Saturday, 9 January 2016

இங்கிலாந்து சிறுகதை - நரகத்தில் ஹான்வெல்- Hanwell in Hell by Zadie Smith

நரகத்தில் ஹான்வெல் Hanwell in Hell

ஆங்கிலம் : ஜேடி ஸ்மித் Zadie Smith

தமிழில் ச.ஆறுமுகம் 

 

download (7)
(ஜேடீ ஸ்மித், இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் 25. 10. 1975ல் பிறந்தவர்.   பிரித்தானிய நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் சிறுகதைப் படைப்பாளர். இதுவரை வெள்ளைப் பற்கள், ஆட்டோகிராப் மனிதன், அழகைப்பற்றி, வடமேற்கு (NW) எனப் புகழ் பெற்ற நான்கு நாவல்கள் வெளியாகியுள்ளன. 2003ல் கிரந்தாவின் சிறந்த இருபது இளம் படைப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 2013 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். தற்போது நியூயார்க் பல்கலைக் கழகத்தில் 1.09.2010 முதல் ஆக்கபூர்வ படைப்புத் திட்டத்தின் கீழ் பேராசிரியராகப் பணிபுரிகிறார். புனைகதைகளுக்கான ஆரஞ்சு விருது இவருக்கு 2006ல் வழங்கப்பட்டுள்ளது. டைம் இதழின் சிறந்த நூறு ஆங்கில நாவல்கள் 1923 முதல் 2005 பட்டியலில் இவரது வெள்ளைப் பற்கள் நாவல் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது புனைவுகள் மல்ட்டிகல்ச்சுரலிசம் எனப்படும் பண்பாட்டிணைவு குறித்தும் மிகச்சிறந்த நன்னோக்கு நம்பிக்கை குறித்தும் பேசுகின்றன.  தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள HANWELL IN HELL என்ற சிறுகதை 27. 09. 2004 நியூயார்க்கர் இணைய இதழில் வெளியாகியுள்ளது. இக்கதை புகழ்பெற்ற The Broadview Anthology of British Literature: Volume 6: Joseph Black, Leonard Conolly, Kate Flint – 2006 – Literary Collections – தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.)

குடும்பம் மற்றும் குடும்பங்கள்.
1970 – 73க்கிடையில்  மத்திய பிரிஸ்டல் பகுதியில்  வசித்த திரு. ஹான்வெல் அவர்களை நினைவுகொள்கிற எவருடனும் கடிதத் தொடர்பு கொள்ள ஆவலாக இருக்கிறோம். அவர் குறித்த எந்தச்சிறு தகவலும், ஒட்டுத்துண்டுகளைக் கொண்டு அவரது முழுப்படத்தையும் ஒன்று சேர்க்க முனையும் அவரது மகளால், மிகவும் நன்றியுடன் பெற்றுக் கொள்ளப்படும். தயவுசெய்து அஞ்சல்பெட்டி எண். 187க்கு எழுதவும்.
*****
நான், முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பாக  பிரிஸ்டலில் உங்கள் தந்தையுடன் ஒரே ஒரு இரவு மட்டும்  கழித்தேன். அவரும் என்னைப்போலவே அப்போது நல்வாய்ப்பு குறைகிற ஒரு கால கட்டத்தில் இருந்தார். இருவருமே நற்பேற்றின் நாடகீய எதிர்ப்பாய்ச்சலில் அவதிப்பட்டிருந்தோம். இருவருக்குமே பொதுவாயிருந்த அந்தத் தோல்வியை – ஆண்களுக்கேயான உள்ளுணர்வில் வெகு அபூர்வமாகக் கிடைக்கிற ஒரு உதாரணம் -  உடனேயே புரிந்துகொண்டோம். இருவருமே அடுத்தவருக்கு நேர்ந்த பேரழிவின் மையத்தை மோப்பம் பிடித்துவிட்டோம். என்னுடைய அவப்பேறாக, குடியிருந்த வீட்டையும் என் வாழ்வாதாரத்தையும் இழந்திருந்தேன். அந்த வருடத்தின் இளவேனிற் காலத்தில், ஈரங்கொண்ட இடமெல்லாம் பாசி படர்ந்திருந்த ஒரு அடுக்கக அடித்தளத்தில் நான் வாழநேர்ந்ததைப் புரிந்துகொள்ளவியலாமல் திகைப்பும் தடுமாற்றமும், கொடுமைக்குள்ளான அவமானமுமாகக் கழித்தேன். கடை முகப்பில் பணம் பெறும் ஒரு நேர்மையற்ற வணிகக் கூட்டாளி என்னுடைய கவனக்குறைவான கணக்குவழக்குகளைக் கொண்டே என்னுடைய வணிகத்திலிருந்தும் (பிரிஸ்டலில் அருந்தகம் இல்லாத மது விற்பனையகங்களின் ஒரு சிறு குழுமம்.) என்னை முழுதுமாக விரட்டி, வாழ்க்கைப்பாட்டுக்கு ஒரு சாதாரண விற்பனையாளனாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிட்டான். நான், புதிய அமெரிக்கக் குளிர், உறைபனிப் பெட்டிகளின் விவரப்பட்டியைத் தூக்கிக்கொண்டு வீடுவீடாக அலைந்தேன். அது ஒரு சலிப்பான பணி; அதுவும் பெண்களிடம் மானங்கெட ஏகப்பட்ட நேரத்தை- அப்படித்தான் நான் அப்போது நினைத்தேன்- செலவிட வேண்டியிருந்தது. அருந்தகம் இல்லாத மது விற்பனையகங்களில் என் பணியாளர்கள் எல்லோரையும் ஆண்களாகத்தான் நியமித்திருந்தேன். மேலும், உணர்வுபூர்வமாக ஆண்கள் மிகவும் எளிதானவர்கள் என்ற உண்மையை நான் எப்போதுமே மதிக்கிறவன். இந்தப் புதிய வேலை, என்னுடைய வீட்டுக்கு, குழந்தைப்பருவக்காட்சிகளுக்கு நான் திரும்பிக் கொண்டிருப்பதான உணர்வை ஏற்படுத்தியது. தாய்மைப்பண்புள்ள பெண்கள் அஞ்சுந்தன்மையைத் துறந்து, எனக்கு அளிக்கும் குவளை குவளையான தேநீரை அருந்திக்கொண்டு அடுக்களைகளுக்குள்ளேயே எப்போதும் சுற்றிச்சுற்றி வருவதாகத் தோன்றியது. ஹான்வெல்லின் நிலைமை சற்று மாறானதுதான்: அவர் வீட்டுச் சூழலை மதித்ததோடு, அந்த இழப்பிற்காகத் துயருற்றுப் புலம்பிக்கொண்டிருந்தார். அதிலும் அவர் அக்கறையோடு பேணிப் பாதுகாத்த மனைவி, மகள்கள், குடும்பம், வீடு எல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தார். எதனால் நீங்களும் உங்கள் சகோதரிகளும் லண்டனிலேயே விடப்பட்டிருந்தீர்களென எனக்குத் தெரியுமாவென உங்கள் கடிதத்தில் என்னைக் கேட்டிருந்தீர்களே – அது எனக்குத் தெரியாது, ஆனால், அது அவரது விருப்பத்திற்கு மாறானதாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஹான்வெல் மேற்கொண்ட வாழ்க்கையை வேறு யாராக இருந்தாலும் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.

நான் அவரைச் சந்தித்தபோது, பார்க் தெருவிலுள்ள குன்றின் மேல் பாதிதூரத்தில் அமைந்துள்ள பேர்ரி ஃப்ராங்ஸினுடைய பழைய, முதல் உணவுவிடுதியில் எச்சில் தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்தார். பேர்ரி ஃப்ராங்க்ஸ் ஒரு கையில் சிவப்புக் கோப்பையும் மறு கையில் அவருடைய சொந்த சமையல் புத்தகமுமாக ஒன்றும் பிபிசியில் பிறந்துவிடவில்லையென மறுத்துவிடுவது இப்போது எளிதுதான். அது, என்னையும் ஹான்வெல்லையும் போலப்  பிற்காலத்தில் நிலவைக்கூடச் சுருக்குக் கயிற்றில் மாட்டி இழுத்து வந்துவிடுவது எளிதானதென இங்கிலாந்தில் நினைத்த ஒரு காலம். ஆனால், அதற்கும் பத்து வருடங்களுக்கு முன்பாகவே, நாங்கள் அதன் வெற்றிக்காகத் தக்கையின் கீழ்க்கல்லாகச் சமாளித்து நேர்நிறுத்தியிருந்தோம். 1970ல், பேர்ரி ஃப்ராங்க்ஸ், பழம்பெருமை தோன்றப் பெயரிடப்பட்ட, நடுவகைப்பட்ட `கான்டினென்டல் பிரிஸ்டோ` வின் உரிமையாளர் மட்டும்தான். அங்கே காசோலெட் சாம்பல் நிறத்திலும் வியால் மென்று சாப்பிடுவதாகவும் இருந்தது. உணவுக்காக அல்ல அங்கே செல்வது, அது தனித்த ஒரு  உணர்வு பூர்வமான விஷயம் : அருமையான சூழல் உள்ள ஒரு இடம். ஃப்ராங்க்ஸ் அப்போதும் ஒரு கதாநாயகக் குடிகாரராகத்தான் இருந்தார். அவர், எங்கும், தடையின்றிச் சுற்றிச்சுழல்கின்ற நிச்சயமற்ற தன்மையை அந்த இடத்தின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டுவந்திருந்தார். அந்த ஆடம்பரப் பாவனை இப்போது நகைப்புக்குரியதென்றாலும் – பனைநார்ப்பை அணைத்த சியான்டி புட்டிகள், சிவப்பு-வெள்ளைக் கட்டமிட்ட மேஜைவிரிப்புகள்- அதன் வாடிக்கையாளர் கூட்டம் வேறெங்கும் இல்லாதது; மாபெரும் பிரமுகர்கள், நல்லவர்கள், அவ்வளவாக நல்லவர் அல்லாதவர்கள் எல்லாம் கலந்து மகிழ்ச்சியானதாக இருந்தது.

இரவு ஒன்பது மணிக்குப்  பிறகு ஃப்ராங்க்ஸ் ஒரு  பிரபலமான இடம். இது போன்ற ஒரு இடத்தின் உரிமையாளர் `கடை திறந்திருக்கிறது` என்ற அடையாள விளக்கை எரியச்செய்துவிட்டு, கல்லாவில் விழுகின்ற பணத்தைக் கவனித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்று என்னைப்போலவே எல்லோரும் நினைப்பது இயற்கை என்றாலும், அது அப்படியாக இருக்கவில்லை. வருகின்ற லாபத்தையெல்லாம் ஃப்ராங்க்ஸ் அப்படியே குடித்துத் தீர்த்துக்கொண்டிருந்தார். அவர் உள்ளூர்ப் பெரிய மனிதர்களிடம் அளவுக்கதிகமாகக் கடன் வாங்கியிருந்தார்; அதனாலேயே விடுதியின் பின்னறை முழுவதையும் அவர்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார். அந்த அறையில் நீங்கள் ஒரு மேஜையை ஒருபோதும் பெற்றுவிடமுடியாது; நீங்கள் இரண்டு சுவர்களுக்கு  மத்தியில் வாதுமை மர அருங்கலைப்பொருட்களான தேவாலயச் சாய்வுப் பலகைகள் போல வரிசையாகக் கிடந்த சாய்வுப்பலகைகளில் அமர்ந்து, மேஜைக்குப் பின் மேஜையாக சட்டைகளைக் கழற்றித் தோளில் போட்ட அடியாட்கள், மடிகளில் பெண்களை அமர்த்திக் கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் அங்கே எதற்காகவும் ஒரு காசு கூடக் கொடுத்து நான் பார்த்ததில்லை. இதுபோல வாராமல் நிலுவை நிற்கும் பணம், ஆறாயிரம் பவுண்டுகள். அந்தக்காலத்தில் அது ஒரு வானளாவிய தொகைதான் என்பதை ஒருமுறை பேர்ரி ஃப்ராங்க்ஸ் என்னிடம் ஒப்புக்கொண்டார். அந்தப் பணத்தைக் கொண்டு நகரத்தில் ஒரு நல்ல அடுக்ககக் குடியிருப்பினை நான் வாங்க முடியும். அந்த அடியாட்களெல்லாம் பனிக்குழைம வணிகத்திலிருந்த இரண்டு இத்தாலியக் குடும்பத்தின் வழித் தோன்றல்கள்தாம் என்றாலும் அவர்கள் கொண்டிருந்த இத்தாலிய இரத்தம் முழுவதுமாக எய்வொன் தண்ணீரில் நீர்த்துப்போனது. மேற்கு நாட்டு மக்கள் முகச்சாடை எல்லா ஐரோப்பியர்களையும் போலத்தான். இவர்களும் பார்வையிலும் குரலிலும் எங்களிலிருந்து, அல்லது மற்றவர்களிலிருந்து எதுவும் வேறுபடவில்லை. அவர்களின் ஒரேநிறக் காற்சட்டை, மேற்சட்டைகள் இறுக்கமாக இருந்தன. அவ்வளவுதான். அதோடு அவர்கள் அழகு குறித்து அதீத மெல்லுணர்வு கொண்டவர்களாக இருந்தனர் – சில வேளைகளில் அழகிய உணவு, அழகிய இசை, அழகிய பெண்கள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் துரிதப் பாதைகளை விரைவில் சென்றடைய அவர்களாகவே தேர்ந்துகொண்ட குறுக்கு வழிகளாகவே அவர்களுடைய குற்றச்செயல்கள் தோன்றின. ஃப்ராங்க்ஸை, ஜாஸ் இசைகேட்குமிடம் போன்ற ஒன்றாக மாற்ற வேண்டுமென்பது அவர்களின் எண்ணம். அதற்காகவே பின்னறையில் ஒரு தற்காலிக மேடையில் ஐந்து வெள்ளை பிரிஸ்டாலியர்கள் கொண்ட பாண்டு வாத்தியக்குழு ஒன்று லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் வேகமிக்க ஐவர் குழுவினை முழுமையாகவும் ஒவ்வொரு அசைவிலும் அதன் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. நான் அந்த பாண்டு இசையை அதிலும் குறிப்பாக, அதிகக் கிளர்ச்சியாகவோ அல்லது சிறிதாக விடவேண்டிய விஷயங்களைக்கூட அழுத்தமாகவோ இல்லாமல் எப்போதுமே மிகச்சரியாக இசைக்கும் அவர்களின் துல்லியமான விரல்களை அதிகமும் விரும்பினேன். நீங்கள் இந்த உலகில் காணாமற் போனதாக உணரும்போது, பரிச்சயமானவற்றின் மிகச்சரியான மாதிரிப் பிம்பங்களுக்குள்ளிருந்து பொறுக்கியெடுக்கப்படுகிற ஒன்றாக இருப்பதில் சிறிது மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது .

ஹான்வெல்லைச் சந்தித்த இரவில், நான் அப்போது பழகிக்கொண்டிருந்த ஒரு பெண்ணோடு மிகவும் தாமதமாகப் போயிருந்தேன். அவள் பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால், அவளுடைய மார்பகத்தின் புறக்கோட்டுரு மறக்கவில்லை. அது மிகப்பெரியது; மிகக் கவனமாகப் பொதிந்து, முட்டுக்கொடுக்கப்பட்டதாக,   யாருக்குக் கொடுப்பதென முடிவெடுக்காமலேயே,  அலமாரியில் வைத்திருக்கும் பரிசுப்பொருள் போல இருந்தது. அவள் அப்போது எனக்கு முப்பது வயது இளையவள்; அப்போதும் கத்தோலிக்கத்தை மிகக் கச்சிதமாகக் கைக்கொண்டிருந்த அவள் ஒரு நீர்த்துப்போன இத்தாலியப் பெண். அந்த மாலையின் பெரும்பகுதியான ஐந்து மணிநேரத்தை என்னுடைய குடியிருப்பில், எனது காரில், திரையரங்கத்தில், ஒரு பூங்காவில் என அவளோடு கழித்ததில் அவளுக்குள் அவளது கரமேகூடப் படாத இடங்களில் என் கைகளைச் செலுத்தத் தொடர்ச்சியாக முயன்றிருந்தேன். நாங்கள் ஃப்ராங்ஸை அடைந்த நேரத்தில் இருவருமே முழுமையாகக் களைத்து எரிச்சலிலிருந்தோம். தளக் கண்காணிப்பாளரின் `முழுவதுமாக நிறைந்துவிட்டது` என்ற வழக்கமான தற்பெருமை கொழிக்கும் விளக்கம் என்னைத் திடீரெனச் சீறவைத்தது. நான், அவருடன் அமளி மாதிரியான ஒன்றைத் தொடங்கினேன். அதற்கான அதிகாரம் எனக்கில்லாத போதும் அதற்கான உரிமையும் எனக்கில்லையென்றாலும், அப்படியான ஒன்றைத் தொடங்கினேன். அவரோ எப்போதும்போல உள்ளார்ந்த ஆர்வத்தோடு தலையை ஆட்டிக்கொண்டே அவரது பரிமாறும் பணியாளர்களை இந்தமேஜைக்கு, அந்த மேஜைக்கு என கைகாட்டிக் கொண்டிருந்தார்.

அந்தப் பின்னறை  என்னவோ ஒரு குளியலறை போல, `ஆனால் நிறைந்து இருக்கிறதே.` எனப் பழைய வெறுக்கத்தக்க முறையிலேயே அவர் மீண்டும் கூறினார்; நான், என்னையே முட்டாளாக்கிக்கொள்வதை நிறுத்தட்டுமென அவர் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் நாங்கள் ஓடியன் திரையரங்கில் பார்த்துவிட்டு வந்திருந்த வகையிலான இரண்டாந்தர ஹாலிவுட் திரைப்படங்களில் ஆண்மையைக் காட்டுவதாகச் சொல்லிக் கேலியாகிப்போன காட்சிகளில் பொதுவாகிப் போயிருந்த ஒன்றைப்போல, அதே மாதிரியில், அந்தப் பெண் என்னுடைய மேற்கைத் திண்தசையை அவளது இருகைகளாலும் பிடித்துக்கொண்டு நின்றது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், அதற்குப் பொருத்தமான மனிதனாக நான் இல்லையே! தேவாலயச் சாய்வுப் பலகைகளில் தங்கள் கோப்பைகளைத் தங்கள் மடிகளிலேயே வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த  இணைகளுக்கருகில் உட்காருமாறுதான் மிகவும் பணிவாக, வழிகாட்டப்பட்டோம். ஆனால், கடைசி நிமிடத்தில், நான் நின்றிருந்த இடத்திற்கு நேராகப் பின்னால்  மேஜையில் ஒரு குண்டு மனிதனும் அவனது நண்பனும் கிளம்புவதற்காக எழவும்,  காலியான இருக்கையில் அந்தப் பெண்ணைச் சட்டென விரைந்து தள்ளிவிட்டு, அருகிலிருந்த மற்றொன்றில் நான் இடம்பிடித்தேன். விளைவுகளுக்கு அவர் பொறுப்பல்லவெனத் தெரிவிப்பதுபோல், தளக்கண்காணிப்பாளர் தோள்களைக் குலுக்கிக்கொண்டார். எங்கள் இருவருக்குமே அவ்வளவு பசியில்லாவிட்டாலும், அப்போதே மணி இரவு பதினொன்றாகியிருந்துங்கூட நான் இரண்டு ஓஸோ புகோஸ் கொண்டுவரச் சொன்னேன். ஃப்ராங்ஸின் அருமையான இருக்கைகளில் அமர்ந்து அங்கே கிடைக்கின்ற அனைத்து வகை அனுகூலங்களையும் எவ்வளவு அதிகமாகப்பெற முடியுமோ அவ்வளவு அதிகமாகப் பெறுவதென்ற வக்கிர உணர்வோடுதான் அப்படித் தீர்மானித்தேன். இங்கே அமர்ந்திருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது! பாண்டு இசை அதிகச் சத்தமாக இருந்தது. நாங்கள் இருவரும் மேடையைப் பார்த்த மாதிரி -   இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்ப்பதிலிருந்தும் தப்பிக்கின்ற ஒரு நல்ல அம்சம் – இருக்கைகளைத் திருப்பிக்கொண்டோம். எக்காளக் குழலிசைக்கலைஞர் எழுந்து நின்று தனியாவர்த்தனம் செய்யப்  பின்னர் கிளாரினெட் கலைஞரும் அப்படியே தொடர்ந்தார்; வாய்ப்பாட்டுக்காரர் சரியான அவரது நொடியில் தொடர்வதற்காக நடுநாயகமாக முன்னுக்குச் சாய்ந்து, அவரது மிகப்பெரிய இசைக்கருவியை மகிழ்ச்சியோடு முறுக்கேற்றிக்கொண்டிருந்தார். பியானோ கலைஞர், அவரது முறை வந்தபோது அவரது இருக்கையிலிருந்தும் சிறிது எழுந்தார். இருக்கைநிலையை மாற்றிக்கொள்ள இயலாத முரசுக்கலைஞர், அவரது முரசுகளுக்குள்ளாகவே தலையை இலேசாகக் குனிந்து, முழங்கைகளை உயர்த்த அந்த நிமிடத்தில் இதர கருவிகள் அமைதியாகின. எங்கள் உணவு நினைவுக்கு வருமுன்னர் தனியாவர்த்தனம் மூன்று நான்கு சுற்றுகள் ஓடிவிட்டதையும் இதர மேஜைகளிலும் எரிச்சலான முணுமுணுப்புகள் எழுந்ததையும் கவனித்தேன். ப்ராங்க்ஸில் உணவு  தாமதமாவது வழக்கமானதுதானென்றாலும், இது முழுக்க முழுக்க ஓய்ந்து போனதாக இருந்தது. அந்த அறை முழுவதும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.

திடீரென, மணல் நிற முடியும் வழுக்கையுமாக, மூக்கின் முனையில் ஓய்வூதியரின் கதியற்ற கன்றிச்சிவந்த குமிழுமாகத் தோற்றமளித்த ஒருவன் இரு தட்டுகளை சத்தம் கேட்குமாறு வேகத்தோடு எங்கள் முன் தள்ளினான். இரு தட்டுகளிலும் மூன்று மூன்று பிரெஞ்சு க்ரெப்ஸ், பாலேட்டுநிற இறாலும் காளானும் சேர்ந்த கலவை நிரப்பிப் பொதிந்து முக்கோண வடிவிலான அமைப்பில் வீற்றிருந்தன. அவன் பரிமாறுபவனைப்போலவோ, சமையற்காரரைப்போலவோ இல்லாமல், பாத்திரங் கழுவுபவனைப்போன்று அழுக்குப் படிந்த சட்டைக்கைகளை மேலாக மடித்துத் தூக்கியணிந்திருந்தான். அவனது கள்ளங்கபடற்ற முகத்தின் ஒவ்வொரு இளஞ்சிவப்புத் துவாரத்திலும் வியர்வை துளிர்த்திருந்தது. அவன் எங்களைப் பார்த்து நம்பிக்கையோடு புன்முறுவலித்தான். நாங்கள் ஆட்சேபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் முன்பாகவே, யாரும் கேட்காத இதே மாதிரியான க்ரெப்ஸ்களோடு அடுத்த மேஜைக்குக் கடந்து போனான். மறுப்பும் எரிச்சலுமான சப்தம் அதன் உச்சிக்குச் சென்ற ஒரு நிமிடம், அதுவே பெரும் அமளியாக மாறிவிடுமோவென மிரட்டியது. ஆனால், அநேக வாடிக்கையாளர்களும் என்னைப்போலவே அதிகம் குடித்து, மிகவும் சோர்ந்து போயிருந்தனர். அதுவும், மாதிரிக்கு ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டபோது, அது மிகமிக நல்லதான சுவையோடிருக்கவே, நாங்கள் அமைதியாகிவிட்டோம். இந்த க்ரெப்ஸ், பேர்ரி ஃப்ராங்க்ஸின் உணவு வகைகளைப் போல போலியான மினுமினுப்பு பாவனைகளோ, அதிகமான அழகுபடுத்தல்களோ இல்லாமலிருந்தன. கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒன்றை உருட்டித் தட்டிச் செய்யவேண்டியிருந்தால், உங்கள் பாரீஸ் பாட்டி இந்த க்ரெப்ஸ்களைத்தான் சமைத்திருப்பாள். அன்றைய மாலை  வரையிலும் எத்தனையோ இரவுகளை, ஃப்ராங்க்ஸை விடவும் மிகமிக நல்லதான உணவுவிடுதிகளில் கழித்திருந்தேனென்றாலும் மிக அதிகமாகச் சுவைத்துச் சாப்பிட்டதான எந்த ஒரு உணவைப்பற்றியும் ஞாபகப்படுத்திக்  குறிப்பிட்டுச் சொல்வதற்கு இல்லை. நடு இரவுக்குப் பின் அந்த மனிதன் மீண்டும் எங்கள் மேஜை அருகாகக் கடந்து செல்லும்போது நான் அவனை இடைமறித்தேன்.

‘’சமையலறையில் என்ன குளறுபடி?’’

அவன் என்னை எச்சரிக்கையோடு பார்த்தான். ஆனால், எதுவுமே சொல்லவில்லை. அவன் முகத்திலிருந்த எளிமைத்தன்மை முழுதுமாக வழிந்தோடிவிட்டதோவென வியந்தேன்; அப்படியொரு வஞ்சகமற்ற அவனது முகத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் முதல் எண்ணம் அவன்  உலகியலறிவு ஏதுமில்லாதவனோ என்பதுதான்.

‘’உன் பெயர் என்ன?’’

‘’ஹான்வெல், அய்யா.’’

‘’நான் க்ளைவ், க்ளைவ் பிளாக். சமையல்காரரின் கையைப் பிடித்துக் குலுக்க விரும்புகிறேன்.’’

அவன் என் கைகளைப்  பார்த்தான்; ஆனால் தொடவில்லை. அவன் என்னை அய்யா என அழைத்தது ஒரு புதுமையாக இருந்தது. ஃப்ராங்க்ஸ், அதுமாதிரியான உயர் பண்பாடுகளெல்லாம் எதிர்பார்க்கப்படுகின்ற விடுதியல்ல. அவனை இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோதுதான் ஹான்வெல் மிக இளமையிலேயே அளவுக்கதிகமான வழுக்கையோடு காணப்பட்டதை உணர்ந்தேன். அவன் நாற்பதுகளின் முற்பகுதியிலேயே இருந்தான். நான் அவனை விடவும் பத்து வருடங்கள் தாம் மூத்தவன்.

’’நீதான் இதைச்  செய்தாயா?’’ நான் மீண்டும் கேட்டேன்.

‘’ அது அற்புதச் சுவை.’’ என அவள் அளவுகடந்து புகழ்ந்தாள். அப்போது, அவளுடைய கட்டைகுட்டையான விரல்களில் ஒன்றை நக்கிக்கொண்டுகூட இருந்திருக்கலாம்.

ஹான்வெல் உதட்டைக் கடித்தான். பொய்சொல்லத் தயாராவதுபோல் தோன்றியது; ஆனால், பின்னால் அப்படிச் சொல்லாமலிருப்பதே நல்லதென நினைத்திருக்க வேண்டும்.

‘’ நல்லது. ஆம். சரியாக இருந்தனவா?’’

‘’ அவை சரியானதற்கும்  மேலானவை. இங்கே நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த ஒன்று.’’

‘’ அதெல்லாம் உண்மையில்லையென்று  எனக்கு நிச்சயமாகத் தெரியும், அய்யா.’’ ‘’

இது முழுக்க முழுக்க  உண்மை. அப்புறம், ஃப்ராங்க்ஸுக்கு என்ன சிக்கல்? மீண்டும் நெருக்கடியிலிருக்கிறாரா?’’

‘’இந்தப் பருவநிலை கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை. நல்ல காய்ச்சல்,’’ ஹான்வெல், வேறெங்கோ தூரமாகப் பார்த்துக்கொண்டு சொன்னார். நான் புன்முறுவலித்தேன்.

‘’ ஃப்ராங்க்ஸ்  எத்தனை முறைதான் நல்ல காய்ச்சலை  வரவழைத்துக்கொள்வார், இது  மிகவும் வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஐந்து வயது குழந்தை மாதிரி.’’ நான் ஒரு சுருட்டை எடுத்து – நான் விட்டுவிட மறுக்கும் ஒரு ஆடம்பரச் சுகானுபவம் – அவருக்கு நீட்டினேன். அவர் மறுத்தார். ‘’ இது மாதிரி கடைசி நிமிடத்தில் சமாளிக்கும் நீங்கள் கிடைத்திருப்பது, அவருக்கு அதிர்ஷ்டம் தான்.’’

‘’நீங்கள் அதை ருசித்துச் சாப்பிட்டது, எனக்கு மகிழ்ச்சி, அய்யா.’’ எனச் செறிவாகச்  சொல்லிவிட்டு, ஹான்வெல் அங்கிருந்து  நகர்வதற்குத் திரும்பினார். நான் அவரைப் போகவிடவில்லை. அவர் குறித்த ஏதோ ஒன்று என்னை வலிந்து ஈர்த்தது. அவர் இதைவிட ஒரு நல்ல மேல்நிலையிலிருந்து வந்திருக்கவேண்டுமென்றும், ஆனால், அந்த வீழ்ச்சி அவரைச் சோர்வுகொள்ளச் செய்யவில்லை அல்லது என்னைப் போல அவரைக் கசப்படையச் செய்யவில்லையென்றும் உணர்ந்தேன்.

’’ இப்படிச் சமைப்பதற்கு  எங்கே கற்றுக்கொண்டீர்கள்?’’

ஹான்வெல், அடுத்து யார், என்ன மாதிரி கேட்கப்போகிறார்களோ என்ற பயத்துடன்  நோக்கினார். அங்கே அவர், மிகத் தாழ்ந்த வேலை செய்துகொண்டிருக்கிறாரென்பதை நான் ஏற்கெனவே யூகித்திருந்தேன். நான் தரையைப் பார்த்த ஒரே கணத்தில் அதுவும் உறுதிப்பட்டது. அவரது காலணிகளின் முன்பகுதி நனைந்து, ஈரத்தில் ஊறிப்போயிருந்தது.

‘’ என்னங்க, அய்யா?’’

‘’ என்னை அய்யா  என அழைக்காதீர்கள். நான் தான் க்ளைவ் என ஏற்கெனவே சொன்னேனே, சமையல், அதை எங்கே கற்றீர்கள்?’’

‘’ நல்லது, நீங்கள்  இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமெனக் கற்றுக் கொள்வதில்லையா?’’ எனக் கேட்ட அவரது முகம் சிவந்து போயிருந்தது. ‘’ மேலும் நான், `44ல் ஃபிரான்சிலிருந்தேன். அது கொஞ்சம் உதவியது என நினைக்கிறேன்.’’

‘’ அங்கிருந்தீர்களல்லவா? அது போலத்தான் நானும். அங்கே நீங்கள் அரைக்காற் சட்டையில்லாமல் மிக அரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.’’
நாங்கள் பதவி, ரெஜிமெண்ட், இடங்கள், தேதிகள்  எல்லாவற்றையும் பரிமாறிக்  கொண்டோம். அவர் சரளமாகப் பேசினாரென்றாலும் அதிகமாகச் சொல்லிவிட முன்வரவில்லை. அவர் சிப்பாய்கள் பிரிவில் முதல் பிரிவு லெப்டினென்ட் ஆக இருந்திருக்கிறார். அவரை உட்காரச்சொன்னேன், ஆனால், மீண்டும் மறுத்துவிட்டார்.
‘’ வாருங்கள், கொஞ்சம் மது சாப்பிடுங்கள் – அது ஒன்றும் உங்களைச் சாகடித்துவிடாது. ஃப்ராங்க்ஸிடம் நான் சொல்லிக்கொள்கிறேன், இப்போதும் நினைவோடிருந்தால். அவர் ஒரு உதவிக்காக எனக்குக் கடன்பட்டிருக்கிறார். அது சரி, அப்புறம் உங்கள்  க்ரெப்ஸ் எதை ஞாபகப்படுத்தியது தெரியுமா? பிரெஞ்சு இல்லம் – லண்டன் சோஹோவில். அவர்கள் முதற்பண்டமாகப் பரிமாற  இதுமாதிரி ஒன்றும்      வைத்திருக்கிறார்கள்.’’
முதல் முறையாக  ஹான்வெல் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார், அதுவும் சிறிது மட்டுமே வாய் திறந்து ஒரு கூச்ச நடவடிக்கையாக இருந்தது.
‘’ஆமாம், நான் அதை, அங்கே சாப்பிட்டிருக்கிறேன் – நான் சோஹோவிலும் வேலை பார்த்திருக்கிறேன். டீன் தெரு.’’
‘’ஆனால், இந்த நரகக்குழியில் கடவுளின் பெயரால் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’’
ஹான்வெல்லின்  முகம் சட்டென்று மூடிக்கொண்டது. அவரது மூக்கின் குமிழ் ஒளி மங்கி, இமைகள் தாழ்ந்தன.
‘’ வேலை நிறையக்  கிடக்கிறது. நான் போகவேண்டும்.’’
‘’ நான் சொல்வதைக்  கேட்டு, உட்காருங்கள், சும்மா உட்காருங்கள், ஒரு பத்தே  நிமிடம் – மிக மிக நேர்மையாக, நீங்கள் சொல்வது போல் போய்விடலாம்.’’
என்னுடைய  பெண் போலியாகச் சிரித்து, தன்னைத் தானே மன்னித்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றாள். ஹான்வெல் உட்கார்ந்தார் நாங்கள் பிரான்சைப்பற்றிச் சிறிது, அதிலும் குறிப்பாகப் பாரீஸ் பற்றிப் பேசினோம். ( ‘’பாரீஸில்தான் அது என்னைப் பளபளப்பாக்கியது’’ என்ற ஒரு வேடிக்கையான தொடரை அவர் பயன்படுத்தியது எனக்கு நல்லத் தெளிவாக நினைவிருக்கிறது.) நாங்கள் இருவருமே கீழ்நாட்டு ஆங்கிலேயர்கள், அவர் இருண்ட இப்ஸ்விச், நான் இருண்ட நார்விச் – மொத்தத்தில் அப்போது நாங்கள் இருந்த நாடகச் சூழலைக் காட்டிலும் அமைதியான பகுதி. நாங்கள் இருவரும் நார்மண்டிக்குப் புறப்படும் முன் வெவ்வேறு நேரங்களில் கடற்கரையில் இறங்கியிருந்தாலும் கடுங்குளிரான ஃபெலிக்ஸ்டோவில் பயிற்சிக்காலத்தை முடித்திருந்தோம். நான் போர்க்காலக் கதைகளை வெறுப்பவனல்ல; அதை நோக்கிக் கொஞ்சம் அதிகமாக நான் அவரை இழுத்தாலும் அவர் அசைந்துகொடுக்கவில்லை.
‘’ வேறுவேறான வாழ்க்கை,’’ என ஆர்வமற்றுச் சொன்ன அவர், கடைசியில் என்னிடமிருந்து ஒரு சுருட்டைப் பெற்றுக்கொண்டார். என்னதான் துளைத்தாலும் அவரிடமிருந்து நான் விரும்பியதை –அவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவரெனச் சரியாகப் பெறமுடியவில்லை.  அவர் ஒரு கறிக்கடைக்காரரின் மகனாக அல்லது ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாக, ஏன், ஒரு ஆட்சிப் பணி அதிகாரியின் மகனாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு தலைப்பின் கீழும் உரையாடப்போதுமான அளவுக்கு, அதிலும், அவருக்கு மிகச்சிறிய அளவில் தொந்தரவிருந்தால்கூட, திசைமாற்றும் அளவுக்கு  அவருக்கு விஷயங்கள் தெரிந்திருந்தது. அவர் எப்படியான மனிதரென்றால், நீங்கள் குறிப்பிடுகின்ற எந்த ஒரு புத்தகத்தைப் பற்றியும், அவர் அந்தப் புத்தகத்தைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்காவிட்டாலும், அது குறித்து இரண்டு விஷயங்களையாவது தெரிந்திருப்பார். பரிமாறுபவர் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அவரை மீட்டு அழைத்துச் செல்லப் பலமுறை முயன்றபோதும், நான் அவர்களைக் கையசைத்தே அனுப்பிவிட்டேன். அந்த இடத்தின் உண்மையான அதிகாரமுள்ள ஃப்ராங்க்ஸை யாராலும் என் முன் கொண்டுவந்து நிறுத்தமுடியவில்லை. விடுதியை மூடுவதற்கு அரை மணி நேரமே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர், ஹான்வெல் நிதானமாகி, ஜெர்மன் வேசியர் இல்லம் பற்றி ஒரு அசிங்கமான கதையைக் கூறினார். அவர் பேசும்போது ஒரு அரைப்புன்னகையை அணிந்துகொண்டும், ஜெர்மன் வேசிகள் என்ன உடை அணிவார்கள், அவர்களது படுக்கையறை எந்தமாதிரித் தோற்றத்திலிருந்தன, கால்நீட்டுகிற ஆடம்பரச் சொகுசுமெத்தையில் படுத்துக் கிடப்பார்களா என்றெல்லாம், அதுவும் அந்தச் சொகுசுமெத்தை என்ற சொல்லை, யாரும் கற்பனை செய்ய முடியாதபடி வினோதமாக உச்சரித்த என்னுடைய அந்தப் பெண்ணின் கத்தோலிக்கமற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டுமிருந்தார். ஹான்வெல் அந்தப் பெண்ணிடம் என்னைவிடவும் இணக்கமாக, வெற்றிகரமாகப் பேசிய விஷயம் என்னை எரிச்சலடையச்செய்தாலும், நான் எதனாலோ அந்த எரிச்சலை அவர் மீதல்லாமல் அந்தப் பெண்ணோடு பொருத்திக் கண்டேன். நான் உரையாடலை ஆண்கள் விஷயங்களுக்கு மட்டுமாக – எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கார்கள், பிரிஸ்டல் நாய்ப் பாதைகள் மற்றும் வேறு விதமாகக் கொண்டு செலுத்தினேன். அந்தப் பெண் சலிப்பில் மூழ்கிப் பிணக்கம் கொண்டுக் கடைசியில் நான் இல்லாமலேயே அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் செல்வதை  நாங்கள் இருவரும் பார்த்துக்கொண்டிருந்த  போது, ஹான்வெல்,   ‘’ ஆள், நல்ல அழகுதான், உலகத்தில் இது போல் அழகான பெண்கள் இருப்பது, என்னை நல்லபடியாக நினைக்கவைக்கிறது.’’ என்றார்.
‘’அப்படியா, உண்மையாகவா சொல்கிறீர்கள். இது என்னை மோசமாக உணரும்படியாகச் செய்கிறது.’’
‘’ அது ஒரு  முன் அறிகுறி ….’’ ஹான்வெல் எதையோ சொல்லத்தொடங்கினார், ஆனால், மேற்கொண்டு ஏதும்  சொல்லவில்லை.
‘’ முன்னறிகுறி என எதைச் சொல்கிறீர்கள்?’’
‘’ அது ஒரு  கருத்துவசப்பட்ட எண்ணப்போக்கு ……முட்டாள்தனமான போக்கு.’’
‘’ இல்லை, இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள் – நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.’’
‘’ உலகம்  நல்லதெனச் சொல்லும் ஒரு  அறிகுறி. அதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு அழகான பெண்கள் உதவுகிறார்கள்.’’
இதைக் கேட்டதும்  நான் சத்தமாகச் சிரித்துவிட்டேன்.
‘’ உங்களுக்கு அவர்கள் கிடைக்க முடியாதபோதுங்  கூடவா?’’
‘’ குறிப்பாக  அப்போதுந்தான்.’’
ரயில் வண்டி  பிரேக் போட்டு நின்றது போன்ற  சப்தத்துடன் எக்காளக் குழல்  ஒலிக்க,  பயங்கரமான வேகத்தோடு, ஏதோ ஒன்றை இசைத்து முடித்ததோடு பாண்டு இசை ஒரு படபடத்த முடிவுக்கு வந்தது. ஹான்வெல் சுருட்டின் ஈரமான அடிக்கட்டையை ஒரு சிறிய சீனத்தட்டில் அழுத்தி வட்ட வட்டமாக வளையமிட்டுக்கொண்டிருந்தார்
‘’ நீங்கள்  ஒரு வித்தியாசமான மனிதர், ஹான்வெல்.’’ என்றேன், அமைதியினூடாக.
‘’ நான் ஒரு சாதாரண நன்னம்பிக்கையாளன், அவ்வளவுதான்.’’ என்றார், ஹான்வெல்.
அப்போதுதான், ஹான்வெல்லைக் கடைசி கடைசியாக அழைத்தனர். ஒருவழியாக ஃப்ராங்க்ஸ் மயக்கத்திலிருந்து எழுந்து, சமையலறைக்குள்ளாகவே நுழைந்து ஹான்வெல்லுக்கு ஆளனுப்பியிருந்தார். ஹான்வெல் மேஜையிலிருந்தும் சென்ற பிறகுதான்,  அவரது சியான்டிக் கோப்பை தொடக்கூட இல்லாமல் அப்படியே இருந்ததைப் பார்த்தேனென்பது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அந்தப் பெண்ணும் குடிக்கவில்லை. என் முன்பு அப்போது காலியாக இருந்த முழுப் புட்டியையும் நான் தான் குடித்திருக்க வேண்டும். நான் ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, மொத்தத்தையும் கீழே ஊற்றிவிட்டு, அதில் என்னுடைய குடுவையிலிருந்த விஸ்கியை நிரப்பத் தொடங்கினேன். மட்டுமீறி, அந்தச் சுயநினைவிழக்கும் நிலைக்குள் நான் நுழைவதாகப் பயந்தேன். என்றாலும் நிலையாக உட்கார்ந்து, என்னைச் சுற்றிலுமிருந்த இரவு, தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு நகர்ந்துசெல்வதைக் கவனித்தேன். அந்த இரட்டைக்குழல் கருவி அதற்குரிய பெரிய கறுப்பு பைஜாமாவுக்குள் வைத்துப் பட்டிகை மூடப்பட்டது. கிளாரினெட் வாசிப்பவர் பக்குவமாகச் சீவாளியை அகற்றி அதற்குரிய பஞ்சு மெத்தைக்குள் படுக்கவைத்தார். ஏதோ ஒரு கட்டத்தில் நான் மேஜை மீது தலை சாய்த்திருக்கவேண்டும்.
‘’ மிஸ்டர் பிளாக்? மிஸ்டர் பிளாக்? ’’
ஹான்வெல்லின்  கைகள் என் தோள்களைப்  பிடித்து மெல்ல அசைத்தன.
‘’ மிஸ்டர்  பிளாக், மூடப்போகிறோம்.’’
‘’ ஹான்வெல்?’’
‘’ ஆமாம், மிஸ்டர் பிளாக் – ஹான்வெல்தான். நீங்கள் இப்போது கிளம்பவேண்டும், அய்யா.’’
‘’ க்ளைவ் – எத்தனைமுறை சொல்வது? சரி, போகட்டும், இப்போது மணி என்ன?’’
‘’ காலை ஒரு  மணி. க்ளைவ்,’’ என்றார், ஹான்வெல், உள்ளார்ந்த இணக்கமான குரலில்.  முதல் நோக்கில் அவரிடம் நான் கண்ட அவரது இயல்பு மிகச்சரியானது. `அய்யா` அவரது வாயில் மிகவும் இயல்பாக, இயற்கையாக ஒலித்தது. அவர் என்னை வாசலுக்கு வழிநடத்தினார். இருவரும் அவரவர் மேலங்கிகள், தொப்பிகளை அறைவழிக்கூடத்துக் கொக்கிகளிலிருந்தும் எடுத்துக்கொண்டோம்.
‘’நீங்களும் கிளம்புகிறீர்களா?’’
‘’ எல்லோரையும்  போல எனக்கென்றும் ஒரு வீடு இருக்கிறது.’’ என்றார், சிறிது பாதுகாப்புணர்வோடு.
‘’ஹான்வெல், உறங்கும் முன்பான கடையிரவு மதுவருந்தலுக்கு என்ன வழி?’’ இரவினை முறைப்படி முடித்து வையுங்கள். இது, உங்களுக்கு ஒரு வெற்றிகரமான இரவாயிற்றே – நாம் அதைக் கொண்டாட வேண்டும். ஆனால், உங்கள் மனைவி அதை விரும்ப மாட்டார்.’’
‘’  அவள் லண்டனில் இருக்கிறாள்.’’
‘’ என் மனைவி, திம்புக்டுவில் இருக்கிறாள். அப்படியென்றால், கடையிரவு மது, எப்படி?’’
நாங்கள் அவரது  அடுக்ககக் குடியிருப்புக்குச் செல்வதாகத் தீர்மானித்தோம். என்னிடம் கொஞ்சம் விஸ்கி மீதியிருந்தது. அதை அவரோடு பகிர்ந்துகொண்டேன். அந்தக் கடைசி நிமிடத்திலாவது, இரவைத் தொடர்வதென மேற்கொண்ட திட்டம், எந்த மனிதனும் தீட்டக்கூடியதைவிடவும் ஒரு அழகான, அற்புதமான திட்டம்.
நாங்கள் திருப்தியோடு, அமைதியாக பார்க்தெரு குன்றிலிருந்து கீழ்நோக்கி நடந்தோம். ஆனால், அடிவாரத்தை நாங்கள் அடைந்தபோது, பக்கவாட்டில் மழையடிக்கத் தொடங்கியது. ஒரு மூன்று நிமிடங்கள்தான் கடந்திருக்கும், சட்டை உடம்போடு ஒட்டிப்பிடிக்குமளவுக்கு நனைந்துவிட்டேன். வலதும் இடதுமாக ஏகப்பட்ட வளைவுகளில் திரும்பினோம். எனக்குச் சரியாக நினைவில்லாத ஒரு கட்டத்தில், ஹான்வெல்லின் அடுக்ககத்துக்குப் போவதைவிட என்னுடைய அடுக்ககத்துக்கு இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவும் அதிகக் கஷ்டமில்லாமலும் போகலாமேயெனச் சொன்னது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது.
‘’ இன்னும்  நிரம்பத் தூரம் போக வேண்டுமா?’’ அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முயற்சித்துக்கொண்டு, மழையில் கண்களை மூடிமூடித் திறந்துகொண்டு, அவரிடம் கேட்டேன்.
‘’ இன்னும்  கொஞ்சந்தான்,’’ என அவர் சொல்லும்போது இருட்டில் ஒரு தாழ்ப்பாள் கிறீச்சிடும் சப்தத்தைக் கேட்டேன். அவர் திறந்த ஒரு பச்சைநிற இரும்புக் கிராதியின் ஊடாக நானும் தொடர்ந்தேன். நாங்கள் வெண்மை பிரகாசிக்கும், விலையுயர்ந்த பெரிய பெரிய ஜார்ஜியன் கட்டிடங்களின் மத்தியிலமைந்த ஒரு சிறிய பூங்காவில், உண்மையில் ஒரு பசுமையான சதுக்கத்துக்குள் நின்றோம்.
‘’ இது கபோட்  சதுக்கம், மிக அழகான ஒன்று,’’ என்றார், ஹான்வெல். ‘’இந்தச் சதுக்கத்தின் வழியாகச் செல்வது எனக்குக் சுருக்குவழி. இதைப்போன்ற பெரிய பங்களா ஒன்றில் உங்கள் குடும்பத்தோடு வாழ்வதாகக் கற்பனைசெய்து  பாருங்கள்.’’ ‘’ உங்கள் குடும்பத்தோடு’’ என்ற இணைப்புச்சொற்களை மிகவும் புதுமையானதாக நான் நினைத்தேன். இதைப்போன்ற பங்களாக்களில் ஒன்று, மிகமிக அண்மைக்காலம் வரையில் எனக்குச் சொந்தமானதாக இருந்தது என்பதை அவருக்குச் சொல்வதற்கான மனமும் துணிச்சலும் எனக்கு இருக்கவில்லை. அந்த இடம் முழுவதையும் முழுக்க முழுக்க எனக்கானதாகவே வைத்திருந்தேன். அப்படியான ஒரு வாழ்க்கையும் எனக்கு இருந்தது.
‘’ பேர்ரி ஃப்ராங்க்ஸ் இங்குதான்  மனைவி, நான்கு குழந்தைகளுடன்  இருக்கிறார்,’’ என்றார்  ஹான்வெல், மகிழ்ச்சியோடு. அதை அவர் எப்போதுமே சோர்வடையாத ஒரு சுற்றுலா வழிகாட்டி போலச் சொன்னார்.
‘’ இப்போது  ஃப்ராங்க்ஸ போய்க்கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தால், இப்படியே இருக்க அவர் நல்லதொரு நற்பேறு பெற்றிருக்கவேண்டும். ’’ என்றேன், மிகுந்த கோபத்தோடு. என்னை அவதிப்படுத்துகிற கெடுநிலைப்பேற்றினை எல்லோரும் அனுபவிக்கவேண்டுமென விரும்பினேன். எனக்கு நிகழ்ந்தது போல தமக்கு நிகழாதென யாரும் நினைக்காமலிருக்க வேண்டுமென நான் விரும்பவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய கறுப்புப் பாடலைப் பரப்ப நான் விரும்பினேன். ஆனால், இந்த ஹான்வெல், அவரது உரிமையாளரின் வீட்டின் முன்பு நின்று அவரது நற்பேற்றினை நினைத்து மகிழ்ச்சியோடு விசிலடிக்கிறார்.
‘’ உங்களுக்குக் கேட்கிறதா?’’ என்றார், அவர். மழை நின்றுவிட்டது. நாங்கள் பூங்காவை விட்டுக் கிளம்பவிருந்தோம். அங்கே ஏதோ ஒரு வீட்டில் குழந்தை அழுவதாக நான் நினைத்தேன்.
‘’ அது ஒரு  நரி,’’ என்றார், ஹான்வெல். ‘’ அது இப்படித்தான் வினோதமாக ஓலமிடும். அது இங்கேயேதான், நிரம்பப் பக்கத்திலிருக்க வேண்டும்.’’
அவர் நின்று, நிதானமாகச் சுற்றிலும் பார்த்தார். அவர், தன்னை மறைக்க விரும்புவது போலத் தொப்பியைக் கண்களுக்கு மேலாக இழுத்துவிட்டுக்கொண்டார். எரிச்சலடைந்த நான், தொப்பியை எடுத்து, அதன் விளிம்பில் தங்கியிருந்த நீரைத் தட்டிச் சாய்த்து உதறினேன். அதுதான், நான் கடைசியாக இங்கிலாந்தில் தொப்பி அணிந்த வருடம். அதைத் தொடர்ந்த வருடத்தில் கூட நிச்சயமாக, நாட்டில், எந்த ஒரு பொது கட்டிடத்திலோ, உணவு விடுதியிலோ தொப்பி பாதுகாக்குமிடம் இல்லை. ஹான்வெல்லையும் என்னையும் போன்றவர்கள்தான், தொப்பியைப் பொறுத்தவரை,  கடைசி டைனோசர்கள்.
நான் எதையோ  சொல்ல வாய்திறந்த போது ‘’ ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள்.’’ என்றார், ஹான்வெல். வழியின் குறுக்காக நின்ற பிரமாண்ட வீடுகள் ஒன்றில் விளக்குகள் எரிந்தன. நான் இதுபோன்ற சூட்சுமமான அறிவிப்புகளை வெறுத்தேன். வெளியே இருக்கும் மனிதனுக்கு இது அறிவிக்கும்  அடையாளச் செய்தி : வெளியே நீ என்ன செய்துகொண்டிருக்கிறாயென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் விழித்திருக்கிறேனென்பது மட்டுமல்ல, காவல்துறையை அழைக்கவும் தயங்க மாட்டேன். எனக்கென்று ஒரு வீடு இருந்த போது, எனக்கும் இந்த அற்பத்தனமான பழக்கம் இருந்தது. அந்த மனிதன் போர்வையைப் பாதியாக விலக்கிவிட்டு, அவன் மனைவியிடம் பகட்டாக நான் பார்த்துக்கொள்கிறேனென்று பாதுகாப்பாகச் சொல்லிவிட்டு, மாடிப்படிகளில் கவனமாக இறங்கிவந்து, கஷ்டப்பட்டுச் சம்பாதித்துச் சொந்தமாக வாங்கிய அந்த வீட்டின் விசாலமான பகுதி – உயரக்கூரையுள்ள வசிப்பறைக்குள் நுழைந்து, எட்டிப் பார்த்து, அவனுக்குச் சொந்தமானதையெல்லாம் திருடிக்கொண்டு போக முயற்சிக்கும் இரண்டு கறுத்த உருவங்கள் சதுக்கத்தில் நிற்பதை இருட்டில் துருவித் துளாவித் தேடுவதை நான் கற்பனையில் கண்டேன். இப்போது நான் வசிக்கும் இடத்தில், நீங்கள் வசித்து, நகரத்தின் வன்முறைச் சப்தங்கள் கேட்டாலும் விளக்குகளை ஏற்ற மாட்டீர்கள். நான் சத்தமாக இருமிவிட்டு, ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.
‘’ அது ஒன்றும்  நகர்வதாகத் தெரியவில்லை. கவனித்துக் கேளுங்கள்!’’ என்ற ஹான்வெல், வெளிவாசல் அருகில் நன்கு பராமரிக்கப்பட்டிருந்த பெரிய முள்வேலியை மெதுவாக நெருங்கினார். அது நெஞ்சைப்பிழியும் அவல ஓலமாக இருந்தது. ஒரு நீளக்கம்பால், அதனை மூடியிருந்த பச்சைத் தழைகளை ஹான்வெல் விலக்கிய பின், தரையோடு தரையாக விழுந்து கிடந்த அந்த நடுங்கிக்கொண்டிருந்த உடலைப் பார்த்து, என்னதான், ஒருவருக்கொருவர் நரியென்று பேசிக்கொண்டாலும் அந்த ஓலத்தின் மனித வாசனை தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.
‘’நல்ல அழகு,’’ என்றேன், நான். ஆனால், அது முழுவதுமான ஒரு அரைகுறைக் கணிப்பு என்பது இப்போதும் நினைவிருக்கிறது. உண்மையில், அப்படியான ஒரு, எதிர்பார்க்கவே முடியாத மஞ்சள் நிறக் கண்களும் ஆரஞ்சு நிற வாலும் மெலிந்த கால்களும் சாதாரணமாகக் கண்ணில் படாமல் தப்பிச் செல்லுவதுமான ஒரு காட்டு விலங்கின் வெகு அருகில் நிற்பது அசாதாரணமானது. நாங்கள் அதன் நீண்ட மூக்குப்பகுதியைத் தொட்டுவிடுவதுபோல் அருகில் முகம் வைத்துப்பார்த்தோம்.
‘’ அதற்கு என்னாகியிருக்கிறது?’’ நான் முரட்டுக்குரலில் கரகரத்துக் கேட்டேன். ‘’ அந்த இழவுச் சனியன் ஏன் அசையமல் கிடக்கிறது?’’
ஹான்வெல் கம்பைக்கொண்டு மெதுவாக குத்தி அசைத்தார்; அது மீண்டும் ஓலமிட்டது. ஆனால் அசையவோ, எழுந்து நிற்கவோ இல்லை.
‘’ அது எப்படியோ சரியாக அடிபட்டிருக்கிறது.’’ என்றார், ஹான்வெல்.
அதுமாதிரி எந்த அடையாளமும் அதன் உடம்பில் இல்லை. அது மாசுமறுவற்று, பஞ்சடைத்ததுபோலக் கிடந்தது. அந்த பயங்கர ஓலத்தை மட்டும் தவிர்த்துப் பார்த்தால், அதன் உடலில் அப்படியொரு பூரண அழகும் அமைதியும் பொலிந்திருந்தது. வெளிச்சம் தெரிந்த வீட்டிலிருந்து சன்னலின் மேற்புறச் சறுக்குக் கண்ணாடிச் சட்டக் கதவினை ஓங்கி அறைந்து மூடும் சத்தம் கேட்டது. ஹான்வெல் அவரது லாடமடித்த ஈரக் காலணியை நரியின் மெலிந்த தொண்டைப் பகுதிக்குக் கொண்டுபோனார்.
‘’ என்ன செய்கிறீர்கள்?’’ நான் அதிர்ந்து கேட்கவும், அந்தக் கணத்திலேயே காலணியை ஓங்கி அழுத்தி அதன் கழுத்தை முறித்தார்.
‘’ அதன் முடிவில்லாத துன்பத்திலிருந்து விடுதலையளிப்பதுதான் நல்லது.’’ என்றார், ஹான்வெல், அமைதியாக.
முற்றும்  எதிர்பார்க்காதநிலையில் –  ஏனெனில் எனக்கு எந்தச் சுகவீனமும் இல்லை – நான் திரும்பிக்கொண்டு வாந்தியெடுத்தேன். உதவிக்கெனச் சிறிதும் அசையாவிட்டாலும், ‘’ நீங்கள் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்?’’ என்றார், ஹான்வெல்.
எங்களைப்  போன்ற ஆண்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலளிப்பது எப்படியெனத் தெரியாதவர்களென நான் நினைத்தேன். அதற்கு, நமக்குப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். நம்பிக்கை இழப்பின் சிறிய அதிர்வு ஒன்று — நான் எந்த நேரம் வீட்டுக்குச் சென்றாலும் எனக்காகக் காத்திருக்க யாரும் இல்லையென்ற நிச்சயமான உண்மை- எனக்குள்  நுழைந்து கடந்து சென்றதாக உணர்ந்தேன்.
‘’என்னைப் பார்த்தால் கிண்டலாகத் தெரிகிறதா,’’ எனக் கேட்டுக்கொண்டே நிமிர்ந்த  நான், ‘’ முன்பே வீட்டுக்குப் போயிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.’’ என்றேன்.
அப்போதுதான் ஹான்வெல் அவரது நரியை விட்டுவிட்டு, என்னை நோக்கித் திரும்பினார். அவரது முகம் முழுக்கத் துயரம் நிறைந்திருந்தது.
‘’ ஆனால், நாம் அநேகமாக அங்கே –‘’
‘’எல்லாம் ஒன்றுதான்,’’ என உறுதியாகச் சொன்ன நான், என்னுடைய நாட்பட்டுப் போன கைக்குட்டையால் என்னைச் சிறிது சுத்தப்படுத்த முயற்சித்துக்கொண்டே, ‘’ என்னுடைய இரவு முடிந்துவிட்டதென்றுதான் நினைக்கிறேன்.’’ என்றேன்.
‘’ ஆனால்  – எனக்கு நம்பிக்கை இருந்தது- ‘’ அவர் விடுதியில் போலவே  உதட்டைக் கடித்தார். அது தண்டனையை எதிர்பார்த்து அஞ்சும் சிறு குழந்தையைப் போன்றதாக இருந்தது.
‘’ என்ன? எதை நம்பினீர்கள்?’’
நான் இப்போது  அவர் மீது கோபமாக இருந்தேன். அந்த மாலையில் என்னுடைய தோல்விகள் – அந்தப்பெண் கிடைக்காதது, அவ்வளவு பணம் செலவழித்து எனக்குள் ஏற்றியிருந்த மதுவை இழந்துகொண்டிருப்பது, ஈரம், குளிர் – எல்லாவற்றுக்கும் அவரோடு ஏதோ தொடர்பு இருப்பதாகவும் நான் அவரைவிட்டு உடனடியாக விலகிச்சென்றால் மட்டுமே அன்றைய பொழுது சரியாகத் தொடங்குமென்றும் எனக்குத் தோன்றியது.
‘’ நீங்கள்  எனக்கு உதவி செய்வீர்களென நான் நம்பினேன்.’’
‘’அது ஏதாவது பணமாக இருந்தால், அதை உடனடியாக மறந்துவிடுங்கள். நான் இப்போது தேவாலயமே கதியெனச் செல்லும் தளர்ந்த சுண்டெலி மனிதனைப் போல ஏழை.’’ என்று சொல்லிவிட்டு எதிர்ப்பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். அந்த ஈரமான பாவுகற்களின் மீது ஒரு எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன், அதற்குள் விழுந்துவிட்டேன். ஹான்வெல் எவ்வளவோ தாங்கிப்பிடித்தார்; என்றாலும் தரைக்குச் சில அங்குலங்கள் இருக்கின்ற நேரத்தில் என்னுடைய மனஉறுதி என்னைக் கைவிட்டதைக் கண்டேன். ஹான்வெல்லின் உதவியை மறுத்துத் தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஆரஞ்சு நிறத்தில் கலங்கித் தேங்கியிருந்த சேற்றுநீரில் விழுந்தேன்.. அதிலேயே ஒரு நிமிடம் போல அமைதியாக உட்கார்ந்திருந்தேன். என்னுடைய சரிவின் மிகமிகக் கீழான அடிமட்ட நேரம் அதுதானென்றும்  அதைவிட மோசமாகக் கீழே செல்வதற்கு எதுவுமில்லையென்றும் எனக்குள் கூரான ஒரு உணர்வு எழுந்தது. அந்தத் தன்னுணர்வு சரியானதெனக் காலம் நிரூபித்துவிட்டது. இரவில், பெண்கள் யாரும் உடனில்லாமல், வெட்டவெளியில், சுருண்டு கிடந்த மரணமொன்றின் அருகிலேயே நனைந்து,  ஊறிப்போன இரண்டு அந்நியர்கள். ஆன்மீகச் சத்துணவு எனக்குத் தேவைப்படும்போதெல்லாம் நான் அந்தக் கணத்தை நினைத்துக்கொண்டு, அதற்கும் கீழான நிலைக்கு ஒருபோதும் விழுந்துவிடாமல் காப்பாற்றிய கடவுள் மீது நன்றி கொள்கிறேன். அப்படியான ஒரு சூழ்நிலையில், தன்னைக் காண்பதற்கு ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களால்தான் இயலும். நான் அதன்பிறகு எப்போதும் அப்படியான மனிதனாக இருந்ததில்லை. இப்போது நினைத்தாலும் என்னை ஒரு குலுக்குக் குலுக்கியெடுக்கிற அந்த நேரத்தில் அதற்குச் சரியான எதிர்வினையாக என்னிடம் ஒரு சிரிப்புதான் வெடித்தது. நான் சத்தமாகச் சிரித்ததில், சதுக்கத்தில், மேலும் இரண்டு விளக்குகள் எரிந்தன.
‘’ இது நல்ல வேடிக்கைதான், க்ளைவ்,’’ என்றார், ஹான்வெல், சோகமாக. நான் சிரிப்பதை நிறுத்தினேன். என் தோள் மீது கை போட்டிருந்த அந்த அந்நிய மனிதரை நான் ஏறிட்டுப் பார்த்தேன். அந்த அருமையான க்ரெப்ஸ்களை நீட்டும்போது இருந்த அதே நம்பிக்கை அவர் முகத்தில் அப்போதுமிருந்தது.
‘’ எனக்கு உங்களைத் தெரியாது, ஹான்வெல்.’’
நான் அவரது  முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அது சாதாரணமான சஃபோல்க்கியத் தோற்றத்தில், உப்பிப்புடைத்துச் சிறுபிள்ளைத் தாடையோடிருந்தது. நான் நினைத்தது தவறென்றும், நாம் முன்பே, இவரை ஆயிரம் முறை சந்தித்திருக்கிறொமென்றும் நான் நினைத்துக்கொண்டது, இப்போதும் ஞாபகமிருக்கிறது. இங்கிலாந்து மனிதர்கள், அரசர் ரேட்வால்டு காலத்திலிருந்தே ஹான்வெல்லைப் போலத் தோற்ற முடையவர்களாய் இருந்துவருகின்றனர்; சூட்டன் ஹூவின் அச்சுறுத்தும் புதைமேட்டில் நூற்றுக்கணக்கான ஹான்வெல்கள் புதைந்திருக்கிறார்கள். இதன் மூலம் அதனை மறு உறுதிப்படுத்தமுடியாதென்பது சாத்தியமற்ற ஒன்று.
‘’ இல்லை. அது உண்மை. ஆனால், மிகவும் அருகிலேயே வந்துவிட்டோம். நீங்கள் உடைகளையெல்லாம் உலர்த்திய பின் காலையில் கிளம்பிக்கொள்ளலாம்.’’
‘’ என்னிடம் பணமெதுவுமில்லை, தெரியுந்தானே.’’
‘’ மீண்டும் மீண்டும் என்னை அவமதிக்காதீர்கள்.’’ எல்லாப் பெருந்தகை மனிதர்களைப் போலவே ஹான்வெல் உறுதிபடக் கூறினார். இந்தப் பளபளப்பு ஒளியை அவர் பாரீஸிலிருந்து பெற்றுக்கொண்டாரோவென நான் வியந்துகொண்டேன். மேலும், அவர் பொய் சொல்லவில்லை. ஒருநிமிடத்திலேயே நாங்கள் அவருடைய இரண்டாவது தளத்திலிருந்த அடுக்ககக் குடியிருப்புக்குச் செல்லும் வெளிறித் தோன்றிய இரும்புப் படிகளில் சிரமத்துடன் ஏறிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு படியும் நனைந்து ஈரத்தில் வழுக்கிப் பெருத்த விபத்து ஏற்படுத்தும் அபாயத்துடனிருந்தன. உள்ளே, அடுக்கக இல்லம் எனது வீட்டைவிடவும் பெரியதாக இல்லாமல், ஆனால், நல்ல முறையில் சுத்தத்துடன் இருந்தது. பார்த்த உடனேயே முன்னர், குடும்பம் இருந்ததற்கான அறிகுறிகளைக் காணமுடிந்தது. வாசலுக்கு நேராக அழகிய காட்சிகள் பொறித்த சீனத்து நீலவண்ணத் தட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இடைவெளிப் பரப்புகளில் அலங்காரப் பாய்களும் பின்னல் திரைகளும்  மூடியிருக்க அவற்றின் மேல் ஆங்காங்கே கலைப்பொருட்கள் ஒரு தொடர்ச்சியாகப் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாமே சிறந்த மாதிரிகள் அடங்கிய ஒரு பெரிய கலைச் சேகரத்திலிருந்து வலிந்து கொண்டுவரப்பட்டவையெனத் தெளிவாகத் தெரிந்தது.
வசிப்பறையின்  ஒரு மூலையிலிருந்த ஓய்விடத்தில் சூட்டடுப்புக்கு நேர்  மேலாக இருந்த ஒரு பெரிய கறுப்பு-வெள்ளைப் புகைப்படம் என்னை ஈர்த்தது: விசுப்பலகை ஒன்றில் அமர்ந்திருக்கும் கறுப்புநிறத் தலைமுடிகொண்ட மூன்று பதின்பருவப் பெண்கள். அவர்களில் ஒருத்தி – மிகமிக அழகானவள் என நான் சொல்வது – நீங்களாக இருக்கலாம். நான் அதைப் பார்ப்பதைக் கண்டதும் ஹான்வெல் அந்தப் புகைப்படத்தைச் சுவற்றிலிருந்தும் பிரித்தெடுத்தார். நான் அதைப்  பார்க்காமலிருந்தாலும் அவர் அப்படித்தான் அதை எடுத்திருப்பாரென எனக்கு ஒரு எண்ணமிருந்தது. அநேக மனிதர்களும் விருந்தாளிகளுக்கு ஒரு கோப்பை மதுவினைப் பெருமிதத்துடன் அளிப்பதுபோலத்தான் அவர் அந்தப் புகைப்படத்தை அவரது விருந்தாளியான என்னிடம் அளித்தார். நான் புன்னகைத்துத் தலையாட்டினாலும் தொண்டை வறட்சியால் கவனம் மாறினேன். பேர்ரி ஃப்ராங்ஸில் அடியாட்களின் எச்சில் தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் அடுக்ககத்துக்கு அந்த நடுஇரவில் நான் ஏன் வந்தேனென்பதை விளங்கிக்கொள்ள எனக்கு மேற்கொண்டும் மது தேவைப்பட்டது.
‘’ இது எமிலி,’’ என்றார், ஹான்வெல், மகிழ்ச்சியோடு. ‘’ இது கரோல், இது க்ளேர். அம்மாவின் அழகு முழுவதையும் அப்படியே அள்ளிக்கொண்டது க்ளேர்தான். உங்களுக்கே தெரியும், பாருங்களேன்.’’
உங்கள் அம்மாவைப்  பார்க்கவேயில்லாத நான், இந்தப் பேச்சை எப்படித் தொடர்வதெனத் திகைத்தேன்.
‘’ மிகவும்  அழகு.’’ நான் என்னுடைய மார்புப்பக்கப் பையிலிருந்து சுருட்டுகளை  எடுத்தேன். அவை முழுவதுமாக நனைந்து மக்கிய குப்பையாகக் கெட்ட நாற்றம் வீசின. ‘’ கடைசி, கடைசியாக ஏதாவது கிடைக்குமா, ஹான்வெல்? அதுவே மதுவும்தான்?’’
‘’ இங்கே  பாருங்கள், விஷயம் என்னவென்றால்,’’ என அவசரமாகத் தடுத்த  ஹான்வெல், ‘’ நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்கள் என நம்பித்தான் இங்கே அழைத்துவந்தேன். இது கொஞ்சம் இக்கட்டான நிலைதான்.’’ என்றார்.
‘’ நான் இக்கட்டான  எதற்கும் அப்பாற்பட்டவன், ஹான்வெல். எனது பிரிய நண்பரே, நான் இங்கே உங்களிடம் ஒரு வாய் விஸ்கிக்காக கையேந்திக்கொண்டிருக்கிறேன். முதலில் விஸ்கி சாப்பிடுவோம். பின்னர் மற்றதெல்லாம் பேசுவோம். நான் என்னுடைய காற்சட்டையைக் கழற்றி வெப்பப்பெட்டி மீது போடுகிறேன், அது சரியாகத்தானே இருக்கிறது?’’
‘’ ஒரு மீட்டருக்கு ஒரு ஷில்லிங் ஆகும்.’’ எனக் கவலையுடன் ஒரு குடும்ப சாபத்தை நினைவுகூர்கிற ஒரு ஜிப்சிப் பாட்டியின் தொனியில் கூறிக்கொண்ட ஹான்வெல் என் காற்சட்டையுடன் ஒரு நிமிடம் அந்த அறையிலிருந்தும் மறைந்தார். என்னுடைய மிகப்பெரிய ஆறுதலாக அவர் ஒரு மிகச்சிறந்த ஐரிஷ் மால்ட் புட்டியோடு திரும்பினார். அது எதிர்பார்க்கமுடியாத அளவுக்குச் சிறந்ததாக இருந்தது. அது எப்படி அவர் கைக்கு வந்ததென, நான் கேட்டேன்.
‘’ஓ, நமக்கு உதவிசெய்கிறவர்களை அங்கங்கே சந்திக்கத்தான் செய்கிறோம்.’’ என்றார், ஹான்வெல், எனக்கான விஸ்கியை டம்ளரில் ஊற்றிக்கொண்டே.
‘’அப்படியா, நீங்கள் சந்திக்கிறீர்களா? எனக்கு அப்படித்தோன்றவில்லை.’’
‘’ அது, அவர்கள்  உங்களுக்கு உதவுகிறார்களென்பதை நீங்கள் உணரவில்லை. அவ்வளவுதான். இப்போது பெட்டி சூடாகிக்கொண்டிருக்கிறது. உங்கள் காற்சட்டை சீக்கிரமே உலர்ந்துவிடும்.’’
ஹான்வெல் எழுந்து ஒரு பெண்ணைப்போல அறையைச் சுற்றிலும் கசங்கிய திரையை இழுத்துவிடுவதும் சிதறிக்கிடந்த சிறுபொருட்களை மேஜை இழுப்பறைக்குள் தள்ளி ஒழுங்குபடுத்துவதுமாக ஒன்றுமாற்றி ஒன்றைச் செய்துகொண்டிருந்தார். நான் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை ஊற்றிக் குடித்துவிட்டு எனது நாற்காலியில் மீண்டும் அமர்ந்தேன். ஒரு சிறிய பூத்தையலிட்ட தலையணை என் தலைக்கு இதமாக மென்மையாகத் தாங்கிக்கொண்டிருந்தது. அது எளிதில் கிட்டாத எப்படியான ஒரு சுகமாக இருந்ததென்றால் `அப்பாடா` என ஒரு மகிழ்ச்சி வெளிப்பாட்டினை என்னிடமிருந்து அனிச்சையாகத் தோற்றுவித்ததாக இருந்தது.
‘’லாரா தான் பூத்தையலிட்டு அதைச்செய்தாள்.’’
‘’லாரா?’’
‘’லாரா, என்  மனைவி.’’
‘’ஆ, லண்டனில் இருப்பவர்கள்.’’
ஹான்வெல்  தலையாட்டினார்.
‘’ அப்படியென்றால், அவர் ஏன் உங்களோடு இல்லை?’’ என நான் கேட்டேன். ஹான்வெல் ஏன் தனியாக வசிக்கிறார்? அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏன் எச்சில் தட்டுகளைக் கழுவும் வேலைசெய்கிறார்? அவரைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லையென்பதை அப்போது தான் உணர்ந்தேன். அதன் பெரும்பகுதியை நீங்கள் எனக்குச் சொல்லும் வரையில் நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் சில வலிநிறைந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியை நம்பத்தக்கதாயில்லாத அளவுக்கு மென்மையாக இடக்கரடக்கலாகக்  கூறினார். அதுவும் நான் அந்தத் துயரமான உண்மையைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு ஒருநிமிடமோ என்னமோதான்.
‘’நீங்கள் அவளைக் கண்டுபிடித்தீர்களா?’’ நான் கேட்டேன். இந்தக் கேள்வியை யாருமே மன்னிக்கமாட்டார்கள். ஒருவர் குடித்திருந்தால், தீயதையே எதிர்நோக்கும் ஆர்வம் விட்டொழிக்கமுடியாதது. ஆனால், என்னுடைய கேள்வியால், ஹான்வெல் எந்த விதத்திலும் எரிச்சலடைந்ததாகத் தோன்றவில்லை.
‘’ நிலத்தடி அறைக்குச் செல்லும் படிக்கட்டு வழிக்கூடத்தில்,’’ என அவர் உண்மை விவரணையாகக் கூறத்தொடங்கினார். ‘’ கட்டக்கூடிய வேறொன்றுமில்லை, குளியல்முடித்து அணியும் ஆடையையே கயிறாக்கி அதில் தூக்குப்போட்டுத் தொங்கினாள். அது பயங்கரம்.’’
மனிதர்கள், இப்படி, விரும்பத்தகாத வழிகளில் மரணத்தைத் தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொள்வதை நினைத்து நாங்கள் இருவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தோம்.
‘’ அவள் லண்டனில் இருப்பதாக அல்லவா சொன்னீர்கள், ஏன் அப்படி?’’
‘’ அவள் அங்குதான்  இருந்தாள்.’’
‘’ வருத்தமாக  இருக்கிறது, ஹான்வெல். அது மிகப் பயங்கரமானதுதான். இன்னொரு கோப்பை மது எடுத்துக்கொள்ளுங்கள்,’’ நாங்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள்; ஆறுதலாகச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.
‘’மன்னித்துக் கொள்ளுங்கள்.’’ என்றார், ஹான்வெல். அவர் அறையைவிட்டு மீண்டும் சென்றார். நான் எனது கோப்பையைக் காலிசெய்து  மீண்டும் ஒருமுறை ஊற்றிக்கொண்டேன். ஓய்விடமும் சமையலறையும் வினோதமாக ஒன்றிணைந்த தோற்றத்தை, அதன் பரண்களை, மரச்சாமான்களை, அழுக்கான பின்னல் திரைகளை நோக்கி என் பார்வையைச் சுழலவிட்டேன். ஹான்வெல் போன்றவர்கள், தங்கள் முடிவில்லாத ஆங்கிலேயக் குலத்துக்கேயானதென உரிமைகோரும், வழிவழி வந்த குடும்பப் பெருமைகளைத் துயரத்துடன் வெளிப்படுத்தும் மலிவான பொருட்களை ஒருவர் அங்கங்கே காணமுடியும். உணர்ச்சிமயமான அன்னம் பொறிக்கப்பட்ட ஒரு ஜாடியும் வாயகன்ற குழித்தட்டும் கணப்படுப்பின் ஒரு மூலையில் அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல் முன்னாள் ஹான்வெல்கள் குளியலறை இல்லாத அவர்களின் படுக்கையறைகளில் கைகால் சுத்தம் செய்ததை நினைவுபடுத்திக்கொண்டிருந்தன. போர்க்காலத்திற்கு முன்னால், பெண்கள் தோள்வழியாக அணிந்த மிருகங்களின் மேற்தோலாடை வகைப்பட்ட ஒன்று இப்போதும் சிறிய பாதங்கள் தனியாக இணைக்கப்பட்டு ஒரு நாற்காலியின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. அது அவருடைய மனைவியுடையதா? அல்லது அவரது அம்மாவுடையதா? அது எனக்கு மீண்டும் ஹான்வெல்லின் நரியை நினைவூட்டியது. ஹான்வெல்லின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது, அல்லது என்னுடைய துயரத்திலிருந்தும் என்னை மீட்டெடுக்கப்போவது எதுவாக இருக்குமென நான் வியந்துகொண்டேன். அடுத்து எனக்கு நினைவுக்கு வருவது நான் முகர்ந்த டர்பென்டைன் வாசனைதான். நான் எழுந்து வாசல் பக்கமாக நகர்ந்தேன். அந்த வழி எங்கே இட்டுச்செல்லுமென எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹான்வெல்லின் அடுக்ககக் குடியிருப்பு உலகத்தின் விளிம்பை எல்லையாக உடையது; அந்த வழியாக வாசலைக் கடந்ததும் எப்போதும் இருக்கின்ற  ஏதோ ஒரு குழியில் நான் விழுந்துவிட வேண்டியதுதான். உண்மையில் அந்த வாசலின் வழி, நாங்கள் இருந்த அறையைவிடப் பெரிதாக இல்லாத, ஆனால் அனைத்து அலங்கரிப்புகளும் அகற்றப்பட்டிருந்த இன்னொரு அறைக்கு இட்டுச் சென்றது. அந்த அறையின் மரச்சாமான்கள் அனைத்தும் அறைக்கு நடுவில் ஆபாசமாக உடல்களின் குவியல் போல் குவிக்கப்பட்டு, தூசி படாமலிருப்பதற்காக ஒரு வெள்ளைத்துணி போர்த்தியிருந்தது. அறை முழுவதும் ஒரு வன்முறையான, இழவெடுத்த, கடுஞ்சிவப்பு வர்ணமடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஹான்வெல்தான் ஒரு ஏணி மீது நின்று தூரிகையால் அதைச் செய்துகொண்டிருந்தார்.
‘’ நீங்கள்  நன்கு தூங்கிவிட்டீர்களென்று  நினைத்தேன்,’’ என்றார், ஹான்வெல், மெய்யாகவே.
‘’ நீங்கள்  ஏன் அப்படி நினைத்தீர்கள்?’’
‘’ நான் உள்ளே  எட்டிப் பார்த்தேன். நீங்கள் தூங்குவது போலத் தெரிந்தது.’’
எனக்கு கவனம்  இல்லை. அவர் சொல்வது உண்மையா அல்லது இல்லையா என்றும் எனக்குத் தெரியவில்லை.
‘’ அடக் கடவுளே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், ஹான்வெல்? இப்போது இராத்திரி மணி இரண்டு இருக்குமே!’’
‘’ இதுதான்  என் மகள்களுக்கான அறை,’’ என்றார், ஹான்வெல், ஏணியிலிருந்து இறங்கிக்கொண்டே. அவர் பார்வை செம்மறியாட்டுத்தனமாகத் தோன்றியது. ‘’நான் சொல்வது, இது அவர்களுக்கானதாகுமென நம்புகிறேன். நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என உண்மையிலேயே நம்பினேன்.’’
‘’வர்ணமடிக்கவா? ஹான்வெல், ஒரு வர்ணமடிப்பவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்கிறேன். நான் இங்கே மது அருந்துவதற்காக வந்தேன். உங்களுக்கு அடிமை வேலை செய்ய வரவில்லை.’’
‘’ இல்லை-‘’ என அவசரமாக மறுத்த ஹான்வெல், ‘’ அப்படி இல்லை. எனக்கு உங்கள் அபிப்பிராயம் தேவை. இது சரியான வகை மஞ்சள் தானா? நான் நிறக்குருடு – வேலைக்காரனை அல்லது எனது உதவியாளரைக் கேட்க விருப்பமில்லை – இதை நன்கு பழுத்த வெயில் என்று அழைப்பார்கள். நீங்கள் பாருங்களேன்,  அவர்கள் தூங்கி விழித்ததும், அந்த அறை முழுவதும் எப்போதும் கதிரொளி பிரகாசமாக இருப்பதாக உணரவேண்டுமென்பதுதான் எனது விருப்பம்,
‘’ மஞ்சள்?’’
‘’ அது சரியல்ல  என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்,’’ என்ற ஹான்வெல் என்னை நோக்கியதில் ஒரு நிராதரவான நிலை தெரிந்தது. ‘’ இந்த நேரத்தில்   இவ்வளவுதான் முடிந்தது. ஆனால், அங்கே ஒரு சின்ன வட்டம் விட்டுப்போயிருக்கிறது. இல்லையா, அதை இப்போதே சரிசெய்துவிடப் போகிறேன். அப்படியே சாளரச் சட்டங்களையும். எனக்கு, சுவருக்குச் சுவர் அந்திவானம் போலாக்கிவிட வேண்டும், பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரிகிறதா? அவர்கள் என்னைத் திட்டுவார்களென்றுதான்  நினைக்கிறேன்.’’ என்றவர் திடீரென்று ஏணியின் இரண்டாவது படியில் நின்ற நிலையில் அப்படியே உட்கார்ந்தார். அவர் பரிதாபமாகக் காட்சியளித்தார்; பயமுறுத்தும் அந்தச் சிவப்புப் பெட்டியினுள் களைத்துச் சிவந்த அவர் மெல்லக் குலுங்கிக்கொண்டிருந்தார்.
‘’ இதில்  யாருடைய தவறுமில்லையே, ஹான்வெல்.’’
அவர் என்னைக்  குறுகுறுப்போடு, நாங்கள்  அப்போதுதான் புதிதாகச்  சந்தித்தது போலப் பார்த்தார்.
‘’இல்லை, இது  உண்மை.’’ என்றார், கடைசியாக. அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘’எப்படி இருந்தாலும், இந்த வயதில், மூன்று பெண்களுக்கு இது சிறிய அறைதான்.’’
‘’அவர்களுக்கு என்ன வயது?’’
‘’ பதினேழு, பதினாறு, பதினான்கு. ப்ரோம்லியில் அவர்களுடைய மாமா, அத்தையோடு இருக்கிறார்கள். நான் எழுதினேன், ஆனால் அவர்கள் அனுப்பவில்லை.’’
‘’ உங்களிடம்  இன்னொரு தூரிகை இருக்கிறதா, ஹான்வெல்?’’
ஹான்வெல்  சுவர்களின் அடிக்கட்டைகளில்  வர்ணமடிக்க முழங்காலிட்டபோது, நான் சாளரங்களை நோக்கி வர்ணம் தீட்டச் சென்றேன். அவர் அதில் மிக உன்னிப்பாக இருந்தார்; மூலைகளுக்காக சிறுதூரிகை ஒன்றை வைத்திருந்தார். ஏற்கெனவே மூன்றுமுறை அடித்து முடித்திருந்தார். சாளரச் சட்டங்களில் நான் இரண்டாவது தீற்றலை முடித்தபோது வெளியே உண்மையான மஞ்சள்வெயில் எழுந்து கொண்டிருந்தது. ஒளி ஊடுருவாமல் தடுக்குமளவுக்குச் சிவப்புத் தீற்றல், கடுமையாக இருந்ததால், வெளியே புதிய நாள் புலர்வதை நாங்கள் பார்க்கமுடிந்தபோதும் அறையினுள்ளே என்னுடைய இருளுக்கும் ஹான்வெல்லுடையதற்கும் முடிவேயிருக்காதுபோல் தெரிந்தது. நான் களைப்பைக் கடந்து மறுபக்கம் வந்துவிட்டேன்; எனக்குத் தூக்கமே தேவையில்லாதது போல உணர்ந்தேன். உலகத்திற்குள் மட்டும் மீண்டும் செல்லவேண்டாமென்றிருந்தால் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையிலேயே அந்தச் சாளரச் சட்டங்களை ஆயிரம் முறைகூட வண்ணம் தீற்றிக்கொண்டிருந்திருப்பேன். நான் மகிழ்ச்சியோடிருந்ததாக, இப்போதும் நினைக்கிறேன். காலை ஆறு மணியளவில் ஹான்வெல்லின் மோசமான நிறக்குருட்டுக் கண்களுக்குக் கூட, நாங்கள் இதற்கு மேலும் சிவப்பினை அந்தச்  சுவர்களில் தீற்றமுடியாதெனத் தெரிந்திருக்கும். நான் என்னுடைய ஏணியிலிருந்து இறங்கி மேலும் இரண்டு கோப்பை விஸ்கி எடுத்துவந்தேன். நாங்கள் தரையிலேயே அமர்ந்து எங்கள் கைத்திறமையை வியந்து பார்த்துக்கொண்டோம். உங்களுக்கும் உங்கள் சகோதரிகளுக்காகவும் நாங்கள் ஒரு அறையைத் தயார்செய்து முடித்திருந்தோம். அது ஒரு நல்லவிதமான உணர்வுநிலை. நான் எதுவுமே செய்திருக்கவில்லையென்றாலும் அந்த உணர்வு என்னிடம் நீண்டநாட்களுக்கு நீடித்திருந்தது.
‘’ அவர்கள்  இங்கிருக்கும்போது நீங்கள்  என்ன செய்வதாக உத்தேசம்?’’ என, நான் ஹான்வெல்லைக் கேட்டேன்.
அவர் நீண்டநேரம் பேசிக்கொண்டேயிருந்தார்; அவருக்கு ஏராளமாக விரிவான  திட்டங்கள் இருந்தன. அவர் என்னென்னவோ கற்பனைகளில் – நீங்கள் பகல்வேளைகளில் ஃப்ராங்க்ஸில் மகிழ்ச்சியோடு சுற்றிச்சுற்றி வந்து, அவர் தட்டுகளைச் சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டும், அல்லது உங்கள் சகோதரி பாண்டு இசைக்குழுவில் பாடுவதைக் கேட்டுக்கொண்டுமிருப்பீர்கள்; அவரால் உங்களைக் கவனிக்கமுடியாமலிருக்கும்போது, நீங்கள் பேர்ரி ஃப்ராங்க்ஸின் மகள்கள் இருவரோடும் நேரத்தைச் செலவழித்துக்கொண்டிருப்பீர்கள். அந்த ஒழுக்கங்கெட்ட, இழிந்த பெண்கள் இருவரும் அந்த நகரத்தின் மிக மோசமான இரண்டு அடியாட்களின் நெருக்கத்தோழிகள் என்பதை நான் அறிவேனென்றாலும்  ஹான்வெல்லுக்குச் சொல்லாமல் எனக்குள்ளேயே மறைத்துக்கொண்ட செய்திகளில் அதுவும் ஒன்று.
அவருடைய அற்புதமான திட்டங்களை விவரிப்பதை முடித்துக்கொண்டபோது ‘’ அவர்கள் வருவார்களென்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா, ஹான்வெல்?’’ என நான் கேட்டேன். அவர் ஒரு பரந்த புன்முறுவலைக் காட்டினார். எங்களைப் போல ஹான்வெல்லின் எந்த ஒரு மகளும்  இந்த அறையில் ஒரு இரவுகூட தங்குவார்களென எதிர்பார்ப்பது ஒருபோதும் நடக்க இயலாததென எனக்குத் தோன்றியது; ஆனால் மறுபடியும் எனது கருத்துரையை நான் எனக்குள்ளேயே அடக்கிக்கொண்டேன். மேலும் எங்கள் தலைமுறை மனிதர்கள் இணைந்து வாழமுடியாதவர்களோவென நான் சந்தேகமாகவே பார்க்கிறேன். நாங்கள் சகமனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை; ஏனென்றால், நாங்களே எங்களை மீட்கமுடியாதபடி மகிழ்ச்சியற்ற வழிகளுக்குட்படுத்திக்கொண்டோம். என்னுடைய சொந்த மகளுங்கூட என் அளவுகள் தெரிந்திருந்தாலும் என்னை எடைபோடுவதிலும் தண்டிப்பதிலும் மகிழ்ச்சிகொள்கிறாள்; அது, அவள்நிலையில் சரியாகக்கூட இருக்கலாம். நீங்களுந்தான். இந்தக்காலத்தில் எல்லோரும் பழிசுமத்துவதை முன்காலத்துக்குக் கொண்டுசெல்கிறார்கள். ஆனால், அதை நாங்கள் செய்யமுடியாது. பழியை நாங்கள் எங்கள் அருகாகவே பற்றிப்பிடித்து வைத்துக்கொண்டோம். உங்கள் தந்தை உங்களை மகிழ்ச்சியற்ற நிலையில் வைத்திருந்தாரென்பதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். உங்களுக்குக் கிடைக்கின்ற வேறு அஞ்சல்கள் பழியைச் சரியான இடத்துக்கு நகர்த்தவும் இப்போதெல்லாம் சொல்கிறார்களே `ஒரு இணக்கத்துக்கு வாருங்கள்` என்று அதற்கும் உதவுவதாக இருக்கலாம். ஆனால், உங்கள் வேண்டுகோளைச் செய்தி இதழில் பார்த்தபோது, எனக்குத் தோன்றிய முதல் எண்ணம், நினைவுகொள்ள விரும்பத்தக்க ஒரு மனிதர் என்பதுதான். இது ஒன்றும் சாதாரணமான சிறிய விஷயமல்ல. நான் அப்போது சந்தித்திருந்த அநேகமாக எல்லா மனிதர்களையும் மறந்துவிட்டிருந்தேன். இதை எழுதும்போது கூட ஹான்வெல்லின் இறால், காளான் கலவை க்ரெப்ஸ்களையும் அவர் அடிக்கட்டைகளை வர்ணமடிக்கும்போது கொண்டிருந்த அக்கறையையும் நினைத்துப் பெருமகிழ்ச்சி கிளர்வதாக உணர்கிறேன். நீங்கள் அவரை மிகக் கடுமையாகப் பார்க்கிறீர்களென நான் நினைக்கிறேன். மேலும் நீங்களும் உங்கள் சகோதரிகளும் அவரோடு தங்கியிருக்க வரமாட்டீர்களென அவருக்குத் தெரிந்திருந்ததென்றோ அல்லது நீங்கள் அவரோடிருப்பதை அவர் விரும்பவில்லையென்றோ நீங்கள் கருதுவது தவறென்றே நான் நினைக்கிறேன். ஹான்வெல்லுக்கு அப்படியொரு அரிய, அழகான நம்பிக்கைச் சிந்தனை இருந்தது. சிவந்த செம்மஞ்சள் மீது நம்பிக்கைகொள்வதென்பது அநேக மனிதர்களாலும் ஆகாத ஒன்று.  




நன்றி: www.newyorker.com

மலைகள் இணைய இதழ் ஜூன் 03, 2013, இல் வெளியானது.




கோடையில் ஒரு மழை, ஆதி பதிப்பகம், ஏப்ரல் 2014 முதல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment