Monday 18 January 2016

நேர்காணல் - ஆமி வால்ட்மன் - Amy Waltman, America.

மொழிபெயர்ப்பு – நேர்காணல் – ஆமி வால்ட்மன் – தமிழாக்கம் : ச.ஆறுமுகம்

நேர்காணல்

ஆமி வால்ட்மன்

தமிழாக்கம் : ச.ஆறுமுகம்








அமெரிக்க எழுத்தாளரான  ஆமி வால்ட்மனின் முதல் நாவல் The Submission 2011 ஆம் வருட முடிவில் பல்வேறு இதழ்களின் `ஆண்டுக்குரிய புத்தகங்கள்` வரிசையில் நேரடியாக இடம் பிடித்ததுடன் கார்டியன் இதழின் முதல் நூல் பரிசுக்கான வரையறுக்கப்பட்ட பட்டியலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. ப்ரேசில், இத்தாலி, ப்ரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கனடா, ஜப்பான், போர்த்துக்கல், ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து நாடுகளில், இந்த நாவல், அந்தந்த நாட்டுப் பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவரது புனைவுகள் அட்லாண்டிக், போஸ்டன் ரிவ்யூ, பைனான்ஸியல் டைம்ஸ் இதழ்களில் வெளியாகியுள்ளன. வால்ட்மன் ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளருமாவார். நியூயார்க் டைம்ஸ் இதழுக்கான செய்தியாளராக எட்டு ஆண்டுகள் பணி புரிந்தார். அட்லாண்டிக் இதழின் தேசியத் தொடர்பாளராகவும் இருந்தார். புது தில்லி கழகத்தின் இணைத் தலைவராக மூன்றாண்டுகள் பணியாற்றியவர். யேல் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், ராட்க்ளிஃப் இன்ஸ்டிட்யூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ், மற்றும் பெர்லினுள்ள அமெரிக்கக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார். தற்போது குடும்பத்துடன் ப்ரூக்லின் நகரில் வசிக்கும் இவர் `த்ரீ மங்கீஸ் ஆன்லைன்` இதழுக்கு தி சப்மிஸன் நாவல், 9 / 11 புனைவுகள் மற்றும் இதழியலுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்புகள் குறித்து மின் அஞ்சல் மூலம் அளித்த பேட்டி. தமிழாக்கம் செய்து தரப்படுகிறது.

பேட்டி காணும் ஜேம்ஸ் மீக் அவர்களும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்தாம். 2008ல் வெளியாகி `ப்ரின்ஸ் மௌரீஸ் விருது` பெற்ற `We Are Now Beginning Our Descent` நாவலையும் சேர்த்து மொத்தம் நான்கு நாவல்களும் இரு சிறுகதைத் தொகுதிகளும் படைத்துள்ள தீவிர எழுத்தாளருமாவார். அவரது மூன்றாவது நாவலான `The People`s Act of Love (2005) ஸ்காட்டிஷ் கலைக் கழகத்தின் `ஆண்டுப் புத்தக விருதி`னையும் `ஒண்டாட்ஜி விருதி`னையும் பெற்றுள்ளதோடு இதுவரை இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்கும் உரியது.  லண்டனில் பிறந்து ஸ்காட்லாந்தின் டண்டீயில் வளர்ந்தவர். 1985 லிருந்தே பத்திரிகைச் செய்தியாளராக இருக்கிறார். 1991 – 99ல் கார்டியன் பத்திரிகைக்காக சோவியத் ரஷ்யாவில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2004ல் ஈராக் போர், செச்சென் சிக்கல், கவுண்டனாமா குடாவில் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் பிரிட்டன் செல்வந்தர்களின் வரிஏய்ப்பு, ஆகியவற்றில் அவர் ஆற்றிய செய்திப் பணிகளுக்காக  `பிரிட்டனின் அந்த ஆண்டுக்குரிய அயல்நாட்டுச் செய்தியாளர்“ என்ற விருது உட்படப் பல விருதுகள் பெற்றவர். தற்போது லண்டனில் வசிக்கிறார்.

`த்ரீ மங்கீஸ் ஆன்லைன்`  வெளியிட்ட பேட்டியின் முன்னுரை:

லெனின், கார்க்கியிடம் அவசியமான அவசரப்பணியென வற்புறுத்திய  `தொழில் மாற்றம்’ குறித்த கருத்தினை இந்தப் பூமியிலுள்ள அனைத்து எழுத்தாளர்களும், 12, செப்டம்பர்,  2001 அன்று விரிவாகக் கருதிப் பார்க்கத் தொடங்கியதாக, ஜூன் 2002ல் கார்டியன் இதழ் வெளியிட்ட (The Voice of the Lonely Crowd) `தனிமைப்பட்ட கூட்டத்தின் குரல்` கட்டுரையில், மார்ட்டின் ஆமிஸ், குறிப்பிடுகிறார். பயங்கரவாதிகளின், வெளிப்படையான 9 / 11 தாக்குதல் குறித்த உடனடிப் பின்விளைவான பொதுக்கருத்து, அந்தத் துயரத்தை புத்தகமோ, அல்லது திரைப்படமோ பிரதிபலித்தாலும் அது நம்பத்தக்கதாக இருக்காதென்பதோடு அதை உணர்த்துவதற்கு இதழியலும் பாரபட்சமற்ற மெய்மைத் தகவல்களும் தேவை என்பதுதான். இலக்கியக் கலை வடிவமான நாவல் இப்பணியைச் செய்வதற்குப் போதுமானதல்ல.
மேலும், பத்தாண்டுகளுக்கும் அதிகமாகக் கடந்துவிட்ட நிலையில் நமது இலக்கியப் பெருமக்கள்  படைத்துள்ள நாவல்கள், கதைகளுக்குள், சல்மான் ருஷ்டியின் `ஷாலிமார், தி, க்ளௌன்,` அப்டைக்கினுடைய `தி டெர்ரரிஸ்ட்,` அல்லது அமீஸின் ‘’முகமது அத்தாவின் கடைசி நாட்கள்’’ போன்றவற்றுக்குள் மூழ்கிப் பார்த்தால், அவை, நாவல்கள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் செய்திருப்பதாகவோ, அல்லது அவை நமக்குள் ஒரு நுண்மாண் காட்சித் தெளிவினை புலப்படுத்தியிருப்பதாகவோ, அல்லது 9/11 க்குப் பிந்தைய உலகைப்பற்றி முன்பைவிட அதிகமான புரிதலை லாரன்ஸ் ரைட்டின் `தி லூமிங் டவர்` போல ஏற்படுத்தியிருப்பதாகவோ வாதிடுவது கடினம்.

ஒருவகையில் இவையெல்லாம்  முட்டாள்தனமானவை என்றாலும்கூட, நம்முடைய முந்தைய `பெருமக்க`ளைப் பார்க்கையில், ஏராளமான புனைவுப் படைப்பாளிகள் உலக வர்த்தகக் கழகத் தாக்குதல்கள் (மற்றும் அதைத் தொடர்ந்த ஆப்கன் மற்றும் ஈராக் போர்கள்) எழுப்பியுள்ள மிகப் பெரிய கேள்விகளைக் கையாண்டிருப்பதை அறிந்துகொள்ள இயலும். நான் படித்ததில் சிறந்த 9/11 நாவல்களில் ஒன்றான ஆமி வால்டனின் `தி சப்மிஸன்`, ஒரு அறிவார்ந்த நாவல். ( இதை 9/11 நாவல் என்று முத்திரை குத்துவதுகூட அவமானதுதான்.) ஏனெனில், அது, இதழியலுக்குப் பொருந்தும் பணியான,  விஷயங்களை விளக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் துருவித்துருவிக் கண்டுபிடிப்பதையும் கேள்விகள் எழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிய அமெரிக்கரான கலைஞர் மாயா லின், உருவாக்கிய, வாஷிங்டனில் வியட்நாம் வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அமைப்பதற்கான வடிவமைப்பு, போட்டியில் வென்று அதற்கான குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றபோது எழுந்த உண்மையான வாதமுரண்பாட்டுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு `அதனாலென்ன?` என்ற முதல் கேள்வியுடன் நாவல் தொடங்குகிறது. ஒரு அமெரிக்க முஸ்லிம்,  9/11 தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக ஒரு சின்னம் அமைப்பதற்கான குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றாலென்ன? அந்த வடிவமைப்பு பண்பாட்டு அடிப்படையில் இரட்டைப்பண்போடு இருந்தாலென்ன? அரசியல் உள் நோக்கங்களும், பரபரப்பு தேடும் பத்திரிகைத்தனமும் அந்தக் குழுவோடு மோதினால் என்னவாகும்? இவற்றின் விளைவுகளான நாவல் விடுதலை, கருத்து வெளிப்பாட்டு உரிமை, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றின் வரையறைகளுக்குள் புகுந்து வலுவான ஒரு தேடலை முன்வைக்கிறது. அது மட்டுமின்றி வாசித்தேயாக வேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

பேட்டி:

தி சப்மிஸனை எழுதவேண்டுமென்ற  முடிவுக்கு ஏன் வந்தீர்களெனச்  சிறிது கூற முடியுமா? முதல்  நாவல் எழுதுபவர் 9/11 தாக்குதல் போன்ற ஒரு விஷயத்தைக் கையாள்வதென்பது மிகத்துணிச்சலான செயல் – அதுவும் நேரடியாகக் கையாள்வது; எழுதும்போது சந்தேகங்கள் தோன்றி அவதிக்குள்ளானீர்களா? இந்தப் பொருள் மிகவும் பரந்து விரிந்ததாயிற்றே என அல்லது மிகுந்த உணர்ச்சிகரமானதாயிற்றே என எந்த இடத்தில் உணர்ந்தீர்கள்?

முதல் முறையாக எழுதும்  நாவலாசிரியர் என்பதாலேயே நான் அதை எடுத்தாளலாமென எந்தக் கட்டுப்பாடுமின்றிப் பரவலாக உணர்ந்திருக்கலாம். வாசகர்கள் இதற்கு எந்தமாதிரியாக எதிர்வினையாற்றுவார்களென நான் கவலைப்படவில்லை; ஏனென்றால் இதை வாசிப்பவர்கள் இருப்பார்களென நான் எதிர்பார்க்கவில்லை. கலை மற்றும் புனைவுக்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு விஷயமும் இருக்கமுடியுமென நான் நினைக்கவில்லை. அதனால் இந்த விவாதப்பொருள் கையாள்வதற்கு, மிக விரிவானதென்றோ அல்லது சிக்கல் விளைவிக்கும் ஒன்றென்றோ கருதிய நிலை எனக்கு எந்த நேரத்திலும் ஏற்படவில்லை. நிலம் அல்லது ஒரு நிகழ்வு `புனித`மாகக் கருதப்படுவதன்  பொருள் என்ன என்பது குறித்துத் தோண்டித் துருவி ஆய்வுசெய்வதும் கண்டுபிடிப்பதும் இந்த நாவல் நோக்கத்தின் ஒருபகுதி என்பதால், அந்தப் புனிதத்தன்மையால் பாதிக்கப்படுவதாக நான் ஒருபோதும் உணரவில்லை.
நாவலின் தொடக்க விதை – ஒரு அமெரிக்க முஸ்லிம் தயாரித்த வடிவமைப்பு தேர்வுசெய்யப்பட்ட சூழல் – ஒரு நண்பருடன் 9/11 நினைவுச் சின்னப் போட்டி மற்றும் ஆசிய அமெரிக்கரான மாயா லின் அது போன்ற வியட்நாம் போட்டியில் வெற்றி பெற்றபோதான அனுபவங்கள் குறித்த உரையாடலின் விளைவாக வெளிப்பட்டது. ஒரு 9/11 நாவலினை எழுத வேண்டுமென நான் ஒருபோதும் நினைத்ததேயில்லை. அதுபோன்று, வகைப்பிரிவுகளை படைப்பாளர்கள் எண்ணிப் பார்ப்பார்களாவென எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. நாம் ஏற்கெனவேயே பல்வேறு முறை மீண்டும் மீண்டும் அனுபவித்துவிட்ட அந்தத் துக்க நாளின் துயரமான நிலையை மறுபடியும் கதையில் படைத்துக் காட்டுவதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால், 9/11 நம்மை எங்கு நோக்கி இழுத்துச் செல்கிறதெனக் கவனிக்கிறேன்.

இதழியலுக்கும் புனைவு படைத்தலுக்குமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிபவை; அது எழுத்தாளரை ஒரு துறை விஷயங்களை உருவாக்கவும், மற்றவரை அதை விலக்கிவைக்கவும் கோருகிறது. அப்படியானால் இரு இயல்களுக்குமான ஒப்புமைகள் என்னென்ன? நீங்களே மதிப்புக்குரிய இதழாழராகவும் நாவலாசிரியராகவும் இருப்பதால், இதழியலுக்கும் புனைவு படைத்தலுக்குமான ஒப்புமைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

இதழாழராக இருந்து புனைவுக்கு மாறியவராக, நான் அவற்றுக்கிடையிலான  வேறுபாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் ஆர்வத்துடன்  இருந்தேன். ஆகவே, முதலில்  பிறிதொன்றைச் சுட்டிக்காட்ட  அனுமதியுங்கள்; இதழியலில்  நீங்கள் மெய்மைத் தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து, எழுதுவதன் வழியாக நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். அதுவே, புனைவில், எழுதுவதன் மூலம் புதிய மெய்மைகளைக் கண்டடைவதற்கு அதிகமாக வழிசெய்கிறது; அதுவே எல்லாவற்றையும் முன்கூட்டியே நிரல்படுத்த முயற்சிக்கத் தேவையில்லை என்பதையும் சொல்கிறது. நம்மை அறியாமைக்கு ஒப்புக்கொடுப்பதிலிருந்தும் இருளுக்குள் மூழ்குவதிலிருந்தும் அவ்வப்போது சிறந்த எழுத்து உருவாகிறது என்பதை நான் உணர்வதற்கு வெகு காலம் பிடித்தது. மேலும், மொழியோடு விளையாடுவதற்கும் புனைவு அனுமதிக்கிறதென நான் கருதுகிறேன். புனைவற்ற படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் சிலர் இதைச் செய்கிறார்களென்றாலும் அவர்கள் விதிவிலக்குகளாக அமைந்தவர்கள். புனைவில் அதன் உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமாகிறதோ, அப்படியேதான், எழுதுவதன் வழிமுறையும் சொற்களின் தேர்வு மற்றும் அமைவிட ஒழுங்கும், அழகுற அமைக்கும் மொழியின் பாங்கும் முக்கியமாகிறது.
ஒப்புமைகளைப் பொறுத்தவரை, இரு இயல்களுமே உங்களை, அறிமுகமற்ற புதிய உலகங்களுக்குள், மனித அனுபவங்களென நீங்கள் புரிந்துள்ளவற்றை விரிவுபடுத்தவும்  அல்லது மாற்றுவதற்குமான வல்லமை வாய்ந்தவை. சிறந்த இதழியல் படைப்பின் வாசிப்பு நாவலைப்போலவே அமைகிறது. ஆனால், இதன் மறுதலை உண்மையானதென நான் கருதவில்லை.

நல்லதொரு சொல்லின் தேவைக்காக, நான் ஒரு தாராளவாதி. உங்கள் படைப்பு தாராளவாதிகளைக் கிண்டல் செய்தாலும், கதை  சொல்லப்படும் முறையில் ஒரு  தாராளவாதம் அமைந்திருப்பதாகவே  நான் காண்கிறேன். அதனாலேயே உங்கள் படைப்பினை நான் நேசிக்கிறேன். இது ஒரு நடுநிலையான முடிவு என்று கருதுகிறீர்களா? மாற்றங்களை விரும்பாத மரபுமுறை வாசகர்கள் (குறிப்பாக அமெரிக்க மரபாளர்கள்) இந்தப் படைப்புக்கு எந்தமாதிரி எதிர்வினையாற்றுவார்களெனக் கருதுகிறீர்கள்?

படைப்பின் அரசியலுக்குப்  பண்புவடிவம் கொடுப்பதை  நான் தவிர்க்கிறேன். ஏனென்றால்  எந்த வகையான பண்புருப்படுத்துவதும்  மிகக் குறுக்குவதான ஒன்றாக அமைகிறதென்பது என் எண்ணம். அது மட்டுமன்றி வாசக எதிர்வினைக்கு  எந்தவொரு வண்ணம் தீட்ட, அல்லது விதிமுறை வகுக்க நான் விரும்பவில்லை. நான் ஒரு தாராளவாதியாக இருப்பதாகவே ஆனாலும், தாராளவாதத்தின் எல்லைகளுக்குள்ளும் அதிக ஆர்வம் கொள்கிறேன்  – உதாரணமாக, ஏன் அது ஏராளமான அமெரிக்கர்களை ஈர்ப்பதில் தோற்றுப்போயிருக்கிறது என்பதைக் கண்டறியவும் இந்தப் படைப்பு  முனைகிறது. மேலும், அரசியல் நம்பிக்கைகள் அல்லது மாறுபட்ட கொள்கைகளுக்கும் மனித நடத்தைகளுக்கும் இடையிலான உராய்வுகளில் நான் ஆர்வம் கொள்கிறேன். அதனாலேயே முகமது கான் பாத்திரம், எத்தனையோ நற்பண்புகள் இருப்பினும், கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத கீழ்ப்படியாமை மற்றும் இலட்சிய வாதம் காரணமாக, அந்தப் பாத்திரத்தை அனுதாபத்தோடு அணுக விரும்பும் தாராளவாதிகளைக்கூட தயக்கம் கொள்ளச் செய்கிறது.

நாவலின் தலைப்பிலிருந்து அநேகமாக ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படும் விதவிதமான உருவகங்களிலிருந்து, உங்ளுக்கு கதை சொல்வதில் மட்டுமல்லாமல், அது எப்படிச் சொல்லப்பட வேண்டுமென்பதிலும் தீவிர ஆர்வமிருப்பது தெளிவாகிறது. ஒரு படைப்பாளர் என்ற முறையில் மொழி உங்களுக்கு எத்தகைய முக்கியம் வாய்ந்தது?

மிகுந்த முக்கியத்துவமுள்ளது. அதில் ஒரு பகுதி சுயநலம் தான், எழுதுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியின் பெரும்பகுதி அதில் கிடைப்பதுதான். அதுபோல, வாசிப்பதிலும் மகிழ்ச்சி கிடைப்பதாக நான் நம்புகிறேன். அதுமட்டுமின்றியும் புனைவின் பெரும்பகுதி வலிமை, மொழியின் செம்மைத்தேட்டம் வழியாகவே அமைகிறது. மொழிக்குள் குரல் இருக்கிறது. அந்தக்குரல் மூலம் தனிநபரின் ஒருமைத்தன்மையைத் வெளிப்படுத்த வழி கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மொழியின் ஒலிநயத்தில், இசைத்திறமும் கவிதையின் வலிமையும் இருக்கிறது. அதில்தான் சங்கேதம், மீளச்சொல்லுதல், அருவம், மவுனம் போன்றவையெல்லாம் அநேகமாக ஆழ்மன நிலையில் செயல்படுகின்றன.
எல்லா எழுத்தாளர்களையும்  போலவே, நானும் வழக்கத்தில் நைந்துபோன சொற்றொடருக்கு இலக்காகும் போக்குதான். ஆனால் எப்போது என் தலைக்குள் அப்படியொரு சொல் நுழைகிறதோ, அப்போதே அதை முறுக்கித் திரித்துப் புதிதாக்குவதை விரும்புகிறேன். அது ஒரு வகையான ஆழ்குறிப்பாக, வேற்றுப்பொருள் வைப்பாகத் தோற்றம் கொண்டு, அந்த வழியில் புனைவு உங்களைச் சாதாரணத்தைக்கூடப் புதியதாகக் காணச்செய்கிறது, அல்லது பொதுச்செய்தியை, அதாவது அதிகமாகப் புழங்குகிற ஒன்றை, அல்லது உண்மையான இருப்பின் தன்மையைக்கூடக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.

முகமது, அவர் தயாரித்த வடிவமைப்பு, மற்றும் அவரது  நோக்கம் குறித்து தெளிவுபடுத்த மறுப்பது இந்தப் படைப்பின் மைய நிகழ்வுகளில் ஒன்று. அந்த மறுப்பு நிலைக்கு நீங்கள் மதிப்பளிப்பதாகத் தோன்றுகிறது. அதை எந்தப் புரிதலில் குறிப்பிடுகிறேனென்றால், அவருடைய எண்ணங்கள் மீது நீங்கள் ஒருபோதும் எதனையும் வலியுறுத்தவில்லை, அல்லது, வாசகர்கள் அதனுள் முழுமையாக உள்நோக்கிப் பயணிக்கட்டுமென விட்டுவிட்டிருக்கிறீர்கள் என்பதற்கான அகச்சான்றுகள் தென்படுகின்றன. எனக்குத் தோன்றும் மற்றொன்று, (இதைப்போன்ற ஒரு கேள்வியை நாவலாசிரியர் டிம் வின்ட்டன் அவர்களிடமும் கேட்டிருந்தோம்) அதாவது, புதிர்நிலை மற்றும் ஐயுறவு நிலையினை முன்வைப்பதற்கு நாவல் என்ற கலைவடிவம்தான் மிகப்பொருத்தமானதாக அமைகிறது; காட்டாக, ஒருவகையில் பார்த்தால் திரைப்படங்கள் அதற்குப் போதுமானவையல்ல. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

முழுமையாக… நாவல்களுக்கொப்ப திரைப்படங்களுக்கு புதிர்நிலை சக்தி இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும், அது வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறதென நினைக்கிறேன். புதிர்நிலையின் சக்தியைத் தெரிந்து அதனை நான் உயர்வாக மதிப்பதற்குக் கொஞ்சம் நாட்களாகின. ஒரு செய்தியாளராக, எல்லாவற்றையும் விவரித்துத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கு நான் நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தேன். சப்மிஸனில் நான் ஏராளமாக அடித்துத் திருத்தி மீள எழுதியதெல்லாம், சீவி எறிந்ததும் ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்ததும்தான், அதிலும் குறிப்பாக பாத்திரங்களின் உள்மனப்போக்கு நிலைகளை. முகமதுவைப் பொறுத்தமட்டில் ஓரளவுக்காவது புதிர்த்தன்மை இருக்கவேண்டுமென்ற நம்பிக்கைக்கு நான் வந்து சேர்ந்திருந்தேன். ஏனெனில்,  நாவலின் ஒரு பகுதி, நல்லெண்ண நம்பிக்கை பற்றியதாக இருக்கும்போது,  புதிர்த்தன்மைதான் படைப்பின் மைய நாடகத்தை – முகமது மீது அவர்கள் நம்பிக்கை கொண்டார்களா? இல்லையா? அப்படியானால், ஏன்? எனத் தீர்மானிப்பதை – வாசகரின் உள் மனத்தில் நிகழ்த்திப் பார்த்திடத் தூண்டுகிறது, அல்லது உந்துகிறது. நானும் உள்ளீடற்ற ரகசியங்கள் என்னும் கருத்தியலில் ஆர்வம் கொண்டிருந்தேன்; அதன் வாயிலாக, நாம், பல சிக்கலான காரணங்களால், சிலவேளைகளில், நம்பிக்கைக்குரிய தகவல்கள் மற்றும் உண்மைகளைக்கூட மறைக்கிறோம். அதன் மூலம், அவற்றை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்க்கிறோம். அந்தப் படைப்புக்குள் எனக்கே புதிராகத் தோன்றுகின்ற சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நாவலின் குறிப்பிடத்தக்க  மற்றொரு அம்சம், கதைமாந்தர்களின் முழுப்பொருத்தமான செயல்பாட்டியக்கம் – சர்ச்சைக்கிடமான சிக்கலைச் சுற்றிலும் வெவ்வேறு அரசியல் பதவிகளில், வெறுமனே பக்கத்தை நிரப்புபவர்களாக இல்லாமல் ரத்தமும் சதையுமாக முழுமையான மனிதர்களை, அத்துணைச் செம்மையாகப் படைத்திருக்கிறீர்கள். உங்கள் பாத்திரங்களை நீங்கள் எந்த மாதிரியாகப் பார்க்கிறீர்கள்? வேடிக்கையான உருவகமாகச் சொல்வதென்றால், உங்களை அவர்களின் ரசிகராக (அவர்களை உற்சாகப்படுத்துபவராக)க் கருதுகிறீர்களா? அல்லது நடுநிலை தவறாமல் விதிமுறைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கும் நடுவராகவா? காட்டாக, அவர்களில் உங்களுக்குப் பிடித்தமானவரென்று யாராவது இருக்கிறார்களா?

ஒவ்வொரு கதைமாந்தருமே அவர்களின்  குறிப்பிட்ட பகுதியில்  நான் செயல்படும்போது, எனக்குப் பிரியமானவர்தான். அந்தவகையில் அது என்னை அடிக்கடி மாற்றிக்கொள்கிற ஒரு ரசிகராக்குவதாகக் கூறுவேன். ஒரு நாவலாசிரியரின் பணி என்ற வகையில் கதைமாந்தர் அனைவரோடும் – குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் உலகினை எப்படிக் கண்டாலும் – ஒரே  இணக்கநியாயத்துடன் இருக்கவேண்டுமென்றே உணர்கிறேன். என்னிடம் கதைமாந்தர்கள் குறித்து ஏமாற்றம் தெரிவித்த சில வாசகர்களும் இருக்கின்றனர்.  அஸ்மா தவிர வேறு எந்தப் பாத்திரமும் விரும்பத்தக்கதாக இல்லையென அவர்கள் உணர்கிறார்கள். நான் படித்த புனைவுகளின் மாந்தர்கள் விரும்பத்தக்கவர்களா, இல்லையா, என நான் ஒருபோதும் கணித்ததில்லை என்பது மட்டுமல்ல அப்படிக் கவனித்தது கூட இல்லை. அந்தக் கற்பனை மனிதர்கள் ஆர்வமூட்டுபவர்களாக, சிந்தனையைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்களா? என்பதில்தான் எனக்கு அக்கறை. மீளப் பார்க்கும்போது, சில பாத்திரங்கள் மற்றவற்றைவிட வெற்றிகரமாக அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். அது எப்படி? ஏன்? எனப்பரிசீலிப்பது, அடுத்த நாவல் குறித்த சிந்தனையிலிருக்கும் எனக்குப் பயனளிப்பதாகிறது. அவர்கள் குறித்து எழுதும்போது நான் ஒருவேளை வேறுமாதிரியாக உணர்ந்திருக்கலாமென்றாலும் அதனை நான் இப்போது எனக்கு நானே கூட ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

இந்த விஷயங்களை  அத்தோடு விட்டுவிடாமல், நாவலின் முடிவு குறித்துச் சிறிது பேசுவோம். இந்தப் படைப்பு சமகால நிகழ்வுகளில் வேரூன்றி நிலைத்திருக்கும்போது, எதிர்காலத்துக்குத் தாவுவது ஒரு ஆர்வமூட்டுகிற, முன்னரைப் போலவே, துணிச்சலான தேர்வுதாம். ‘’ நாடு எப்போதும் போலத் தன்னைத்தானே திருத்திக்கொண்டு, முன்னேறிக் கொண்டிருக்கிறது, நடுநடுங்க வைத்த அந்த அதிர்ச்சியான காலம் அநேகமாக மறக்கப்பட்டுவிட்டது.’’ இது நம்பிக்கையா? அல்லது திடஉறுதித் தீர்மானமா?

ஒரு இறுக்கமானதும் மனநடுக்கத்தை ஏற்படுத்தியதுமான காலகட்டத்தில் நாவலின் பெரும்பகுதி அமைந்திருப்பதால், பாத்திரங்கள் அதனுள் சிறைப்பட்டவர்களாகிறார்கள். கதையின் முடிவில், அதனுள்ளிருந்தும் வெளியேறுவதற்கு, காலம் அவர்களது உட்புரிதலில் எந்தவகையில் ஒரு மாறுதலை ஏற்படுத்தும்? அல்லது ஏற்படுத்தாது? என்று உட்புகுந்து காண்பதை விரும்பினேன். அதோடு ஒரு தன்னிரக்கத்தை, அல்லது, குறைந்த பட்சம் செய்த பாவத்தை உணர்ந்து, வருந்துவதைப் போன்ற ஒரு நிலைமையை, எப்படித் தவிர்க்க முடியாமல் முதுமை வந்தடைகிறதோ, அது போல, அதனுள் கசியச் செய்ய விரும்பினேன். அது ஒரு இழப்பு குறித்த முடிவு – முதலாவதாக, நாவலையும் அதன் சம்பவங்களையும் எழவைத்த அந்தப் பெருநாசகரமான ஒன்று;  முடிவில் காணாமற் போனதானது – அல்லது, கதை மாந்தர்களாலேயே, தூக்கி எறியப்பட்டது – அதாவது தொடக்க இழப்பு அளித்த விழிப்பின் காரணமாக. நாவலின் முடிவில், பெருமளவு இல்லையென்றாலும் சிறிது மீட்சி இருக்கிறது; அதுவே சில வாசகர்களுக்கு திடமிக்க தேர்வாகத் தோன்றுகிறது. அதுவே, வாழ்க்கை நினைவுகளிலிருந்தும் நம்மை அவ்வப்போது நழுவவைப்பதான மகிழ்ச்சியும் நேர்த்தியும் மிக்க முடிவுகள் தேவையென, என்னை உணரச்செய்கிறது; பெருமளவுக்கு வாழ்க்கையை ஒத்திருப்பதாக உணரத்தக்க ஒரு முடிவினை நான் விரும்பினேன்.
அமெரிக்கா என வரும்போது, நான் மெய்மைநடப்புவாதியாகவும்  நல்லெண்ண நம்பிக்கைவாதியாகவும் இருக்கிறேன். நாம் எப்போதும்  தொடர்ச்சியாக, ஒரு குழுவினரை  அல்லது மற்றொரு குழுவினரை  விலக்குவதன் மூலமாக  அமெரிக்கர் என்பதற்கான வரையறையைக் குறுக்க முயற்சிக்கிறோம். இருந்தபோதிலும், மொத்தத்தில், அமெரிக்கா என்ற கருத்தாக்கம் – யாரொருவரும் அதைத் தாயகமாக்கிக் கொள்ளலாம், எல்லோருக்கும் உரிமையானது – மேலோங்கி வெற்றியோடு நிற்கிறது. இந்தநிலை வேறு மாதிரி அமையுமென நம்புவதற்கு எந்தக் காரணங்கள் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. தாக்குதலுக்குப்பின் இருபதாண்டுகள் தாண்டிவிட்டன; எல்லாம் நல்லதாகவே அமையும், என்ற காலகட்டத்தின் மீது பார்வையைச் செலுத்தும் ஏராளமான வாசகர்கள் எனக்கு இருக்கிறார்கள். நான் நிபுணத்துவம் படைக்கவில்லை, புனைகதை எழுதுகிறேன். ஆக, படைப்பினை மிக அதிகமான வரிக்குவரி வாசிப்பிற்கு எதிராக வாதிடுவேன். காலப்போக்கில் இது சரியாகிவிடுமென்றும் எண்ணுகிறேன்.

தன்னைத் தானே திருத்திக்கொள்வது  மற்றும் முன்னேறிச் செல்வது  என்ற செயல்படுமுறைக்கு கலை  மற்றும் இலக்கியம் எத்துணை முக்கியமென நீங்கள் கருதுகிறீர்கள்? 9/11க்குப் பிறகான பத்தாண்டுகளில், கலைத்துறை, அதிலும் குறிப்பாக இலக்கியத்தின் எதிர்வினை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

சிலநேரங்களில், இலக்கியம் ஒரு எதிர்-நினைவுச்சின்னமென, நான் எண்ணுகிறேன். சராசரியான நினைவுச் சின்னங்கள் வெறும் இழப்பினை மட்டுமல்ல, வரலாற்றைக் கட்டமைக்கின்றன – 9/11 இனத்தில், நினைவுச்சின்னம் அந்த நாளைச்சுற்றிலும் ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்துகிறது. அந்தக் கட்டமைப்பினை உடைத்து, அதனோடு, அந்த நாளைத் தொடர்ந்து வரப்பெற்றவற்றிற்கு என்ன நிகழ்ந்ததென்பதை,   இணைக்க விரும்பினேன். நம்மால் உச்சபட்சமாக முடிகிற அளவுக்கு, முன்னேறிச் செல்வதற்கு, அது முக்கியமானதென இப்போதும் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம் புத்தகக் கழகத்தினரைச் (அப்படியொன்றும் நீண்ட நாட்கள்  ஆகிவிடவில்லை,) சந்தித்த போது, நாட்டில் முஸ்லிம்களின் பிம்பத்தை உயர்த்துவதற்கு அல்லது அவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைக் குறைப்பதற்கு, என்னவிதமான அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள இயலுமென்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு இளம் திரைப்படத் தயாரிப்பாளர், எழுந்து, பண்பாட்டு நடவடிக்கைகள் மூலமே சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென, அவர் நினைப்பதாகச் சொன்னதில் நான் உடன்படுகிறேன். மக்கள் எப்படிச் சிந்திக்கவேண்டுமென நீங்கள் கூறமுடியாது; ஆனால், கலை, அவர்களுடைய சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கிறதென அவர்களைச் சிந்திக்குமாறு செய்ய இயலும்.
ஆகச்சிறந்ததான ஒரு 9/11-ன் பிற்கால நாவலை, நம் காலத்துப் `போரும் அமைதியும்` என ஒன்றைத் தேடுதல், தவறாகச் சென்றுள்ளதோ என நான் நினைக்கிறேன். நம் இலக்கிய உலகில் ஒன்றும், டால்ஸ்டாய்கள் அதிகமாக உலவிக்கொண்டிருக்கவில்லை. அதேநேரத்தில், முகிழ்த்து வந்திருக்கிற இலக்கியப் பதில்விளைவுகள், `போரும் அமைதியும்` அதன் காலத்தில் இருந்தது போலவே, எதிர்பாராததாக ஆனால், அசலாக இருக்கின்றன. ( நான் பார்த்த ஆற்றல்மிக்க 9/11-ன் பிற்காலப் படைப்புகளில், ஒன்று `Man on Wire` என்ற ஆவணப்படம் ஆனால், அது 9/11 பற்றியதே அல்ல. ஜெரார்டு ரிச்டரின் `செப்டம்பர்` ஓவியமும் மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றென நான் கருதுகிறேன். முதல் பார்வையில் அது, எதைக்குறித்ததென்று நீங்கள் உணரும்வரையிலும், முழுக்க முழுக்க நாட்டுப்புற வாழ்க்கை சார்ந்ததாகவே தோன்றும்) பதில் விளைவுகளான இலக்கியங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு முழுமையாக, மனித உடலைப்போல அமையலாம்; எல்லாமாகச் சேர்ந்த முழுமையான ஒன்று அதிக ஆர்வமூட்டுவதாக, அல்லது, தனித்தனி உறுப்புகளைக் காட்டிலும் முக்கியமானதாக அமைவதற்கு எல்லாவித வாய்ப்புகளும் உள்ளன. நான் 9/11 நூல்களில் பலவற்றைப் படிக்கவில்லை. எனக்குச் சொன்னவரையில், அவற்றில் சிலவற்றில் `மோனிக்கர் சரியாக முட்டி மோதவில்லை, குறிப்பாக ஆர்வமூட்டும் விதத்தில், என்றார்கள். (அதற்காக வேறு காரணங்களுக்காக அவை நல்ல புத்தகங்களாக ஆகாமற் போய்விடாது) எழுத்தாளர்களாக நாம் கொஞ்ச தூரம் விலகி இருப்பது தேவையாகிறது; ஒரு தேசமாக நாம் இன்னும் 9/11ன் விளைவுகளுக்குள்ளேயே இருக்கிறோம், ஏனெனில், ஒருபக்கம், நாம் இன்னும் போர் நடத்துவதில் இருக்கிறோம், இன்னொரு பக்கம், வீட்டுக்குள் என்றாலும் அரசியல் பதிலடிகளையும் நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. – எவ்வளவுக்கு சமரசம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை யோசிப்பதேயில்லை.

`ரும்பஸ்` இதழுக்கு  அளித்த ஒரு பேட்டியில்  ஐரிஷ் எழுத்தாளர் கோல்ம்  மெகான் (Colm MeCann), ‘’ ஒவ்வொரு  நாவலும் தோல்விதான். நீங்கள்  எதைச் சாதிக்க வேண்டுமென்று  உண்மையாக நினைத்தீர்களோ,  அதை ஒருபோதும் சாதிக்க  இயலாது. ஆற்றங்கரையில் நீங்கள்  கனவு கண்ட விஷயம், எழுதும்  மேஜைக்குத் திரும்பிச்  சாதித்ததாக ஒருபோதும்  இராது.’’ என்கிறார். ஒரு நாவலாசிரியராக நீங்கள், இதில் உடன்படுகிறீர்களா?

ஆம். அதில் மனமுடையச் செய்கின்ற துயரம்(!) ஒன்று இருக்கிறது அது  உங்கள் தலைக்குள் இருப்பதிலிருந்து தாளில் எழுதியிருப்பதற்கு ஒரு முழுமையான பாலம் அமைக்க இயலாமலிருக்கிற மொத்தச் செயல்பாடும் குறித்த துயரம். Jude the obscure ல் ஜூடு, தூரத்தில் மினுங்கிப் பிரகாசிக்கும் நகரங்களைக் கண்டு, அங்கு சென்றுசேர்ந்த போதெல்லாம் ஏமாறுவதைப் போன்றது. என்னுடைய அடுத்த நாவல் என் தலைக்குள் இருக்கிற ஒரு நகரம்; அழகும் நூறு விழுக்காடு முழுமையும் கொண்டது; ஆக, ஏமாற்றப்பட, மட்டுமே, எனக்கு விதிக்கப்பட்டுள்ளது. எனக்கு நானே சொல்லிக்கொள்கிற ஒரே விஷயம், வாசகர்கள் என் தலைக்குள் செல்ல எந்தப் பாதையும் இல்லை என்பதுதான். அவர்கள் தாளில் இருப்பதை மட்டுமே பெற முடியும். அவர்கள் ஏமாற்றமாகலாம், ஆனால், என்னைவிடவும் அதிகமாகப் பல வெவ்வேறு காரணங்களும் இருக்கலாம்.

. எழுத்தாளர்கள், எந்த வகையிலான பிற எழுத்தாளர்களை வாசிக்கிறார்கள் என்பதை அறிவதில் `த்ரீ மங்கீஸ்` எப்போதுமே ஆர்வம்கொண்டிருக்கிறது, ஆகவே உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் யார், யாரென்றும், அது எதனால் என்றும் உங்களைக் கேட்கலாமா?

என்னுடைய எல்லை மிக விரிந்து பரந்தது. ஜோசப் கான்ராட், கிரஹாம் க்ரீன், ஜோன் திதியன், டபுள்யு.ஜி. செபால்டு, ஆலிஸ் மன்றோ, ஜேன் ஆஸ்டின், வாலஸ் ஸ்டீவன்ஸ், எமிலி டிக்கின்ஸன்.  எல்லா நாவலாசிரியர்களும் விரும்புகிற மாதிரி எழுதுகின்ற காதரைன் போ என்ற பத்திரிகையாளர் ஒருவர்.

இறுதியாக, எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? அடுத்த நூல் படைப்பிலிருக்கிறதா?

ஆம். அடுத்த நாவலுக்காக, வாசிப்பதும்  குறிப்பெடுப்பதுமான பணிகளில் இருக்கிறேன். அது, நினைவுகள் மற்றும் தன்விபரக்குறிப்புகளின் தன்மையைப் பொறுத்தே பெரும்பான்மை அமைகிறது;  போர், திருமணம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் நமது தலையீடு தொடர்பானது.
Jude the obscure – தாமஸ் ஹார்டியின்  கடைசி நாவல்.

•••

மலைகள் இணைய இதழில் 18.06. 2012 இதழில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment