `கயறு` என்றும் `கயர்` என்றும் ஒலிப்பாருமுண்டு.
தமிழில் தோன்றிப் பிரிந்த மலையாளம் `கயறு` என்ற வரிவடிவத்தையும் `கயர்` என்ற ஒலிவடிவத்தையும் தமிழிலிருந்து தக்கவைத்துக்கொண்டது. தேங்காய் மட்டைகளை உரித்து எடுத்த கூந்தலில் கயறு தயாரிக்கப்படுவதைக் கண்ட ஆங்கிலேயர் மலையாளத் தென்னங் கயிறுகளைக் `காயர்` என ஒலித்து, அதை `coir` என வரிவடிவமாக்கி, coir industry, coir mat, coir brush, coir rope, coir எனப் பயன்படுத்துகின்றனர். 

coir rope


                                                                   
  coir mat

  கயிற்றுப் பாலம் - Rope Bridge - Ireland 






No comments:

Post a Comment