Tuesday, 5 January 2016

சீனச் சிறுகதை - அப்பாவுக்கு ஒரு வேலை Little Girl Lost

அப்பாவுக்கு ஒரு வேலை. (Little Girl Lost)
சீனம் ( மாண்டரின்) : ஷெங் கெயி (Sheng Keyi)
ஆங்கிலம் : ஜான் பார்தலெட் (John Barthelette)
தமிழில் ச. ஆறுமுகம்.
Image result for sheng keyi
(சீனாவின் புதிய தலைமுறைப் படைப்பாளர்களில் புத்துலகச் சீனா பற்றி எழுதும் `காங்டாங் பெண் படைப்பாளர்கள்` வரிசையில் ஒருவராகக் கருதப்படும் ஷெங் கெயி சீனாவின் ஹுனான் மாநிலத்தில் யியாங் என்னுமிடத்தில்  பிறந்து, காங்ஷூவில் பணியாற்றித் தற்போது பீஜிங்கில் வசிக்கிறார். அவரது 32 வது வயதில், 2002ல் முழுநேர எழுத்தாளராக எழுதத் தொடங்கியதுமே 2003ல் புதிய படைப்பாளர்களுக்கான விருதினைப் பெற்றார். `வடபகுதிப் பெண்கள்` என்ற நாவலுடன் இதுவரை பத்து நாவல்கள் வெளியாகியுள்ளன.  பெண் பாத்திரங்கள் மற்றும் கருக்களைக் கொண்டே கதையைத் தொடங்குகிற இவர், நடை மற்றும் தொனியில் தீவிரமான சோதனைகளை மேற்கொள்பவரென்றும் அவரது படைப்புகள் உணர்வு மற்றும் சமூக நிலைகளில் விரிவான தளங்களைக் கொண்டுள்ளதாகவும் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.)
*******
வாசலில் ஒரு நிழல் கடந்து சென்ற போது, டாங் புதாவ் வேலை எதுவும் செய்துகொண்டிருக்கவில்லை. அது ஒரு அகன்று பருத்த மனிதன்; சிறிதாகத் திறந்த வாயுடன் ஒரு சுறாவைப் போல் வழுக்கி ஒரே எட்டில் கடைக்குள் நுழைந்தான். சுறாவின் வழுவழுப்பான மேனிப் பளபளப்பினைக் காட்டி இருபுறமும் நீர் விலகுவது போல் வாசற்கதவுச் சட்டங்களிலிருந்து சிற்றதிர்வுகள் பரவிக்கொண்டிருந்தன.   அவன் வயிறு மிகவும் பெரிதாக, மொத்தத்தில்  தோற்றத்தையே பெரியதோர் உருவமாகக் காட்டிக் கொண்டிருந்தது. நாவற்பழக் கருஞ்சிவப்பில் ஒரு டி- சர்ட், கடல் நீலக் காற்சட்டையினுள் திணிக்கப்பட்டிருந்தது; இடைக் கச்சு முன் பட்டையில் முதலை பொறித்த முத்திரை பளபளத்தது. மொத்தத்தில் அந்தக் கச்சு டாங் புதாவுக்கு வாளியின் கைப்பிடியை நினைவுபடுத்தியது. அதன் பட்டை  உண்மையிலேயே   மாட்டியிருந்ததாவெனச் சொல்வது கடினம்.
‘’ அது யாராவது முதலாளி அல்லது மேலாளராகத்தான் இருக்கும். ‘’ டாங் புதாவ், மூச்சை இழுத்து நிமிர, அவள் முகத்தில் வலிந்து வரவழைக்கும்  புன்னகையொன்று மெலிதாக  உயிர்த்தது.
பார்வை முகப்பில் அங்குமிங்குமாக அசைந்து நோக்கம் பார்த்துக் கொண்டிருந்த சுறா, சட்டென்று டாங் புதாவை நோக்கி நீந்தி,  வாசற் கதவை யாரோ சட்டெனத் திறந்ததுபோல அவளிடம் நேர் எதிராக வந்து நின்றது. இந்தப் பாரிய உடம்பு இலையுதிர்காலக் காற்றில் உதிர்ந்து விழும் இலையை விடவும் நளினமாக வளைந்து, நெளிந்து ஒரு நடன மங்கை, கூரான காற் பெருவிரலில் நடப்பதைப்போல அசைய முடியுமா என  டாங் புதாவ் வியந்துபோனாள்.
அந்த மனிதன் தலையை உயர்த்தி, டாங் புதாவின் முகத்தில் தெரிந்த தனித்தவொரு எண்ண ஓட்டத்தைக் கவனித்தான். அவளைச் சுடுவதற்குக் குறி பார்ப்பது போல, அவன் கண்களைச் சுருக்க, அவன் வாய் இன்னும் அதிகமாகப் பிளந்து தெரிந்தது.
டாங் புதாவ் சிறிது திகைத்துப் போனாள். அந்த மனிதனின் உடம்பிலிருந்து வந்த காரமான ஒரு நெடி வேறு அவள் மூக்கைத் தாக்கியது. அவனது கைகளில் வளர்ந்திருந்த நீள முடிகள் காற்றால் ஒரே திசையில் சீவப்பட்டுப் பணிவாக நின்றன.
‘’ அய்யா, மன்னித்துக்கொள்ளுங்கள், எந்த மாதிரியான அலைபேசி வாங்க விரும்புகிறீர்கள்?’’ தன் வாயிலிருந்துதான் வார்த்தைகள் வந்தனவா என டாங் புதாவ் நினைத்தாள். அவன் முழங்கையில் தெரிந்த நீளமான முரட்டு முடிகள் ஏதோ ஒரு படிமுறை வளர்ச்சி போலத் தோன்றியது.
அந்த மனிதனின் சிறிய கண்கள் கதிரின் பிரகாசமான ஒளியை எதிர்கொண்டது போல இன்னும் சிறிதாகின.
அந்த மனிதனோடு டாங் புதாவால் கொஞ்சங்கூட இணக்கமாகப் பேச முடியவில்லை; அவனது விரிந்த வாயின் இளிப்பு வேறு அவளைத் தொல்லைப்படுத்தியது.
அவள் நெஞ்சுக்கூட்டுக்குள் மயிரடர்ந்த கை ஒன்று நுழைந்து இதயத்தைப் பிடித்துக் கடினமாகவும் இல்லாமல், எளிதாகவுமில்லாமல் பிசைந்தது. தொண்டைக்குள் முடி ஒன்று சிக்கிக் கொண்டது போல ஒரு இம்சை. அவளுக்கு வாந்தி வருவது போலத் தோன்றியது. டாங் புதாவுக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகிறது. அவளது முகம் மழையில் நனைந்து, மினுங்கும் பழத்தைப் போல எப்போதும் மாசு மறுவின்றித் தெரியும். அவளது புருவங்கள் மழித்துச் சீரமைக்கப்பட்டதில்லை; அவளது கூந்தல் ஒருபோதும் கலையவோ, உதிரவோ இல்லை; நிறம் மாறியதுமில்லை. அது ஒரு துறவுக்கன்னியின் முகத்திரை போல் கறுப்பாக, நெளிவுகளின்றிப் பளிச்சென்று இறங்கி, அவளுக்கொரு புத்தம் புதிய எளிய வெகுளித் தன்மையைக் கொடுத்தது.
உண்மையில், டாங் புதாவ் ஏற்கெனவேயே பல ஆண்களோடு முயன்று பார்த்துவிட்டாள்; ஆனால் அவர்களில் ஒருவரால் கூட அவளது அப்பாவுக்கு ஒரு வேலை தேடிக்கொடுக்கும் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியவில்லை. அவளுடைய அப்பா ஒரு பொருத்துநராகப் பணிபுரிந்து வேலையை இழந்துவிட்டார்; அதிலிருந்து செங்டு ஊர் முழுக்கச் சுற்றிச்சுற்றி வருகிறார்; அதோடு டாங் புதாவின் பெருங்கவலையாகவும் ஆகிவிட்டார்.
ஒரு அலைபேசியின் பலதரப்பட்ட செயல்திறன்களைப் பற்றி சகபணியாளர் ஒருவர், வாடிக்கையாளரிடம் விவரிக்கும் சப்த அலையொன்று டாங் புதாவுக்கும் சுறாவுக்கும் இடையில் புகுந்து கடந்தது. ஆழக்கடலின் அலைகளால் சிறிய அசைவுகளுடன் அடித்துச் செல்லப்படும் கடற்பாசிகளைப் போல் பலரும் அவர்களை வேகமாகக் கடந்து சென்றனர். காட்சிப்பெட்டியில் முப்பது வகையான அலைபேசிகள் அழகிய பவளங்களாக மின்னிப் பளபளத்துக் கொண்டிருந்தன.
அந்த மனிதனின் தலை கண்ணாடித் தடுப்பு மீது ஒட்டி நின்றது. அவன்  முரட்டு விரல் ஒன்றை நீட்டி ஐந்தாயிரம் யுவான் விலையிடப்பட்டிருந்த அலைபேசி ஒன்றைச் சுட்டினான்.
நூறு கைகள் கொண்ட ஸ்குயிட் மீனைப்போல் டாங் புதாவின் கை, காட்சிப்பெட்டிக்குள் நுழைந்து, நீண்டு, அலைபேசியைப் பற்றி இழுத்து அவன் கையில் விரைந்து சேர்த்தது.  
. விற்பனைக்குத் தக்கபடி டாங் புதாவுக்குத்  தரகுப்பணம் கிடைக்கிறது. அதனால்தான் எப்போதுமே அவள் இம்மியளவும் கடுமையின்றிச் சொற்களில் இனிமை கலந்து பேசுகிறாள். அலைபேசிகளை வாங்கும்போது, மக்கள் பேரரசர்கள்: அவர்களிடம் அரண்மனையில் மூவாயிரம் அழகு வகைகள் இருக்கலாம். ஆனால், அப்படித் தேர்ந்து சேர்த்ததும் கூட, ஒரு சிலவற்றை எப்போதாவதுதான் விஞ்ச முடிகிறது. சில நிகழ்முறைகளை வாழ்நாள் முழுவதற்குமே கூடப் பயன்படுத்தப் போவதில்லை. இருந்தாலும், டாங் புதாவ், ஒரே மூச்சில் அந்த அலைபேசியின் முக்கியமான இருபது முப்பது பயன்பாடுகளை, அந்த அலைபேசியின் தரத்திற்குத் தேவைப்படாததாக இருந்தாலும், அந்தத் தயாரிப்பைப்பற்றி இந்த மனிதனுக்கு ஏற்கெனவேயே தெரிந்திருந்ததாகத் தோன்றினாலும்கூட வேகவேகமாகச் சொல்லிமுடித்தாள்.
‘’ நான் இதை எடுத்துக்கொள்கிறேன். பெறுகைச்சீட்டு எழுதுங்கள் .’’ என்றான், அந்த மனிதன். அவனது உடலைப்போலவே நளினமாக, அவனுடைய முரட்டுப் பெருவிரல் அலைபேசியின் விசைப் பலகைமீது அங்குமிங்குமாகச் சுறுசுறுப்பாகக் குதித்துக் குதித்து அசைந்து கொண்டிருந்தது.  கவர்ச்சியாக நிமிர்ந்து பார்க்கும் அவனது இளமைச் சாயலினை உணர்ந்துகொள்ள முடிந்தது; அந்த மனிதன் பாரம் மிக்கத் தன் உடலைச் சுமந்து, அதன் எடையாலேயே களைத்துப்போகும் ஒருவனாகத் தெரியவில்லை.
‘’உண்மையாகவா சொல்கிறீர்கள்?’’ டாங் புதாவுக்கு மகிழ்ச்சிதானென்றாலும் மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு யோசனை கூறும் தொனியில் அவள் பேச்சும் குரலும் இருந்தது.
‘’ இதை எடுத்துக் கொள்கிறேன். பெறுகைச்சீட்டு எழுதுங்கள்.’’ அந்த மனிதனின் கனத்த உடலின் இருப்பைப் போலவே அவனது பேச்சும் உண்மையாக, உறுதியாக இருந்தது.
உண்மையாகச் சொன்னால், அந்த மனிதன் திரும்பவும் கூறிய அதே பதில் அவள் எதிர்பார்த்ததற்கும் மேலான நம்பிக்கையைக் கொடுத்தது. மறுபடியும் அவள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பெறுகைச்சீட்டினை எழுதி அந்த மனிதனின் கையில் கொடுத்தாள்.     
***
வடக்கு டியானேவுக்கும் மேற்கு லோங்கோவுக்குமான சந்திப்பில் போக்கு வரத்து அடையாள விளக்கின் ஒளி மாறும் நேரம் 199 நொடிகள். அந்த அலைபேசி விற்பனையகத்தின் முன்னால் எப்போதும் கார்களின் வரிசை பாம்பு போல நீண்டு கிடந்தது. 199 நொடிகள் என்பது மிக அதிகம். அதிலும் வரிசையின் நடுவில் மாட்டிக்கொள்ளும் ஒருவருக்கு அது நிச்சயமாக ஒரு நெடுநீளக் கடுவரிசைதான். அது போக்குவரத்து நெரிசலான நேரமாக இருந்ததோ, அவன் இந்த 199 நொடி மாற்றங்களை மூன்றுமுறை சந்திக்க வேண்டியிருக்கும். அது போன்ற நேரங்களில் டாங் புதாவ், ஓட்டுநர்களின் கெட்ட நேரத்தை நினைத்து, `நல்லவேளை, நம்மிடம் கார் இல்லை` யெனத்  திருப்திகொண்டு மகிழ்வாள். என்றாலும் கார் உரிமையாளர்களைச் சந்திப்பதில் அவளுக்கு எப்போதும் மகிழ்ச்சிதான். அவளுடைய அப்பாவுக்கு இந்த வருடத்தோடு 42 வயது ஆகிறது. அவருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் என்பது வெற்றியாளர்களின் கையில் இருக்கிறது. சரக்குகள் ஏற்றிச் செல்லும் ஒரு வேலையை அவரால் எளிதில் பெற்றுவிட முடியும். ஆனால், அப்படியொரு கடினமான உடலுழைப்பில் அவர் ஈடுபடுவதை டாங் புதாவ் விரும்பவில்லை. அவர் ஒரு வாயிற்காவலராக வேண்டுமென்றாலும், யாராவது தலைவர் ஒருவர் தனிப்பட்ட முறையில் அவர்களுக்காகத் தலையிட்டு ஏற்பாடுசெய்ய வேண்டும். இல்லையெனில், வயதானவர்கள் தேவையில்லையென பணியாளர் துறை ஒதுக்கிவிடுகிறது. ஆனால், டாங் புதாவுக்கு ஒரு தலைவரைச் சந்திக்கும்  நல்ல நேரம்  இன்று வரையிலும் கிடைக்கப் பெறவேயில்லை.
டாங் புதாவ் மீண்டும் மீண்டும் பலமுறையாக முகப்பிடத்தைத் துடைப்பதும் வாசல் பக்கம், தெருவை அடைத்து நிற்கும் கார்களை, அந்தக்கார்களின் ஊடாக முன்னும் பின்னுமாகச் செல்லும் மனிதர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்துவதுமாக இருந்தாள். அவள் அம்மாவைப் போலவே சாயலிருக்கிற, ஒரு நடுவயதுப் பெண்ணைக் கண்டாள். அவள் மேனியின் நிறம் அழகியதாக, முகம் அன்பு நிறைந்ததாக, நடை, உடை, பாவனை பட்டிக்காடெனச் சொல்லமுடியாதபடி இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் அவள் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்தது கெட்ட நேரம்தான். அது நடந்து சில நாட்களிலேயே அவளது அப்பா வேலையை இழந்தார். நல்ல நேரம் போயே போய்விட்டது; இனிமேலா திரும்பிவரப் போகிறது? டாங் புதாவ் அழாமலிருக்க முயற்சித்தாள்; ஆனாலும் முடியவில்லை. கடந்த வருடத்துக்கும் முன்வருடம் காங்ஷூவில் வேலையில் சேர்வதற்காக, அவள் பள்ளியிலிருந்தும் நின்றுவிட்டாள். அப்படியானதால்தான் அவளது தம்பி உயர்நிலைப்பள்ளிக்குப் போக முடிந்தது. அப்பா, முதலில் இதைத் துயரமானதெனக் கருதிப் பெருமூச்செறிந்து, பின்னர், அவளுக்கு வேலை உறுதியாகிக் காலூன்றியதும் அவருக்கு ஒரு வேலை பார்த்துத் தரும்படி சொன்னார். இப்போது அவள் தன்காலில் நிற்கத் தொடங்கிவிட்டாள். காங்ஷூ அவளுக்குப் பழக்கமானதாகிவிட்டது. முன்னைக்குப் பார்க்கும்போது, இப்போது வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை. ஆனால், அப்பாவுக்கு ஒரு வேலையை மட்டும் அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அந்த அலைபேசிக் கடைக்கு அருகிலேயே ஒரு பேரங்காடி இருந்தது. அங்கே அப்பாவுக்கு ஏதாவது வேலை கிடைக்குமாவென முயற்சித்துப் பார்த்தாள். முடிவு என்னவாக இருக்குமென எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியதுதானே. அதைப்போலவே வேறுசில இடங்களிலும் முயற்சித்தாள்; முடிவு என்னவோ அதேதான். இதில் ஏற்கெனவே அனுபவமுள்ளவர்கள், ‘’  வேலை கிடைப்பது கடினந்தான்; இருந்தாலும் நீ மட்டும் சரியான நபரைப் பிடித்துவிட்டால் அது எளிதுதான்; அந்த வேலைக்குத் தேவையான தகுதி இல்லாவிட்டாலுங்கூட அது உனக்குக் கிடைக்கும்.  சரியான ஆட்கள் மட்டும் இல்லையோ, உனக்கு என்னதான் சிறப்பான தகுதி இருந்தாலும் உனக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.’’ என்று டாங் புதாவுக்குச் சொன்னார்கள்.
டாங் புதாவ், ஒரு வாரம் முன்னால் சந்தித்த சுறாவை இப்போது நினைத்தாள். அவன் தோற்றம் ஒன்றும் அவ்வளவு வெறுப்பாக இல்லை; முன்னே துருத்தும் தொந்தியைக் கூட அவள் மன்னித்துவிடுவாள். சிறிய கண்கள், அதனாலென்ன, நல்ல கூரிய, குறிப்பான பார்வை; அகன்ற வாய் செல்வத்தின் அடையாளமாயிற்றே; ஒரே பக்கமாக வளைந்து நிற்கும் அவன் முழங்கை மயிரைக்கூட செல்லப் பிராணிகளைப் போன்றதெனப் பாவனை செய்துகொள்ளலாம். அவள் தனக்குத்தானே சிறிது இரங்கித் தன் வருத்தமும் கொண்டாள். சுறா அதன் சிறிய கண்களைக் கொண்டு மூன்று முறை குறிபார்த்தது. அதன் இலக்காக, அவள் தன் மார்பைக் கூட நிமிர்த்திக் காட்டவில்லை. அவனைப் போன்ற ஆட்களுக்கெல்லாம், அவள் தான் முன்முயற்சியெடுத்து வளைத்துப்போட வேண்டும்….. அவள் இதே மாதிரி, வாய்ப்புகளைத் தவறவிட்டால், பிறகு எப்படி அவள் அப்பாவுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது? அது முடியாமலே போய்விடும். சுறாவின் அலைபேசி எண்ணைக்கூட அவள் கேட்டு வாங்கியிருக்கவில்லையே, என்ன பிள்ளை நான் என்று மறுகிக்கொண்டாள். சுறா அவள் பக்கத்தில் அங்கும் இங்குமாக நீந்திக்கொண்டிருந்தபோது அந்த மேலாளர் வேறு கண்ணில் எண்ணெய்விட்ட மாதிரி பார்த்துக்கொண்டிருந்தான். அதனால்தான் அப்படி ஆகிவிட்டதெனக் கரித்துக்கொண்டாள்.
மேலாளர் விலைச் சீட்டுக் கற்றை ஒன்றை டாங் புதாவிடம் கொடுத்தார். சுறா வாங்கியிருந்த அலைபேசியின் விலை இப்போது குறைக்கப்பட்டிருந்தது.   டாங் புதாவ் விலைச்சீட்டுகளை மாற்றிக் கொண்டிருந்தபோது சுறா வந்தது. அதன் அகன்ற வாய் சிறிது திறந்திருக்க, ஒரே அசைவில் அது கடைக்குள் நழுவி வந்தது. அதன் மேனிப் பளபளப்பைக் காட்டி இருபுறமும் நீர் விலகிச்செல்ல, கதவுச்சட்டங்கள் திறக்கச் சிற்றதிர்வுகள் பரந்து விரிந்தன. ஆரஞ்சு வண்ண டி-சர்ட், இலேசான சாம்பல் நிறக் காற்சட்டைக்குள் திணிக்கப்பட்டு, கச்சின் உலோகப் பட்டையில் முதலை முத்திரை மினுமினுத்துக்கொண்டிருந்தது. இம்முறை டாங் புதாவ் வாளியைப்பற்றி நினைக்கவுமில்லை; இடுப்பில் கச்சு நுழைக்கும் வார்கள் இருந்தனவா என வியக்கவுமில்லை. அவனை, மேகங்களைக் கிழித்துக்கொண்டு வந்த ஒளிப்பிழம்பாகத் தான் அவள் உணர்ந்தாள். அவள் முன்னால் மாபெரும் ஒளிவட்டம் ஒன்று தோன்றி, நீண்டு விரிந்தது. அவள் இதயம் உடனடியாகச் சூடேறிச் சுறுசுறுப்பு கொண்டது. அவள் வாய் முழுக்கப் புன்னகை ஒன்று விரிந்ததை அவளே உணரவில்லை.
சுறா காற்றுக்காக `உஸ், உஸ்` என்று வாயைத் திறந்து மூடிக் கொண்டிருந்தது. வியர்வையால் அதன் நெற்றி நனைந்திருந்தது. அதன் அகன்ற வாயைத் திறந்தபோது ஏதோ ஒரு தசைக்கோளம் சட்டென்று இரண்டாகப் பிளந்தது போலிருந்தது. அதன் தடித்த உதடுகள் உள்மடிந்தபோது சிறிது வீக்கமுற்றதாகத் தெரிந்தது. இந்த இரண்டு தசைப் பலகைகளுக்கு நடுவிலிருந்து பசுவில் பால் கறப்பதுபோன்ற, வெதுவெதுப்பான வெண்ணிற ஒலி வந்தது. அவனது அலைபேசியில் ஏதோ ஒரு பிரச்னை, அது தானாகவே எப்போதும் மூடிக்கொள்கிறது அல்லது மீண்டெழுகிறதென்றான், அவன்.
மருத்துவருக்காகக் காத்திருக்கும் நோயாளியின் ஏக்கமும் எதிர்பார்ப்புமான முகத்துடன் அவன் முகப்புச் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். டாங் புதாவையே பார்த்துக் கொண்டிருந்த அவனின் முகத்தோற்றம் நிச்சயமாக இணக்கமானதேதான்.
டாங் புதாவ் அலைபேசியை எடுத்து இயக்கிப் பார்த்தாள். சுறா சொன்னதைப் போலவேதான் அது மாறுபட்டு இயங்கியது. அவனிடம் ஒருநிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, மேலாளரைப் பார்த்துப் பேசச் சென்றாள்.
பத்துநிமிடம் கழித்து, டாங் புதாவ், சுறாவின் துளைக்கும் பார்வை   வட்டத்துக்குள் திரும்பி வந்து, அவனது அலைபேசிக்குப் பதிலாகப் புதிய ஒன்றைச் சிரமத்திற்கு மன்னிக்கும்படித் திரும்பத் திரும்பச் சொல்லி அவன் கையில் கொடுத்தாள். சுறாவின் முகத்தோற்றத்திலிருந்து, அவன் இதுபோன்ற சிரமங்களை அடிக்கடி நேர்கொள்ள விரும்புவான் போல் தெரிந்தது. விற்பனையகத்தின் குளிர்பதனம் மேலதிகச் சீர்நிலையில் வலுவுடனிருந்தது: அவன் வாய்திறந்து `உஸ்உஸ்` என மூச்சுவிடுவதை நிறுத்தி முற்றிலும் இயல்பாகிவிட்டான். அவன் ஒரு தங்கநிற அட்டைப் பெட்டியைத் தேடி எடுத்து அதிலிருந்து தங்கநிற முகவரிச்சீட்டு ஒன்றை இழுத்தெடுத்தான். டி சர்ட்டின் மார்புப்பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து புதிய அலைபேசி எண்ணைக் கூடுதலாக எழுதிச் சேர்த்தான். அதன்பின், டாங் புதாவிடம், வேலையென்று எதுவுமில்லாமல், விடுபட்டநிலையில் எப்போது இருப்பாள் எனக்கேட்டான். அவன் அவளுக்கு ஒரு விருந்து அளிக்க அல்லது பாதம் பிசையகத்துக்கு அழைத்துச்செல்ல விரும்பினான்.
ஆக, சுறாவின் பெயர் டாங் ஷுன்ஜிய், பொது மேலாளர். அவருக்கு இன்னும் பல சிறப்புப் பட்டங்கள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் டாங் புதாவ் தன் நினைவுக்குள் ஈர்த்துக்கொள்ளவில்லை. அவள் `ஹா`வென வியந்து போனாள். ஒரு பொது மேலாளரைத் `தலைமை வகிக்கும்` முன்னணி வர்க்கமாகத்தான் கருதுவார்கள். யாருக்கேனும் ஒரு வேலை கிடைப்பதற்கு பொது மேலாளர், அவருடைய கீழ்நிலை ஆளிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அவ்வளவுதான். ‘’ பொது மேலாளர் ’’ என்பதிலேயே டாங் புதாவின் கண்கள் நிலைத்து நின்றுவிட்டன; அவளால் அவற்றைச் சிறிதுகூட அப்படி, இப்படி, அசைத்துவிட முடியவில்லை. அவளுடைய இதயத்துக்குள்,   அரிசிப் பொரி மோதகம் வெடித்து வெல்லப்பாகு மெல்லக் கரைந்து இனிமை பரந்துகொண்டிருந்தது.               
***
உங்களுக்கு, டியு கிழக்குச்சாலை எங்கிருக்கிறதென்று தெரியுமா? பத்து நிமிடம் அந்தச் சாலையில் கீழிறங்கிச் சென்றால் போதும், பிங் ஷெங் உணவு விடுதி வந்துவிடும். எல்லோருக்கும் தெரியும், அது நீண்ட காலமாக எல்லோரும் விரும்புகிற, புகழ்பெற்ற ஒன்று. அங்கே உண்மையிலேயே சிறப்பான சில உணவு வகைகள் கிடைக்கும். அந்த உணவுகளில் இன்னும் பழங்காலப் பாரம்பரிய காங்டாங் மணம் இருக்கிறது. அது மட்டுமில்லை; அவர்கள் இப்போது ஒரு புது வகையான காங்டாங் சமையலை உருவாக்கியிருக்கிறார்கள். அது மிகமிகச் சிறப்பான வகையில் நன்றாக இருக்கிறது. ……மொறுமொறுப்பான பன்றித்தோல், மெதுமெதுவாகச் சூடேற்றிக் கொதிக்க வைத்த ஆமை சூப், அலைத்தாட்டிப் பொலபொலவென வறுத்தெடுக்கும் குணசிங்கி எனப்படும் ஜின்செங்1 கிழங்கு. அங்கே நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும் அது உங்கள் நுரையீரலை ஈரமாக்கிச் சுவாசத்தைச் சுத்தப்படுத்தும். கூடவே உடம்புக்கு வலு சேர்க்கும். எங்கே டாங் புதாவ் வராமல் போய்விடுவாளோ என டாங் ஷுன்ஜிய் கவலைப்படுவதாகவே தோன்றியது. அவர் தொலைபேசி மூலம் மெய்யானதொரு முயற்சி மேற்கொண்டு, வேண்டுகோளின் தொடர்ச்சியாக தட்டுகளும் கிண்ணங்களும் தரையில் விழுந்து சிதறுவது போன்றதொரு வெடிச் சிரிப்பும் சிரித்தார்.
எத்தனை பேர் அங்கு வருவார்கள் என்று டாங் புதாவுக்குத் தெரியாது. ஆனால், வேறு பல பொது மேலாளர்களும் வருவார்களென அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அவளுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. மகிழ்ச்சி ஊற்றெடுத்துப் பொங்கியதாலேயே அவளால் எதுவும் பேச முடியவில்லை. டாங் ஷுன்ஜிய் அவளது மவுனத்தைச் சம்மதமாக ஒருபக்கம் எடுத்துக்கொண்டாலும் அவளை அழைத்துவர கார் அனுப்பட்டுமா என்று வேறு கருணை மழை பொழிந்தார்.  உணவு விடுதி பக்கத்தில் தானே இருக்கிறது, கார் தேவையில்லையெனச் சொல்லியிருந்தாள்.
வெளியே வந்தாள். வானம் அப்போதும் சாம்பல்நிறப் பனிமூட்டத்துக்குள் மறைந்தேயிருந்தது. கார்களின் புகைக்குழாய்கள் அடர்த்தியான கரும் புகையைக் கக்கி வானத்தை நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தன. நெருக்கமான கட்டிடங்கள் காற்று ஊடாட அனுமதிக்கவில்லை . பனிமூட்டம் மரணமுற்ற இருள்நீர்ப்பரப்பாக நிலவு, விண்மீன்கள், மேகங்கள் அனைத்தையும் மறைத்தது. டியானே வடக்குச் சாலையில் எப்போதுமே 199 முழுமையான நொடிகளுக்கு நிலைத்திருக்கும் அழிவற்ற போக்குவரத்து விளக்கு, ஒரு கலங்கரை விளக்கு போலப் பிரகாசித்து, அந்த எல்லையற்ற இருள்வெளியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சொட்டும் நீர்த்துளிகளாகப் பெருத்த சப்தமொன்று ஒலியெழுப்பாமல் கடந்துபோவதுபோல் கார்கள் பச்சை ஒளியினைக் கடந்துகொண்டிருந்தன. டாங் புதாவ் தலையைத் திருப்பி, கவனமாகக் கேட்ட போதும் சப்தம் எதுவும் இல்லை. அவளுடைய காதுகள் இதுபோன்ற சப்தங்களெல்லாம் கேட்காதபடி மரத்துவிட்டிருந்தன.
டாங் ஷுன்ஜிய் சொல்லியிருந்தபடி, அவள் முதல் தளத்திற்குச் சென்று இடதுபக்கம் திரும்பி முன்பதிவு ஒதுக்கீட்டு அறை ’’ வரிசை 13’’  கதவைத் தள்ளித் திறந்தாள்.  எதிர்பார்த்தது போலவே, அங்கு நான்கு அல்லது ஐந்து பேர்தாம் இருந்தனர். அவர்கள் அந்தச் சிறிய முன்பதிவு அறையை, வெளியே மரணமுற்ற நீர்ப்பரப்பான, இருண்ட சாம்பல் நிறப் பனிமூட்டத்தைப் போன்ற ஒன்றாக மாற்றும் சேற்றுமண் உருவங்கள் போலத் தோன்றினர்: அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் மங்கலாக எந்த வேறுபாடுமின்றித் தெளிவாகத் தெரியாதபடியிருந்தன. தவறான இடத்துக்கு வந்துவிட்டோமோவென டாங் புதாவ் நினைத்த நேரத்தில், டாங் ஷுன்ஜிய் எழுந்து, ‘’ புதாவ்’’ என மிகப் பழகிய பாவனையில், ஏதோ உணவு கொண்டு வரச்சொல்லிப் பணியாளரைக் கூப்பிடுவது போல் அழைத்தார். அவரது பழகிய பாவனை அவளைச் சிறிது சங்கடத்திற்குள்ளாக்கியது. மற்றவர்களின் கண்கள் கெடுமதிப் புன்னகையுடன் அவளை நோக்க, அவள் முகம் சிவந்துபோனாள். அவள் எப்படிச் சமாளித்து, நடந்து சென்று அமர்ந்தாளென அவளுக்கே தெரியவில்லை. அவளின் வலது புறமும் இடது புறமும் அறிமுகமற்ற நபர்கள் உட்கார்ந்திருந்தனர். உணவுத் தட்டங்கள் வைக்கப்பட்டுத் தேநீர்க்கோப்பைகளும் நிரப்பப்பட்டன. சிவப்புக் குறுந்துணிகள் அவள் மீது எதிரொளித்து அவள் முகத்தை மேலும் சிவப்பாக்கின. அவர்கள் கேன்டனிய மொழியில் சில வார்த்தைகள் பேசி, ஆற்றங்கரை வாத்துக்கூட்டம் போன்று சிரித்தனர். அவர்கள் பேசிக்கொண்டது எதுவும் டாங் புதாவுக்குப் புரியவில்லை. அந்த அறை முழுக்க மவுனத் தனிமை நிரம்பியிருப்பதாக அவள் உணர்ந்தாள். சுவற்றில், அசாதாரணமாகப் பளீரென்றிருக்கிற கண்ணாடிச் சட்டமிடப்பட்ட சில சீன நிலக்காட்சிச் சிறு ஓவியங்கள்  மாட்டப்பட்டிருந்தன. எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்தவரின்,  ஏற்கெனவே வழுக்கையாகிப்போன தலையின் உச்சி ஒரு நிமிடத்திற்கு மிகமிகப் பொருத்தமாகச் சட்டமிடப்பட்ட, கவிழ்த்த சட்டி போலத் தோற்றமளித்தது. டாங் புதாவின் பார்வை சில அங்குலம் கீழிறங்கி வழுக்கைத் தலை உச்சியின் கண்களைச் சந்தித்தபோது, அவற்றில் ஈக்களின் கூட்டமொன்று காட்டுத்தனமாகப் படுவேகத்தில் நடனமாடிக்கொண்டிருப்பது போல் அவள் உணர்ந்தாள்.
மிக்க ஆரவாரத்தோடு, டாங் ஷுன்ஜிய் மேஜை முன் அமர்ந்திருந்தவர்களுக்கு டாங் புதாவை அறிமுகப்படுத்தினார். அவரது குரல், படையெடுத்துச் செல்லும் வீரன் உள்ளூர் மக்களைக் கேள்வி கேட்பதுபோல் உரத்து அதிகாரமிக்கதாக இருந்தது. அவர் வானளாவப் புகழ்ந்த முதலாளி லீயும் மேலாளர் க்சூவும் மிகுந்த திருப்தியானதுபோலத் தோன்றினார்கள். நடுத்தர வயது மனிதர்கள் ஒரு இள நங்கையின் முன் எப்படி நடந்துகொள்வார்களென உங்களுக்குத் தெரியுந்தானே, அப்படி, அந்த இருவரும், அந்த இரவின் அழகு மிக்க புகை வளையங்களைச்  சுருள் சுருள்களாக ஊதிக்கொண்டிருந்தார்கள். அந்த வழுக்கைத்தலை மனிதரைக் கடைசியாகவென விட்டு வைத்திருந்த டாங் ஷுன்ஜிய் ‘’ இது ஜாங் ஜியா யு, பொதுமேலாளர் ஜாங், புரிந்துகொள்ள முயற்சிப்பது போல் பாவனை செய்கிறவரில்லை. அவர் எனக்கு உண்மையிலேயே மிகமிக நெருக்கமான நண்பர். உண்மையான ஷாங்டாங் மனிதர், இரண்டு பெரிய நிறுவனங்களின் தலைமையாளர்!’’ எனச் சொல்லி, அவரை மிகுந்த ஆத்மார்த்தமாக முன்கொணர்ந்தார்.      
எதிர்பார்த்தது போல, எல்லோருமே மதிப்பிற்குரிய பெருந்தலைகள். டாங் புதாவ் கட்டமிடப்பட்ட படத்துக்குள் கவிழ்ந்த காலிச் சட்டியை ஒரு பார்வை பார்த்தாள். அவள் இதயம் நிறைந்தது.
அவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அங்கு நடந்தவற்றைப் பார்க்கும்போது, டாங் புதாவ் வருவதற்கு முன்பாகவே அவர்கள் வியாபாரம் தொடர்பான பேச்சுக்களையெல்லாம் முடித்து ஓரம் கட்டிவிட்டதற்கான அடையாளம் தெரிந்தது. சூழல் முழுவதுமே மிகச் சிறப்பாக, மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. அவர்கள் இப்போது முற்றிலுமாக இறுக்கம் தளர்ந்து, அயர்வு நீங்கி,  நகைச்சுவையாக ஒருவரையொருவர் கிண்டல்செய்து கொள்கின்ற நிலைக்கு  முன்னேறி, விருந்து களைகட்டிவிட்டது.
முதல் உணவாக ஒவ்வொருக்கும் தோல் நீக்கிய மஞ்சள் அடிப்பகுதியும் சிவப்பாகப் பழக்கூழும் கொண்ட அரைப் பப்பாளிக் கிண்ணத்தில் சூப் போன்ற ஒன்று வந்தது. டாங் ஷுன்ஜிய் அதைப் பப்பாளி நூடுல்ஸ் எனக் குறிப்பிட்டார்.  அது, அவள் எப்போதும் சாப்பிடும் நூடுல்ஸ் வகையல்லவே என டாங்புதாவ் நினைத்தாள்; அது சுறாவின் துடுப்பு சூப் என அறிந்தபோது வியப்பில் உறைந்துபோனாள். ஒருகாலத்தில் அவள் ஹாங்காங்கையும் வெகுதூரத்து சொர்க்கத்தையும் நினைத்துக்கொண்டு இரண்டுக்கும் இடையில் பொதுவான ஒப்புமை அடையாளங்களைக் கண்டுசொன்னாள். சுறாவின் துடுப்பு மற்றும் தூக்கணாங்குருவிக்கூடு இரண்டையும் குறித்து அவள் ஒன்றுபோலவே புரிந்துகொண்டிருந்தாள்; அவற்றில் எது ஒன்றையும் ஏதாவது ஒருநாளில் சாப்பிடமுடியுமென, அல்லது, அவை சாப்பிடக்கூடிய பொருட்களென, அவள் நினைத்திருக்கவேயில்லை. அவள் நாக்கு சுறாவின் துடுப்பினை உணர்ந்ததை விவரிக்க முயற்சித்தது. ஆனால்,  மென்மையான ஒட்டுகின்ற தன்மையையும் சிறிதாக மீன் மணத்தையும் தவிர, அது மந்தமான ஒன்றாகச் சுவையற்றதென்றும் பப்பாளிப்பழத்தின்  இனிய கூழ்த்தன்மைக்குப் பக்கத்தில் வருவதற்குக்கூட லாயக்கற்றதாக,  இருக்கிறதென்றும் அவள் நினைத்தாள்.
‘’ நம் இளவழகுப் பெண்ணுக்கு எந்த ஊர்?’’
‘’செங்டு’’
‘’ ஓ, செங்டுவா! அப்படியென்றால் ஆச்சரியம் ஒன்றுமில்லை.’’
‘’ புதாவ் …. புதாவ் என்றால் திராட்சை, இந்தப் பெயர் எப்படி? எங்கிருந்து?’’
‘’ என்னைக் கருவுற்றிருக்கும்போது என் அம்மா புதாவ் மட்டுமே சாப்பிட விரும்பினாள். என் பெற்றோர் படிக்காதவர்கள். அதனால் என்பெயரை அப்படியே சாதாரணமானதாக வைத்துவிட்டார்கள்.’’
‘’ ஓ, அருமை, புத்தம்புதியது, சுவையானது.’’
இப்படியே, அவர்கள் எந்தக் கவலையுமில்லாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிச் சட்டத்துக்குள் கவிழ்த்த காலிச் சட்டிதான், பொது மேலாளர் ஜாங் என்பதை டாங் புதாவ் நினைவுகொண்டாள். காலிச் சட்டி மறைந்து ஏற்கெனவே பாரம்பரிய ஓவியமாகியிருந்தது. அவள் தலையைத் தாழ்த்திக் கொஞ்சமாகச் சாப்பிட்டாள். தலை நிமிர்ந்தபோது அந்தக் காலிச்சட்டியைப் பார்ப்பாள். அவள் தன்னைத்தான் பார்ப்பதாக ஜாங் ஜியாயு நினைத்து, அன்பும் ஆதரவும் பொங்க ஆவலுடன் அவளை மீள நோக்கினார். ஆனால், அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவ்வப்போது பணியாளர்கள் வந்து தட்டுகளை மாற்றுவதும் தேநீர் நிரப்புவதுமாக இருந்தார்கள். சிறிது நேரம் சென்றதும், விருந்தினர் எல்லோருக்கும் ஒயின் பரிமாறுமாறு டாங் புதாவை டாங் ஷுன்ஜிய் கேட்டுக்கொண்டார். டாங்புதாவ் சாப்பிட்டிருந்த சுறாத் துடுப்பு, ஒயினில் தோய்த்த இறால், மற்றும் பல வினோத உணவு வகைகளால், அவள் வயிறு நிறைந்திருந்தது. அவள் மிகத் திருப்தியாகப் பெருமிதமாக உணர்ந்தாள்; அந்த நிறைவான உணர்வில், மது அருந்துவதில்லையெனக்கூடச் சொல்லிவிட்டாள். ஆனால், டாங் ஷுன்ஜிய், ‘’ நீங்கள் இந்த உலகத்திற்கு வருமுன்பாகவே, ஏராளமான புதாவ் விழுங்கியிருக்கிறீர்கள்; இப்போது கொஞ்சம் புதாவ் ஒயின் அருந்துவதால்  ஒன்றும் நிகழ்ந்துவிடாதே!’’ என்றார்.  இதைக் கேட்டதும், ‘’அப்பாவின் வேலைக்கு மட்டும் ஒரு வழி கிடைத்துவிட்டால், மகிழ்ச்சியாகப் பத்துப்  புட்டி கூட விழுங்கிவிடுவேனே!’’ என உள்ளுக்குள் நினைத்தவள், சிரிக்கத் தொடங்கிப் பின், நல்ல சுபாவத்தோடு எல்லோருக்கும் ஒவ்வொரு கோப்பை ஒயின் ஊற்றிக் கொடுத்தாள். அவள் மனம் ஒருவாறாகச் சமநிலைக்கு வந்திருந்தது. அவள் கண்கள் நிதானமாகி, பார்வையில், தெரிந்தவர்களுக்கான இணக்கமும் தெரிந்தது. அங்கே சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லோரையும் அவளது சொந்தக் குடும்பத்தினர் போல அன்புடன் பார்த்தாள். அவர்களும் பண்புநயம் மிளிர இன்முகம் காட்டினர். அதாவது, அவள், டாங் ஷுன்ஜியின் ஆள் என்பதை மவுனமாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதன் ஊடாக அவள் நேரடியாகப் புரிந்துகொண்டது வேறாக இருந்தது: இந்த வியாபாரச் சந்திப்பு விருந்தில் உண்மையான நண்பர்களுக்கிடையிலான இணக்கம் இல்லை!   
பணியாளர்கள் கதவைத்திறந்து வெளியேறினர். கதவில் பொறிக்கப்பட்டிருந்த வரிசை 13. பொன்னிறத்தில் பளீரிட்டது. `வரிசை 13` என்பதற்கு என்ன அர்த்தம்? எனக்கேட்டாள், டாங் புதாவ்.
 ‘’ அது, அநேகமாக  குயிங் வம்ச ஆட்சியின் போது,  வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சீன வணிகர்களைப் பொதுவாகக் குறிப்பிடுவதாக இருக்கலாம். அதாவது, மேலைநாட்டினர், அவர்களது சீன வணிகத்தைக் கவனிக்கத் தரகர்களாகப் பணியமர்த்தியிருந்தவர்களைக் குறிக்கும்.’’  என்றார், டாங் ஷுன்ஜிய்.
‘’ ஒவ்வொரு நாளும் நீங்கள் ஏதாவதொன்றைப் புதிதுபுதிதாகக் கற்றுக் கொள்வீர்கள்.’’ என யாரோ ஒருவர் ஒத்திசைத்தார்.
டாங் புதாவைப் பார்த்த மாதிரி நேர் எதிரில் அமர்ந்திருந்த, அதிகம் பேசாத ஜாங் ஜியாயுக்கு, எவ்விதத் தடையுமில்லாமல் அவள் முகம் நோக்கிப் பார்ப்பதற்கான ஒரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது. அவர் நிதானமாக விவரிக்கத் தொடங்கினார்: ‘’ என் மகன் இப்போது கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். அவனும் இதே கேள்வியை என்னிடம் கேட்டான்.  காங்ஷூ வரிசை 13 ன் தோற்றம் குறித்துச் சிலர், அது மிங் வம்ச ஆட்சியின்போது பதினாறாம் நூற்றாண்டில் தான் ஆரம்பமானது என்கின்றனர். அதற்கான எழுத்து மூல ஆவணங்கள் நமக்குப்  பதினெட்டாம் நூற்றாண்டில், நிச்சயமாகக்  கிடைத்திருக்கின்றன. யுவான் வம்ச ஆட்சியில் `பான் ஃபாங்` என்ற அயல் நாட்டுச் சமூகம் அழிந்தபிறகு, காங்ஷூவின் வரிசை 13 முதன்முதலாகக் காணப்படுகிறது. அந்தக் காலத்தில், வரிசை 13 அயல் நாட்டு வணிகம் மற்றும் சேவைப்பணிகளைக் குறிப்பிட்டதனால் இப்போதும் அது அயல் நாட்டு வணிகமென்று அழைக்கப்படுகிறது. அதுபோல வரிசை 13 வியாபாரிகள், அயல் நாட்டு வணிகர்களைக் குறிக்கிறது. இந்த அயல்நாட்டு வணிகர்கள் இன்று வரிசை 13 தெருவில் திரளாகக்கூடிப் பணிசெய்கிறார்கள். எல்லாமாகச் சேர்ந்து 13 உயர்தர விடுதிகள் இன்று அயல் நாட்டு வணிகர்களுக்கு தங்குமிட வசதிகள் அளிக்கின்றன. அவை 13 அயல்நாட்டு ஹோட்டல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.’’     
அந்த அறை முழுவதுமே அமைதியாக, ஆனால், உதறலெடுக்கும் அதிபயங்கரக் கதை ஒன்றைக்  கேட்பது போலப் பதற்றத்தோடிருந்தது. மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு, குளிர்காலத்தில் பூமியின் மீது வெளிச்சம்  பாய்ச்சும் வெதுவெதுப்புக் கதிரவன் போலத் தோன்றியது. அவர்கள் எல்லோரும் குளிரில் விரைத்த பாம்புகளைப்போலத்   தோன்றினர். ஜாங் ஜியாயு ஒருவழியாகத் தன் பேச்சை முடிக்கும் நிலைக்கு வந்தபோதும்,   யாருமே உம் கொட்டவோ அசையவோ இல்லை. அதனாலேயே அவர் பேச்சைத் தொடர வேண்டியதானது. அப்படி, அவர் பேசிக்கொண்டிருந்த போது, டாங் புதாவ் மட்டுமே அவர் பேசுவதைக் கேட்க மிஞ்சியிருந்தாள். அப்போதிருந்த  `சளசள` சத்தத்தில் அவரது வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக அவள் அவர் வாயையே பார்க்க வேண்டியதாக, அதாவது, பெரும்புயல் அலைகளின் போது கப்பலில் இருக்கும் ஒருவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள பிடிமானக் கம்பியைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்குமல்லவா, அப்படி இருந்தது. ஜாங் ஜியாவுக்குப் பெரும் திருப்தி. அவர் பேச்சைக் கேட்க டாங் புதாவ் கிடைத்திருக்கிறாளே! மற்றவர்கள் வேறு ஏதோதோ விஷயங்கள் பற்றி அரட்டையடிப்பது பற்றி அவருக்குக் கவலையில்லை. ஆக, அந்த அமர்வு, வித்தியாசமான காட்சியாக, ஏற்கெனவே கரகரக்கும் வானொலிப்பெட்டியில் எவ்விதத் தொடர்புமில்லாத இரண்டு வெவ்வேறு நிலைய ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் ஒன்றோடொன்று கலந்து மொரமொரப்பது போல மாறியிருந்தது.
***
ஜாங் ஜியாயு, டாங் புதாவோடு ஒரு தனியுறவுச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். ஆனால், அதற்கு முன்பு டாங் ஷுன்ஜிய் அதுமாதிரி ஏதாவது முன் நகர்வு யோசனையிலிருக்கிறாரா என எப்போதுமே அவர் கேட்டுக் கொள்வதுண்டு. ஒரு நல்ல நண்பன், தன் நெருக்கமான தோழனிடமிருந்தே  திருடக்கூடாதல்லவா! டாங் ஷுன்ஜிய், டாங் புதாவுக்கு ஏகப்பட்ட குறுஞ் செய்திகள் அனுப்பியிருந்தாலும், உண்மையில் பணி மும்முரத்தில் இருந்ததால், நேரில் சந்தித்தது குறைவுதான். பிந்திவிட்ட இரவில் அவள் வீட்டுக்குச் செல்லும்போது இருமுறை அவரும் துணையாக உடன் சென்ற போதும் அவள் அவரை மாடிக்கு அழைக்கவில்லை. இதையெல்லாம் அவர் வேண்டுமென்றேதான் ஜாங் ஜியாயுக்குச் சொல்லவில்லை.
டாங் புதாவும் ஜாங் ஜியாயுவைச் சந்திப்பதில் முழு விருப்பத்தோடிருந்தாள்.  ஆண்கள் பெண்களோடு தனிச்சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது நிச்சயமாக நட்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக அல்ல. அவளுக்கே கூட அதில் ஒரு தெளிவான நோக்கம் இருந்தது. அப்பாவுக்கு ஒரு வேலை தேடவேண்டிய கட்டாயம் மட்டும் இல்லாமலிருந்தால் இதுமாதிரி காலிச்சட்டியையெல்லாம் நட்பாக்கிக்கொள்வதில் அவள் அக்கறைகொள்வாளா, என்ன? இப்போது தேவைப்பட்டால், அவரோடு படுப்பதைக்கூட அவள் பெரிதாக நினைக்கமாட்டாள். இப்போதைக்கு, கால்வாயில் எப்படித் தண்ணீர் போய் விழுகிறதோ, அதுபோல் அவள் வேலை இயற்கையாக முடிய வேண்டும். அதற்காக இந்த நேரத்தையும் சூழல் மற்றும் அனைத்து அம்சங்களையும் கைவசப்படுத்திவிட வேண்டும். ஆனால், அது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏற்கெனவே சில முறை தோல்வியாகிப்போன அனுபவத்தில், டாங் புதாவ், இதைச் சரியாகச் செய்துமுடிப்பதற்கான சரியான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்தாள். அதில் மிக முக்கியமானது எந்த மனிதரிடம் உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறதென்று அறிந்து கொள்வதுதான். யாரோடும் அவள் வீணாகப் படுத்துவிடக் கூடாது.
டாங்ஷுன்ஜியும் ஜாங் ஜியாயுவும் அவர்களுக்குள்ளாகவே ஒரு ஏற்பாட்டைச் செய்துகொண்டிருக்கவேண்டுமெனத் தோன்றுகிறது. அவர்களுடைய சந்திப்பு நாட்கள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவதில்லை. இது டாங் புதாவுக்கு வியப்பளிப்பதாக இருந்தது. ஆனாலும் அவள் அதைப்பற்றி ஒன்றும் அதிகம் சிந்திக்கவில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் அவர்கள் இருவரில் அதிகத் திறமை, மற்றும் நம்பகத்தன்மை மிக்கவரைத் தெரிவு செய்வதுதான். ஜாங் ஜியாயு, அவளை வினோதமான, மகிழ்ச்சியூட்டும் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வதும் தாராளமாகச் செலவு செய்வதுமாக இருந்தாலும், அவரது பழைய கிரவுன் காரில் முதல்முறையாக அவள் அமர்ந்தபோது, டாங் ஷுன்ஜியின் கார் இதைவிடப்புதிதாகவும் பெரிதாகவும் இருந்ததாக உணர்ந்தாள். யாருடைய பணப்பையில் அதிகப் பணமிருந்தது, யாருடைய அதிகாரம் வலிமைமிக்கதென டாங் புதாவால் முடிவுக்கு வரமுடியாமலிருந்தது.
ஜாங் ஜியாயுவின் முகம் அதன் பின்பக்கக் காலிச்சட்டியினால் அவ்வளவு ஈர்ப்பில்லாததாக இருந்தது. காரில் அமர்ந்து, அவளே காரோட்டிச் செல்வது போல் நிமிர்ந்து நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஜாங் ஜியாயு முதலில் காங்ஷு நகரம் முழுதும் சுற்றிக்காட்டினார். அவர்கள் வரிசை 13 தெருவுக்கு வந்தபோது, அவர் அப்போதும் பன்னாட்டு வணிகம் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் அவளுடைய அப்பாவின் வேலை பற்றிக் குறிப்பிடுவதற்குச் சரியானதாக இருந்தது. இருந்தாலும் அவள் நீண்ட நேரம்  ஆவலை அடக்கிக்கொண்டாள். அப்போதும் நிச்சயமற்ற நிலையிலிருந்ததால்  பொங்கிவரும் ஆவலை வெளிப்படுத்தக் கடுமையாகச் சிரமப்பட்டு, முடிவில் அடக்கிக் கொண்டாள். பின்னர், பீஜிங் சாலையிலிருந்த பொருட்களால் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டபோது, அவர் அவளுக்காகச் சில சிறிய பொருட்களை அரை மனதோடு, ஒரு அப்பாவைப்போல அவள் தலையைத் தட்டிக்கொடுத்து, வாங்கினார்.
அடுத்த முறை ஜாங் ஜியாயு அவளை, ஆசியாவிலேயே மிகப்பெரிய நகோமி சுஷி விடுதியில் உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். அங்கே விலையெல்லாம் மிகமிக அதிகம். ஒரு பிளேட் கோப் மாட்டிறைச்சி ஓராயிரம் யுவானுக்கும் அதிக விலையாக இருந்தது அவளுடைய ஒரு மாதச் சம்பளமே அவ்வளவுதான். கோப் மாட்டிறைச்சி கொண்டுவரச் சொல்வதில்லையென அவள் மனதுக்குள்ளாகவே முடிவெடுத்தாள். உண்மையில், ஜாங் ஜியாயுவும் அதைக் கொண்டுவரச் சொல்லவில்லை. அவர் சிரித்துக்கொண்டே, செலவைக் குறைத்துச் சிக்கனமாக இருக்க விரும்புவதால், உணவுப் பட்டியலில் கோப் மாட்டிறைச்சியைக் கண்டதும் அவரது விரல் தானாகவே நழுவி விலகிவிட்டதென்றார்.
உணவு வகைகள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. சாப்பிட்டு முடித்தபோது, அவள் நூறு விழுக்காடு முழுமையான மகிழ்ச்சி கொண்டாள். உணவுக்குப் பின், நேரத்தைச் செலவிடுவதற்காகச் சில இடங்களை ஜாங் ஜியாயு யோசனைகளாகச் சொன்னார். பந்து எறிவது, ஜப்பானிய பாதம் கழுவுதல், சீன மருத்துவப் பிசையகம், அல்லது வெண்மேக மலையேற்றம் என இன்னும் பல.
எல்லாமே உடல்நலம் சார்ந்தது? டாங் புதாவுக்கு வியப்பூட்டுவதாக இருந்தது. அது சரியானதுதான், உடல் அத்தியாவசியமானதாயிற்றே! இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம் என்றார் ஜாங். அவள் ஜப்பானியப் பாதம் கழுவுதலைத் தேர்ந்தெடுத்தாள்.    
கிமோனா அணிந்த ஒரு சீனப்பெண் ஜப்பானிய மொழியில் ஓரிரு வாக்கியங்களைக் கா,காவெனக் கரைந்துவிட்டு,  இருவரையும் உள்ளே ஒரு தனியறைக்கு அனுப்பினாள். சீனமொழிக்கு மாறி, திரு மற்றும் திருமதிக்கெனச் சொந்தமாக எண் எதுவும் இருக்கிறதாவென வினவினாள். ஜாங் அப்போதும் ஏழாம் எண்ணே வேண்டுமெனக் கேட்டார். அவர் டாங் புதாவிடம் ஒரு ஆணைக் கேட்குமாறும் ஆணின் உள்ளங்கைகளுக்கென ஒரு விசேஷ சக்தி இருப்பதாகவும் சொன்னார். டாங் புதாவ் மறுத்துத் தலையசைத்தாள்.
‘’ இல்லை, எனக்கு ஆண் வேண்டாம்.’’
‘’ஏன்?’’
‘’ எனக்குச் சங்கடமாக இருக்கும்.’’
‘’ அதில் சங்கடப்படுவதற்கு என்ன இருக்கிறது?’’
‘’ அவனுக்காக நான் சங்கடப்பட வேண்டியிருக்கும்.’’     
 ஜாங் ஜியாயு மெல்லச் சிரித்துக்கொண்டார்.
 டாங் புதாவ் மீண்டும் அவளது அப்பாவின் வேலை பற்றி நினைத்தாள். அதை உடனடியாகச் சொல்லிவிடவேண்டுமென்று அவள் மனதுக்குள் ஆட்டுரல் ஒன்று முடிவின்றிச் சுழன்று கொண்டேயிருந்தது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் சந்தர்ப்பம் கை நழுவ, பாதம் கழுவுவதற்கான மூலிகைகளின் மருந்து வாசனையில் நெஞ்சைப் புரட்டியது போல் திறந்த வாயும் கட்டுண்ட நாக்குமாக அவள் காணப்பட்டாள்.
பணிப்பெண் டாங் புதாவின் காலுறையைக் கழற்றியெடுத்து, அவளின் வெற்றுப் பாதங்களை மர வாளியினுள் வைத்தாள். டாங் புதாவ் அந்தத் திடீர்ச் சூட்டில் அதிர்ந்து `ஆ` வெனச் சத்தமெழுப்பிவிட்டாள். பணிப்பெண் மன்னிப்பு கேட்டுக்கொண்டே, கொஞ்சம் குளிர்ந்த நீரைச் சேர்த்தாள். டாங் புதாவ் தன்னைத் தானே அமைதிப்படுத்த முயன்று, பாதத்தால் தண்ணீரின் சூட்டினைச் சோதிப்பதில் கவனம் செலுத்தினாள். பின்னர், சூடு அதிகமாக இல்லையெனக் கண்டு, இரு பாதங்களையும் தண்ணீரில் மேலாக வைத்துப் பின்னர் மெல்ல மெல்ல அமிழ்த்தத் தொடங்கினாள். உடலுக்குள் ஒரு மலர் இதழ் விரிப்பதான புத்துணர்ச்சியை உணர, டாங் புதாவின் நெஞ்சுக்குள் வசந்த காலத்தின் பிரகாசமான வெயிலிலும் காட்டுப் பூக்களிலும் மினுங்கும் பட்டாம் பூச்சி ஒன்று சிறகடித்தது.
டாங் புதாவின் பாதங்களைப் பணிப்பெண்,  கைகளில் தாங்கி, அப்போதுதான் புதிதாகப் பிடுங்கிய தாமரைக்கிழங்கைப் பிசைந்து கழுவுவதுபோல மெல்லப் பிசைந்து, கவனமாக எல்லாப் பாகமும் ஒன்றுபோல் சிவக்கும்படி அமுக்கி விட்டாள். இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவள் பாதங்களை முக்காலி ஒன்றின் மீது வைத்து காற்று உலர்த்தியால் உலரச்செய்தாள். ஜாங் ஜியாயுவின் முதிர்ந்த தாமரை இணைக்கிழங்குகளும் ஆவி பறக்க வெளியில் தெரிந்தன. அவர் நல்ல தூக்கத்திலிருந்தார். அவர் தலைக்கு அடியில் குருணை வடிவிலான மீச்சிறு மணியுருண்டைகள் அடைக்கப்பட்ட தலையணை இருந்தது. குறட்டையின் சீரான ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
அது போன்ற தலையணையைப் பயன்படுத்தியதால்தான், நாட்பட, நாட்பட அவர் தலையின் பின்பக்கம் காலிச்சட்டி போலாகியிருக்க வேண்டுமென டாங் புதாவ் நினைத்தாள்.
பின்னர், புதாவின் பாதங்களை வெகுநேரத்துக்கு மெல்லக் குத்தி, அமுக்கி, தடவி, தேய்த்து, அழுத்தி, உரசி என அனைத்தையும் செய்து முடித்துக் கடைசியாக அந்தப் பணிப்பெண் நிறுத்தினாள். பாதம் கழுவுதல் முடிந்துவிட்டதென்று நினைத்து புதாவ் காலுறைகளை எடுத்து அணியப்போகும்போது, பணிப்பெண் மீண்டும் வந்து  பாதங்களைத் தூக்கி மார்போடு அணைத்தாள். பின்னர் ஒரு சிற்பி தன் படைப்புக்கான செதுக்குதலைத் தொடங்க ஆயத்தமாவது போல, ஒரு சிறிய நகவெட்டியைக் காற் பெருவிரல் நோக்கிக் கொணர்ந்தாள். பெருவிரல் நகத்தை வெட்டியபின் கால் விரல் நகங்கள் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி அழகுபடுத்திமுடித்தாள். அப்போதுங்கூட ஜாங் ஜியாயு தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை.    
 ***
டாங் புதாவும் டாங் ஷுன்ஜியும் சேர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர். உணவின் போதான சாதாரண உரையாடலில் ஜாங் ஜியாயு பற்றிப் பேச்சு வந்தபோது, அவரைப்பற்றிப் புகழ்வதே தினசரி வேலை போன்று அன்றும் டாங் ஷுன்ஜிய் அவரை வாய்க்கு வாய் புகழ்ந்துகொண்டிருந்தார். டாங் புதாவும் அதை ஒப்புக்கொள்வதாக, அவ்வப்போது தலையசைத்து, ஆம் கொட்டி, அவர் ஒரு பண்பட்ட தலைமையாளர் என்றும் சிறிது நகைச்சுவையையும் புரிந்துகொள்கிறார் என்றும் சொன்னாள். அவள் மனதுக்குள் காலிச் சட்டி மிதந்துகொண்டிருந்தது. அவள் எப்போதுமே இது, அது என ஏதாவது ஒரு குறை, இருக்கிற மனிதர்களுக்காக இரக்கம் கொள்வதுண்டு. அத்தனை பெண்கள் மத்தியிலும் அப்படிச் சத்தமாகவா குறட்டை போட்டுத் தூங்குவது?      
அந்த இருவரின் அணுகுமுறைகளுக்கும் டாங் புதாவ் மெல்ல மெல்ல ஒரு வடிவம் கொடுத்துப் பார்த்தாள். டாங் ஷுன்ஜிய் பாம்புகளைப் பயமுறுத்தி விரட்டுவதற்காகப் புல்வெளியில் எப்போதும் அடித்துக்கொண்டிருப்பவர்; ஜாங் ஜியாயுவோ எப்போதும் கையில் தடியோடு முயலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர். எது எப்படியிருந்தாலும், அது ஒரு விஷயமே இல்லை; அவர்களுடைய இதயத்தின் அடித்தள ஆசையை அவள் அறிவாள், ஆனால் அவள் ஆசையை அவர்கள் அறியமாட்டார்கள். அவளுடைய குடும்பச் சூழ்நிலை குறித்து யாருமே எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள் வயிறு நிறையத் திணிப்பதற்கும் அவளை வேறு பல கேளிக்கை மற்றும் பயிற்சிகளுக்கு அழைத்துச் செல்லவும் முந்தி நின்றார்கள். எல்லாமே, அவளுடைய வளமான உடலை அப்படியே விழுங்கப்போகிற அந்த ஒரு நாளுக்காகத்தான்.   
 டாங் ஷுன்ஜிய் திடீரென்று அவரது குடும்பத்தைப் பற்றிப் பேச்செடுத்தார். அவருடைய குழந்தைகளை மிகவும் நேசிப்பதாகவும், குடும்பத்தை நேசிப்பதாகவும் சொன்னார்; ஆனால் மனைவியை நேசிப்பதாக மட்டும்  சொல்லவில்லை. அவருக்கு ஒரு காதலி இருந்தாளா என்பதை டாங் புதாவே யூகித்துக்கொள்ளட்டுமென விட்டுவிட்டார். ஜாங் ஜியாயு காதலர்கள் பற்றிப் பேசும்போது, அப்படி யூகித்துக்கொள்ளுமாறு கூறவில்லை. மாறாக அவர் ஒரு உண்மைக் கதையைச் சொன்னார்: ஒரு விருந்தின் போது, அங்கில்லாத ஒருவரைப்பற்றி எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். அவருக்கு உடலில்  வலுவில்லையென்றும், அதற்கான ஆர்வம் குறைந்தவரென்றும்   அவருக்கு நிச்சயமாகக் காதலி என்று ஒருவர் இருக்க முடியாதென்றும் ஒருவர் சொன்னார். அந்த மனிதர் அடுத்த அறையில் விருந்து அருந்திக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் அறியவில்லை. அந்த விமர்சனத்தைச் சொல்லி முடித்ததுதான், தாமதம், அந்த மனிதர் கதவை ஓங்கித் திறந்துகொண்டு வந்து, ஆக்ரோஷமாகக் கத்தினார்: “யாரடா சொன்னது, எனக்குக் காதலி இல்லையென்று?’’
ஜாங் ஜியாவ் என்ன சொல்லவந்தாரென அவள் புரிந்துகொண்டாள்: ஆண்களைப் பொறுத்தவரையில் காதலியென ஒரு பெண் இல்லாமலிருப்பது, ஒருவித அவமானம்.
அதனால், அவள் டாங் ஷுன்ஜியை மிகவும் பிடித்த பண்டமொன்றை நோக்குவது போல ஆவலுடன் பார்த்துவிட்டு, ‘’ நீங்கள்’’ என்றாள்.
டாங் புதாவின் பதில் கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது. அது ஒரு தனிப்பட்ட சொந்த விஷயமென்றாலும் அவள் அதனுள் புகுந்து மிகக் குறுகிய நேரத்துக்குள் வெளியேறினாள். மறுபுறம் அது ஒன்றும் பெரிய ரகசியமில்லை யென்றாலும், டாங் ஷுன்ஜிய்க்கு ஏதோ ஒரு பெரும் பாரம் குறைந்தது போல் ஆறுதலாக இருந்தது. அவர் மகிழ்ச்சியானார். அவர் டாங் புதாவுக்கு ஒரு  வாத்து ஈரல் துண்டினை நீட்டிக்கொண்டே, ‘’ இப்போதெல்லாம் பிரபலமான ஒன்றாக வாத்து ஈரலைச் சோற்றோடு சேர்த்து வறுத்தோ அல்லது நெருப்பில் சுட்டோ, குளிரவைத்துக் குழம்போடு சேர்த்தோ எப்படியானாலும் சாப்பிடுவது நன்றாகவே இருக்கிறது.’’ என்றார். டாங்புதாவ் அதைத் தின்று முடித்த பிறகே, அவர் அவரது காதலியின் கதையைச் சொல்லத் தொடங்கினார். கதை மிக நீண்டதாக இருந்தது. அதன் ஆரம்பத்தையோ அல்லது விவரிப்பையோ அவளால் நினைவில் கொள்ளமுடியவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அவரும் அவர் காதலியும் ஒவ்வொரு வருடமும் எப்போதாவதுதான் பார்த்துக்கொள்ளமுடிகிறதென்றாலும் அவர்கள் இப்போதும் பெருங்காதலில் இருக்கிறார்கள் என்பதை மட்டுந்தான். அவர்கள் இருவரும் இப்போதும் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஏக்கத்தில் இருக்கிறார்கள். அந்த இழப்புக்கு ஈடாகத் தன் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்வதும் மனைவியிடம் அன்போடு நடந்து கொள்வதும் நிறையப் பணம் சம்பாதிப்பதுமாக அவர் இருக்கிறார்.
டாங் ஷுன்ஜியின் இதயத்துக்குள் இத்தனை பெரிய, அளவற்ற துக்கம் நிரம்பியிருப்பதாக டாங் புதாவ் கண்டாள். அந்த நேரத்தில் அவள் தந்தையின் பிரச்சினையை அவரிடமிருந்து மறைத்ததற்காகக் குற்ற உணர்வு கொண்டாள். அவள் இந்த நேரத்தில் டாங் ஷுன்ஜிய் போன்ற ஒருவரை எப்படிப் பயன்படுத்திக்கொள்வதென நினைக்கக்கூடாது.  கடுந்துயரத்திலிருக்கும்  ஒருவர் தன் இதயத்தைத் திறந்து அதைப் பேசிவிடுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதனால், அவள் செங்டுவிலிருக்கும் அவளது குடும்பம் பற்றியும், அவளுடைய அப்பாவுக்காக ஒரு வேலையை அவள் எவ்வளவு கஷ்டப்பட்டுத்  தேடிக்கொண்டிருக்கிறாளென்றும், அவளுடைய தந்தை ஒவ்வொரு நாளும் அவளிடமிருந்தான நல்ல செய்தியை   எவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரென்றும் துயரத்தோடு பேசினாள். டாங் ஷுன்ஜிய், அவளது அப்பாவின் சிறப்புத் துறை என்னவென்று கேட்டார். அவள் மேஜைப் பணியென்று சொன்னாள். அவர் `ஆ` வென வருத்தம் தெரிவித்து, அவரது நிறுவனத்துக்குச் சிறப்புத் தகுதியுள்ளவர்கள் தேவைப்படுவதாகவும், எழுபது விழுக்காடு பணியாளர்கள் வெளிநாடுகளில் உயர்பட்டம் பெற்றவர்களென்றும் கூறினார்.
‘’இருந்தாலும் ….’’ , டாங் ஷுன்ஜியின் ஆதார வார்த்தை அவள் இதயத்தில் ஒட்டிக்கொண்டது. ‘’ காங்ஷூவில் யாருக்கானாலும் ஒரு வேலை தேடிக்கொடுப்பது எனக்கு ஒரு பிரச்னையே இல்லை.’’
‘’ அதேதான், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். என் அப்பா ஒரு நாணயமான மனிதர்.’’ டாங் புதாவ் மிக அழகாக, இனிமையாகப் பேசி, மீண்டும் தொடர்வதற்குமுன் சிறிது நிறுத்தினாள். ‘’ நீங்கள் முதன் முதலில் என் கடைக்கு வந்த போது. ஒரு பாலே நாட்டியக்காரர் போலச் சுழன்று என்முன்பு ஒரு கணத்திற்குள் வந்து நின்றீர்களே; நீங்கள் ஒன்றும் அவ்வளவு கனத்துவிட்டதாகத் தெரியவில்லை.’’
‘’ என் பாதங்கள் சிறியவை. நான் 39 அளவுள்ள அரணக் காலணிகள்தான் அணிகிறேன். கடந்த வருடம் தான் கொஞ்சம் பெருத்துவிட்டேன். அதற்கு முன்னாலுங்கூட என்னை விரும்பிய பெண்கள் ஓரிருவர் கூட இல்லை.’’
‘’ ஆனால், இப்போது உங்களை விரும்புபவர்கள் யாருமே இல்லையா?’’ அவள் இதயத்தை அழுத்திக்கொண்டிருந்த கற்சுமையை இவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிந்துவிடமுடியுமென அவள் நினைத்திருக்கவில்லை. டாங் புதாவின் இதயம் அதன் மலர்ச்சியை மீட்டெடுத்துக்கொண்டது.
‘’ யாரும் இல்லை. நீ விரும்புகிறாயா?’’ டாங் ஷுன்ஜியின் வாய் விரியத் திறந்து சிறிய, கூரிய பற்கள் வெளித்தெரிந்தன.
டாங் புதாவ் புன்னகைத்தாள். அவருடன் படுக்கைக்குச் செல்லும் முன்பாக, அவள் அப்பாவின் வேலை குறித்து ஒரு நம்பிக்கையான பதிலைப் பெற்றுவிடுவாள். ஆக, டாங் ஷுன்ஜிய் ஒரு உயர்ந்த அறநெறி சார்ந்த மனிதர். அதை அவள் விரும்பவும் செய்தாள். அவருடைய மனப்பான்மை அவளுடைய அறநெறிக்கும் உதவிகரமாக இருக்கிறது. படுக்கைக்குச் செல்வது நிச்சயமாகக் கடைசி வழிமுறைதான்; மேலும் அது ஒன்றேதான் வழி என்றும் அவளால் கருத முடியவில்லை. ஆனால், விருந்துக்குப் பின் விஷயம் வேறு வழியில் திரும்புமென அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவள் டாங் ஷுன்ஜியின் காரில் வீட்டுக்குத் திரும்பும்போது, இதயத்திற்குள் அவரைப்பற்றி மிகப்பெரிய அளவில் போற்றுதலுக்குரிய மதிப்பினைக் கொண்டிருந்தாள்.
இரவுகளில் காங்ஷூ ஆழமான, மிக ஆழமான கடலாக இருக்கிறது. அதன் வெளிப்புறம் மிக அமைதியானது. கடலில் செல்லும் படகு போல் கார் மிதந்து செல்ல, அவள் இன்னும் ஆழமான கடலில் இதைப்போலவே மிதந்து செல்ல வேண்டுமென விரும்பினாள்.
‘’ இதுதான், என் அலுவலகக் கட்டிடம். மேலே போய் என் அலைபேசியின் மின்கலத்தை மாற்றி வரப்போகிறேன். எப்படி இருக்கிறதென்று ஒரு முறை பாருங்களேன். உங்களுக்கு விருப்பந்தானே?’’
அவர் காரைவிட்டு இறங்கினார்; அவளும் பின்னாலேயே தொடர்ந்தாள். மின் பூட்டுகளைக் கடவுச் சொற்கள் பயன்படுத்திக் கடந்து, ஒரு மூலையில் திரும்பி, கடைசியாக அவர்கள் தலைமை நிர்வாக அலுவலரின்  அறை வாயில் முன் வந்து நின்றார்கள். இருவரும் உள்ளே சென்ற பின், அவர் குளியலறை விளக்குகள் உட்பட அனைத்தையும் எரியச் செய்தார். இப்படி ஒரு மாளிகைத் தோற்றமுள்ள அலுவலகத்தை அவள் பார்த்ததேயில்லை. அவள் திகைப்பின் உருவோவியமாக நின்றாள். உள்ளிருந்த அறையின் கதவை அவள் தள்ளித் திறந்ததும் பேரரசிக்கான படுக்கை ஒன்றை நேர்த்தியும் அழகும் மிக்க நவநாகரீக இருக்கை மற்றும் உபயோகப் பொருட்களுடன் கண்டதும் ஒரு வாளிப் பனிநீரை அவள் தலைமீது கொட்டியது போல் உணர்ந்தாள். அவள் தலைக்குள்ளிருந்து அனைத்தும் வெளியேற, அவள் பின்வாங்கினாள். அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட நினைத்தாள். ஆனால், அவரோ தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டதும், அப்படி விட்டுச் செல்வது மிகமிக அநாகரிகமாக இருக்குமென உணர்ந்தாள். அதனால், அங்கேயே உண்மையான தோல் மெத்தையிட்ட இருக்கையில் அமர்ந்து உயர்ந்த தரமுள்ள சுத்த்த்த்தமான தேநீரைச் சிறிது உறிஞ்சினாள்.
அப்பாவின் வேலை அவளின் மனத்துக்குள் மேலெழுந்தது. உணவு விடுதியில் வைத்து டாங் ஷுன்ஜிய் நடந்துகொண்ட விதமும் பேசிய பேச்சும் இப்போது பெருத்த சந்தேகத்திற்குரியதானது. அந்த அலுவலகத்துக்கு வரும்போது அவர் மீது, அவள் மனத்துள் எழுந்த போற்றுதலுக்குரிய மரியாதை இப்போது கரைந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனிமையில் நேருக்கு நேராக …. அந்தச் சூழலில் ஏதோ ஒன்று  கேள்விக்குரியதாகவே இருந்தது. வெளியே ஓடிவிடலாமாவென அவள் நினைத்தாள். ஆனால், உடனேயே அது நகைப்புக்குரியதென உணர்ந்தாள். அவருடன் இருப்பதால் மட்டுமே அப்பாவின் வேலை இப்போதைக்கு  ‘’ ஒரு பெரும் பிரச்னையாக இல்லாத நிலை’’ இருக்கிறது. டாங் ஷுன்ஜிய், இல்லாததை இருப்பதாக உயர்த்திப் பேசுவதாக அவள் நினைக்கவில்லை. அதது, அப்படிக்கு அப்படித்தான் என்றிருக்கும்போது, கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? வித்தியாசமான சுவையுடைய அந்தக் கலப்படமற்ற சுத்தத் தேநீரைப் பருகிக்கொண்டே அவள் தன்னைத் தானே பரிகசித்துக்கொண்டாள். ரம்மியமானதொரு அமைதி காக்கும் அந்த அறைக்கும் பல கூர்மையான செழுஞ்செவிகள் இருக்க வேண்டுமென அவளுக்குத் தோன்றியது.
மிக அருகிலேயே, ஒரு அடிக்கும் மேற்படாத தூரத்துக்குள் தான் டாங் ஷுன்ஜியின் காது இருக்கிறதென்றாலும் அதன் இருண்ட செவிப்பறை  யார் கண்ணுக்கும் தெரியாத ஆழத்தில் அல்லவா இருந்தது! எந்தத் தூண்டுதலும் இல்லாமல், அவராகவே, டாங் புதாவின் அப்பாவுக்கான வேலைபற்றி, ஒரு சில நாட்களுக்குள் கவனிப்பதாகச் சொன்னார். அவர் பேசும்போது ஒற்றைவிரலை நீட்டி அவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றையைக் காதோரமாக ஒதுக்கினார். மனத்தளவில் அவர் கவர்ச்சியாக இல்லையென அவள் நினைக்கவில்லையென்றாலும் உடலளவில் இன்னும் ஒரு சிறிது தயக்கம் இருந்தது. அவருடைய தீண்டுதலைத் தவிர்க்க விரும்பினாள். ஆனால், அதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்பவில்லை. அப்படி வெளிப்படையாகத் தவிர்ப்பதை அவள் விரும்பினாலும் அப்படித் தவிர்ப்பது அவளால் இயலாததாயிருந்தது.
உண்மையில், அவரது தீண்டுதலால் மனத்தளவில்தான் சுருக்கம் கொண்டாளே தவிர, உடலில் எந்த அசைவினையும் வெளிப்படுத்தவில்லை. அதனால், அப்பாவுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு சுருங்கிவிடுமோவென அவளுக்கு அச்சம் இருந்தது. அதே நேரத்தில் அப்பாவின் வேலையை முன்வைத்துத்தான் அவள் சுணக்கம் காட்டுகிறாளென அவர் தெரிந்து கொள்வதையும் அவள் விரும்பவில்லை. அதனாலேயே அவள் உடலில் எந்த அசைவுமில்லாமலிருந்ததோடு, மிகுந்த நாணத்தை வெளிக்காட்டுவதான தோற்றத்திலிருந்தாள். ஆக, அவரது கை மெதுவாக அவள் தோள்பட்டைக்கு இறங்கி அங்கேயே நிலைகொண்டு அமர்ந்தது. அப்படியே, அவளை  வசப்படுத்துவதற்கான இச்சக மொழி பேசவும் தொடங்கினார்: ‘’ புதாவ், முதல் முறை நீ என்னைப் பார்த்தபோது, … அந்த முதல் பார்வையிலேயே காதல் என்கிறார்களே, அதில் கொஞ்சம், ஒருசிறிது, இருந்ததுதானே?’’
‘’ அதை, வேறு எவரோடும் பேசுவதில்லை’’ என அவர் உறுதியளித்ததோடு மட்டுமல்லாமல், ‘’அதிலும் ஒரு பெண்ணோடு கொண்ட உறவைப் பற்றிப் பெருமை பேசுதல் போல அவமானகரமான விஷயம் வேறெதுவுமில்லை’’ என்றும் அவளிடம் சொன்னார். புதாவ், அப்பாவை அழைத்து, இன்னும் ஒருசில நாட்களில் அவருக்கு வேலை கிடைத்துவிடுமென்றாள். அவளுக்கு இறக்கைகள் முளைத்தது போலவும், அந்தச் செய்தி அவளை மிகமிக உயரத்தில் பறக்கச் செய்வதாகவும் உணர்ந்தாள். இரும்பு சூடாக இருக்கும்போதே அடித்து வளைத்துக்கொள்ள வேண்டுமல்லவா! அதனால், ஷுன்ஜிய் அவளைப் பல முறை  அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்; அவள் அப்பாவின் வேலையைப்பற்றி மறந்து போனதுபோல் நடந்துகொண்டார். அப்பாவின் வேலைக்கான திட்டத்தில்தான் அவர் இருப்பதாக நினைத்து, அவளும் அவரை அடிக்கடி கேட்டு நச்சரிக்கவில்லை.
இதற்கிடையில், அவள் ஜாங் ஜியாயுவையும் சில முறை சந்தித்தாள். அப்பாவின் வேலைப்பிரச்னைக்கு இன்னொரு வகையான தீர்வும் கிடைக்கட்டுமேயென அவள் ஜாங் ஜியாயுவோடு உடலுறவற்ற ஒரு நட்புணர்வினை வளர்த்துக்கொள்ள விரும்பினாள். அவரோ இன்னும் முயலுக்காகத் தடியோடு காத்திருப்பவராக, அப்படிக் காத்திருப்பதையே ஒருவிதத் தாக்குதலாக நினைத்துக்கொண்டிருந்தார். பணம் செலவழிப்பது பற்றிக் கவலையே கொள்ளாமல் எல்லா விதமான உணவு விடுதிகளில் விருந்து சாப்பிடவும் பாதம் கழுவுதல், உடற்பயிற்சி என எல்லா வகையான இடங்களுக்கும் அவளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். ஒரு முறை அவர்கள் ஜூஜியாங் நதியிலுள்ள மது அருந்தகத்துக்குச் சென்றார்கள். அருந்தகம் மிகச் சத்தமாக இருந்தது. அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவோ அல்லது பேசியதைக் கேட்கவோ முடியவில்லை. அவர்களுக்கு மிகவும் சலித்துப்போனது.
இதைப்போன்ற விஷயங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென அவள் விரும்பினாள்.
ஒரு நாள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு, அவள் குளித்து முடித்துவிட்டு தொலைக்காட்சியில் கொரிய நெடுந்தொடர் ஒன்றைப் பார்க்க அவசரம் கொண்டாள். அதன் முன்னணி நடிகர் யான் செங்ஜியு, நல்ல அழகாகத் துறுதுறுப்பாக, மிடுக்கும் அறிவுத்திறமும்  மிகுந்து நுட்பமாக உரையாடுபவர். அவளுக்கு அவர்மீது ஒரு ஈர்ப்பும் பரவசமும் இருந்தது. அவள் இதுபோன்ற அளவற்ற கற்பனைப் புனைவினையும் மகிழ்ச்சியையும் உண்மையிலேயே ரசித்து மகிழ்ந்தாள். சிலவேளைகளில்  அவள் ஒரு நாள் இரவு முழுவதும் அவரோடிருப்பதாக, அவருக்கு அவள் மீது மிகுந்த அன்பும் ஆசையும் இருப்பதாகக் கனவு காணுவாள்.  அந்த நேரத்தில்தான் ஜாங்  ஜியாயு, அவளை அழைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லலாமென்றார். அவளுக்கு அதில் விருப்பமேயில்லை. ஆனால், ஜாங் ஜியாயு கீழே படிக்கட்டு அருகில் காருடன் காத்து நின்றார். நெஞ்சு முழுக்க  யான் செங்ஜியு நிறைந்திருக்க, அந்த  இனிய ஆராதனைகளுடன், அவள் தலையைச் சீவி அழகுபடுத்தி, உடை மாற்றினாள். அவள் படிக்கட்டுக்கு வந்தபோது, காலிச் சட்டி காரின் வெளியே புகைத்துக்கொண்டே, சுற்றிச்சுற்றி வட்டமடித்து நடந்து கொண்டிருந்ததைக் கண்டாள். டாவ் லாங்2 ‘’ 2002ன் முதல் பனி’’ யைப் பாடிக்கொண்டிருந்தார்.
ஜாங் ஜியாயு அவளைக் கனவு போன்றதொரு பூமிக்கு அழைத்துச் சென்றிருந்தார். விளக்குகள் மங்கலாக ஒளி வீசின. பவுடர் மணம் நாசியைத் துளைத்தது. கும்பல் கும்பலாகத் திறந்த மேனிகளில் ஒளி வீசும் வெள்ளிக்கிண்ணங்கள் போல் முகங்கள் புன்னகை விரித்தன. அங்கே யாரோ ஒருவர் ‘’பொது மேலாளர் ஜாங், ஹலோ, தயவு செய்து என் பின்னால் தொடர்ந்து வாருங்கள்!’’ என்றார்.  மையிருட்டும் திகிலுமாக, ஏதோ ஒரு ரகசியக்குகைக்குள், தேவதைகள் மற்றும் மோகினிகளின் இருப்பிடத்துக்குள் நுழைவது போல டாங் புதாவ் உணர்ந்தாள். ஒரு கணம் அங்கே ஓடும் நீரின் மேலாக ஒரு சிறு பாலத்தையும், அதையடுத்து நம்மை அச்சுறுத்தி, முறுக்கிக்கொண்டிருக்கும் வேர்களுடைய பண்டைப் புராதன மரங்களையும் அவற்றின் உச்சியில் ஒளி மிக்க சிவப்புப் பழங்களையும் அவள் கண்டாள். வழிகாட்டிச் சென்று கொண்டிருந்த மோகினி கனத்த, பெருங் கதவுகளைத் திறந்த போது உள்ளே பெருங்குழப்பமாக, திரிபீடகத்துக்குள்3 அவர்கள் அப்போதுதான் மாட்டிக்கொண்டது போல் அவள் உணர்ந்தாள். முற்சாய்ந்து இழையும் தோள்களும்,  வேறுபாடின்றிப் பின்னிப் பிணைந்து முறுக்கும் கால்களும் தொடைகளுமாக, ஆண்களும் மோகினிகளும் தொட்டுத்தழுவிக் கட்டிப்பிடித்துத் துழாவிக்கொண்டிருந்தனர்.
அடர்ந்த புகை மற்றும் பனி மூட்டத்தின் மத்தியில் இரண்டு மோகினிகளின் நடுவில் அழுத்தப்பட்ட தசைப்பிண்டமாக டாங் ஷுன்ஜியை, புதாவ் கண்டாள்.
அவள் நினைத்தே பார்த்திராத பல காட்சிகள், இவை போன்றவற்றை நேரில் பார்க்கவேண்டியிருக்குமென்று கூட அவள் எண்ணியிராத பல  அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தன. அதனால்தான் அவள் ஊமையாக, எந்த உணர்ச்சியுமற்று வெறுமையாக நோக்கினாள். என்ன பேசுவதென்றும்  அவளுக்குத் தெரியவில்லை. ஜாங் ஜியாயு, பல்குத்தும் குச்சி ஒன்றால்  பழத்துண்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்கி, வாயில் போட்டு மென்றாள். ஆனாலும் அவளிடம் எந்த ஒரு அசைவோ, உணர்வு வெளிப்பாடோ இல்லை.
மோகினிகளின் இளமை என்னவோ உண்மையானதுதான். ஆனால் அவர்களின் ஒன்றுமறியாத வெகுளித்தன்மை என்பது வெறும் நடிப்பு. அவர்களின் இலேசான ஒப்பனை அவர்களை மற்றைய சாதாரணப் பெண்களிடமிருந்து எந்த வேற்றுமையும் தெரியாதவாறு செய்திருந்தது. டாங் புதாவ் இயற்கையாகவே அவர்களில் ஒருத்தியைப் போன்றே கருதப்பட்டாள். திரைப் பாடலுடன் சேர்ந்திசைக்கும் வாய்ப்பாட்டுக் கரோக்கி மிகுந்த  சப்தமாக இருந்தது. அங்கு நீங்கள் சொல்வதை, கேட்பவர் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவரின் காதைக் கடிக்க வேண்டியிருந்தது. அப்படிக் காதைக் கடிக்கும்போது கேட்பவரின் கை உங்கள் இடுப்பினை மிக நெருக்கமாகச் சேர்த்திழுத்து அணைத்தது. அங்கே உள்ளுக்குள் மறைவான நீண்ட நிலப்பாதைகள் இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பது அபூர்வமான அனுபவமென்றும் ஒரு குரல் அறிவித்தது. மோகினி ஒருத்தியின் மேலுடை அகற்றப்பட்டு, அவளின் வெண்ணிற அடிவயிற்றுப் பகுதி முழுவதுமாக எல்லோர் கண்ணுக்கும் விருந்தாக்கப்பட்டது.
டாங் புதாவின் மொத்த உடலும் கொதித்தது. ஏராளமான எறும்புகள் அவள் உடலின் மீது ஊர்ந்துகொண்டிருப்பதாக, அவள் உணர்ந்தாள்.
இந்தக் கும்பலுக்கும் அவளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அவர்களின் அகன்று விரிந்த பெரும் வாய்கள் திருப்திகொண்ட பேய்களைப் போலச் சிரித்தன. மோகினிகளின் குகையில் தளம் அசைந்து மலைகள் நடுங்கக் கிளைகளும் இலை தழைகளும் கடும் வேகத்தில் அதிர்ந்தன.
அவள் அப்பாவின் வேலை கவனத்தில் கொள்ளப்படவில்லை. வளரும் சிறுவனான அவளின் தம்பிக்கு உணவாகப் பள்ளியில் உப்பு தூவிய காய்கறித் துண்டுகளைத் தவிரச் சிறந்ததாக வேறு எதுவுமே கிடைக்கவில்லை. இந்தக் கும்பல் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. அவர்கள் பிறரின், சக மனிதர்களின் துரதிர்ஷ்டத்தில், இத்தனை மகிழ்ச்சி அனுபவிக்கிறார்கள். டாங் ஷுன்ஜிய் அவளைத் தெரியாத மாதிரி, அவளது அப்பாவின் வேலை `ஒரு பிரச்சினையே இல்லை` யெனச் சொல்லவே இல்லாதது  போல நடித்தான். சட்டை திறந்து தெரிந்த  அவனது முழு உடம்பும் அந்த மென்மையான சாய்மெத்தைக்குள் புதைந்து கிடந்தது.    
டாங் புதாவ் சிறிது நேரம் ஊமையாக உட்கார்ந்திருந்தாள். பின்னர், காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகு போல் அந்த மோகினிகளின் குகையிலிருந்தும் மவுனமாக எந்தச் சத்தமும் இல்லாமல் மிதந்து தண்ணீர் பாயும் அந்தச் சிறு பாலத்தைக் கடந்து மின்னேற்றி வழியாக இறங்கி, ஒரு வாடகைக் காரைப் பிடித்து வீட்டுக்குத் திரும்பினாள்.  
***
‘’ புதாவ், நேற்று இரவு ஏன் திடீரென்று கிளம்பிவிட்டாய்? நீ ஏதோ கழிவறைக்குச் சென்றிருப்பதாக நான் நினைத்தேன். வாடிக்கையாளர் ஒப்பந்தம் கையெழுத்திடுகையில்……..ஒரு அழகிய இளம்பெண்ணை எங்களோடு துணையாக அழைத்துச் செல்வது……இது ஒரு அவசியமான சமூக இணக்க நிகழ்வு. பல ஒப்பந்தங்களும் இப்படித்தான் கையெழுத்தாகின்றன. நேற்று நீ சென்ற பிறகு, பொது மேலாளர் ஜாங்குக்கு உண்மையிலேயே முகம் தொங்கிப்போனது. உன்னை அவர் தேடியதாகவும், கிடைக்கவில்லையென்றும் அவர் சொன்னார். பின்னர் நீங்கள் இருவருமே  திரும்பவில்லை.’’ டாங் ஷுன்ஜிய் தொலைபேசியில் இப்படித்தான் சொன்னார்.
 டாங் புதாவ் படுக்கையிலிருந்தும் அப்போதுதான் எழுந்திருந்தாள். அவள் வயிறு இரைந்து, ஏதேதோ சத்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. அவள் உடம்புக்குச் சுகமில்லாததாக உணர்ந்தாள். டாங் ஷுன்ஜிய் மன்னிப்பு கோருவது போலத் தெரிந்தது. கூடவே அவள் மீது குற்றம் சுமத்துவது போலவும் தோன்றியது. அவர் தன்னைக் குற்றமற்றவரெனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், அவர் சொன்னது எதுவுமே அவளுக்குச் சரியானதாகத் தெரியவில்லை. அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவள் விளக்கம் கூற விரும்பவில்லை. உண்மையில் அது அருவருப்பான ஒன்றாகத்தான் இருக்கும். அவள் அப்பாவின் வேலையைப்பற்றி, ‘’ அடுத்த சில நாட்களில் கவனிக்கப்படும்’’ என்று சொல்லிக் கண்ணிமைக்கும் நேரத்தில் பதினைந்து நாட்கள் ஓட்டமாக ஓடிவிட்டன. ஆனால், ஒரு சிறு அசைவு கூட இல்லை.
‘’ இப்போதெல்லாம் நிறுவன வேலை அதிகமாகி, மும்முரமாகிவிட்டது. ஆனாலும் உன் அப்பாவின் வேலை பற்றி நான் ஒன்றும் மறந்துவிடவில்லை. பொது மேலாளர் ஜாங்குடன் பேசுவதற்குச் சரியான நேரம் வரட்டுமெனப் பார்க்கிறேன். அவர் நிறுவனத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொடுப்பதில் எனக்குக் கொஞ்சங்கூடப் பிரச்சினையென்று எதுவுமேயில்லை. நான் அவரோடு எட்டு, ஒன்பது வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ‘’
`ஆகப் பொது மேலாளரின் நிறுவனத்தில்தான்` என டாங் புதாவ் ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டு, இது வேடிக்கையானதுதானெனத் தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டாள். பிரகாசமான வெண்ணிற வெயிலும் வெளியில் சிரித்துக் கொண்டிருந்தது. காமெல்லியாப் புதருக்குள் பறந்த ஒரு பறவையும் சிரித்தது. மின்னர், எங்கே சென்றதெனத் தெரியாமல் மறைந்து போன அந்தப் பறவையைப் போலவே அவள் முகத்திலிருந்த புன்னகையும் பறந்து, காணாமற் போனது. அவள் மெய்யுணர்வுக்குத் திரும்பி, கடுமையாக முயற்சி மேற்கொண்டு தெளிவுடன் சிந்திக்கத் தொடங்கினாள். முதலில் அவள் டாங் ஷுன்ஜியுடன் படுத்தாகிவிட்டது. இனிமேல் ஷுன்ஜிய் அவள் அப்பாவுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்வதற்காக ஜாங்கிடம் பேசவேண்டும். அவளே ஜாங்கிடம் நல்ல நட்பிலிருக்கிறாள். ஜாங்கும் அவளிடம் மிகுந்த இணக்கத்தோடேயே இருக்கிறார். இருந்தாலும் அவள் சுற்று வழியில் போய் அதற்காக ஷுன்ஜியை அணுகியிருக்கிறாள். முடிவில் அவள் அப்பா ஜாங்கின் நிறுவனத்தில்தான் வேலைக்குச் சேரவேண்டும். அப்படியிருக்கும் போது ஷுன்ஜியிடம் ஏன் முதலில் போகவேண்டும்? அதில் நிச்சயமாக ஒரு பிரச்சினை இருப்பதாக, அவள் உணர்ந்தாள். அவள் ஏன் நேரடியாகப் பொது மேலாளர் ஜாங்கிடம் பேசக்கூடாது? தேவைப்பட்டால் அவருடன் படுக்கக்கூடாது?
அவளுக்கு மயக்கம் வருவது போலத் தோன்றியது. என்ன நிகழ்ந்ததென்று அவளால் வெளிப்படையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவள் ஒரு எளிய முடிவுக்கு வந்தாள்: ஆம். அவள் தவறான ஒரு மனிதனோடு படுத்துவிட்டாள்.
‘’ அப்படியென்றால், இதுதான் வழி. நமக்குள் ஒரு உறவு இருப்பதை பொது மேலாளர் ஜாங் நிச்சயமாக ஊகித்துவிடுவார். நான், அவரோடு அல்ல, உங்களோடு படுத்திருக்கிறேன், அப்படியானால், அவரைவிட நீங்கள் மேலானவரென அர்த்தமாகிறது. இது அவருக்கு நிச்சயம் எரிச்சலுண்டாக்கும். அவர் அதை மோசமாக உணர்வார். அப்படி மோசமாக உணரும் ஒருவர் உங்களுக்கு எதற்காக உதவி செய்ய வேண்டும்?’’ இந்த வழியில் காரண காரியத்தோடு சிந்தித்த அவள், ஒரு காலை நேரப் பறவையைப் போல் பரபரப்பு தணிந்து அமைதியானாள்.
‘’ எங்களை மாதிரி நெருக்கமான நண்பர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. பொது மேலாளர் ஜாங்குக்குப் பெண்தோழிகள் நிறையவே இருக்கிறார்கள். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அடைய முடியாத பெண்களை நோக்கி அவர் பெரும் முயற்சி மேற்கொள்வார். அவர்களை உணவு விடுதிகள், தேநீர்க் குடில்கள், அல்லது பாதம் பிசைய, அவர்களின் உடல் வருடித் தேய்த்துப் பிசைவதற்கு…. என அழைத்துச் செல்வார். இதையெல்லாம் அவர் ஆழ்ந்த காதலினால் செய்வதாக நினைத்து விடாதே.’’
‘’ நான் உதவி கேட்டுச் செல்பவரின் நெருக்கமான நண்பரோடு  படுத்திருக்கிறேன் என்பது, எனக்கு நல்லதாகத் தெரியவில்லை. அவரிடம் எதுவும் சொல்லிவிடாதீர்கள், இருந்தாலும் இதைப்பற்றிச் சிந்திக்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவரிடம் நான் பேசுவதே நல்லதாக இருக்கும்.’’
‘’ ஆனால், நீ எது செய்வதாக இருந்தாலும், அவசரப்பட்டு, அவரோடு படுக்க மட்டும் செய்து விடாதே! அவருடைய மனப்போக்கினை உண்மையிலேயே நன்கு புரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அது கிடைக்காதோ என்கிற ஒரு உணர்வு அவருக்கு எப்போதுமிருக்கவேண்டும். அவரைக் காக்க வைத்துப் பின்னாலேயே அலைய வைக்கிற ஒரு வழியைப் பற்றி நீ சிந்திக்க வேண்டும்.’’ என்று ஷுன்ஜிய் திறம்படப் புரட்டிப் பசப்பினார்.
அவள் முகத்தில் யாரோ எச்சில் உமிழ்ந்துவிட்டதாக, அருவருத்தாள். உள்ளுக்குள்ளாகக் குமட்டுவது போல் உணர்ந்தாள். தொலைபேசியைத் துண்டித்துத் தொங்கவிட்டுச் சிறிது நேரம் படுத்தே கிடந்தாள். கன்னங்களில் ஏதோ ஊர்வது போல் தோன்றவே, தடவிப்பார்க்க அது கண்ணீராக இருந்தது. எங்கிருந்து வருகிறது, கண்ணீர்? அந்தக் கணம் வரை அவள் அழுதுகொண்டிருப்பதை உணரவில்லை. எதற்காக அழுகிறாள்? சிறிது சிந்தித்தாள். எல்லாம் அப்பாவின் வேலை விஷயம் சிக்கலாகிறதே என்பதால்தான் எனத் தோன்றியது. அதற்காக, அவள் டாங் ஷுன்ஜியைத் தேடிச் சென்று, அவனுடன் படுத்ததை மீளத் திருப்பிப் பெற்றுவிட முடியுமா என்ன? அவள் கண்ணீரைத் துடைத்தாள். இது அழுவதற்கான நேரம் அல்லவென அவளுக்குத் தோன்றியது. ஜாங் ஜியாயு என்ற மனிதர் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவள் ஏற்கெனவே அவரோடு ஒரு நட்பினைப் போற்றி வளர்த்து வந்திருக்கிறாள். இந்த மாதிரியான வேலையெல்லாம், அவருக்குச் சுண்டுவிரல் அசைத்தாலே போதும், அவ்வளவு எளிது; நிச்சயம் அவர் உதவுவார்.
அப்பாவின் வேலை குறித்து டாங் ஷுன்ஜியைப் பேசச் சொல்லவேண்டுமா, அல்லது அவளே பேசலாமா? பிற்பகல் வரையில் அவளால் எந்த முடிவுக்கும்  வர இயலவில்லை. எல்லாமே முழுத் தோல்வியடைந்துவிட்டதாக, அவள் வெறுமையாக உணர்ந்தாள். ஷுன்ஜிய் ஜாங்கிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவார். அதன் பிறகு ஜாங் ஜியாயு அவளைப் பார்க்க வரமாட்டார். அதனால், ஜாங் ஜியாயு அவளை அழைத்தபோது, அவள் அதிக மகிழ்ச்சி கொண்டு பிரகாசமானாள்.
‘’ டாங் புதாவ், நான் உங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். ஆண்களின் வக்கிர புத்தியைக் காட்டும் அந்த மாதிரியான இடத்துக்கு, நான் உங்களை அழைத்துப் போயிருக்கக்கூடாது. நீங்கள் இன்று வேலைக்குச் செல்வதில்லையென்று எனக்குத் தெரியும். மேல்மாடிக் கூரையில் அமைந்திருக்கும் சுழல் விடுதிக்கு நாம் இன்று போவோம். உங்களுக்காகக் கீழே படிக்கட்டில் காத்திருக்கும்போது ஒரு சிகரெட் புகைத்துவிடுகிறேன்.  அவசரம் எதுவுமில்லை.’’
அவள் படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டு, முகம் கழுவிப் பல் துலக்கி, நிதானமாக ஆடையணிந்தாள். அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாகத் தோன்றியது. ஆனால், உண்மையில் அவள் மனம் சிக்குண்ட நூற்கண்டு போலாகியிருந்தது. அவளால் அதைச் சரிவரப் பிரித்தெடுக்க முடியவில்லை. அவள் குழம்பிய நிலையில் படிக்கட்டில் இறங்கிய போது, உடற்பயிற்சிக்கான உடையும் தலையில் அடிபந்துத் தொப்பியும் அணிந்து நின்ற ஜாங் ஜியாயுவைக் கண்டாள். அவர் அப்போதுதான் கோல்ஃப் முடித்துவிட்டு வந்தவரைப் போல உற்சாக ஒளி வீசி நின்றுகொண்டிருந்தார். அந்தக் காலிச்சட்டி மறைந்து போயிருந்தது. அந்தக் காலிச்சட்டியிலிருந்துதான் அவளது முந்தைய துயரமெல்லாம் உருக்கொண்டது போலவும் சட்டி மறைந்ததில் அவள் துயரமும் மறைந்துவிட்டது போலவும் அவள் திடீரென்று மகிழ்ச்சி கொண்டாள். அவள் ஜாங் ஜியாயுவுக்கு முகமன் கூறி வாழ்த்தினாள். அவரும் மகிழ்ச்சியாகவே தோன்றினார். அதனால் இருவரும் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் இணைப்பறவைகள் போலக் காருக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
சுழல் விடுதியின், உச்சாணியிலிருந்து காங்ஷூ நகரத்தை டாங் புதாவ் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர், ‘’ நகரத்தை இது மாதிரிப் பார்ப்பது உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. நெருக்கிநிற்கும் கட்டிடங்கள் பாறைக் குன்றுகளாகவும், சாலைகள் காட்டின் ஆறுகளாகவும், கார்கள் வண்டுகளாகவும் மனிதர்கள் எறும்புகளாகவும் தெரிகின்றனர்.’’ என்றாள்.
‘’ ஆமாம். பகற்பொழுதுக் காட்சிகளும்  இரவுக் காட்சிகளும் முற்றிலும் வேறானவை; மழை அல்லது வேறு ஏதாவது பெய்யும்போது, எதையுமே பார்க்க முடியாது.’’ ஜாங் ஜியாயு அவருடைய கைப்பையிலிருந்து ஒரு கட்டு வண்ணத்தாள்களைத் தேடி எடுத்து, ‘’ புதாவ் இங்கே வாருங்களேன், உங்கள் அதிர்ஷ்டம் எப்படியென்று பார்த்துவிடுவோம். டொயோட்டா ஒன்றைச் சுரண்டிக் கொண்டுவருவீர்களா?’’ என்றார்.
‘’ இது என்ன, மாயம்?’’
‘’ சமுதாய நல லாட்டரிச் சீட்டுகள். ஐநூறு சீட்டு வாங்கியிருக்கிறேன். நான்கு ஆடுதன் ராஜாக்களைச் சுரண்டிவிட்டீர்களானால், ஒரு டொயோட்டா பரிசு. நாம் ஜெயித்தால் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொள்வோம்.’’
லாட்டரிச் சீட்டுகள் மேஜையில் பாதிக்கு மேலாகப் பரந்து கிடந்தன. ஜாங் ஜியாயு ஒரு நாணயத்தை எடுத்து சீட்டு ஒன்றைச் சுரண்டிச் செயல்முறை விளக்கம் நிகழ்த்திக் காட்டினார். மேற்கத்திய உணவு விடுதி ஒன்றில் அமர்ந்துகொண்டு ஒரு காரைச் சுரண்டிக்கொண்டு வருகிற இந்த மாதிரியான வேலையை, டாங் புதாவ்,  பாதி நம்பியும் மீதியைச் சந்தேகத்திலுமாகச் செய்துகொண்டிருந்தாள். ஆனாலும், அவள் ஒரு மனக் கணக்கு போட்டுப் பார்த்தாள். லாட்டரியில் பாதியை அவள் வென்றாலும், அதில் குறைந்தபட்சம் எவ்வளவு வரும்? எழுபது அல்லது எண்பது யுவான்கள் கிடைக்குமா? அது கிடைத்தால், அவள் அப்பா வேலை எதற்கும் செல்லாமலேயே செங்டுவில்  ஓய்வான ஒரு வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து விடுவாரே! இந்தக் கணக்கு அவளுக்குள் ஒரு நிமிடம் மின் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென்று, இரவு வானத்தில் வாணங்கள் வெடித்துச் சிதறி, வண்ணப்பூக்கள் பரந்தது போல், அவளுக்குள் புதிய ஒரு நம்பிக்கை ஒளி பாய்ந்தது. அவள் இதயம் எந்தக் காரணமும் இல்லாமலேயே அதிபயங்கர வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. அப்பாவுக்கு வேலை தேடும் அந்தப் பெருங்கவலையை மட்டும் அவள் இந்த வழியில் ஒழித்துவிட்டால், மிகுந்த ஆறுதலாகிவிடும். அவள் இதயம், காற்றில் படபடக்கும் பாய்மரத் துணி போல் உப்பிப் பருத்தது. அந்த அதிசய, அற்புதத்தைத் தன் கைகளாலேயே நிகழ்த்திக்காட்டத் தயாரானாள். அவள் கண்கள் ஆடுதன் ராஜாக்களின் நினைவில் அலைந்து கொண்டிருக்க, சூதாட்டக்காரன் தொடக்கச் சீட்டுகளை இறக்குவதற்குத் தயங்கி  சீட்டுகளின் மீது அங்குமிங்குமாகக் கைவிரல்களை அலையவிட்டுத் தாமதம் செய்வது  போல்,  சுரண்டுவதை வேண்டுமென்றே மிகமிக மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யத் தொடங்கினாள். அட்டையின் அடிப்பகுதி நிறம் தெரியத் தொடங்கியதும், அவள் மற்றுமொரு வகையான இன்னதென்று அறிய முடியாத, அதாவது பகுதி உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சிக்கொப்ப, அவள் முழு உடலும் நெஞ்சும்  ஆடுதன் ராஜாவின் முழுப்படத்தையும் கண்டுவிடுகிற நம்பிக்கையில் முன்னோக்கிப் பாய்கிற மாதிரியான கிளர்ச்சிக்கு ஆட்பட்டாள். ஆனால், அது உச்சிக்கு ஏறியபிறகு இன்னுமொரு புதிய மலைச்சரிவு இருப்பதை அறிந்து, கடைசியில் எதுவுமே வெற்றிபெறாமல் ஏமாறும் மலையேறி மனிதனைப் போலானது. அவள் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்க, அவளது ஏமாற்றங்களும் சுரண்டிக் கிழித்தெறிந்த லாட்டரி அட்டைகளின் குவியலாகத் தொடர்ச்சியாகக் குவிந்து கொண்டேயிருந்தன.
அவள் சிறிது நேரம் அப்படியே தொடர்ந்தாள். அவள் கைகள் புண்ணாகி வலிக்க, அவள் நெஞ்சம் வறண்டது போலுணர்ந்தது. அவளின் முந்தைய பற்றார்வம் தொடரவில்லை. அவள் பொறுமையிழந்தாள். பொறுமையற்ற மாணவி கண்டிப்பாகச் செய்து முடிக்கவேண்டிய கட்டாயப் பயிற்சியில் பணிசெய்வதுபோல், அவள் ஒரு வெறுப்பான மனநிலையில் லாட்டரிச் சீட்டுகளை வேகவேகமாகச் சுரண்டினாள். அவள் கைகள் இயந்திரத்தனமாக, அவள் இதயத்தின் மீது யாரோ எதையோ கிறுக்கித் தொலைத்தது போல, அவள் நினைவுகள் மங்கத்தொடங்கியது.
இத்தனைக்கும் மத்தியில், அவள் அதை விட்டுவிடலாமென நினைத்துச் சிறிது நிறுத்தி ஓய்வெடுத்தாள். பின் தன் நினைவின்றியே நாணயத்தை எடுத்து, மீண்டும் சுரண்டத் தொடங்கினாள். ஆரம்பத்தில் அவள் தொடங்கியது போலவே, மெதுவாகப் பின் வேகவேகமாகச் சுரண்டினாள். இறுதியில் அவள்  வலிப்பு நோயில் வெட்டிவெட்டி இழுக்கும் நரம்பதிர்ச்சி போல அவள் கை அதிவேகமாகப் பின்னும் அதிவேகமாகச் சுரண்டிக்கொண்டிருந்தது. தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்தாள். ‘’ உன் அப்பாவின் வேலை பற்றி நான் ஒன்றும் மறந்துவிடவில்லை. பொது மேலாளர் ஜாங்குடன் பேசுவதற்குச் சரியான நேரம் வரட்டுமெனப் பார்க்கிறேன். அவரிடம் நான் பேசுகிறேன். அவர் நிறுவனத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொடுப்பதில் எனக்குப்  பிரச்சினையென்று எதுவுமில்லை.’’ யென டாங் ஷுன்ஜிய் சொல்வது காதுக்குள் எங்கோ விழுந்தது. இம்முறை அதை அவள் வேடிக்கையான ஒன்றாகக் கருதவோ, சிரிக்கவோ இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவள் அதைத் தாங்க முடியாத  அவலமாக உணர்ந்தாள்.
அதன் தொடர்ச்சியாக, ‘’ நீ எது செய்வதாக இருந்தாலும், அவசரப்பட்டு, அவரோடு படுக்க மட்டும் செய்து விடாதே! அவருடைய மனப்போக்கினை உண்மையிலேயே நன்கு புரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அது கிடைக்காதோ என்கிற ஒரு உணர்வு அவருக்கு எப்போதுமிருக்கவேண்டும். அவரைக் காக்க வைத்துப் பின்னாலேயே அலைய வைக்கிற ஒரு வழியைப் பற்றி நீ சிந்திக்க வேண்டும்.’’ எனச் சொல்லி,  டாங் ஷுன்ஜிய், அவளைக் கேவலப்படுத்தி, கேலிக்குள்ளாக்கி விட்டார்.
பசபசவென ஒட்டுகிற எச்சில் கோளமாகச் சளக்கென்று விழுந்த அவருடைய வார்த்தைகள் அவளுக்குள் வாந்தியெடுக்கும்  குமட்டலை ஏற்படுத்தின. டாங் ஷுன்ஜிய் அவள் மீது எச்சிலை உமிழ்ந்துவிட்டதாகவே அவள் கருதினாள். அவளது கைகள் கடுமையாக அதிர்ந்து நடுங்கின.
நடுக்கத்தை அவள் கைகள் திடீரென நிறுத்தின. அவள் ஜாங் ஜியாயுவின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தாள். அப்போதே, அந்த நேரத்திலேயே நேரடியாக, அவரிடம் தன் அப்பாவின் வேலை விஷயம் பற்றிப் பேசிவிடுவதென உறுதிகொண்டாள்.
***
குறிப்பு :
1.     ஜின்செங் Ginseng. ஒருவகை மருந்துச் செடி. இதன் கிழங்கு நோய் வராமல் தடுக்கும் சக்திகொண்டதென்றும், பாலியல் இயலாமை நோய்களுக்கும் நல்ல மருந்தென்றும்  சீனா, ஜப்பான், மற்றும் கொரியாவில் கருதப்படுகிறது.
2.     டாவ் லாங் – இவரது இசைப்பாடல்கள் சீன இளைஞர்களால் கொண்டாடப்படுகின்றன.
3 திரிபீடகம் – யுவான் சுவாங்கின் இந்தியப் பயணம் `மேற்கு நோக்கிய            பயணம்` என்ற செவ்விலக்கியம் புனையப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது. அந்தப் புனைவில் வருகின்ற திரிபீடகம் இங்கு குறிப்பிடப்படுகிறது.


மலைகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது.







No comments:

Post a Comment