Friday, 22 January 2016

நைஜீரியச் சிறுகதை - நீங்கள் ஒருபோதுமே சென்றிருக்காத பாதை - A WAY YOU WILL NEVER BE - BY IKE OKONTA-


 நீங்கள் ஒருபோதுமே சென்றிருக்காத  பாதை  
A WAY YOU WILL NEVER BE 
BY IKE OKONTA
ஆங்கிலம் : ஐக் ஒகான்டா ( நைஜீரியா)
தமிழில் ச. ஆறுமுகம்


(ஐக் ஒகான்டா நைஜீரியாவில் பிறந்து, பட்டம் பெற்று பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். மனித உரிமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர். நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர். 2005ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் புலத்தில் முனைவர் பட்டம் (D. Phil) பெற்று தற்போது அதே துறையிலேயே பணியாற்றுகிறார். இவரது Tindi in the Land of Dead என்ற சிறுகதை கெய்ன் விருதுக்கான சுருக்கப்பட்டியலில் இடம் பெற்றது.)    
அவன் உள்ளே வந்த கணத்திலேயே, மோசமாக ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவன் பையைச் சாய்மெத்தையின் மீது கழற்றிவைக்கட்டுமெனக் காத்திருந்து, பின் அவன் மார்பில் நழுவி விழுந்தாள். அவனது கரங்கள் அவளைத் தழுவிக் கொள்வதை உணர்ந்தாள். எப்போதும்போல் வலிமையாக, வெதுவெதுப்பாக, பாதுகாப்பாக. அவள் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திப் பிறகு   வழக்கமான துடிப்புக்குத் திரும்பியது. பின்னர், அவன் கரங்கள் தளர்ந்து அகல்வதை உணர்ந்து மீண்டும் அவள் இதயம் வேகமெடுத்தது.
அவள் காத்திருந்தாள். அவன் எதையுமே சொல்லவில்லை. நாற்காலி கிறீச்சிட்டது. அப்படித்தான் அவன் உட்கார்ந்தான். வாசல் வழியாக இசை. கனத்த முரசுகள் ஆழமாக அதிர்ந்து, எரிச்சலூட்டும் கரகரப்பான குரல். அவள் எங்கோ வெகுதூரத்தில் நினைத்தாள் : இந்த ஜோபாஸ் அவனது ஸ்டீரியோவை சத்தம் குறைத்துக் கேட்கக்கூடாதா? பின்னர், அவள் மனம் மவுனத்துக்குத் திரும்பியது. அந்த மவுனம் பெரிதாக, அந்த அறையின் ஒவ்வொரு அணுவிலும் நுழைந்து, அறையை மூழ்கடித்தது. அது அவளை மூச்சுத் திணறச் செய்தது. அதனை ஒரு பெரிய பலூனாக அவள் உணர்ந்தாள். அதனால், அவளே அதில் ஊசி குத்தினாள்.  
‘’ களைப்பாக இருக்கிறீர்கள்.’’
அவன் தலையாட்டினான்.
‘’ அலுவலகத்தில் கடினமான நாளாக இருந்திருக்கும்.’’
‘’ ஆமாம். மிகுந்த களைப்புதான்.’’ பின்னர், அவனது மந்த நிலையை அவனே உடைத்துவிட்டதாகத் தோன்றியது. அவன் புன்னகைக்க முயன்றான். அவனது குரலும்கூட மகிழ்ச்சியானது. ‘’நேற்றைய ஜின்னில் ஏதாவது மீதி இருக்குமா?’’
லாரா, அவள் நெஞ்சிலெழுந்த குறுகுறுப்பினை ஒரு புன்னகையுடன் மூடிமறைத்தாள். ‘’ அதுசரி, நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே, இப்போதுதான் சமையல் முடித்தேன். உங்களுக்குச் சாப்பாடு வேண்டாமா?’’
‘’என்ன சமையல்? எனக்குப் பிடித்ததா?
 ‘’ தினமும் இராத்திரிக்கு டோடோவும் பீன்சும் வேண்டுமா?’’ அவள் சிரிப்பு இப்போது வெளிப்பட்டது.
‘’ ஏன்? அப்படிச் செய்யக்கூடாதென்று நீதிமன்றத் தடையா  என்ன?
‘’ சரி. ஏதோ ஒன்று. இது உங்களுக்குப் பிடிக்குமென்று எனக்குத் தெரியும். முதலில் குளித்துவிடுகிறீர்களா?’’
‘’இல்லை. இப்போதே வேண்டும். பிடித்ததை ருசிபார்க்கக்  காத்திருப்பார்களா என்ன? அதெல்லாம் முடியாது.’’ அவன் அவள் கண்களை நோக்கியதும்  எந்தக் காரணமும் இல்லாமலேயே இருவரும் வெடித்துச் சிரித்தனர்.
அவள் குனிந்து, மேஜை நடுவில் கிடந்தவற்றை உணவுப் பாத்திரங்கள் அடங்கிய அகலத்தட்டு வைப்பதற்காக ஒதுக்கினாள். அவளது பின்கழுத்தின் அழகிய மென்மயிரைக் கண்டதும் அவனுக்குள் வெதுவெதுப்பான ஒளித்திரவம்  ஊற்றெடுத்தது. அவன் கை அதுவாகவே சென்று, அவள் கழுத்தை வருடியது. அவள் பாதி நிமிர்ந்து அவனது இதழ்களில் முத்தமிட்டாள்; அவன் கைகள் அவளைச் சுற்றித்தழுவி. இன்னும் அருகில் இழுத்தபோது நெளிந்து நழுவி, விடுவித்துக் கொண்டாள். ‘’ உங்களுக்குப் பசிக்கிறதோ இல்லையோ, எனக்குப் பசிக்கிறது.’’ சிரித்தாள்.
நசுக்கிய சேப்பங்கிழங்கு அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாகப் புத்தம்புதிதாக, இருந்தது. பிட்டர்லீப் சூப்பில் கொதிக்கக் கொதிக்க ஆவி பறந்தது. அதிலிருந்து கிளம்பிய அருமையான மணம் அறை முழுதும் கமழ்ந்தது. அவர்கள் சாப்பிடத் தொடங்கியதும் மவுனம் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டது. இம்முறை இருவரும் அதை முழுவதுமாக உணர்ந்தேயிருந்தனர். மெதுமெதுவாக அது இருவருக்கும் நடுவேயான ஒரு கான்க்ரீட் சுவராக உயர்ந்து பிளவுபடுத்த, இருவரும் வேறெதுவும் செய்யமுடியாமல், சாப்பாட்டில் கவனம் செலுத்தினர்.
மவுனம் அந்த அறை முழுவதையும், அவர்களையும் கூடவே சேர்த்து விழுங்கி, அதன்  குகை போன்ற இரைப்பைக்குள் இழுத்துக்கொள்ளும் ஒரு அரக்க ஜந்துவாக  உருமாறிப் போனது. வெறுத்துப் போன, லாரா  ஏற்ற இறக்கங்கள் இல்லாத, பொருளுமற்ற பண்ணிசையான லோரக்கை, கையில் ஒரு கவளம் உணவை வைத்துக்கொண்டே முரலொலித்தாள்.
‘’ சாப்பிடவில்லையா?’’ அவன் கேட்டான்.
‘’ நீங்களுந்தான், ஏன், பசியில்லையா? அல்லது என் சமையல் பிடிக்கவில்லையா?’’
‘’அப்படியில்லையென்று உனக்குத் தெரியுந்தானே.’’
‘’அப்படியென்றால் எங்கே, என்ன தவறு? என் கணவர் தொங்கிப்போன முகத்தோடு வீட்டுக்கு வருவார். ஆனாலும் நான் கேள்வி எதுவும் கேட்கக்  கூடாது, அப்படித்தானே.’’ அவள் எழுந்து நின்றுவிட்டாள். அவள் குரலில் வழக்கத்துக்கு மாறான ஒரு தொனி புகுந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
அவன் மென்மையாகக் கூறினான். ‘’ உட்கார், லாரா. இப்போது சண்டை எதுவும் வேண்டாம்.’’ அவன் மேஜையைச் சிறிது தள்ளிவிட்டு, அவளது நாற்காலியை அவனை நோக்கி இழுத்தான். கைகளை நீட்டி அவளைச் சுற்றித் தழுவினான்; மேலும் நெருக்கி அணைத்தான். அவளுடைய மார்பின் கதகதப்பு அவனுக்குள் கசிந்து இறங்குவதாக உணர்ந்தான்.
‘’ இன்று பிற்பகலோடு என் வேலை போய்விட்டது, லாரா.’’
அவன் கைகளுக்குள்ளேயே, அவள் உடல் இறுகிப்போவதை அவன் உணர்ந்தான். அவள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. அவள் முகம் வேறுபக்கமாகத் திரும்பிக்கொண்டது. பின்னர், அவளது தோள்கள் மெல்லக் குலுங்குவதை உணர்ந்து, அவள் அழத் தொடங்கிவிட்டாளென்பதைப் புரிந்துகொண்டான். அப்படியே அழட்டுமென்று விட்டுவிட்டான். அப்போதும் கைகளை அகற்றாமல், அவளை இறுக்கமாகத் தழுவியேயிருந்தான்.
லாரா நீண்ட நேரம் அழுதாள். பின்னர் அதிர்வுகள் குறைந்து, அவளது தோள்கள் குலுங்குவதை நிறுத்தின. முகத்தை அவன் பக்கமாகத் திருப்பினாள். அவள் கண்களில், கன்னத்தில் அப்போதுமிருந்த கண்ணீரை, அவன் குனிந்து, தன் இதழ்களால் ஒற்றித் துடைத்தகற்றினான்.
‘’ ஐயாம் சாரி.’’ என்றான், அவன். அவளோ மீண்டும் அழத் தொடங்கினாள்.
ஆனால், இம்முறை அவள் கண்ணீருடன் போராடிச் சிறிது நேரத்திலேயே அதைத் துடைத்துவிட்டு, வலிய புன்னகை ஒன்றை வரவழைத்துக் காட்டினாள்.
‘’ ஐயாம் சாரி,’’ என்றான், அவன், மீண்டும்.
‘’ அது எப்படி ஆனது?’’
‘’ பதிப்பாசிரியர் அவரது அலுவலகத்துக்கு அழைத்து, மேற்கொண்டு என் சேவை அவர்களுக்குத் தேவையில்லையென்றார்.’’
‘’ அப்படிச் சும்மா சொல்லிவிடமுடியுமா என்ன? என்னதான் நடந்தது?’’
அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். ‘’ நான் எழுதுவது   ஆளுநர் அலுவலகத்தில், ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லையென்று அவர் சொன்னார்.’’
அவளது கைகள் அவனைத் தழுவி இறுக்கின. ‘’ பாவம், என் கண்மணி.’’
அவன் வலிய ஒரு புன்னகையை வரவழைத்தான். அவன் தன் நினைவின்றியே  ‘’ வேறு ஏதாவது ஒரு வேலையைச் சீக்கிரமாகவே தேடிப் பிடித்துவிடுவேன். புதிய இதழ்கள், செய்தித் தாள்கள் எல்லாஇடத்திலும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றன.’’ என்றான்.  அவன் அப்படிச் சொன்னாலும் அவன் கண்கள் அவளுடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தன. வேலை கிடைப்பது  அவ்வளவு எளிதானதல்லவென்று அவர்கள் இருவருக்கும் தெரிந்ததுதானே!.
லாரா எழுந்து, மேஜையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். உணவுப் பாத்திரங்கள் அடங்கிய அகலத்தட்டினை எடுத்துவிட்டு, பூச்சாடி, இதழ்களையெல்லாம் மீண்டும் முன்பிருந்தவாறே வைத்தாள். அகலத்தட்டினைப் பின்வாசலுக்குச் சுத்தம் செய்வதற்காக எடுத்துச்சென்றாள். அவள் திரும்பி வந்தபோது, அவன் ஜின்னின் கடைசியைத் தம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்தான். ஸ்டீரியோ மென்மையான காலிப்சோ பண்ணிசையில் பாடிக்கொண்டிருந்தது.
இசையோடு சேர்ந்து அவனும் தலையசைக்கத் தொடங்கினான். தம்ளரிலிருந்ததில் ஒரு வாய் குடிக்குமாறு அவளிடம் நீட்டினான். அவள் தலையசைத்து மறுத்தாள். அவனது ரசிக்கும் மனநிலையோடு இணைந்திட  முயன்று புன்னகைத்தாள். ஆனால், அது புன்னகையாகவே இல்லை.  வெறுமை துரத்த, படுக்கையறைக்கு ஓடினாள். சிறிது நேரம் கழித்து, அவள் திரும்பி வந்தபோது அவன் அங்கு இல்லை.  பாட்டு அப்போதும்  கேட்டுக்கொண்டுதானிருந்தது. ஆனால், அது வேறு ஏதோ ஒன்று, துயரமும் துக்கமுமாக இருந்தது         .
       ***
அவன் ஒருகணம் வீட்டின் முன்பாக நின்று தையல்காரர் சாகா அவரது நாய்க்கு இரவு உணவு ஊட்டுவதைக் கவனித்தான். சிகரெட்டுக்காகக் காற்சட்டைப் பைக்குள் துளாவினான். இருந்த ஒன்றும் கசங்கி நசுங்கிப்போயிருந்தது. முடிந்தவரை நேராக இழுத்து, உருட்டித் தடவிச் சரியாக்க  முயன்று, பின்னர் அதைப் பற்றவைத்தான். ஆழமாக இழுத்து, அதன் சிவப்பு முனை அரை இருளில் மினுங்குவதை, வண்ண வண்ண ஆடைகள் அணிந்த இளைஞர்கள், இளமங்கைகள் கோல் தெருவின் சிவப்பு விளக்குகளை நோக்கிச் செல்ல, அவனை விரைந்து கடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன்  கால்வாயைத் தாண்டிக் குறுக்காகக் கடந்து தெருவினுள் நடந்தான். அது ஒரு குளிரான இரவாக இருந்தது. அவன் சிகரெட்டை இன்னும் ஆழமாக இழுத்தான். அதன் புகை அவனுக்குள்  ஒரு உறைப்பான வெப்பப் பாதையை எரித்துச் செல்வதாக உணர்ந்தான்.
பலர் அவனைக் கடந்து சென்றார்கள். சிலர் இடித்துக்கூடச் சென்றார்கள். அவன் யாரையுமே கவனிக்கவில்லை. இருபக்கமும் இருளுக்குள் பதுங்கிக்கிடந்த சாம்பல் நிறமற்ற குடியிருப்புகளையும் கவனிக்கவில்லை. மம்மா இகோட் கொதிக்கவைக்கும் பானையின் முன் நெகிழித் தட்டும் கையுமாக அம்மணக் குழந்தைகள் கூடிநின்றனர். வெந்துகொண்டிருக்கும் பீன்சின் மணம் காற்றில் நிறைந்திருந்தது. கால்வாயில் மலம் கழித்துக்கொண்டிருந்த சின்ன  மகளை, மம்மா இகோட் திட்டிக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள்.
அவன் நடந்துகொண்டேயிருந்தான். டேண்டி லிவிங்ஸ்டனின் ஒலிப்பதிவுக் கடை அமைதியாக இருந்தது. கடை அடைத்திருந்தது; ஆனால், சிவப்பு, ஊதா  நியான் விளக்குகள் அணைவதும் எரிவதுமாகக் கண்சிமிட்டின. டேண்டி லிவிங்ஸ்டன் எங்கே போயிருப்பானென அவன் வியந்தான். அங்கே எப்போதும் கூட்டமாய்க் கூடி, மைக்கேல் ஜாக்சன் ஒலிநாடாக்களைக் கேட்டுக்கொண்டே அமெரிக்காவைப் பற்றிக் கனவுகண்டுகொண்டிருக்கும் இளைஞர்களுந்தாம்!
பப்பா அருந்தகத்துக்குத் திரும்பவிருக்கும்போது, ஒலிப்பதிவுக் கடை மூலையில் கிடந்த குப்பை மேட்டில் ஏதோ ஒன்று  திடீரென்று அசைவதைக் கண்டான். அது ஒரு நாயாக இருக்குமென்றுதான் அவன் நினைத்தான். அது மீண்டும் அசைந்தபோது அது ஒரு மனிதனெனக் கண்டான். அசைவில் ஏதோ ஒரு திருட்டுத்தனம் தெரிந்தது. அவன் நின்று கவனிக்கத் தொடங்கினான். அந்த மனிதன் ஒரு குச்சியால் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தான். பின்னர்,  குச்சியைக் கீழே போட்டுவிட்டு பூமிக்குள் விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்  கனமான ஏதோ ஒன்றைப் பிடித்து இழுப்பதுபோல இழுத்தான். அது திடீரெனக் கையோடு வந்துவிடவே அவன் தடுமாறிப் பின்பக்கமாகச் சாய்ந்தான். சமாளித்து நின்றபோது மெல்லத்திட்டுவது அவன் காதில் கேட்டது. அதிலிருந்து பிய்த்துப் பிய்த்துக் கழுத்தில் தொங்கிய  நெகிழிப்பைக்குள் போட்டுக்கொண்டிருந்தான்.
வியப்பாகத் தோன்றவே, அவன் அருகில் சென்றான். வேலையில் கவனமாக இருந்த அந்த மனிதன், அவனைக் கவனிக்கவேயில்லை. அவனுடைய அரணக் காலணி ஏதோ ஒரு காலி டப்பாவில் மோத, அது கால்வாயில் போய் விழுந்தது. அப்படியே சுழன்று திரும்பிய அந்த மனிதன் ஒரு நொடி உறைந்து நின்றான். இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அவன் மேலும் நெருங்க, அடியெடுத்தபோது, கத்திக் கீச்சிட்ட அந்த மனிதன்,  முதுகில் நெகிழிப்பை பைத்தியம் பிடித்தது போல் அடித்துக்கொள்ள இருளுக்குள் ஓடிப்போனான்.
அவன் குப்பை மேட்டை நோக்கி நடக்க, கெட்ட நாற்றம்  மூக்கைத் துளைத்தது. பின்னர், அவன் அந்தப் பிணத்தை, பிய்த்து, மீந்துபோன, அழுகும் தசையைக் கண்டான். பாவம், அது ஒரு நாய். அவன் அந்த நாற்றத்திலிருந்தும் வெறி பிடித்த மாதிரியில் ஓடத் தொடங்கினான்.
பப்பா அருந்தகத்தின் முன்னர், மல்லம் கடையில்தான் நின்றான். இரண்டு சிகரெட்டு வாங்கினான். கறுப்பு நிறத்திலான வளர்ந்த பெண் ஒருத்தி, ஒரு மனிதனுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசுவதை நிறுத்திவிட்டு அவனை வெறித்து நோக்கினாள். அவன் ஒரு சிகரெட்டை சட்டைப் பையில் போட்டுவிட்டு இன்னொன்றைப் பற்றவைத்தான். அந்தப் பெண் அப்போதும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் வளமான இளஞ்சிவப்பு நிறத்திலிருந்தன. அவளிடமிருந்து சுவை மென்கோந்து வாசனையோடு மலிவான முகப்பூச்சு மணமும் வந்தது. அந்த மனிதன் சில்லறையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவளின் பார்வை அவன் முதுகில் துளைப்பதை உணர்ந்தவாறே அகன்றான். அந்த நேரத்தில் லாரா என்ன செய்துகொண்டிருப்பாளென நினைத்துப் பார்த்தான். அப்போதும் அழுதுகொண்டிருப்பாளென அவன் நினைக்கவில்லை. ஒருவேளை, அவளுடைய நாட்குறிப்பை மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கலாம். பொழுதன்றைக்கும் எதைப்பற்றித்தான் எழுதுவாளோவென நினைத்து வியந்தான்.  அதில் அவன் இருப்பானென அவனுக்குத் தெரியும். ஒபா, ஜாஜா, ஜே.ஐயுங் கூடத்தான். ஆனால், அவளின் நாட்குறிப்பை அவன் ஒருநாள்கூட வாசித்ததில்லை. அவன் அப்படியான ஒரு வாக்குறுதி அளிக்குமாறு  செய்துவிட்டாள்.
லாராவை நினைத்துக்கொண்டே, அவன் திரும்பி, வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். அந்த இரவுநேரத்தெருவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். லிட்டில் பாஸ்சாவின் தெருக்களிலேயே அந்தத்தெருவில் மட்டுந்தான் தெருவிளக்குகள் அப்போதும் ஒளிர்கின்றன. புல்டோசர்கள் வந்து கடைகளையும் வீடுகளையும் இடிக்கும் முன்பான யாலாத்தெருவின் விளக்குகள் அளவுக்குப் பிரகாசமாக இல்லையென்றாலும், சுவர்கள் பொரிந்து உதிர்ந்து கொண்டிருக்கும் சாம்பல் நிறக் குடியிருப்புகளையோ, சாக்கடை அசுத்தங்களையோ வெளிக்காட்டாமல் மென்மையாகத் தூயதாக இருந்தன.
வீட்டின் முற்றம் இருட்டாக இருந்தது. அவன் எழுதுமேஜை மேலிருந்த விளக்கை ஒளிரச்செய்து அலுவலகத்திலிருந்து கொண்டுவந்திருந்த இதழை வாசிக்கத் தொடங்கினான்.   என்ன  வாசிக்கிறோமென அவனுக்குப் பிடிபடவேயில்லை. வாசிப்பில் அவனால்  கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனம்  அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. இதழை முன்பிருந்த அடுக்கிலேயே வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான். படுக்கையறைக்குள் நுழைந்தான். இருட்டாக இருந்தாலும், கட்டமைவாக ஒடுங்கிய லாராவின் தோற்றத்தை அவனால் காணமுடிந்தது. அவள் தூக்கத்திலில்லையென்று அவனுக்குத் தெரியும். இருட்டிலேயே ஆடைகளைக் களைந்துவிட்டு, அவள் அருகாகப்   படுக்கையிலேறிப் படுத்தான். 
சிறிது நேரத்துக்கு இருவருமே பேசிக்கொள்ளவில்லை. வெள்ளிக்கிழமை இரவின் சத்தங்கள் தெருவிலிருந்து வீட்டுக்குள்ளும் கசிந்தன. இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் குரைத்தன. பாப் மார்லி தீர்க்கதரிசித் தூதர்களைப் பாடிக் கனவுகளைக் கொன்றுகொண்டிருந்தார். உச்சஸ்தாயியில் ஒரு போதைக்குரலும் அவரோடு இணைந்து கேட்டது.   சிரிப்பொன்று திடீரென வெடித்தது.
லாரா திரும்பிப் படுப்பதைக் கண்ணால் காணாவிட்டாலும், அவன் உணர்ந்துகொண்டான். உடனேயே கைகளை நீட்டி, அவளைத் தன்னோடு இழுத்தான். அவளது கூந்தலின் மணம் அவன் நாசியில் நிறைந்தது. அவள் முகம் வியர்வையில் நனைந்து சிறிது ஈரமாக இருந்தது.
‘’உனக்கு வியர்க்கிறதே. மின்விசிறியைப் போடட்டுமா?
‘’ வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்திலேயே குளிரத் தொடங்கிவிடும்.’’
மவுனம் மீண்டுமாக அவர்களிடையே வளரத் தொடங்கியது. உணவெடுத்துச் செல்லும் பெட்டிக்குள் ஒரு எலி நடமாட்டம் இருப்பதாக அவன் நினைத்தான். பின்னர் அவளது இதழ்களை அவன் கன்னங்களில் உணர்ந்தான். அவளை இன்னும் சேர்த்தணைத்தான். சிறிது நேரம் அவர்கள் அப்படியே பாப் மார்லியின் பாடலை, அந்தக் குடிகார மனிதன் பகடிக்குரலில் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் துக்கத்தை ஒலிப்பதாக, ஏன், ஒப்பாரி பாடுவதாகக் கூட அவன் நினைத்தான்.
‘’ அது, அந்தக் கட்டுரை தான், இல்லையா?’’
ஆமாம், இராணுவ ஆளுநருக்கு அதைப் பிடிக்கவில்லை.’’
‘’ இருந்தாலும், நீங்கள் அதை எழுதினீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி. நீங்கள்தான் என் கதாநாயகன்.’’
‘’ அதை எழுதவேண்டுமென்று தோன்றியது. அவ்வளவுதான். அதைப்போன்ற ஏதாவதொன்றை மறுபடியும் எப்போதாவது என்னால் எழுதமுடியாதுதான்.’’
‘’ எனக்குப் புரிகிறது.’’
இன்னொரு வேலை எனக்குக் கிடைக்கும். அது முந்தையதைப் போல இருக்காது.’’
‘’ ஆமாம். எனக்கொன்றும் பயமில்லை. நீங்கள் இப்போதும் என்னைக் காதலிக்கிறீர்களா?’’
‘’ நான் அப்படித்தானென்று உனக்குத் தெரியுமே.’’
‘’ மிக அதிகமாக? முதன் முதலாக, ஆரம்பத்திலிருந்த மாதிரியே?
‘’ ஆமாம். ஆரம்பத்திலிருந்த மாதிரியே.’’
‘’ உண்மையில் அதுதான் விஷயமான ஒன்று.  நமது காதல். அது மிக அழகான ஒன்று, அப்படித்தானே, இல்லையா?
‘’ ஆமாம். மிகமிகச் சிறந்தது.’’
‘’ எனக்கொன்றும் பயமில்லை. உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும்வரை எப்படியாவது சமாளித்துவிடலாம் . நமக்கு நம்முடைய காதல் இருக்கிறது. அதை யாரும் அசைத்துவிட முடியாது. இராணுவ ஆளுநராலுங்கூட முடியாது. எனக்கு ஒரு முத்தம் தாங்களேன்.’’
அவன், அவளை முத்தமிட்டான்.
பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து மென்மையாக விடைபெற்றது. அவள், அவளது  படுக்கைப் பக்கமாக உருண்டு படுத்தாள்.
‘’ நல்லிரவு.’’
‘’நல்லிரவு கண்ணே.’’
சிறிது நேரத்திலேயே அவளது மூச்சு சாதாரணமானதாக  ஏறியிறங்கியது. அவன் அவளைப் பார்த்தான். தூக்கத்தில், அவள் முகம் இறுக்கம் தளர்ந்திருந்தது, அவள் இதழ்களில் ஒரு புன்னகை முகிழ்த்திருந்தது. அவன் திரும்பிப் படுத்தான்.  கொசு ஒன்றின் புலம்பல் அவன் காதினை விரைந்து கடந்தது. இடைவழியில் ஏதோ காலடிச் சப்தங்கள் கேட்டன. அதைத் தொடர்ந்து ஒரு தணிவான கிளுகிளுப்புச் சப்தத்தையும் கேட்டான். ஒரு கதவு அடித்துக்கொண்டது. அவன் கூரைத் தளத்தைப் பார்த்தான். அவனால் தூங்க முடியவில்லை. பாப் மார்லியின் மற்றொரு பாடலை, மூன்று சிறுபறவைகள்  அவரது வீட்டு வாசலில் பாடிக்கொண்டிருந்ததைப் பற்றிப் பாடுவாரே, அதை, அந்தப் போதை மனிதன் பாடிக்கொண்டிருந்தான். அவன் குரல் இப்போது மகிழ்ச்சியாக, இதயத்தின் பாரம் இறங்கிவிட்டதாக இருந்தது. அவன் பாடுவதைச் சிறிது நேரம் கவனித்த அவன், எந்தக் காரணமும் இல்லாமலேயே அந்த போதை மனிதனோடு இணைந்து அதே இராகத்தை உள்மூச்சில் மென்மையாக விசிலடித்து இசைக்கத் தொடங்கினான்                                         


Source :  http://www.african-writing.com/four/ikeokonta.htm


No comments:

Post a Comment