ஏற்பு (பல்கேரியன்) Acceptance
பல்கேரியன் மற்றும் ஆங்கிலம் : ஜ்ராவ்கா எவ்டிமோவா Zdravka Evtimova
தமிழில் ச.ஆறுமுகம்
(ஜ்ராவ்கா எவ்டிமோவா 24. 07. 1959ல் பல்கேரியாவின் பெர்னிக் நகரில் பிறந்தவர். பின் நவீனத்துவப் படைப்பாளி. அவரது கதைகள் அமெரிக்கா பிரான்சு, கனடா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போலந்து, ஜப்பான், ருஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட 23 நாடுகளில் வெளியாகியுள்ளன. பல்கேரியாவிலும் உலக அளவிலும் பல விருதுகள் பெற்றுள்ள இவர், சிறந்த ஒரு படைப்பாளராக மட்டுமல்லாமல், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் இலக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்றுள்ளார்.
இவரது Vassil மற்றும் Blood of a Mole என்ற இரு சிறுகதைகள் பல்கேரிய மொழியில் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. The Twins வெற்றிகரமான நாடகமாக்கப்பட்டுள்ளது. இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும் நான்கு நாவல்களும் வெளிவந்துள்ளன.
இவர் அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் 20 நாவல்களை பல்கேரிய மொழிக்கும் பல பல்கேரிய படைப்புகளை ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்துள்ளார். சல்மான் ருஸ்டி, வி.எஸ். நைபால், ரேமண்ட் கார்வர் ஜான் அப்டைக் போன்றவர்களின் படைப்புகளை பல்கேரிய மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார்.)
*****
மாலையில், அவளுடைய நாய் எப்போதும் முன்வாசலில் காத்துக்கிடக்கும். அதற்கு அவள் `மழை` எனப் பெயரிட்டிருந்தாள். அதன் காலடி சப்தம் நடு இரவிற்கும் பின்னால், ஜன்னல் கண்ணாடியில் வழியும் மழைத்துளி போலக் கேட்கும். ஃப்ரன்காய்ஸ்க்கு அந்த நாய்க்காகவே, அவன் இப்போதும் அந்த ஊரில் இருப்பதாகத் தோன்றும். அவன் போய்விட்டால் `மழை`க்குப் பட்டினி தான். அன்னா, அதற்குச் சாப்பாடு போட மறந்துவிடுவாள். அவள் அதைக் குளிக்க வைப்பதுமில்லை. அவள், நாள் முழுதும் இரவும் பகலுமாக அவளுடைய கதைகளிலும் மொழிபெயர்ப்புகளிலுமே மூழ்கிக்கிடந்தாள். அவள் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்த நாவல்களில் அன்புப் பெருங்கடல்கள் முழங்கிக்கொண்டிருந்தன. வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவுமேயில்லை. அவள் ஒரு வௌவாலைப்போல கணினியைப் பார்த்து அதுவே குறியென வெறித்துக் கொண்டிருந்தாள்; அவள் தலைமுடி கலைந்து பரந்துகிடந்தது. அவளது அகராதிகள் மேஜைக்கடியில், தரையில், அறை மூலைகளில் எனச் சிதறிக்கிடந்தன.
அறையின் ஒரு மூலையில், `மழை`, அதன் கந்தல் தலையணையில் படுத்தவாறு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. நீண்ட வாக்கியங்களோடு போராடிப் போராடித் தொடர்ச்சியாகச் சிலசமயம் புட்டியிலிருந்த பாலை, சிலசமயம் அதிக போதையேற்றும் கறுப்பு பியரும் குடித்துக் கொண்டிருந்தாள். அந்த பியர்தான் அவள் கண்களைச் சிவப்பாக்கி ஒரு நோயாளியின் கண்களைப் போல வீங்கச் செய்திருந்தது. ஃப்ரன்காய்ஸ் வீட்டுக்குள் வந்ததை, அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் `மழை`க்காகத் தட்டு ஒன்றில் பாலை ஊற்றினாள். அது பாலின் மணத்தை முகர்ந்து பார்த்தது. அவள் கண்களில் திடீரென ஒரு உற்சாகம் தென்பட்டது. சில நாட்களில், அவள் மழைக்கு பியரையும் கொடுப்பதுண்டு. பியர் குடித்த அது, வெள்ளையாய் மினுங்கும் கூர்மையான கொடும் பற்களைக் காட்டி உறுமும்.
ஃப்ரன்காய்ஸ் சமையலறைக்குள் நுழைந்து அவளுக்காகக் கொஞ்சம் பொதியப்பங்கள் தயார் செய்தான். அங்கணத் தொட்டியில் கழுவாத தட்டுகளும் பாத்திரங்களும் கிடந்தன. அவளுடைய அரணக் காலணிகளும் காலுறைகளும் மூலையில் கிடந்தன. அவள் விதவிதமான நிறங்களில் காலுறைகள் அணிந்தாள். அவனுடைய முழுக்கைச் சட்டைகளில் முதலில் கையிலகப்பட்ட ஒன்றை எடுத்து அணிந்திருந்தாள். சில நாட்களில் அவனுடைய தோல் மேல்கோட்டையும் கூடப் போட்டுக்கொள்வாள்.
அன்றைக்கு அவள் அந்த அறையைச் சிறிதுகூடக் காற்றோட்டமாகத் திறந்து வைக்கவேயில்லை. மதியத்திலேயே ஜன்னல் திரைகள் இழுத்து விடப்பட்டிருந்தன. ஜன்னல் பெரியதாக இல்லையென்றாலும், அதன் வழியே வெளிப்பக்கம் பார்ப்பதை ஃபிரன்காய்ஸ் எப்போதும் விரும்பினான். சிதிலமாகிப்போன பழைய கார்கள் நிரம்பிக் கிடந்த அந்தக் கிட்டங்கியைப் பார்த்தபோது அவனது உடம்பிலிருந்து உணர்வு முறுக்கம் தணிவதாக உணர்ந்தான். கெட்டுப்போன அந்தக் காற்றைச் சுவாசித்துக் கொண்டுதான் அவள் நூல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தாள். அதிலும் இன்று அவள் அவனை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. அவன் பொதியப்பங்களைக் கொண்டுவந்தபோது, அவள் அவற்றை ஓநாயைப் போல் விழுங்கித் தீர்த்துவிட்டு, அந்தக் கணமே அவனை மறந்துபோனாள். அவள் எதையோ ரகசியம் போல் முணுமுணுத்ததாக, அவனாகவே கற்பனை செய்துகொண்டு, படுக்கைக்குப் போனான்.
அவளது குரலுக்குப் பழகிப்போன மழை, அவள் பக்கத்திலேயே அவளது பழைய கணினியையும் அவளது அகராதிகளையும் வெறித்துக்கொண்டு காத்துக்கிடந்தது. அறை முழுதும் குறுவட்டுகளும் அவளது புத்தகங்களும், தனித்தனிக் காகிதங்களும் இறைந்துகிடக்க, ஃபிரன்காய்ஸ், அந்த முரட்டு மெத்தையில் தூங்கிப்போனான். நடு இரவு தாண்டி மிகவும் பின்னால், அவள் அவனருகில் வந்து படுப்பதை அரைவிழிப்பு நிலையில், உணர்ந்தான். அவன் தூக்கத்திலிருந்து முழுவதுமாக விழிக்கட்டுமேயென்றுகூட அவள் காத்திருக்கவில்லை. அவனைத் தண்டிப்பது போல வெறித்தனமாக முத்தமிட்டாள். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவனைப் புணர்ந்த அவள் திடீரென்று மிக மிக மோசமான வசவுச்சொற்களை நவம்பர் மாத மழையைப்போலப் பொழிந்து தீர்த்தாள். இனிமேலும் இதுபோல் அவனால் வாழ முடியாது. ஒவ்வொரு இரவும் அவனுக்காகக் காத்திருந்த அந்த மூச்சுமுட்டும் அசுத்தக் காற்றினை இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவளும் அவள் நாயும்! அவளுடைய நாயையும் அவளின் காதலையும் அவன் வெறுத்தான். பிரஸ்ஸல்ஸ் நகரின் பனிமூட்டத்துக்குள் அவனைப் பசியோடு தூக்கியெறிந்திருந்த அந்தக் கணம் மேகத்தின் பின்னால் ஒளியும் கதிரொளியாய் மறைந்தது.
அவன் அங்கிருந்தும் சென்றுவிடப் பலமுறை முயற்சித்தானென்றாலும், பாவுதளத்தின் மீது விழும் மழைத்துளிகளைப் போல் `மழை` அவனை விடாமல் பின்தொடர்ந்தது. அந்த நாய், ஒரு நாள், அவளது அகராதிகள் மற்றும் அவளது கதைமனிதர்கள் மத்தியில் செத்துத்தான் கிடக்கப்போகிறதென அவன் பயந்தான். ஈரம் மிகுந்து குளிரும் காற்றிலிருந்து எழுச்சியைப் பெறுவதற்காக அன்னா செல்லும் அந்தப் பழைய கார்க் கிட்டங்கியைச் சூழ்ந்திருக்கிற சேற்றுக்குட்டைக்குப் பின்னால், அது, பலமுறை அவனைத் தொடர்ந்து ஓடியிருக்கிறது. அன்னா மிகக் குறைவாகச் சாப்பிடுபவள். பழைய கார்கள் மத்தியில் உலவுவதாலேயே அவளது முகம் வெளிறி, இறுகித் தோன்றியது. `மழை` வெளியே போகும்போதெல்லாம் தூறல் ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக அந்த நாய் இலையுதிர் காலத்தை இழுத்துவந்தது.
.
.
அவன் அந்த வீட்டைவிட்டுச் சென்றுவிட்டால், வடக்குப் பக்கமாக இருக்கும் அந்த ஜன்னலுக்கு அன்னா வரப்போவதேயில்லையென்றும் அவள் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கும் கதைமனிதர்களை, அவளது கணினியின் வெளிச்சமே எரித்துக் கொன்றுவிடுமென்றும் அவனுக்குத் தோன்றியது.
அந்த அறைக்குள்ளிருக்கும் கனத்த காற்றினை – அவள் வரித்துக்கொள்ளும் மரபுத்தொடர், வழக்குமொழிப் புதிர்களோடுந்தான் – ஜன்னலைத் திறந்து வெளியேற்றித் தொலைக்க, எவரும் இருக்கப்போவதில்லை. அவளுடைய முட்டாள்தனமான காதலில் அவன் அலுத்துச் சலித்து, நோய்ப்பட்டுப் போனான். அவள், அவன் மார்பு மேலேயே படுத்து உறங்குகிறாள். அவள் வறண்டு மெலிந்த தோல் கொண்டவளாக இருக்கிறாள். `மழை` அவர்களை அமைதியாக நோக்குகிறது. அதன் வயது அதிகமாவதால் அதன் மேற்புற மயிர்கள் உதிர்ந்து மெலிந்து, பார்க்கப் பார்க்கத் துயரம் தருவதாக இருக்கிறது.
நல்லவேளையாக, எப்படியோ ஒருநாள் ஃப்ரன்காய்ஸ் அவளை விட்டுப் போய்விட்டான். பனிமூட்டத்தில் தீக்கங்குகளாக மினுங்கும் கண்களோடு `மழை` அவனைப் பின்தொடர்ந்து ஓடியது. அவன் பேருந்தில் ஏறியபிறகும், இலையுதிர்காலப் பனிமூட்டத்தை இழுத்து வந்து அமைதியான `நோட்ரே டேம் டி எவ்ரே` தேவாலயத்தின் கூம்புச் சிகர உச்சியில் கொண்டுபோய் விட்டுவிட்ட அந்தக் கிழடுதட்டி மெலிந்து அழுக்கடைந்த அந்த நாய், அட்டுப்பிடித்த அதன் முதுகுத்தோலுடன் அவன் பின்னாலேயே ஓடியது. ` குளிர்காலம் தொடங்குவதும் முடிவடைவதும் `நோட்ரே டேம் டி எவ்ரே` யில்தான் என்று அன்னா அவனிடம் சொல்லியிருக்கிறாள். அந்தத் தேவாலயத்தைச் சுற்றியமைந்த தெருக்களில் பிறக்கும் ஜனவரி மாதத்தின் குறுகிய, ஆனால், அமைதியான பிற்பகல்களை அவன் நேசித்தான். யாராவது டிரக் ஓட்டுநரோ அல்லது இருசக்கர மோட்டார் பைக் வாலிபனோ வாகனத்தை அந்த நாயின்மீது ஏற்றிவிட்டால், என நினைத்து வருந்தவும் செய்தான். அந்த நாள், ஃப்ரன்காய்ஸ் தன்னை விட்டுப் போகிற நாளென, அந்த ஜீவன் உணர்ந்திருக்கவேண்டும். அன்று, `மழை` பேருந்தின் பின்னாலேயே ஓடி, ரயில்நிலையத்திற்கே வந்துவிட்டது. ஃப்ரன்காய்ஸ் முதல் நடைமேடையில் நின்றிருந்த, அவன் எப்போதுமே விரும்பாத ஊஸ்டென்டே என்ற அந்த பெல்ஜியத் துறைமுக நகருக்குச் செல்லும் முதல் ரயிலுக்குள் தாவி ஏறிவிட்டான். நாய் பெரிதாக ஊளையிட்டு, ரயிலைத் தொடர்ந்து பாய்ச்சலெடுத்தது. ஆனால், சீக்கிரத்திலேயே தோற்றுப்போய், அதன் மெலிந்து பலவீனமான முதுகு அடிபடப் பரிதாபகரமாகத் தண்டவாளங்களுக்கிடையே விழுந்தது. ரயில் அதன் குகைப்பாதைக்குள் நுழைந்துவிட்டபோது அவன் `அப்பாடா` எனப் பெருமூச்சு விட்டான். `மழை` அவன் பார்வையிலிருந்தும் மறைந்தது. அதன் ஊளையும் மழையில் கரைந்தது. அதன் மீது ரயில் ஏதும் ஏறிவிட்டிருக்காதென்ற நிச்சயம் அவனுக்கிருந்தது. அப்படி அவன் நம்பினான்.
பின்னர், அந்த இதமற்றுக் குளிர்கிற அறை, அந்த ஜன்னல் வழியே தெரியும் பழைய கார்கள், அந்தக் கிட்டங்கியைச் சூழ்ந்திருந்த பெரிய கருஞ்சேற்றுக் குட்டையென எல்லா நினைவுகளையும் அழித்துவிட முயற்சித்தான். அவளது கணினி, இரவுகளில் வார்த்தைகளை உமிழ்ந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவளுக்காகப் பொதியப்பங்கள் செய்துகொடுக்க அங்கே யாருமிருக்கமாட்டார்களேயென நினைத்துப் பார்க்கக்கூட, அவன் வெறுத்தான்.
அவளது வீட்டுக்குத் திரும்பியும் சென்றுவிடவேண்டுமென, அவன் பலமுறை உணர்ந்தான். என்றாலும் அவளுடைய சிறுகதைகளுக்கு அப்பால், எட்டமுடியாத தூரத்தில், பெரும் இரைச்சல் கொண்ட நகரம் ஒன்றில் வாழ்வதற்காக அவன் மகிழ்ந்தான். சலிப்பு தருகின்ற மேற்கு- விலான்டெரன் நகரம், அதன் அதிவேகச் சாலைகளில் விரையும் கார்கள், குளிர்காலம், குகைப்பாதைகள் எல்லாமாகச் சேர்ந்து அவளது அகராதிகளிலிருந்தும் அவனைத் தடுத்துப் பிரித்தது. அவள் தெருவோடு இணைக்கும் அந்தப் பாலங்களையும் அவன் வெறுத்தான். அந்த ஊரின் நினைவுகளை மொத்தமாகத் தூக்கியெறிய முயன்றான். அதனாலேயே அவன் ஒரு நாயை வாங்கினான். அதற்கும் `மழை` என்றே பெயரிட்டான். ஆனால் அந்த `புல் டெரியரி`ன் கண்களில் இலையுதிர்காலமோ, அமைதியான பனிமூட்டமோ இல்லை. அவளுடைய நாயைப்போல அது அசிங்கமாகவும் இல்லை.
அவளுக்கு என்னவாகியிருக்குமோவெனச் சிலநேரங்களில் அவன் நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால், வாழ்க்கையை அவளோடு சேர்ந்து மேற்கொண்டும் வீணடிக்கிற அளவுக்கு, அது ஒன்றும் அவனிடம் அதிகமாக இல்லை. ஏதோ நல்லவேளை, அவன் இன்னொரு பெண்ணை, பளிச்சென்று சுத்தமாக, உடல் நலம் மிக்கவளாகத் தேடிக்கொண்டான். அவளும் பழைய கணினி, கருங்குட்டை, பழைய கார்கள் என நினைக்கச் செய்யாதபடி, அவன்மீது காதலாக இருந்தாள். ஆனாலும், அவன் மிகமிக அரிதாக, எப்போதாவது ஒருமுறை கனவுகளில் அந்தப் பழைய அமைதியான மழைத்துளிகளைக் கேட்பதுண்டு.
கோடைகாலத் தொடக்கத்தில் ஒருநாள், அவனுக்கும் அந்தப் பழைய கார்களின் வரிசைகளுக்கும் மத்தியில் நீண்டுகிடந்த மேற்கு- விலான்டெரனைத் தாண்டி வந்தான். அவனுக்கு அங்கு வேலை எதுவும் இல்லை; அவன் ஒன்றும் அன்னாவைச் சந்திக்க விரும்பவில்லை. அவன் நெஞ்சத்தின் ஆழத்தில், அவளை ஒருமுறையாவது கண்ணால் கண்டுவிட வேண்டுமென்ற ஆசை துளிர்விட்டிருக்கலாம். அவ்வளவுதான். அதற்குமேலாக எதுவுமில்லை.
அன்று அவன் வாடகைக்காரிலிருந்தும் அமைதியாக, எந்த உணர்வுமின்றித் தான் இறங்கினான். ஊஸ்டென்டேயில் அவன் ஒரு நல்ல வேலையிலிருந்தான். நிறையச் சம்பாதித்து ஏராளமான பணத்தையும் சேர்த்துவிட்டிருந்தான். அந்த அசிங்கம் பிடித்துப் பாழடைந்த தெருவை மறந்துவிட்டிருந்ததாகத் தான் நினைத்தான். ஆனால், அது அப்படியில்லை. அந்தப் பாதையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவன் அறிவான்.
அவள் வசித்த கட்டிடத்தை நோக்கி ஓடவேண்டும் போலத் தோன்றியது. ஆனால், அதற்குப் பதிலாகக் கொஞ்சம் குடித்தான். ஒரு கிளாஸ் பிராந்தி எப்போதுமே அவனுக்கு உதவுவதாக இருந்தது. அதிவேகச்சாலையும் விரையும் கார்களும் மறைந்துவிட்டன. அங்கே குகைப்பாதைகள்கூட இல்லை. அந்த வீடு அவனுக்காகக் காத்திருந்தது. அந்தக் குட்டையும் அங்கேயே, பெரியதாக இலையுதிர்காலம் போலக் கருநிறத்தில் இருந்தது. திடீரெனத் தன் பின்னால் மழைத்துளிகளைக் கேட்டான். மழை வந்தது. ஆமாம், உண்மையிலேயே மழை பெய்தது! அவன் வாழ்ந்த நோர்ட்ஸீ நகரில் அமைதியான பிற்பகலோ வெள்ளிமழையோ இருந்ததேயில்லை. அங்கே, அவன் வீட்டில் சுத்தமான தரைவிரிப்புகள், புத்தம் புதிதான நவீன மின்கருவிகள், அழகாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள், ஓவியங்கள் இருந்தன. ஒரு அகராதி கூட அங்கு கிடையாது. பல வருடங்களுக்கு முன்னால், ஒருநாள் அவன் மனைவியிடம், மொழிபெயர்ப்பாளரான ஒரு பெண்ணைத் தனக்குத் தெரியுமென்றும், அவளுடைய சிறுகதைகளின் புனைவுமாந்தர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். அவன் மனைவி அன்றே வீட்டிலிருந்த அகராதிகள் அனைத்தையும் தூக்கி வெளியே எறிந்துவிட்டாள். அவள் அவனை நேசித்ததோடு, அவனை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்ளவும் செய்தாள்.
ஃப்ரன்காய்ஸ் தெளிவற்ற நிழலுருவம் ஒன்றைக் கண்டான். வாசலில் ஒரு பெண் தோன்றினாள். அவனுக்கு மூச்சே நின்றுவிடும்போலிருந்தது. அவள் அவ்வளவு மெலிந்து வெளிறிக் காணப்பட்டாள். கிட்டங்கியில் சத்தமெதுவும் இல்லை. மழை திடீரென நின்றுவிட்டது. அவன் பார்த்திருந்த பெண்களிலேயே மிகவும் அழகான பெண்ணாக அவள் ஒருத்தி மட்டுமே இருந்தாள்.
அவன் திடீரென்று அழகான தரைவிரிப்புகளும், புத்தகங்களும், சுவர் மீதான ஓவியங்களும் கொண்ட அவனது சுத்தமான வீட்டினை நினைத்தான். வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான ரயிலைப் பற்றி நினைத்தான். அவன் மேற்கு விலான்டிரெனைத் தாண்டி வந்ததென்னவோ அவள் வாழ்கின்ற கட்டிடத்தோடு சிறிது பேசவேண்டுமென்றுதான்.
மழைத்துளிகள் விழுவதை அவனால் கேட்க முடிந்தது. அவனால் அசைய முடியவில்லை. அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்துவிட்டதென்று அவனுக்குத் தெரிந்தது. மேற்கு விலான்டெரெனின் பரந்த சமவெளிகளால் அவனுக்கு உதவமுடியவில்லை. அவன் அருந்திய பிராந்தியாலும் கூடத்தான் முடியவில்லை. குகைப்பாதைகள் அனைத்தும் மறைந்துவிட்டன. அவன் சுழன்று திரும்பினான். மெலிந்து எலும்பெடுத்த ஒரு நாய் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. ஒருநிமிடம், அவன் கத்திவிரட்டியிருப்பான். அந்த நாயின் மேல்தோல் அசிங்கமாகப் பரிதாபமாக இருந்தது. ஆனால், அவன் அதை நேசித்தான். மழைத்துளிகளைப் போலக் காலெடுத்துவைக்கும் அந்த நாய் அங்கேயே நின்று அவனையே பார்த்தது. அதன் கண்களில் ப்ரஸ்ஸல்ஸின் வெள்ளிப் பிற்பகல்கள் மின்னிக்கொண்டிருந்தன. அந்தக் கண்கள் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தன. ஃப்ரன்காய்ஸ் வந்துவிட்டதில் அவற்றுக்குப் பெருமகிழ்ச்சி. எத்தனையோ இலையுதிர் காலங்கள், குளிர் காலங்களில் அவன் அந்த நாயை நேசித்திருக்கிறான்.
‘’மழை! மழை!’’ என ஃப்ரன்காய்ஸ் ரகசியம் போல் அழைத்தான்.
நாய் நடுங்கியது, அவனை நோக்கி நகர்ந்து, அவன் கை அதன் அழகற்ற முதுகின்மீது படுமாறு நின்றது.
‘’ அன்னா எப்படி இருக்கிறாள்?’’ – ஃப்ரன்காய்ஸ் கேட்டான்.
—Zdravka Evtimova
http://mylostwords.blogspot.in/2010/11/zdravka-evtimova-acceptance.html
மலைள் இணைய இதழ், இதழ் 39. டிசம்பர் 02, 2013 இல் வெளியானது.
No comments:
Post a Comment