Saturday 16 January 2016

கனடா சிறுகதை - குரல்கள் Voices by Alice Munro

குரல்கள் Voices 

ஆங்கிலம் : ஆலிஸ் மன்றோ Alice Munro 

தமிழில் ச.ஆறுமுகம்.

images (10)
`சமகாலச் சிறுகதைகளின் தேர்ந்த வல்லுநர்` எனக் குறிப்பிடப்பெற்று நோபல் விருது வழங்கப்பட்டுள்ள ஆலிஸ் மன்றோ, பரந்த நாவல்களுக்குத் தேவைப்படும் ஆண்டுக்கணக்கான உழைப்பும் திட்டமிடலும் கொண்டவர். ‘’ கணிணியில் பதிவாகிக்கொண்டிருக்கும் முக்கியப் பணியை ஒரு மின்வெட்டு பாதித்துவிடுவதைப்போல, குழந்தை நோய்வாய்ப்படல், உறவினர் வருகை, தவிர்க்க முடியாதபடி குவிந்திருக்கும் வீட்டு வேலைகள், அவருக்குள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பினை விழுங்கிவிடுவதாக’’ ஒரு சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுகிறார். மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு இளம் படைப்பாளராக குழந்தை தூங்கும் நேரம், உணவிடை நேரம், எனக் கிடைக்கும் மதிப்பு மிக்க நேரங்களில் அவரது கதைகள் அடுமனைக்குள் வேகும் ரொட்டி போல உருவாகியிருக்கின்றன. ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் பிடிப்பதாகக்  கூறும் அவரது முதல் தொகுப்பான .Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்கு வந்து சேர இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அப்போது மன்றோவுக்கு வயது 37. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியானது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் புனைகதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர். அவரது கதைகள் அவற்றின் முழுமைக்குப் பெயர் போனவை.
ஒரு நேர்காணலில் அவரது கதைகள் பற்றி, ‘’சிறுகதை வடிவத்தின் ஒழுங்கினைக் குலைக்கின்ற, நாவலை நோக்கி நகர்கின்ற விதிகளுக்குக் கீழ்ப்படியாத கதைகளை, நான் படைக்கிறேனென்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வடிவத்தைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. புனைவினைப்பற்றி, இறுகிக் கட்டியான ஒரு புனைவென்று வைத்துக்கொள்வோம், அதைப்பற்றி அதிகம் சிந்திக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறேன்? பழைய பாணியில் ஒரு கதை சொல்ல – யாரோ ஒருவருக்கு என்ன நிகழ்கிறதென – ஆனால், அந்த `என்ன நிகழ்கிற`தென்பதைச் சிறு குறுக்கீடுகளோடு, திருப்பங்கள், மற்றும்  மாறுபட்ட ஒரு விந்தைத்தன்மையோடு சொல்ல விரும்புகிறேன். எனக்கு வேண்டியதெல்லாம், வாசகர் வியப்பாகச் சிலவற்றை உணரும்படியாக – என்ன நிகழ்கிறதென்பதையல்ல, அவையனைத்தும் நிகழ்கிற வழிமுறையினைச் சொல்லவேண்டுமென்பதுதான். அதற்கு இந்த வகையிலான நீள்சிறுகதைப் புனைவுகள் நன்கு பயன்படுகின்றன.’’ எனக்குறிப்பிடுகின்றார்.
Chatto & Windus London 2012  பதிப்பான `Dear Life` தொகுதியிலிருந்து Voices என்ற கதை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
*****

அம்மா சிறுமியாக இருந்தபோது, அவளும் மொத்த குடும்பமும்  நடனங்களுக்குப் போவதுண்டு. அந்த நடனம் பள்ளிக்கூடக் கட்டிடத்தில் அல்லது சிலநேரங்களில் போதுமான முன்பக்க அறை வசதியுள்ள ஏதாவது ஒரு பண்ணை வீட்டில் நடக்கும். இளையவர்களும் முதியவர்களுங்கூட முன்கூட்டியே வந்துவிடுவார்கள். யாராவது ஒருவர், வீட்டிலேயே உள்ள  அல்லது பள்ளிக்கூடத்துப் பியானோவை இசைப்பார்; வேறு யாராவது ஒருவர் வயலின் கொண்டுவந்திருப்பார். சதுர நடனம்1 சிக்கலான அசைவு அல்லது நடைகளைக் கொண்டது. அதில் தனித்திறமையுடைய ஒருவர் (எப்போதுமே ஆண் தான்), வினோதமான வெறுப்பு காட்டி அவசரப்படுத்துகிற, அதிகபட்ச உரத்த குரலில் அழைப்பார்; ஆனால், அந்த நடனம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தால் மட்டுமே அந்த அழைப்பினால் உங்களுக்குப் பயனுண்டு; இல்லையெனில் எதுவுமேயில்லை. நாளாக, நாளாக, பத்துப் பன்னிரண்டு வயதாகும்போது அனைவரும், நடனத்தை, எல்லோரையும் போலவே கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.
எல்லோருமாக நடனத்துக்குப் போய்க்கொண்டிருக்கும்  நாட்டுப்புறத்தில்  வசிப்பது போல, திருமணமாகி, நாங்கள் மூன்று குழந்தைகள் இருக்கும்போதும்,  அம்மா நடனத்தை அனுபவிக்கும் மனநிலையும் அதற்கான வயதினையும் கொண்டிருந்தாள். பழைய பாணியை ஓரளவுக்கு அகற்றிவிட்டு இடம்பிடித்திருக்கக்கூடிய, இப்போதைய இணைகளின் சுற்று நடனத்தைக்கூட அவள் அனுபவித்து ரசிப்பாள். ஆனால், இப்போது அவள் இருப்பது ஒரு வேறுபட்ட சூழல். நாங்களுந்தாம். எங்கள் குடும்பம் நகரத்துக்கு வெளியேதான், ஆனால், உண்மையான கிராமப்புறத்தில் இல்லை.
அம்மாவைவிட அதிகமாக விரும்பப்பட்டவராக  இருந்த என் அப்பா, எப்படி நடத்தினாலும் அதற்குத் தக்கபடி போய்க்கொள்ளவேண்டுமென்ற நம்பிக்கை கொண்டவர். அம்மா அப்படிப்பட்டவரல்ல. அவள் ஒரு விவசாய வாழ்க்கையிலிருந்து பள்ளி ஆசிரியராக உயர்ந்தவள்; ஆனால், அது ஒன்றும் அவள் விரும்புகிற நிலையை, அல்லது நகரத்தில் அவள் விரும்புகிற மாதிரியான நண்பர்களை ஏற்படுத்திவிடவில்லை. அவள், போதிய பணம் இல்லாமல், சரியற்ற இடத்தில் வசித்துக்கொண்டிருக்கிறாள்; ஆனால், எப்படிப்பார்த்தாலும் அவள் எதுவுமே இல்லாதவளாக இல்லை. அவளால் ப்ரிட்ஜ் விளையாட முடியாது, ஆனால், ஈக்கர் (euchre) விளையாடுவாள். புகைக்கும் பெண்ணைப் பார்க்கும்போது எதிர்ப்புணர்வு கொள்கிறாள். அம்மாவைத் தன்முனைப்பு கொண்டவளாக, அதிக இலக்கணம் பேசுபவளாக எல்லோரும் கருதுகிறார்களென நான் நினைக்கிறேன். ரெடிலி (readily) இன்டீட் சோ  (indeed so) என்கிற மாதிரியான வார்த்தைகளைப் பேசுகிறாள். அவள் அப்படியாக எப்போதும் பேசுகிற, வித்தியாசமான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது போலக் காட்டிக்கொள்கிறாள். ஆனால், அவள் அப்படி, இல்லை. அவர்களும் அப்படி இல்லை. எனது மாமா, அத்தை, சித்தி, சித்தப்பாக்களெல்லாம் அவர்களது விவசாயப் பண்ணையில் அப்படிப் பேசிக்கொள்வதில்லை. எல்லோரும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். அவர்கள் என் அம்மாவை அவ்வளவாக விரும்பவுமில்லை.
வாழ்க்கை இப்படியாகாமலிருந்திருக்கக் கூடாதாவென, அவள் எப்போதும் நொந்துகொண்டிருந்ததாகச் சொல்லவில்லை. எல்லா அம்மாக்களையும் போலவே அவள் சலவைத்தொட்டிக்கும் சமையலறைக்குமாக அல்லாடிக்கொண்டு, வீட்டில் போதிய தண்ணீர் இல்லாமல், கோடைகாலம் முழுவதையும் குளிர்காலத்துக்கு வேண்டிய உணவினைத் தயாரிப்பதிலேயே செலவழிக்க வேண்டிய கட்டாயத்திலென, எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருந்தாள். என்விஷயங்களில்கூட கவனிப்பதற்கு அவளுக்குப் போதிய நேரமில்லை; இல்லையென்றால், நான் ஏன் நகரத்துப் பள்ளியிலிருந்து சரியான நண்பர்களை அல்லது எந்த நண்பர்களையுமே வீட்டுக்கு அழைத்துவராமலிருக்கிறேனென, அல்லது, எப்போதுமே நான் விருப்பமாகத் தவறவிடாமல் செல்கிற ஞாயிறு மனப்பாட ஒப்புவிப்பு வகுப்புகளுக்கு இப்போது ஏன் போகாமலிருக்கிறேனென்று, எப்போதுமே வீட்டுக்கு வரும்போது என் தலைமுடிச் சுருள்களை ஏன் கலைத்து விடுகிறேனென்று – அது, நான் பள்ளி செல்வதற்கு முன்பிருந்தே சகித்துக்கொண்டிருந்த ஒரு அலங்கோலம், ஏனென்றால் அம்மா என் தலையைச் சீவி முடித்து விடுகிற மாதிரி வேறு யாருமே அப்படிச் சீவி முடிந்துகொள்வதில்லை-, கவிதைகளை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதில் வியக்குமளவுக்கு நினைவுத்திறன் கொண்டிருந்த நான், அதிலிருந்துங்கூட விலகிநிற்க ஏன் கற்றுக்கொண்டேனென்று, மீண்டும் பலர் முன்னிலையில் அதைக் காட்டிக்கொள்வதற்கு எப்போதுமே பயன்படுத்த ஏன் மறுக்கிறேனென்று நினைத்து என்மீது ஏமாற்றம் கொண்டிருப்பாள்.
ஆனால், நானொன்றும் அப்படி எப்போதும் வெறுப்பும் பிணக்கும்   நிறைந்தவளாக இருப்பதில்லை. அப்போதுங்கூட இல்லை. அப்போது எனக்குப் பத்து வயது.  நல்ல ஆடையணிந்து  அம்மாவுடன் நடனத்துக்குப் போவதற்கு எப்போதும் ஆசைதான்.
நடனம், எங்கள் தெருவிலுள்ள எப்படிப்பார்த்தாலும் மதிக்கத்தக்க, ஆனால் அப்படியொன்றும் செல்வத்தோற்றமென்றில்லாத வீடுகள் ஒன்றில் நிகழ்ந்தது. அது, மரத்தாலான ஒரு பெரிய வீடு. அந்த வீட்டுக் கணவருக்கு என்னுடைய தாத்தா வயதிருந்தாலும் வார்ப்பகம் ஒன்றில் வேலைசெய்கிறாரென்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாத மனிதர்கள் அந்த வீட்டில் வசித்தனர். யாரும் வார்ப்பகத்தை விட்டுவிட்டு எளிதில் வந்துவிட மாட்டார்கள். முடியுமளவுக்கு வேலை செய்து, முடியாத காலத்துக்காகப் பணத்தைச் சேமிக்க முயல்வார்கள். பிற்காலத்தில்தான் அதைப் பெருநெருக்கடி மந்தநிலை என்று  சொல்லவேண்டுமென நான் கற்றுக்கொண்டதன் மத்தியில் அவர்கள் முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொள்ளப் போகவேண்டியிருந்ததென்பது பெருத்த அவமானம். அவர்களின் வளர்ந்த மகள்,மகன்கள், எந்தப் பணநெருக்கடியிலிருந்தாலும் அவர்களது பெற்றோரை அப்படி விட்டுவிடுவதென்பது அவமானந்தான்.
அப்போதில்லாத சில கேள்விகள் இப்போது என் மனத்தில் எழுகின்றன.
அந்த வீட்டில் வசித்தவர்கள், வீட்டில் நடனமாட அனுமதித்தது, வெறும் களியாட்ட உற்சாகத்திற்கு மட்டுந்தானா? அல்லது அதற்கென்று பணம் பெற்றுக்கொண்டார்களா? அந்த வீட்டு மனிதர் ஒருவர் உழைத்துச் சம்பாதித்தாலுங்கூட, அவர்கள் பணக் கஷ்டத்தில்தான் இருந்திருப்பார்கள். மருத்துவச் செலவு. அது ஒரு குடும்பத்தின் மீது எப்படிப் பயங்கரமாக வந்து விழுமென்று எனக்குத் தெரியும். எல்லோரும் சொல்வது போல, என் சின்னத் தங்கைக்கு மிகவும் நொய்மையான உடம்பு, ஏற்கெனவேயே அவளுக்குத் தொண்டையில் சதை வேறு வளர்ந்து அறுவைசிகிச்சை செய்திருந்தது. நானும் என் தம்பியும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஒரு தனிவகை மார்புச்சளியால் அவதிப்பட்டோம். அதனால் எங்கள் வீட்டுக்கு மருத்துவர் வந்த வண்ணம் தான். மருத்துவர்கள் என்றாலே பணம்தான்.
இன்னொரு விஷயம், எனக்கு வியப்பளித்தது  என்னவென்றால், அம்மாவுக்குத்  துணையாக அப்பா போகாமல், நான் ஏன் போகவேண்டும் என்பதுதான். ஆனால், அது ஒன்றும் பெரிய புதிரல்ல. நடனமாடுவதில் அப்பாவுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால், அம்மா விரும்புகிறாள். வீட்டில், இரண்டு சின்னக் குழந்தைகள் வேறு இருந்தார்கள். அவர்களைத் தனியாகக் கவனித்துக் கொள்ளுமளவுக்கு எனக்கு வயதாகியிருக்கவில்லை. எங்கள் வீட்டில், குழந்தை கவனிப்பாளர் ஒருவரை வேலைக்கு வைத்திருந்ததாக எனக்கு ஞாபகமேயில்லை. சொல்லப்போனால்,  அந்தச் சொல்கூட அந்தக் காலத்தில் அவ்வளவு தெரிந்ததாக இல்லை. என் பதின்பருவத்தில் அந்த வழியில் வேலையைத் தேடிக்கொண்டேன்தான். ஆனால், அப்போது காலம் எவ்வளவோ மாறிவிட்டிருந்தது.
நாங்கள் ஆடைகளை அணிந்துகொண்டோம். பிற்காலத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்க்கிற மாதிரியான மரியாதைக்குறைவான சதுர நடன ஆடைகள் அந்தக்கால நாட்டுப்புறங்களில் தோன்றியிருக்கவேயில்லையென அம்மா சொல்கிறாள். அவர்களிடமுள்ள நல்ல ஆடைகளில் அல்லாமல் –அந்தக் காலத்துக் கிராமங்களின் நாட்டுப்புற ஆடம்பரமான ஓரப்பின்னல் குஞ்சங்கள், கழுத்துக் கைக்குட்டைகள் அணியாமல் – செல்வதென்பது விருந்து கொடுப்பவர்களுக்கும், மற்ற எல்லோருக்குமேகூட ஒருவித அவமதிப்பாக இருக்கும். மென்மையான குளிர்காலக் கம்பளியில் அம்மா எனக்காகப் பின்னியிருந்த ஒரு ஆடையை நான் அணிந்திருந்தேன். அந்த அரைப்பாவாடை இளஞ்சிவப்பிலும் மேற்சட்டை மஞ்சள்நிறத்திலுமாக,   அதில், வருங்கால நாளொன்றில் என் இடப்பக்க மார்பு மீது பொருந்துமாறு ஒரு இதயம் இளஞ்சிவப்புக் கம்பளியிலுமாகப் பூத்திருந்தது. என் தலைமுடியை நனைத்துச் சீவி, நீண்டு தடிமனான கொத்திறைச்சிக் குழலப்பம் போன்ற சுருள்களாக, அதுதான் பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே நான் கலைத்துவிடுகிற சுருள்களாக முடியப்பட்டிருந்தது. நடனத்துக்கும் அதைப்போல அணிந்து செல்வதை, வேறு யாரும் அப்படி அணிவதில்லையே  என்று  சிணுங்கி, முறையிட்ட போது, வேறு யாருக்கும் அந்த அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லையென்பது அம்மாவின் பதிலடியாக இருந்தது. நடனத்துக்குச் செல்லும் பெருவிருப்பமோ, அல்லது என் பள்ளிக்கூட நண்பர்கள் யாரும் நடனத்துக்கு வரமாட்டார்களென்பதால் அது ஒரு பெரிய விஷயமேயல்ல என்று நான் நினைத்ததனாலோ, முறையிட்டு மறுப்பதை விட்டுவிட்டேன். என் பள்ளி நண்பர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும்தான் நான் அவ்வளவு பயந்தேன்.
என் அம்மாவின் ஆடை வீட்டில் தயாரிக்கப்பட்டதல்ல. அது தேவாலயத்துக்கு அதிகப் பகட்டாக, துக்க வீடுகளுக்கு விழாக்கோலத் தோற்றமளிப்பதாக இருந்ததால் அதிகம் பயன்படுத்தாமல், இருப்பதிலேயே நல்லதான ஆடையாக  இருந்தது. அது கறுப்பு வெல்வெட் துணியில் முழங்கை மூட்டு வரையிலும் கைகள் நீண்டதாக, கழுத்துக்கோடு சிறிது உயரமானதாக இருந்தது. அந்தச் சட்டையின் இன்னொரு அருமையான விஷயம், அதன் உடற்பகுதி முழுதும் தாமாகவே முளைத்துப் பல்கிப்பெருகியதுபோலப் பரவலாகக் கோர்த்திருந்த பொன், வெள்ளி, இன்னும் பல நிறச் சிறு பாசிகளும் மணிகளும் ஒளியை வாங்கி, அவள் அசையும்போது, அல்லது மூச்சுவிடும்போது நிறம் மாறுவதுதான். அப்போதும் அதிகமும் கறுப்பாக இருந்த அவளது தலைமுடியைப் பின்னலிட்டுத் தலை உச்சியில் அணிந்திருந்த இறுக்கமான ஒப்பனைத் தலையணியோடு சேர்த்து ஊசிகளால் பிணைத்திருந்தாள். அவள் மட்டும் என் அம்மாவாக இல்லாமல், வேறு யாரோ ஒரு பெண்ணாக இருந்தால், கிளர்ச்சியூட்டும் அழகோடிருந்ததாக நினைத்திருப்பேன். அப்படித்தான் அம்மாவைப் பார்த்ததாக நினைக்கிறேன்; ஆனால், அந்த வினோத வீட்டினுள் நாங்கள் நுழைந்ததுமே, அம்மாவின் அற்புத ஆடை மற்றவர்களும் அவரவருடைய சிறந்த ஆடைகளையே அணிந்து வந்திருந்தாலும், அவர்களுடையதைப் போலவே, எந்தச் சிறப்புமில்லாமல் போயிருந்ததைக் கண்டேன்.
நான் குறிப்பிடும் மற்ற பெண்கள் சமையலறையிலிருந்தார்கள். அங்கேயே நாங்கள் நின்று அங்கிருந்த பெரிய மேஜையில் வைத்திருந்தவற்றைக்  கவனித்தோம். எல்லா வகையான அப்பங்கள், பழ அப்பங்கள், மொறுமொறு பண்டங்கள், மோதகங்கள், கேக்குகள் இருந்தன, என் அம்மாவும், அவள் செய்து, கொண்டுவந்திருந்த கண்கவர் பண்டங்களை மேஜைமீது வைத்து, அழகாகத் தோன்றுமாறு அமளிப்படுத்திக் கொண்டிருந்தாள். எல்லாமே, பார்த்ததும் அப்படியொரு எச்சில் ஊறுவதாக இருக்கிறதென அவள் சொன்னாள்.
அம்மா அப்படிச் சொன்னாளா – எச்சில் ஊறுவதாக – எனக்கு அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லை. அவள் எதைச் சொன்னாலும்,  அது முற்றிலும் சரியாகக் கேட்பதில்லை. சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி நூறு விழுக்காடு மிகச்சரியாகப் பேசும் என் அப்பா இந்தச்சமயத்தில் இருக்கக்கூடாதா என ஏங்கினேன். இலக்கண சுத்தமாகப் பேசும்போதுகூட அவர் சரியான ஒலியில் பேசுவார். அவர் எங்கள் வீட்டிலிருக்கும்போது அப்படிப் பேசுவார். ஆனால், வீட்டுக்கு வெளியே அப்படி உடனடியாகப் பேசிவிடமாட்டார். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதோ அதனுள் நழுவிக்கொள்வார் – அங்கே நாம் ஒருபோதும் விசேஷமாக எதையும் சொல்லிவிடக் கூடாதென்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார். அம்மா அவருக்கு நேரெதிர். அவளுக்கு எல்லாமே தெளிவாக, மணியடித்து எல்லோர் கவனத்தையும் கவர்வதாகப் பணிபுரிந்தது.
இப்போதும் அதுதான் நடந்துகொண்டிருந்தது. வேறு யாரும் அவளோடு பேசாததைச் சரிக்கட்ட, அவள் மிகுந்த மகிழ்ச்சிகாட்டி உரத்துச் சிரிப்பதை, நான் கேட்டேன். எங்கள் மேல் கோட்டுகளைக் கழற்றி எங்கே வைக்கவேண்டுமென்று பெரிய விசாரணை ஒன்றை நடத்திக்கொண்டிருந்தாள்.
அது எங்களிடமே, எங்கே வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்ற பதிலோடு திரும்பியது. ஆனால், நாங்கள் விரும்பினால் மாடியிலுள்ள படுக்கையில்கூட வைத்துக்கொள்ளலாமென்று ஒருவர் சொன்னார். உச்சியில் மட்டுமே விளக்கு இருந்த, மற்றபடி வெளிச்சமில்லாத, சுற்றுச் சுவர்களால் மூடப்பட்டிருந்த ஒரு படிக்கட்டு வழியாகத் தான் மாடிக்குச் செல்ல வேண்டும்.  என்னை மேலே போகுமாறும், அம்மா ஒருநிமிடத்தில் வந்து விடுவதாகவும் சொல்லவே, நான் அப்படியே செய்தேன்.
இங்கே எழுகின்ற கேள்வி, நடனத்தில்  கலந்துகொள்ள, உண்மையிலேயே ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததா என்பதுதான். அதற்கான ஏற்பாட்டைச் செய்வதற்காக அம்மா நின்றிருக்கலாம். கட்டணம் செலுத்த வேண்டியிருந்தபோதிலும் தின்பண்டங்களைக்  கொண்டுவந்திருந்தார்களா? நான் நினைத்ததைப் போல் அந்த உணவுவகைகள் செலவுமிக்கவையா? எல்லோரும் அவ்வளவு ஏழ்மையிலிருந்தனரா? ஒருவேளை போர்ப்பணிகள் மற்றும் படைத்துறை வீரர்கள் அனுப்பிய பணம் காரணமாக அவர்கள் ஏழைகளென நினைக்காமலிருக்கிறார்களா? நான் நினைப்பதுபோல் அப்போது எனக்கு உண்மையிலேயே பத்து வயதுதானெனில் அந்த மாற்றங்கள் இரண்டு வருடங்களாக நிகழ்ந்துகொண்டிருப்பவை.
சமையலறையிலிருந்தும், முன்னறையிலிருந்துமாக தனித்தனியாக இரண்டு படிக்கட்டுகள் ஏறி ஒன்றாகி மாடியிலுள்ள படுக்கையறைகளுக்கு இட்டுச் செல்வதாக இருந்தன. என்னுடைய அரணக் காலணிகளையும் மேல் கோட்டினையும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த முதல் படுக்கையறையிலேயே விட்டொழித்தேன். அப்போதும் சமையலறையிலிருந்து அம்மாவின் குரல் மணியடிப்பதைப்போல ஒலித்துக்கொண்டிருந்ததைக்  கேட்க முடிந்தது. ஆனால், முன்னறையிலிருந்து இசை பரவியதையும் என்னால் கேட்க முடிந்தது. அதனால் நான் அந்த வழியிலேயே இறங்கிச் சென்றேன்.
முன்னறையில் பியானோவைத் தவிர அனைத்து தட்டுமுட்டுச்  சாமான்களும் அகற்றப்பட்டிருந்தன. சன்னல்களில், நான் பயங்கரமாக அச்சுறுத்துவதாக நினைக்கும் வகையிலான பார்வையை மறைக்கும் இருண்ட கடும் பச்சை நிறத் திரைகள் இழுத்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆனால், அந்த அறையினுள் பயங்கர வகைப்பட்ட சூழல் எதுவும் இல்லை. ஒருவரையொருவர்  நற்பண்புடன் கட்டிப்பிடித்துக்கொண்டு நெருங்கிய வட்டங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறிக்கொண்டு நிறையப்பேர் நடனமாடிக்கொண்டிருந்தனர். அப்போதும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஓரிணைச் சிறுமிகள் அப்போதுதான் பிரபலமாகிக்கொண்டிருந்த ஒரு வகை நடனத்தை, எதிரெதிராகச் சில நேரங்களில் கைகோர்த்தும், சில நேரங்களில் கை கோர்க்காமலும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கண்டதும் வரவற்பதாக உண்மையில் புன்னகைக்கவும் நான் மகிழ்ச்சியில் உருகிப்போனேன். என்னைவிட மூத்த, தன்னம்பிக்கையுள்ள சிறுமி யாரேனும் என்மீது கவனம் செலுத்தத் தகுதியுள்ளவளாக நான் இருந்தேன் என்பதை, அது உறுதிப்படுத்தியதால், அப்படி மகிழ்ச்சியாகிவிடுவேன்.
அந்த அறையில், என் அம்மாவின்  உடையைப் பொலிவிழக்கச்செய்கின்ற ஓர் ஆடையணிந்து, யாரும் கவனிக்காமலிருக்க முடியாதபடியான ஒரு பெண் இருந்தார். அவர் என் அம்மாவைவிடக் கொஞ்சம் வயது கூடியவராக இருக்க வேண்டும். அவரது தலைமுடி வெண்மையாக, வழவழப்பான ஆடம்பர ஏற்பாட்டில் அவரது தலை உச்சியிலிருந்து அலையலையாக நெளியுமாறு அழகுபடுத்தப்பட்டிருந்தது. அவர், அழகிய தோற்றமுள்ள தோள்களும், விரிந்த இடையுமாக ஒரு நல்ல பருமனான பெண். அவர் அணிந்திருந்த பொன்னிற ஆரஞ்சு வண்ணத்திலான டஃபேட்டா பட்டாடை தாழ்வான சதுரக் கழுத்து கொண்டதாக வெட்டப்பட்டும், அரைப்பாவாடை கால் மூட்டுவரைக்குமே மறைப்பதாகவும் இருந்தது. அவரது மேற்சட்டையின் குட்டைக்கைகள் அவரது தோள்களுக்குக் கொஞ்சம் கீழே இறுக்கிப்பிடித்திருந்த இடத்தில் திரண்டிருந்த வளமான சதைப்பிடிப்பு மிக அதிகமாகவும், பன்றிக்கொழுப்பு போல் வழுவழுப்பாகவும் வெண்மையாகவும் இருந்தது.
அது திகைக்கவைக்கின்ற ஒரு  காட்சியாக இருந்தது. முதுமையிலும் வழவழப்பாக, கனத்த உடலானாலும் அழகாக, உலோகம்போல் உறுதியாக, என்றாலும் கண்ணியமான ஒரு தோற்றத்தில் மனிதர்கள் யாராவது இருக்கமுடியுமென நான் நினைத்திருக்கவேயில்லை. நீங்கள் அவரை நாணமற்றவரெனக் கூறலாம். என் அம்மா பிற்பாடு அவரை அப்படித்தான் கூறினாளென்றாலும் அது அவளுடைய பேச்சு வகைப்பாடு. இன்னும் கொஞ்சம் நல்லபடியாகப் பேசுபவர் அவரைக் கம்பீரமான தோற்றமெனக் கூறுவார். அவரது நடை மற்றும் பாணியும் அவர் அணிந்திருந்த ஆடையின் வண்ணமும் தவிர அவர் ஒன்றும் பகட்டுக் காண்பிப்பவராக இல்லை. அவரும் அவரோடு நடனமாடிக்கொண்டிருந்த ஆணும் தம்பதிகளைப்போல மரியாதைக்குரிய வகையில், சொல்லப்போனால், தன்நினைவில்லா, மறதிநிலைப் பாணியில் ஆடிக்கொண்டிருந்தனர்.
நான் அவரது பெயரைத்  தெரிந்திருக்கவில்லை. அதற்கு முன்பும் அவரைப் பார்த்திருக்கவில்லை. எங்கள் நகரத்தில் அவர் கெட்ட பெயருள்ள ஒருவரென்றும் நான் அறிந்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் என் வீட்டுக்கு வெகுதொலைவிலுள்ளவராக இருக்கலாமென்பது மட்டுமே.
நிகழ்ந்தவற்றை நினைவுபடுத்துவது என்றில்லாமல் புனைவு எழுதுவதாக இருந்தால், அவருக்கு அப்படி ஒரு ஆடையை அணிவித்திருக்க மாட்டேன். அந்த வகையான  விளம்பரம் அவருக்கு அவசியமற்றதாக இருந்தது.
நான், பள்ளிக்காக நகருக்குள் தினமும் போய் வருவதற்குப்  பதிலாக நகரத்துக்குள்ளேயே  வசிப்பவளாக இருந்தால், அவர் ஒரு பிரபலமான வேசி என்பதைத் தெரிந்திருப்பேனாகவிருக்கலாம். அந்த ஆரஞ்சு வண்ண ஆடையில் இல்லையென்றாலும், அவரை நிச்சயமாக எப்போதாவது பார்த்திருப்பேன். நான் வேசி என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாதுதான். கெட்ட பெண் என்றிருக்கலாம். அவரைப்பற்றி வெறுக்கத்தக்கதாக, அபாயமானதாக, கிளர்ச்சியளிப்பதாக, துணிச்சலானதாக, ஆனால், குறிப்பாக என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று இருந்ததை நான் தெரிந்திருந்தேன். யாராவது அதை எனக்குச் சொல்ல முயற்சித்திருந்தாலும், நான் அதை நம்பியிருப்பேனென்று நான் நினைக்கவில்லை.
நகரத்தில் வித்தியாசமானவர்களாக  எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகத்தான்  அவர் எனக்குத் தோன்றியிருப்பார். நகர அரங்கத்தில் கூன் விழுந்த ஆள் ஒருவர்  இருந்தார். அவர் அரங்கத்தின் கதவுகளைத் தினமும் துடைத்துப் பளபளப்பாக்குகிறார் என்பதைத் தவிர அவரைப்பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது. அதைப்போலவே நல்லபடியாகத் தோன்றும் ஒரு பெண். அவருக்கு எதிரில் யாருமே இல்லாத போதும் திட்டுவதை, தனக்குத்தானே உரத்த குரலில் பேசிக்கொள்வதை, நிறுத்தவே மாட்டார்.
காலப்போக்கில் ஆரஞ்சுநிற உடைப் பெண்ணின் பெயரையும்  அவர் செய்வதாக, என்னால் நம்பமுடியாத சில விஷயங்களை அவர் உண்மையில் செய்கிறாரென்பதையும் நான் தெரிந்துகொண்டேன். அவரோடு நடனமாடியவர், மேடைக்கோல் பந்தாட்டக்கூடத்தின்2 உரிமையாளர். அவரது பெயரை ஒருவேளை நான் தெரிந்துகொள்ளாமலிருக்கலாம். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருநாள், வேகமாக நடந்துகொண்டிருக்கும்போது, என்னோடுவந்த இரண்டு சிறுமிகள் என்னை மேடைக்கோல் பந்தாட்டக் கூடத்துக்குள் போய்வந்துவிடுவாயாவென உசுப்பேற்ற, நான் உள்ளே போனேன். அங்கே இந்த மனிதரேதான் இருந்தார். அதிக வழுக்கை விழுந்து உடம்பு தடித்து அசிங்கமான ஆடையோடிருந்தார். அவர் என்னிடம் ஏதாவது சொன்னாராவென்று எனக்கு நினைவில்லை, ஆனால், அவர் எதையும் சொல்லியிருக்கவில்லை. அம்பைப் போல, என் தோழிகளிடம் திரும்பி ஓடி வந்த நான், அவர்களிடம் எதையுமே சொல்லவில்லை. அதன்பிறகு அவர்கள் என் தோழிகளாகவே இல்லை.
மேடைக்கோல் பந்தாட்டக்கூட  உரிமையாளரைப் பார்த்ததும், அந்த நடனக் காட்சி, அதிரும் பியானோவும் வயலின் இசையும் பிற்காலத்தில் நான் கேலிக்குரியதென   நினைக்கத் தொடங்கிய அந்த ஆரஞ்சு வண்ண உடையும் மேல்கோட்டோடு என் அம்மாவின் திடீர்ப்பிரவேசமும் (அந்த மேல்கோட்டைக் கழற்றியே இருக்க மாட்டாள் போல.) அப்படியே என் கண்முன் வருகிறது.
அங்கே இசையின் நடுவே, அம்மா, என் பெயரைச்சொல்லி, அதிலும்  குறிப்பாக நான் வெறுக்கக்கூடிய குரலில் கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். அந்தக்குரலின் தொனி, அம்மா என்னை இந்த பூமிக்குக் கொண்டுவந்ததற்காக நன்றி தெரிவிக்குமாறு என்னைக் குறிப்பாக நினைவுபடுத்துவதாகத் தோன்றும்.
‘’ உன் மேல்கோட்டு எங்கே?’’ நான் அதை எங்கேயோ தவறவிட்டு  விட்டதுபோல் அம்மா கேட்டாள்.
‘’ மாடியில்.’’
‘’ நல்லது, போய் எடுத்துக்  கொண்டு வா.’’
அவள் மேல்மாடிக்குப் போயிருந்தால் அவளே, அதைப் பார்த்திருப்பாள். அவள் சமையலறையை விட்டு, நகர்ந்தேயிருக்க மாட்டாள். முன்னறையில் நடனம் தொடங்கிவிட்டதையும், அங்கே ஆரஞ்சு வண்ண உடைப் பெண்ணும் வந்திருப்பதைக் கவனிக்கும் வரையில், கோட்டைக் கழற்றாமலேயே,  பொத்தான்கள் திறந்தநிலையில் உணவுப் பண்டங்களைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்திருப்பாள்.
‘’தாமதிக்காதே,’’ என்றாள், அம்மா.
எனக்கும் அப்படி எண்ணமில்லை. நான் படிக்கட்டுக்கான கதவைத் திறந்து முதல் படிக்கட்டுகளைக் கடந்து அவை திரும்பும் இடத்தில் என் வழியை மறித்துக்கொண்டு சிலர் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். நான் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை – அவர்கள் வேறு ஏதோ ஒன்றில் கவனமாக இருந்ததாகத் தோன்றியது. அது நிச்சயமாக, விவாதம் அல்ல, ஆனால், அவசர வகைப்பட்ட தகவல் பரிமாற்றம் தான்.
அவர்களில் இருவர் ஆண்கள். விமானப் படைச் சீருடையிலிருந்த இளைஞர்கள். ஒருவர் படியில் அமர்ந்திருக்க, இன்னொருவர் கீழ்ப் படிக்கட்டிலிருந்து முன்னோக்கிச் சாய்ந்து முழங்கால் மூட்டில் கை வைத்தவாறு நின்றிருந்தார். அவர்களுக்கு மேலிருந்த படியில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்தவர் அவளை ஆறுதல்படுத்துவது போல அவளது காலை மெல்லத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஒடுக்கமான படிக்கட்டில் அவள் விழுந்து அடிபட்டிருப்பாளென்றும் அதனால்தான் அழுதுகொண்டிருக்கிறாளென்றும் நான் நினைத்துக்கொண்டேன்.
பெக்கி. அவள் பெயர் பெக்கி. ‘’பெக்கி, பெக்கி,’’ என அந்த இளைஞர்கள், அவசரமான ஆனால் இளகிய குரலில் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தனர்.
எனக்குப் புரியாத எதையோ சொன்னாள், அவள். குழந்தையின் குரலில் பேசினாள். சரியற்ற ஏதோ ஒன்று பற்றி நீங்கள் முனங்கி முறையிடுவீர்களே, அதுபோல முறையிட்டுக்கொண்டிருந்தாள். ஏதோ ஒரு செயலைச் சரியல்ல வென்று, அந்தச் சரியற்ற செயல் சரியாக்கப்படுமென்ற எதிர்பார்ப்புமில்லாமல் திரும்பத் திரும்ப நம்பிக்கையற்ற குரலில் முறையிடுகிறீர்கள். இது போன்ற சூழ்நிலைக்குப் பயன்படும் இன்னொரு சொல் `கீழ்த்தரமான` என்பது. அது கீழ்த்தரமானது. அங்கு யாரோ ஒருவன் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறான்.
நாங்கள் வீட்டுக்குச் சென்றபின், அப்பாவிடம் அம்மா பேசிக்கொண்டதிலிருந்து  என்ன நடந்ததென்பதை நேரடியாக  அல்லாமல், ஏதோ கொஞ்சம்   தெரிந்துகொண்டேன். மேடைக்கோல் பந்தாட்டக்கூட மனிதனென்று நான் அறியாத அந்த மனிதனின் தூண்டுதலில் தான் திருமதி. ஹட்சிசன் அன்றைய நடனத்துக்கு வந்திருந்தாள். அந்த மனிதனின் பெயரை என்னவென்று அம்மா சொன்னாளென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், அவன் நடத்தையில் அம்மா மிகவும் அதிர்ந்து வெறுப்புற்றிருந்தாள். நடனம் பற்றிய செய்தி பரவியதில் போர்ட் ஆல்பெர்ட் , விமான தளத்திலிருந்து சில இளைஞர்கள் நடனத்தில் தலைகாட்ட எண்ணியிருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் பார்த்தால், அது சரிதான். விமானப்படை பையன்கள் சரியாகத்தானிருந்தார்கள். திருமதி ஹட்சிசன் தான் அவமானம். அந்தப் பெண்ணும் கூடத்தான்.
அவள் வரும்போது, அவளுடைய  பெண்களில் ஒருத்தியையும்  கூட்டி வந்திருக்கிறாள்.
‘’ஏதோ கொஞ்சம் வெளியே போய்வந்த மாதிரி இருக்கட்டுமேயென்ற  நினைப்புதான்.’’ என்ற அப்பா, ‘’நடனமாட விரும்பியுமிருக்கலாம்.’’ என்றார்.
அம்மா, அதைக் கேட்ட மாதிரியே தெரியவில்லை; அது ஒரு அவமானம் என்றாள். நல்லதொரு நடனம் என நினைத்துப் போனால், ஊர்ப்புறத்தில் கண்ணியமாக, ஒரு நடனமென நினைத்தால், எல்லாமே கெட்டுப் போனதென்றாள்.
மூத்த சிறுமிகளின் தோற்றத்தைக்  கணக்கிடுவது எனக்குப் பழக்கமாக இருந்தது. பெக்கி குறிப்பிடத்தக்க அளவுக்கு அழகாயிருந்ததாக நான் நினைக்கவில்லை. அவளுடைய அழுகையில் ஒப்பனை கலைந்ததாலும் அப்படியிருக்கலாம். சுருட்டிவிடப்பட்டிருந்த அவளது எலிநிறக் கூந்தலிலிருந்து, சில முடிகள் கொண்டை ஊசிகளிலிருந்தும் விலகிக் கலைந்திருந்தன. அவளுடைய விரல்நகங்கள், நகப்பூச்சு பூசியிருந்தாலும் அவள் அதைக் கடித்துத் தின்றிருப்பதைப் போலவேயிருந்தது. எனக்குத் தெரிந்து,  எப்போதும், சும்மாவானாலும் ஏதாவது குறைசொல்லிப் பதுங்கிப் போலியாகப் புலம்பும், பெண்களைவிட அவளொன்றும் அவ்வளவு பெரியவளாகத் தோன்றவில்லை. அதுவுமில்லாமல், அந்த இளைஞர்களும் அவளை முரட்டுத்தனமாக எதிர்கொள்ளத்தக்க ஒருத்தியெனக் கருதாமல், தட்டிக்கொடுத்து, மகிழ்ச்சிகொள்ளத்தக்க வகையில் அவள் முன்பு தலைதாழ்த்தி நின்று, நிதானமாக நடந்துகொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவன், அவனே சுருட்டித் தயாரித்த சிகரெட் ஒன்றை அவளுக்குக் கொடுத்தான். இதையே நான் நல்லதொரு உபசரிப்பாகக் கருதினேன். என் அப்பா அவருக்கான சிகரெட்டை அவரே சுருட்டிக்கொள்வார். எனக்குத் தெரிந்து, வேறு சில மனிதர்களும் அப்படியே செய்திருந்தனர். ஆனால், பெக்கி தலையை அசைத்து அவளுடைய காயம்பட்ட குரலில், சிகரெட் புகைப்பதில்லையென முறையிட்டு, முனங்கினாள். அடுத்தவன் உடனே மெல்சுவைக் கோந்துக் குச்சி (சூயிங்கம்) ஒன்றை எடுத்து நீட்டவே, அவள் அதைப் பெற்றுக்கொண்டாள்.
அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? அதைத் தெரிந்துகொள்ள எனக்கு வழி எதுவுமில்லை. மென்சுவைக்கோந்தைக் கொடுத்தவன் அவனது காற்சட்டைப்பையில் துளாவிக்கொண்டிருக்கும்போது என்னைக் கவனித்ததும், ‘’ பெக்கி? பெக்கி, இங்கே ஒரு சின்னப் பெண், மேலே மாடிக்குப் போகிறாள் போல.’’ என்றான்.
நான் முகத்தைப் பார்த்துவிடாத  மாதிரியில் அவள் தலையைத்  தொங்கப் போட்டுக்கொண்டாள். கடந்து போகும்போது வாசனைத்தைல மணத்தை நுகர்ந்தேன். அவர்களின் சிகரெட் வாசத்தோடு ஆண்மையான கம்பளிச் சீருடை, பளபளவென்றிருந்த அரணக்காலணிகள் மணத்தையும்தான்.
என்னுடைய மேல்கோட்டுடன்  நான் திரும்பி வந்த போது எல்லோரும்  அங்கேயேதான் இருந்தனர். ஆனால், இப்போது என்னை எதிர்பார்த்திருந்ததால், நான் செல்லும்வரை, பெக்கியின் அழுத்தமான மூக்குறிஞ்சலையும் அவளுக்கு அடுத்திருந்தவன் அவள் மூட்டுக்கும்  உயரே காலின் மேற்புறமாகத் தடவிக்கொண்டிருந்ததையும் தவிர, அமைதியாக இருந்தனர். அவளின் அரைப்பாவாடை தூக்கலாக, மேலிழுக்கப்பட்டிருந்தது. முழங்காலுக்கு மேலும் நீண்ட அவளுடைய  காலுறைகளை இறுக்கிப் பிடிக்கும் கிளிப்புகளை நான் பார்த்தேன்.
மிக நீண்ட காலத்திற்கு  அந்தக் குரல்களை நான் நினைவுகொண்டிருந்தேன். அந்தக் குரல்களுக்குள் புகுந்து துருவித் தேடினேன். பெக்கியின் குரலிலல்ல. அந்த ஆண் குரல்களில். ஏற்கெனவே போரில் ஈடுபட்டிருந்த விமானப்படையினரில் சிலர் இங்கிலாந்திலிருந்து போர்ட் ஆல்பெர்ட் தளத்துக்கு அழைத்துவரப்பட்டு, ஜெர்மனியோடு போரிடுவதற்கான பயிற்சியிலிருந்தனரென்பது இப்போது எனக்குத் தெரிகிறது. அதனால்தான் சில பிரிட்டன் பகுதிகளில் வழக்கிலுள்ள பேச்சுமுறைதான் அவர்களின் குரல்களில் பரவசப்படுத்தும்படி அத்தனை பணிவும் மென்மையுமிக்கதாக இருந்ததோவென வியக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு ஆண் அந்த முறையில் பேசுவதை, பெண் அத்தனை அழகாயிருப்பதாக, அவள் எப்படிப்பட்ட ஒரு பிறவியாக இருந்தாலும், மதிப்பளித்து, எப்படிப்பட்ட ஒரு அன்பற்ற நிலை அவளிடமிருந்தாலும், அது ஒரு சட்ட மீறலெனினும், அது ஒரு பாவகாரியமாகவே இருந்தாலும் அப்படிப் பண்பாக விருப்புடன்  நடத்துவதை நான் கண்டதேயில்லை.
பெக்கி அழும்படியாக அங்கு  என்ன நடந்துகொண்டிருந்ததென நான் நினைத்தேன்? இந்தக் கேள்வி, அந்த நேரத்தில் எனக்கு அவ்வளவு முக்கியமாகப்படவில்லை. நான் இயல்பாகவே துணிச்சலுள்ள ஒரு பெண்ணாக இல்லை. முதல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் சிறு கூழாங் கற்களெறிந்து, துரத்தப்பட்டபோது,  நான் அழுதேன். நகரத்துப் பள்ளியில், என் மேஜை அதிர்ச்சிதரும் வகையில் எவ்வளவு மோசமாக, ஒழுங்கற்றிருக்கிறதெனக் காட்டுவதற்காக வகுப்பில் அத்தனைபேர் முன்னிலையில் என்னை மட்டும் ஆசிரியை தனியாக நிறுத்தியபோது  அழுதேன். அதே பிரச்சினையைச் சொல்லி அவர் என் அம்மாவுக்குத் தொலைபேசியபோது, அம்மா, பேச்சைத் துண்டித்துவிட்டுத் தாங்கமுடியாத துயரத்தில் அழுதாள். நான் அவளுக்கு ஒரு பெருமையைக் கொடுப்பவளாக இல்லையாம். சிலர் இயல்பாகவே துணிச்சல் மிக்கவர்களாக, சிலர் அப்படியில்லாமலிருக்கிறார்களென எனக்குத் தோன்றுகிறது. யாரோ பெக்கியிடம் எதையோ சொல்லியிருக்கவேண்டும். அதனால்தான் அவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். அவளும் என்னைப் போலவே தடித்த தோலுள்ளவளில்லையாகவிருக்கும்.
அந்த ஆரஞ்சு வண்ண உடையணிந்தவள் தான் கீழ்த்தரமாக ஏதாவது சொல்லியிருப்பாளென, எந்தத் தனிப்பட்ட ஒரு காரணமும் இல்லாமலே, நான் நினைத்தேன். அவள், ஒரு பெண்ணாக இருப்பதால்தான் தப்பித்தாள். அது மட்டும் ஒரு ஆணாக இருந்தால், ஆறுதல்படுத்திக்கொண்டிருந்த விமானப்படை இளைஞர்களில் ஒருவன், நன்றாகக் கொடுத்திருப்பான். வாயை மூடுடா, மூடுடா என்றுசொல்லி, இழுத்து வெளியே போட்டு அடி, அடியென்று நன்றாக அடித்திருப்பான்.
ஆகவே, நான் பெக்கிமீதோ அல்லது அவள் கண்ணீர்மீதோ, அவளுடைய  கசங்கிய தோற்றத்தின் மீதோ, அக்கறைகொள்ளவில்லை. அவள் மீண்டும் மீண்டும் என்னையே எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளை ஆறுதல்படுத்திக்கொண்டிருந்தவர்களையே நான் அதிசயித்தேன். அவர்கள் எவ்வளவு பணிவாக அவள் முன்னிலையில் கீழிறங்கி அவர்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள்!
அவர்கள் என்னதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்? குறிப்பாக எதுவுமில்லை. சரி, சரி என்றார்கள். எல்லாம் சரியாகிவிடும், பெக்கி, என்றார்கள். இப்போ, பெக்கி, எல்லாம் சரியாகிவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டது.
அப்படியொரு அன்பும் இரக்கமும். அப்படி ஆண்கள், அவ்வளவு அன்பாக இருப்பார்களா?
கார்ன்வால், அல்லது கென்ட், அல்லது ஹல், அல்லது ஸ்காட்லாந்தின் இயல்பான பேச்சுமுறைகளில்  பேசிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் எங்கள் நாட்டுக்கு, அவர்களில் பலருக்கும் மரணம் நேரக்கூடிய வெடிகுண்டு நடவடிக்கைகளில் பயிற்சியளிப்பதற்காக அழைத்துவரப்பெற்றவர்கள். ஆனால், அவர்கள் ஏதாவதொரு நல்வாழ்த்தினை, அந்தக் கணத்தின் மீதான வாழ்த்தையாவது தெரிவிக்காமல் அவர்களின் வாயைத்திறக்க முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்களென எனக்குப்பட்டது. அவர்களின் எதிர்காலம் பேரழிவோடு இணைக்கப்பட்டுள்ளதென்பது, அல்லது அவர்களின் சாதாரண வாழ்க்கை எந்த நேரத்திலும் சன்னல் வழியாகத் தூக்கியெறியப்பட்டு, தரையில் மோதிச் சின்னாபின்னமாகச் சிதறும்  அபாயமுள்ளதென எனக்குத் தோன்றவேயில்லை. நான் அவர்களுடைய நல்வாழ்த்தினை, அன்பின் வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிற மகிழ்வு எவ்வளவு அருமையான ஒன்றாக இருக்குமென்பதை மட்டுமே, பெக்கி, அதற்குத் தகுதியற்றவளெனினும் எப்படி வினோதமானதொரு அதிர்ஷ்டமுள்ளவளென்றும் நினைத்தேன்.
அதோடு, எவ்வளவு காலம், நான் அவர்களை நினைத்துக் கொண்டிருந்தேனென்று எனக்குத் தெரியாது. இருண்டு, குளிர்ந்த என் படுக்கையறையில் அவர்கள் என்னை அலைக்கழித்தார்கள். நான் அவர்களை என் பக்கம் திருப்புவதற்கு, அவர்களின் முகங்களை, அவர்களின் குரல்களைக் கொண்டுவருவதற்கு இயலும் – ஆனால், ஓ, அதற்கும் மேலாக அந்தக் குரல்கள், தேவையற்ற வேறெந்த மூன்றாம் நபருக்குமல்லாமல் என்னை நோக்கியே திரும்புகின்றன. அவர்களின் கைகள், மெலிந்து தோற்பட்ட என் தொடைகளை ஆசீர்வதிக்கையில், அந்தக் குரல்கள் நானும் காதலுக்குத் தகுதியானவளென உறுதிப்படுத்தின.
முற்றிலும் தீர்ந்துபோகாத  என்னுடைய சிற்றின்பக் கற்பனைகளில்  அவை இப்போதும் கலந்திருந்தபோதிலும், அவை மறைந்துவிட்டன. சில, அல்லது பல, மறைந்ததே நல்லது.
*****

மலைகள் இணைய இதழ், அக்டோபர் 17, 2013, இதழ் 36 இல் வெளியானது.





No comments:

Post a Comment