Saturday 9 January 2016

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை- பொய்யே பேசாத மனிதன் The man who never lied African Folktale

பொய்யே பேசாத மனிதன்
ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை

The man who never lied

African Folktale

 தமிழில் ச.ஆறுமுகம்
முன்பொரு காலத்தில் மமது என்ற பெயரில் ஒரு அறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் பொய்யே பேசியதில்லை. இந்த பூமியிலுள்ள எல்லோருக்கும் ஏன், இன்றைக்குப் பிறக்கப் போகிற குழந்தைக்குக் கூட அவரைப் பற்றித் தெரியும்.
மமதுவைப்பற்றிக் கேள்விப்பட்ட அரசனுக்கு அந்தச் செய்தி வியப்பாக இருந்தது. பொய்யே பேசாமல் ஒரு மனிதன் இருக்க முடியுமா? அவன் அவரைப் பார்க்கவேண்டுமென்று நினைத்தான். உடனேயே அவரை அரண்மனைக்கு அழைத்துவருமாறு குடிகளுக்குக் கட்டளையிட்டான். மக்கள் அந்த அறிஞரைக் கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினார்கள்.
அரசன் அந்த மனிதனின் முகத்தை ஏறிட்டு நோக்கிவிட்டுப் பின்னர் கேட்டான்:
‘’மமது, நீ பொய்யே பேசியதில்லை என்கிறார்களே! அது உண்மையா?
‘’ஆமாம், அரசே, அது உண்மைதான்.’’
‘’அப்படியென்றால், உன் வாழ்க்கை முழுவதும் பொய்யே சொல்லமாட்டாய், அப்படித்தானே?’’
‘’ஆமாம், அரசே, பொய் சொல்லமாட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.’’
‘’சரி. உண்மையே பேசு, ஆனால், கவனமாக இரு! பொய் என்பது மிகவும் தந்திரமானது. அது உன் நாவில் எளிதில் நுழைந்துவிடும்.’’ எனச் சொல்லி அனுப்பிவிட்டான்.
பல நாட்கள் கழிந்துவிட்டன. மீண்டும் ஒருமுறை அரசன் மமதுவை அழைத்தான். அங்கே ஒரு பெரிய கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அரசன் வேட்டைக்குச் செல்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் குதிரையின் பிடரி மயிரைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு இடது கால் பாதத்தைச் சேணத்தின் அங்கவடியில் வைத்து நின்றான். அவன் மமதுவுக்குக் கட்டளையிட்டான்.
என்னுடைய கோடைகால அரண்மனைக்குப் போய் அரசியிடம், ‘’நான் மதிய உணவுக்கு வருவதாகச் சொல். ஒரு பெரிய விருந்தாகத் தயாரிக்கச் சொல். அப்புறம் நீயும் என்னோடு உணவருந்துகிறாய்.’’
மமது அரசனைக் குனிந்து வணங்கிவிட்டு அரசியைப் பார்த்துத் தெரிவிக்கக் கிளம்பினான். மமது கிளம்பிச் சென்ற பின், அரசன் `ஹஹஹ்ஹா` எனச் சிரித்துவிட்டுச் சொன்னான்.
‘’நாம் வேட்டைக்குப் போகவில்லை. இப்போது அரசியிடம் மமது சொல்வது பொய்யாகிவிடும். நாளைக்கு நாம் அவனைப் பார்த்து நகையாடுவோம்.’’
பொய்யே பேசாத மமது அரண்மனைக்குச் சென்று அரசியிடம் கூறினார்:
‘’நாளை மதியத்திற்கு நீங்கள் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யவேண்டியிருக்கலாம்; அப்படி இல்லாமலுமிருக்கலாம். மத்தியானம், அரசர் வரவும் செய்யலாம், வராமலுமிருக்கலாம்.’’
‘’அரசர் வருவாரா மாட்டாரா? தெளிவாகச் சொல்லுங்கள்.’’ எனக் கேட்டாள் அரசி.
‘’நான் கிளம்பிய பிறகு, அவர் வலது காலைச் சேணத்தின் அங்கவடியில் வைத்தாரா, அல்லது இடது காலை அங்கவடியிலிருந்து எடுத்து மீண்டும் தரையில் வைத்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியாது.’’
எல்லோரும் அரசருக்காகக் காத்திருந்தார்கள். அரசர் மறுநாள் வந்து, அரசியிடம் சொன்னார்:
‘’பொய்யே பேசாத அறிஞன் மமது, நேற்று உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான்.’’
ஆனால், மமது சொன்ன வார்த்தைகளை, அரசி அரசனிடம் சொன்னாள்.
பொய்யே பேசாத அந்த அறிவாளி மனிதன், அவன் கண்களால் பார்த்ததை மட்டுமே சொல்லியிருக்கிறான் என்பதை அரசன் உணர்ந்துகொண்டான்.

நன்றி http://www.worldoftales.com/African_folktales/African_Folktale_2.html

திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் எண் 48 அக்டோபர் - டிசம்பர் 2015 இல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment