Friday 8 January 2016

போலிஷ் சிறுகதை - காற்றில் பறந்த யானை - Slawomir Mrozek

காற்றில் பறந்த யானை – The Elephant 

போலிஷ் : ஸ்லாவோமிர் மிரோஜெக் / Slawomir Mrozek 

ஆங்கிலம்: ஹலினா ஆரென்ட்ற் Halina Arendt 

தமிழில்  ச.ஆறுமுகம்

download (4)

1.1237792980.elephant-bath_thumb[2]
ஸ்லாவோமிர் மிரோஜெக் போலந்து நாட்டைச் சேர்ந்த நாடகவியலாளர், புனைகதைப் படைப்பாளர் மற்றும் கேலிச்சித்திரக்காரர் ஆவார். 1930, ஜூன் 29 ல் பிறந்த இவர், 83 ஆம் வயதில் 2013, ஆகஸ்ட், 15 அன்று மறைந்தார்.
போலந்து மக்கள் குடியரசின் பொதுவுடைமை ஆட்சியின்போது, போலந்து ஐக்கிய தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியல் செய்தியாளராக வாழ்க்கை நடத்தினார். 1963 ல் பொதுவுடைமைக் கட்சியிலிருந்தும் வெளியேறிய இவர் 1950 லேயே நாடகங்கள் எழுதத் தொடங்கினார். இவரது நாடகங்கள், அரசியல் மற்றும் வரலாற்றுத் தரவுகள், திரிபுகளுடன் யதார்த்தமற்ற தன்மையும் எள்ளல்களும் கலந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தும் `அபத்தப் புனைவுகள்` (absurdist fiction) வகைப்பட்டவை.
இவரது The Elephnt சிறுகதைத் தொகுதியில் 42 கதைள் உள்ளன. அனைத்துமே அரசியல் எள்ளலும் சமூக விமர்சனக் கிண்டலுமான உருவகக் கதைகள்.
********
உயிரியல் பூங்கா இயக்குநர் ஒரு சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார். அவர் பூங்காவின் விலங்குகளை அவரது சொந்த வருவாய்க்கான படிக்கற்களாகவே நினைத்தார். அந்த நிறுவனத்தின் கல்வி முக்கியத்துவம் குறித்தான ஆக்கபூர்வ முயற்சிகளிலும் அவர் கவனம் கொள்ளவில்லை. பூங்காவிலுள்ள ஒட்டகச்சிவிங்கி குட்டைக்கழுத்து கொண்டதாக இருந்தது; மரநாய் தங்குவதற்கெனத் தனியிடம் கூட இல்லை; சீட்டி அடிக்கும் சீழ்க்கைப் பறவைகள் ஆர்வத்தையெல்லாம் இழந்து, எப்போதாவது அதுவும் வேண்டாவெறுப்பாகச் சீட்டியடித்தன. பள்ளிக் குழந்தைகள் அந்த உயிரியல் பூங்காவுக்கு அடிக்கடி வருவதால் இத்தகைய குறைகள் அங்கிருக்கக்கூடாது. அது தலைநகருக்கு வெளியிலமைந்த ஒரு மாநில அளவிலான சிறிய விலங்குக் காட்சிச் சாலைதான்; ஆனாலும் அதில் சில முக்கியமான விலங்குகள், எடுத்துக்காட்டாக, யானை போன்றவை இல்லாமலிருந்தன. அதை ஈடுகட்ட முயற்சிகள் மேற்கொண்டு, தற்காலிக நடவடிக்கையாக மூவாயிரம் முயல்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. எனினும் வளர்ச்சிப்பாதையில், மத்தியத் திட்டமிடுதல் மூலம் நாட்டின் குறைகள் அனைத்தும் படிப்படியாகத் தீர்வுசெய்யப்பட்டுவந்தன.
இப்படியாக யானையின் முறை வந்தது. யானை ஒன்று அந்தப் பூங்காவுக்கு ஒதுக்கப்படுமென்ற அறிவிக்கை போலந்து விடுதலை நாளான ஜூலை, 22 அன்று உயிரியல் பூங்காவுக்கு வரப்பெற்றது. பூங்காவின் பணியில் முழுமையான அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். அதிலும் இயக்குநர் அந்த ஒதுக்கீட்டை மறுத்து வார்சாவுக்குக் கடிதம் எழுதியுள்ளதோடு, பூங்காவுக்கு இன்னும் சிக்கனமான முறையில் ஒரு யானை வாங்குவதற்கான திட்டத்தினை முன்மொழிந்துள்ளதாக அறிந்தபோது, அவர்களது வியப்பு அதைவிடப் பன்மடங்கானது. ‘’நானும் எனது மொத்த ஊழியர் குழுவும்,’’ – முன்மொழிவில் அவர் குறிப்பிட்டு எழுதியதாவது, ‘’ஒரு யானை என்பது போலந்து சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இரும்பு வார்ப்படத் தொழிலாளர்களின் தோளில் எவ்வளவு பெரிய கனமான சுமையாக அமையும் என்பதை நன்றாக அறிவோம். நமது பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக, தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள யானைக்குப் பதிலாக எங்கள் சொந்த யானை ஒன்றை நிறுவிட நான் கருத்துரைக்கிறேன். ரப்பரில் தேவையான அளவு, கன பரிமாணத்தில் யானை ஒன்றைச் செய்து காற்றடித்து, உப்பச்செய்து தடுப்பு வேலிக்குள் நிறுத்திவிடலாம். மிகவும் கவனமாக வண்ணம் பூசிவிட்டால், மிக அருகிலிருந்து கூர்மையாகப் பார்த்தால் கூட உண்மையான யானைக்கும் ரப்பர் யானைக்குமான வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிட முடியாது. யானை ஒரு சோம்பலான விலங்கு என்பதுடன், அது குதிக்கவோ, ஓடவோ, அல்லது தரையில் உருளவோ செய்வதில்லையென்பதையும் கனிவுடன் நினைவுபடுத்துகிறேன். ‘’இந்த யானை அசாதாரணமான சோம்பலுடையது’’ என்ற ஒரு தகவல் பலகையினை மட்டும் தடுப்பு வேலியில் பொருத்திவிடுவோம். இந்த வகையில் சேமிக்கப்படும் நிதியினை புதியதொரு அதிவேக ஜெட் விமானம் உருவாக்குவதற்கு அல்லது வரலாற்றுப் புகழ்மிக்க தேவாலயங்களைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்த ஒதுக்கீடு செய்துகொள்ளலாம். எனது இந்தக் கருத்துருவும் திட்ட முன்வரைவும் நமது பொதுவேலைத்திட்டம் மற்றும் போராட்டத்துக்கான எனது பணிவார்ந்த பங்களிப்பு.”.
என்றென்றும் தங்கள் பணிவுமிக்க ஊழியன்.
கையொப்பம்.
கருத்துரு தாங்கிய குறிப்புக்கடிதம் அக்கறையற்ற ஒரு எழுத்தரின் கைகளில்தான் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். அவர், அதிகார அலுவல்முறையின் வழக்கமான கடமைப் போக்கில், அந்த நிகழ்வினைச் சரியாக மதிப்பிடத்தவறி, நிதிச்சுமையைக் குறைப்பது தொடர்பான வழிமுறை நெறிகாட்டலில் குறிப்பிட்டுள்ள அடிப்படைகளைப் பின்பற்றி, திட்டத்தை ஏற்றுக்கொண்டார். ஒப்பளிப்பு வரப்பெற்றதும், பூங்கா இயக்குநர் காற்று நிரப்பக்கூடிய பெரிய ரப்பர் யானை ஒன்றினைச் செய்யுமாறு உத்தரவிட்டார். காற்றடிக்கும் பணி இரண்டு விலங்கு பராமரிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் எதிரெதிர் முனையிலிருந்து காற்றடிக்கவேண்டும். அதை ரகசியமாகச் செய்யவேண்டியிருந்ததால் மொத்தப் பணியினையும் இரவுநேரத்திலேயே மேற்கொள்ளவேண்டியதாயிற்று. இதற்கிடையில் நகரமக்கள் உண்மையான யானை வரப்போகிறதென அறிந்து அதைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தனர். அதுவுமின்றி, பணியை விரைந்து முடிக்கும்படி இயக்குநர் வேறு, அவசரப்படுத்திக்கொண்டிருந்தார். அவரது திட்டம் வெற்றியாகி, அவருக்கு அரசின் ஊக்கத்தொகை அறிவிக்கப்படுமென்று எதிர்பார்த்தார். இப்பணிக்கெனத் தற்காலிகப் பணிமனையாக மாற்றிக்கொள்ளப்பட்ட கட்டிடத்தின் உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, பணியாளர்கள் காற்றடிக்கத் தொடங்கினர். இரண்டு மணி நேர முயற்சிக்குப் பின்பும், அந்தக் கருஞ்சாம்பல் நிற உடற்பை மிகக் குறைந்த அளவிலேயே உப்பி, யானையின் சாயலைச் சிறிதும் ஒத்திராத ஒரு தட்டையாகச் சப்பிப்போன உருவத்தையே அடைந்திருப்பதாக அவர்கள் நினைத்தனர்.
இரவில் நேரம் செல்லச் செல்ல, மனிதச் சந்தடி குறைந்து நரியின் ஊளை மட்டுமே பூங்காவினுள் கேட்டது. வயது முதிர்ந்த நிலையில், அதுபோன்ற கடினமான பணிக்குப் பழக்கமில்லாத அந்த இருவரும் களைப்புற்று, ஏற்கெனவே அடித்த காற்று வெளியேறிவிடாமல் உறுதிப்படுத்திக்கொண்ட பின், வேலையைச் சிறிது நிறுத்தினர். ‘’இப்படியே போய்க்கொண்டிருந்தால், இது விடியற்காலை வரைக்கும்கூட இழுத்துப் போய்விடும்.’’ என்று அவர்களில் ஒருவர் வாய்விட்டுப் புலம்பினார். ‘’வீட்டுக்குப் போனதும் என் மனைவியிடம் என்ன சொல்லப்போகிறேனென்று எனக்கே தெரியவில்லை. இரவு முழுவதும் யானைக்குக் காற்றடித்துக் கொண்டிருந்தேன் என்று நான் சொன்னால், அவள் நம்புவாளா, என்ன?’’
‘’ஆமாம், சரிதான், நாமென்ன ஒவ்வொரு நாளும் யானைகளுக்குக் காற்றா அடிக்கிறோம்!’’ அடுத்தவரும் அதை ஒப்புக்கொண்டார். ‘’இதெல்லாம் நமது இயக்குநர் ஒரு கம்யூஊஊனிஸ்டாக இருப்பதால்தான்.’’
அடுத்த அரைமணி நேரத்துக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் களைப்புற்றார்கள். யானையின் உடல் என்னவோ பருக்கத்தான் செய்தது; இருந்தாலும் அதன் முழு வடிவத்தை எட்டுவதற்கு இன்னும் வெகுதொலைவு இருந்தது. ‘’இது, போகப் போக அடிக்கவே முடியவில்லை. நிரம்பவும் கடினமாக இருக்கிறது.’’ முதல் பணியாளர் அலுத்துக்கொண்டார். ‘’உண்மையாகச் சொல்வதெனில், இது ஒரு கொத்தடிமை வேலை,’’ – அடுத்தவர் ஒப்புக்கொண்டார். ‘’கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்.’’
அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களில் ஒருவர் சுவரில் ஒரு வாயு இணைப்புக் குழாய் ஒன்றைக் கண்டுவிட்டார். யானைக்குள் முழுவதுமாக வாயுவை நிரப்பி, வேலையை எளிதில் முடித்துவிடலாமென அவருக்குத் தட்டுப்பட்டது. அவர் தனது யோசனையை அவரது கூட்டாளியிடம் பகிர்ந்துகொண்டார். இருவரும் அதை முயற்சித்துப் பார்க்கத் தீர்மானித்தனர். இணைப்புக்குழாயை யானையுடன் பொருத்தியபோது, அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்ளும்படியாக, வெகு விரைவிலேயே யானை அதன் முழுவடிவத்துக்குப் பெரிதாகி அந்தக் கூடத்தின் மத்தியில் பிரமாண்டமாக எழுந்து நின்றது. அது உண்மையான யானை போலவே இருந்தது; சதை பெருத்த உடல், தூண் போன்ற கால்கள், விரிந்து, அகன்ற காதுகள், துருத்தித் தெரியும் தும்பிக்கை. வேறு எந்தப் பரிசீலனைக்கும் இடமளிக்கின்ற சிந்தனைகளால் கட்டுப்படுத்தப்படாத இயக்குநர், அவருடைய இலட்சியப் பெருநோக்கின்படி, பூங்காவிற்கு எல்லோரையும் கவர்கிற ஒரு யானை சொந்தமாகப் போகும் சிந்தனையில், யானையின் உருவம் மிகப் மிகப் பெரியதாக இருக்குமாறு உறுதிசெய்துகொண்டார். ‘’பிரமாதம்’’ – வாயு நிரப்பும் திட்டத்தைக் கண்டுபிடித்தவர் உற்சாகத்தில் கூவினார். ‘’இப்போது நாம் வீட்டுக்குப் போகலாம்.’’
விடியற்காலைக் கருக்கலில் குரங்குகள் கூண்டுக்கு அடுத்து, பூங்காவின் மத்தியில் அதற்கென்றே தனிப்பட்ட வகையில் சிறப்பாக அமைக்கப்பட்ட கம்பி வேலித் தடுப்புக்குள் கொண்டுவந்து யானை நிறுத்தப்பட்டது. அதன் முன்பாகப் பொருத்தப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒரு அறிவிப்பு: ‘’ மட்டுமீறிய சோம்பலுடையது – அசைவதே இல்லை.’’ முதல் பார்வையாளர்களாக உள்ளூர் பள்ளியிலிருந்து நேரடிப் புலக்கல்வியளிக்கும் நோக்கத்தில் ஒரு ஆசிரியர் தலைமையின் கீழ் மாணவர் குழுவினர் வந்திருந்தனர். அந்த ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் யானையின் முன்பாக நிறுத்திவிட்டு, அவரது விரிவுரையைத் தொடங்கினார். ‘’யானை ஒரு சைவ விலங்கு. அது தரையிலுள்ள இளஞ்செடிகளைத் துதிக்கையால் பிடுங்கியெடுத்து மொத்த இலைகளையும் உண்ணும்.’’
யானையின் முன்பு கூடிநின்ற மாணவர்கள், அதனைப் பெருவியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த யானை ஒரு மரத்தைப் பெயர்த்து முறிக்கவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தனர்; ஆனால், அதுவோ கம்பித் தடுப்புக்குப் பின்னால் எந்த அசைவுமின்றி, அங்கேயே ஆணியடித்தது போல் நின்றிருந்தது. ‘’யானை, தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்ட கம்பளிப் பெருயானை என்று சொல்லப்படுகிற `மம்மத்` இனத்தின் வரிசையில் நேரடியான வாரிசாகிறது. அப்புறம், ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், நிலத்தில் உயிர்வாழும் பெரிய விலங்குகளில் யானையும் ஒன்று.’’ ஆள்வினையும் தளரா ஊக்கமும் அதிகம் பெற்றிருந்த மாணவர்கள் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தனர். ‘’ திமிங்கிலம் மட்டுமே யானையைவிடப் பெரிய விலங்கு, ஆனால், அது கடலில் வசிக்கிறது. அதனால், யானைதான் காட்டின் அரசன் என்று சந்தேகம் ஏதுமின்றிச் சொல்லிவிடலாம். பூங்காவினுள் காற்று ஒன்று சிறிது பலமாக வீசிற்று. ‘’நன்கு வளர்ந்த யானை ஒன்று நான்காயிரம் முதல் ஆறாயிரம் கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.’’
அந்த நேரத்தில் யானை திடீரென அசைந்து காற்றில் மேலெழுந்தது. தரையின் மேலாகச் சிறிது நேரம் அப்படியும் இப்படியுமாக உருண்டு, அலைக்கழிந்த யானை, பின்னர் காற்றில் மேலும் மேலுமாக உயர்ந்து, நீல வானத்தின் பின்னணியில் அதன் தூக்கமுடியாத வலிமை மிக்க உடற்பகுதியைக் காட்டிக்கொண்டு மிதந்தது. மேலும் உயர, உயரச் செல்கையில் சிறிது நேரத்திலேயே புரண்டு, அதன் அகன்று பரந்த பாதங்களின் நான்கு வட்டப் பரப்பின் உள்ளாகக் கீழே நின்று மேல்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு, அதன் பரந்து புடைத்த அடிவயிற்றினையும், தும்பிக்கை முனையும் தெரியுமாறு காட்டியது. பின்னர், காற்றின் வீச்சில் பக்கவாட்டில் அடித்துச் செல்லப்பட்டு, கம்பி வேலித் தடுப்பையும் கடந்து உயரமான மரக்கிளைகளின் பின்னால் மறைந்தது. திகைத்துப் போன குரங்குகள் வானத்தை நோக்கி வெறித்தன. பின்னர், அந்த யானை தாவரவியல் பூங்காவில் கீழிறங்கும்போது மரமாக வளர்ந்த கொடுக்கள்ளி ஒன்றின் மீது விழுந்து, வெடித்துக் கழுவிலேற்றப்பட்டதுபோல் காணப்பட்டது. அந்த நேரத்தில் விலங்கியல் பூங்காவிலிருந்து, பின்னர் பள்ளிக்குத் திரும்பிச் சென்ற மாணவர்கள் போக்கிரிகளாக மாறிப்போயினர். தற்போது அவர்கள் வோட்கா குடித்து ஜன்னல்களில் கல்லெறிபவர்களாகிவிட்டனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. உலகில் யானைகள் உள்ளன என்பதை அவர்கள் சிறிதளவும் நம்பவில்லை.
https://polishedtranslations.wordpress.com/the-elephant-by-slawomir-mrozek-translated-fro
மலைகள் இணைய இதழ் நவம்பர் 18, 2015, இதழ் 86இல் வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment