இசபெல் ஆலெண்டே நேர்காணல்
தமிழில் ச, ஆறுமுகம்
இசபெல் ஆலெண்டே ஒரு சிலியன் எழுத்தாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். நவீன இலக்கிய உலகம் முழுவதிலும் நன்கறியப்பட்டவர். இவரது படைப்புகள் 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில படைப்புகள் மாய யதார்த்தவாதத் தளத்தில் இயங்குபவை. இவரது படைப்புகள் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் இருப்பினும் உலகம் முழுவதும் அதிகம் வாசிக்கப்படுகின்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
கியான்னியா பிராஸச்சி என்ற எழுத்தாளர் அவரது யோ யோ போயிங் என்ற நாவலில் ‘’ இசபெல் ஆலெண்டே, கார்சியா மார்க்வெஸை அனுதினமும் கொன்றுகொண்டிருக்கிறார். ‘’ எனக் குறிப்பிடுகிறார். பொலோனோ என்ற விமரிசகர், ‘’ ஆலெண்டேக்கு எழுத்தாளர் என்ற பெருமைக்கு அர்த்தமேயில்லை. அது ஒரு எழுத்து இயந்திரம்.’’ எனக் குறை கூறுகிறார். ஹரால்டு ப்ளூம் என்பவர் ஆலெண்டே ஒரு மோசமான எழுத்தாளர் என்றும் குறுகிய காலத்திலேயே அவர் மறக்கப்பட்டு விடுவாரென்றும் குறிப்பிடுகிறார்.கோன்ஜலோ காண்ட்ரேராஸ் என்ற நாவலாசிரியர் ஆலெண்டே வணிக வெற்றியையும் இலக்கியத் தரத்தையும் ஒன்றாகக் குழப்பித் தவறு செய்வதாகக் குறைப்படுகிறார். இருப்பினும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ஆலெண்டேயை ஒரு ஜீனியஸ் எனக்குறிப்பிடுகிறது. உலகத்தின் அழகுக்குப் பங்களித்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் பிரபலமான விருதாகிய டோரத்தி மற்றும் லில்லியான் கிஷ் பரிசினை அவர் பெற்றுள்ளார் லத்தினோ லீடர்ஸ் மேகசின் என்ற இதழ் அவரை லிட்ரரி லெஜண்ட் எனக் குறிப்பிடுகிறது. பெண்ணியவாதி எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் ஆலெண்டே 28 வயதில் காலஞ்சென்ற அவரது மகள் பாவ்லா நினைவாக ஒரு அமைப்பை நிறுவியுள்ளார். அந்த நிறுவனம் அதிகாரமளிக்கப்பட வேண்டிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் அவற்றை மேலெடுத்துச் செல்வதுமான பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Isabelallende. com என்ற அவருடைய வலைத்தளத்திலிருந்து இந்தக் கேள்விகளும் பதில்களும் மலைகள், காம் இணைய இதழுக்காகத் தமிழாக்கம் செய்யப்படுகிறது. .
என்னுடைய படைப்புகள் தொடர்பாக எண்ணற்ற கடிதங்கள் வாசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதழாளர்களிடமிருந்து எனக்கு வருகின்றன. எல்லாவற்றுக்கும் பதில் எழுதுவதென்பது முடியாத காரியமென்பதால் எனக்கு அதிகமும் வரப்பெறுகின்ற நேர்காணல் வினாக்களைத் தொகுத்துப் பதில் அளிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் இப்பகுதி எல்லோருக்கும் உதவியாக இருக்கும். என்னுடைய வாழ்க்கை மற்றும் படைப்புகள், பணி குறித்துத் தெரிந்துகொள்வதில் அக்கறை கொண்டவர்கள், செலியா கோர்ரியஸ் ஜபட்டோவின் இசபெல் ஆலண்டே – வாழ்க்கையும் ஆர்வமும் என்ற நூலைப் படிக்கலாம்.
கேள்வி. உங்களுடையஉரைநடைக்காக நீங்கள் புகழ்பெற்றிருக்கிறீர்கள். அதைப்போலவே இதர இலக்கிய வகைமைகளைப் படைப்பதிலும் ஆர்வம் கொண்டிருக்கிறீர்களா?
பதில். என் இளமைக்காலத்தில் நாடகங்கள் எழுதியுள்ளதோடு. அவற்றை நான் விரும்பவும் செய்தேன். என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோது குழந்தைகளுக்கான கதைகள் எழுதவும் முயற்சி செய்தேன். ஒவ்வொரு நாள் இரவிலும் நான் அவர்களுக்குக் கதைகள் சொல்வதுண்டு. அது ஒரு நல்ல பயிற்சி என்பதால், அதைத் தொடர்ந்து செய்தேன். 2001ல் எனது `மிருகங்களின் நகரம்` என்ற நாவலை உண்மையில், குழந்தைகள் மற்றும் இளம் பிராயத்தினருக்காகத் தான் எழுதினேன். நான் பல வருடங்களாக நகைச்சுவை எழுதியிருக்கிறேன். இலக்கிய வகைமைகளில் நகைச்சுவை எழுதுவது தான் ஆகக் கடினமானதென நினைக்கிறேன். நான் கவிதை எழுத முயற்சித்ததில்லையென்பதோடு, இனிமேலும் அதைச் செய்வேனென்று நினைக்கவில்லை. .
கேள்வி. நீங்கள் ஸ்பானிஷ் மொழியில் தான் எழுதுகிறீர்களா?
பதில். புனைவுகளை ஸ்பானிஷ் மொழியில் மட்டுமே என்னால் எழுத முடியும். ஏனெனில் அது எனக்கு மிகுந்ததொரு உயிராக்கச் செயல்பாடாக இருப்பதால் அதை என்னுடைய உள்ளூர்ச் சொந்த மொழியில்தான் படைக்கமுடியும். நற்பேறாக உலகம் முழுவதும் அருமையான மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.
கேள்வி. மொழிபெயர்ப்பாளரோடு மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறீர்களா? மார்கரெட் சேயர்ஸ் உங்களின் அநேக நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதை நான் காண்கிறேன்.
பதில். மார்கரெட்டும் நானும் எப்போதும் தொடர்பிலிருந்தோம். எங்களுக்குள் ஒரு மனவியல் தொடர்பிருப்பதாக நான் நம்புகிறேன். அவர் ஒரு நிறைவான பணியைச் செய்திருக்கிறார். அவரது மொழியாக்கங்களைத் திருத்துவதென நான் கனவிலும் நினைக்கவில்லை! இருப்பினும் அநேகமாக இதர மொழிகளில் யார், யார் மொழிபெயர்க்கிறார்களென்றுகூட எனக்குத் தெரியாது. வெளியீட்டாளர்கள் அதைக் கவனித்துக்கொள்கின்றனர். 2010ல் மார்கரெட் ஓய்வு பெற்றார். இப்போது ஆன் மெக்லீன் என்பவர்தான் எனது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்.
கேள்வி. புனைகதை எழுதும் இயல்கருத்தினை – ஒரு உண்மையைச் சொல்வது, பொய் சொல்வது, சிலவகை நடப்புகளைச் சொல்லாமலிருப்பது பற்றி – விரிவாகக் கூறமுடியுமா? இந்தக் கருத்துக்கள் ஒன்றோடொன்று இணைந்து அல்லது மாறுபட்டு இயங்குவது பற்றி நீங்கள் பேசமுடியுமா?
பதில். புனைவுகளில் வாழ்க்கையின் குழப்பங்களுக்குப் படைப்பாளி அளிக்கின்ற, அல்லது தெரிவுசெய்கிற ஏதோ ஒரு ஒழுங்குமுறை, காலவரிசை, அல்லது ஏதோ ஒரு படிமுறைதான் முதல் பொய்யாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராக நீங்கள்(வாழ்க்கையின்) முழுமையாக அல்லது ஒரு பகுதியைத் தேர்வு செய்கிறீர்கள். அந்த விஷயங்கள் முக்கியமானவையென்றும் மீதியுள்ளவை முக்கியமற்றவையென்றும் நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் புரிதலுக்குத் தக்கவாறு அவற்றை எழுதுகிறீர்கள். ஆனால், வாழ்க்கை அப்படியானதல்ல. எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் ஒருசேர ஏதோ ஒரு கலைந்த நிலையில் நிகழ்கின்றன. அங்கே தெரிவு செய்வதெல்லாம் இயலாதது. அதற்கான அதிகாரம் யாரிடமும் இல்லை, வாழ்க்கைதான் அதிகாரத்தலைமையாக இருக்கிறது. ஆகவே, நீங்கள், ஒரு படைப்பாளராக, புனைவு என்பது பொய்தானென ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் பொறுப்புகளிலிருந்தும் விடுதலையாகிக் கட்டுப்பாடுகளற்றவராகிவிடுகிறீர்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். பின்னர், வட்டங்களுக்குள் நடக்கத் தொடங்குகிறீர்கள். வட்டம் பெரிதாகப் பெரிதாக நீங்கள் அதிகமான விரிவான உண்மைகளைப் பெறமுடியும். எல்லைகள் இன்னும் விரியும்போது, நீங்கள் அதிகமாக அதனுள் புழங்கும்போது, எல்லாவற்றையும் சுற்றிச்சுற்றிக் தீரக்காணும்போது உண்மையின் துளிகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகமாகும்.
கேள்வி. உங்களுக்கான அகத்தூண்டுதல்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
பதில். நான் எதுவானாலும் நன்கு காதுகொடுத்துக் கேட்கும் ஒரு நபர். அதோடு கதை தேடும் வேட்டுவச்சி. எல்லோரிடமும் கதை இருக்கிறது. சொல்கிற முறையில், சரியான தொனியில் கூறினால் எல்லாக் கதைகளும் ஆர்வமூட்டுபவைகளே. நான் செய்தித்தாள்களை வாசிக்கிறேன். செய்திகளில் புதைந்து கிடக்கும் சின்னச் சின்ன கதைகள் கூட ஒரு நாவலுக்குத் தூண்டுதலாக அமையலாம்
கேள்வி. அகத்தூண்டுதல் எப்படிச் செயலாற்றுகிறது?
பதில். நான் ஒரு நாளில் மட்டும் பத்துப்பன்னிரண்டு மணி நேரம் தனியாக அமர்ந்து எழுதுகிறேன். நான் எவரிடமும் பேசுவதில்லை; தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிப்பதில்லை. என்னை மீறி நிகழ்கின்ற ஏதோ ஒன்றின் கருவியாக, வெறும் ஊடகமாகத்தான் நான் இருக்கிறேன். என் வழியாகக் குரல்கள் பேசிக்கொள்கின்றன. அவ்வளவுதான். நான் புனைவாக ஒரு உலகத்தைப் படைக்கிறேன்; ஆனால், அது எனக்குச் சொந்தமானதல்ல. நான் கடவுள் இல்லை; வெறும் கருவி மட்டுமே. அந்த நீண்ட மிகமிகப் பொறுமையான தினசரி எழுதும் பயிற்சியின் மூலமாக என்னைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் எத்தனையோ விஷயங்களைக் கண்டறிந்திருக்கிறேன்; புதிது புதிதாகக் கற்றிருக்கிறேன். நான் என்ன எழுதுகிறேனென்ற உணர்வோடு எழுதுவதில்லை. அது ஒரு வித்தியாசமான நிகழ்முறை — புனைவில் பொய்யுரைப்பதன் மூலமாக உங்களைப்பற்றி, மக்களைப்பற்றி, வாழ்க்கையைப் பற்றி, உலகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி உண்மையான சில சின்னச்சின்ன விஷயங்களைக் கண்டுபிடிப்பதாக இருக்கிறது
கேள்வி. கதைமாந்தர்களைப் பற்றி நீங்கள் பேசமுடியுமா?
பதில். ஒரு பாத்திரத்தை உருவாக்கும்போது அதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கத்தக்க ஒரு மனிதரை வழக்கமாகத் தேடுவதுண்டு. அந்த மனிதர் என் மனத்துக்குள் இருந்தால், அந்தப் பாத்திரத்தை நம்பத்தக்கவகையில் படைப்பது எனக்கு எளிதாக இருக்கிறது. மக்கள் பல்வேறு சிக்கல்களும் தீர்வற்ற குழப்பங்களும் நிறைந்த கூட்டு முழுமையாக இருக்கின்றனர் அவர்களுடைய ஆளுமையின் அனைத்துப் பண்புக்கூறுகளையும் ஒருசேர மிக அரிதாகத்தான் வெளிக்காட்டுகிறார்கள். பாத்திரங்களிலும் அப்படியேதான் அமைக்கப்படவேண்டும்.
பாத்திரங்கள் அவரவர் முழு வாழ்க்கையையும் வாழ படைப்புக்குள் நான் அனுமதிக்கிறேன். நான் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லையென்ற உணர்வு அடிக்கடி எனக்குள் தோன்றுகிறது. கதை எதிர்பாராத திசைகளில் இழுத்துச்செல்கிறது. இங்கே என்னுடைய பணி என்பது அதை அப்படியே எழுதிச்செல்வதுதானே தவிர ஏற்கெனவேயே நான் திட்டமிட்டிருந்த வட்டத்துக்குள் திணிப்பதல்ல.
கேள்வி. நீங்கள் கணிணியில் எழுதுகிறீர்களா?
பதில். நான் எப்போதுமே குறிப்பெழுதிக் கொள்கிறேன். என்னுடைய பணப்பைக்குள் ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்வதுண்டு. ஆர்வமூட்டுவதாக எதையாவது கண்டாலோ கேட்டாலோ, உடனேயே குறித்துக்கொள்வேன். இதழ்களிலிருந்து செய்தித்துணுக்குகளை வெட்டி எடுத்துக் கொள்கிறேன். தொலைக்காட்சியில் செய்திகளைக் கேட்கும்போதும் குறிப்பெடுக்கிறேன். மக்கள் என் காதில் போடுகிற கதைகளின் மீதான குறிப்புகளையும் எழுதிக்கொள்கிறேன். நான் படைப்பொன்றைத் தொடங்கும்போது இந்தக் குறிப்புகள் அனைத்தையும் மீள இழுத்துப் பார்வையிடுகிறேன். ஏனெனில் அவை எனக்கு அகத்தூண்டலைத் தருகின்றன. நான் எனது சொந்த இயலெழுச்சியின் அடிப்படையில் அப்படியே தொடர்ந்து கணிணியில் சுற்றுக்கோடென்று வரையறை எதுவுமில்லாமல் நேரடியாக எழுதுகிறேன். திரையில் கதை எழுதிமுடிந்ததென்றால் அதை அப்படியே அச்சிட்டெடுத்து வாசிக்கிறேன். அப்போதுதான் படைப்பு எதைப்பற்றியதென்று உணர்கிறேன். இரண்டாவது வரைவு மொழி, அழுத்தம், தொனி, ஒலி ஒத்திசைவு எனக் கவனம்கொள்ளும்.
கேள்வி. ஒரு கதைக்கு நல்ல முடிவினைத் தருவது எது ?
பதில். எனக்குத் தெரியாது. சிறுகதையின் முடிவு நாவலினின்றும் வேறுபட்டது. சிறுகதை முழுமையானதாகவே வெளிவருகிறது; அதில் பொருத்தமான முடிவு ஒன்றே ஒன்றுதான். அதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும், உணரவும் முடியும். அந்த முடிவினைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், அங்கே கதையே இருக்காது. அதில், மீண்டும் மீண்டும் செதுக்குவதில் பயன் ஏதுமில்லை. எனக்கு, சிறுகதை என்பது ஒரு அம்பைப் போன்றது. தொடக்கத்திலிருந்தே அதற்கெனச் சரியான திசைவழி இருக்கவேண்டும். அதோடு நீங்கள் எதை இலக்காகக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் மிகச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே ஒரு நாவல் என்றால் அப்படியல்ல. அது, எண்ணற்ற வண்ணங்களில் ஒரு திரைச்சீலைக்கான பூத்தையலிடுவது போல் நாளும் பொறுமையான ஒரு செயல்பாடு. மனதில் ஒரு வரைவுப்படிமத்தை இருத்திக்கொண்டு, மெதுவாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பீர்கள். ஆனால், திடீரென அதைத் திருப்பிவிட்டு, வேறு ஏதோ ஒன்றென உணர்வீர்கள். அது நம்மை ஈர்த்துக்கொள்கிற ஒரு அனுபவம், ஏனெனில், அதற்கெனத் தனியாக, அதற்கே (நாவல்) அதற்கான வாழ்க்கையென ஒன்று இருக்கிறது. சிறுகதையில் அனைத்தும் உங்கள் கைக்குள் இருக்கிறது. இருந்தாலும் நல்ல சிறுகதைகள் மிகச்சிலவாகவே இருக்கின்றன. ஆனால், நினைவிருக்கிற நாவல்கள் பலவாக இருக்கின்றன. சிறுகதையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைவிட எப்படிச் சொல்கிறீர்கள் என்பது அதிமுக்கியமானது. நாவலில் நீங்கள் தவறு செய்திருந்தாலும் ஒருசிலரே அதைக் கவனிப்பார்கள். மகிழ்ச்சிகர முடிவுகள் எனக்குச் சரிப்பட்டுவரவில்லை. பல்வேறு திறப்புகளுள்ள முடிவுகளையே நான் விரும்புகிறேன். வாசகரின் கற்பனையில் நான் நம்பிக்கை கொள்கிறேன்.
கேள்வி. உங்களை அதிகம் பாதிக்கிற படைப்பாளர்கள் யார், யார்? .
பதில். நான் இலத்தீன் அமெரிக்கப் படைப்பாளர்களைப் படித்து வளர்ந்த இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்த நபர். என் காலத்திற்கு முன்பு வரை, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் எங்கள் கண்டத்துக்குள்ளேயே கூடச் சரியாகப் பரவியிருக்கவில்லை. சிலியில் இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளைப் படிப்பது மிகவும் கடினம். இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெருமலர்ச்சிக் காலத்தின் மாபெரும் படைப்பாளர்கள், கார்சியா மார்க்வெஸ், வர்கிஸ் லோசா, கார்ட்டஜார், போர்கே, பாஸ்,ருல்ஃபோ, அமடோ என, இன்னும் எல்லோரும் என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறார்கள்
அது போலவே, பல ருஷ்ய நாவலாசிரியர்கள் என்னைப் பாதித்திருக்கிறார்கள். தாஸ்த்யாவஸ்கி, டால்ஸ்டாய், செகாவ், நெபகோவ், கோகோல், மற்றும் பல்கரோவ். ஆங்கிலப் படைப்பாளர்களில், என் வளரிளம் பருவத்தில் என்னைப் பெரிதும் பாதித்தவர்கள் சர் வால்டர் ஸ்காட், ஜேன் ஆஸ்டின், ப்ரோண்ட் சகோதரிகள், சார்லஸ் டிக்கன்ஸ், பெர்னார்ட் ஷா, ஆஸ்கார் வைல்டு, ஜேம்ஸ் ஜாய்ஸ், டி. ஹெச்.லாரென்ஸ் மற்றும் வர்ஜினியா உல்ஃப். நான் மர்ம நாவல்களை விரும்பியதுடன், அகதா கிறிஸ்டி மற்றும் கோனன் டாயெலின் அனைத்து நாவல்களையும் படித்திருக்கிறேன். ஸ்பானிஷ் மொழியில் மிகவும் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்கள், மார்க் ட்வெயின், ஜாக் லண்டன், எப். ஸ்காட் ஃபிட்ஜெரால்டு போன்ற மற்றும் பலரையும் படித்திருக்கிறேன். ஹார்ப்பர் லீயின் கிண்டலடிக்கும் ஒரு பறவையைக் கொல்லுதல் என்ற நாவல் ஏற்படுத்திய அழியாப்பிம்பம் இப்போதும் என் நினைவிலிருக்கிறது. அந்தப் புத்தகத்தை ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அல்லது அதுபோல மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். இந்தப் புத்தகங்களிலிருந்து கரு மற்றும் வலுவான பாத்திரங்கள் குறித்த ஒரு புரிதலைப் பெறுகிறேன்.
என்னுடைய பதினான்காவது வயதில் லெபனானில், ஆயிரத்தொரு இரவுகளைப் படித்தபோது புதிய கற்பனை வளத்தையும் பாலுணர்வுக் கிளர்ச்சியும் கண்டேன். அந்நாட்டில், அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பள்ளிக்கூடமும் குடும்பமும் தவிர்த்த வேறு சமூக வாழ்க்கை கிடையாது. நாங்கள் திரைப்படங்களுக்குக் கூடப் போவதில்லை. தொல்லைபிடித்த குடும்பத்திலிருந்து தப்பிக்க எனக்கு ஒரே வழி வாசிப்புதான். என்னுடைய வளர்ப்புத் தந்தை, அவருடைய பூட்டிய தனியறைக்குள் மர்மங்கள் நிறைந்ததும் தோலுறையிட்டதுமான நான்கு தொகுதிகளை வைத்திருந்தார். அவை பாலுணர்வைக் கிளறுமென்பதால், நான் பார்க்கவோ படிக்கவோ கூடாதெனத் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள். இருந்தாலும் அந்தப் பூட்டுக்கு ஒரு மாற்றுச்சாவிக்கும், அவர் சுற்றுவட்டாரத்தில் இல்லாதபோது தனியறைக்குள் புகுந்துவிடுவதற்குமான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். நான் கைமின்விளக்கு தான் பயன்படுத்தினேன். பக்கங்களை அடையாளப்படுத்த முடியாதென்பதால் விரைவாகச் சில பக்கங்களைத் தள்ளித் தள்ளி பாலுறவுப் பகுதிகளை விரும்பித் தேடிப் படிப்பேன். என் சுரப்பிகள் பொங்கிப் பெருக, அந்த அதியற்புதக் கதைகளோடு இணைந்து என் கற்பனை காட்டுக் குதிரையாகப் பாய்ந்தது. திறனாய்வாளர்கள் என்னை இலத்தீன் அமெரிக்க செஹராஜேட் எனக்குறிப்பிட்டபோது நான் அதனை மட்டுமீறிய புகழ்ச்சியாக, முகத்துதியாக உணர்ந்தேன்.
நான், என்னுடைய இருபதாவது வயதில் வாசித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பெண்ணிய வாதிகள் சீற்றத்தைப் புலப்படுத்தும் ஒரு தெளிவான இணைப்பு மொழியைத் தந்துள்ளனர். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தந்தைவழி அதிகாரமுறைக்கு எதிராக உணர்கிறேன். சிலியன் பெண்ணிய இதழான பாவ்லாவில் பணியாற்றி ஆணாதிக்க அமைப்புக்கெதிராக என் கருத்துக்களையும் எழுத்தினையும் தீட்டிக்கொள்ளத் தொடங்கினேன். அதுவே என் வாழ்க்கையின் சிறந்த காலம்.
நான் எப்போதுமே திரைப்படங்களை விரும்புபவளாகவே இருக்கிறேன். சிலவேளைகளில் ஒரு பிம்பம், ஒரு காட்சி, அல்லது ஒரு பாத்திரம் எனக்குள்ளேயே பல ஆண்டுகள் தங்கிப் பின் எழுதும்போது எனக்கு அகத்தூண்டலை அளிக்கிறது. உதாரணமாக, ஃபேன்னியும் அலெக்சாண்டரும் படத்தின் அதிசயம் அல்லது காதலில் ஷேக்ஸ்பியர் கதையினுள் இருக்கும் கதை.
கேள்வி. நீங்கள் ஒரு நாவலைத் தொடங்கும்போது என்ன நிகழ்கிறது?
பதில். நாவலைத் தொடங்கும்போது நான் முழுமையாக ஒரு திரிசங்கு(லிம்போ நிலையில்தான் இருக்கிறேன். கதை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பது பற்றியோ அல்லது என்ன நிகழப்போகிறதென்றோ அல்லது நான் ஏன் அதை எழுதிக்கொண்டிருக்கிறேனென்றோ எனக்கு எந்தச் சிந்தனையும் கிடையாது. அந்த நேரத்தில் என்னால் புரிந்துகொள்ளக்கூட முடியாத நிலையில் நான் இருப்பதை, ஆனால், கதையோடு நான் இணைக்கப்பட்டிருப்பதை மட்டும் புரிந்துகொள்கிறேன். அந்தக் கதை, கடந்த காலத்தில் எனக்கு முக்கியமானதாக இருந்தது என்பதாலோ அல்லது வருங்காலத்தில் அப்படி இருக்கப்போகிறது என்பதாலோதான் நான் அதைத் தேர்வு செய்திருக்கிறேன்.
கேள்வி. நீங்கள் ஏராளமான திருத்தங்களை மேற்கொள்கிறீர்களா?
பதில். ஆம். மொழி மற்றும் இறுக்கத்தில் திருத்தங்கள் செய்கிறேன். ஆனால், கதைக்கருவில் செய்வதில்லை. கதை அல்லது பாத்திரங்களுக்கு, அவர்களுக்கே அவர்களுக்கான ஒரு வாழ்க்கை இருக்கிறது. என்னால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது. என்னுடைய கதை மனிதர்கள் மகிழ்ச்சியாகத் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் ஏராளமாகப் பெற்று எப்போதுமே மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆனால், அது அப்படி நிகழ்வதில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், மகிழ்ச்சியான முடிவுகள் எனக்குச் சரிப்படுவதில்லை.
கேள்வி. எழுத்தின் வலியகற்றுந்திறன் குறித்துப் பேசுவீர்களா? அதுவும் குறிப்பாக `பாவ்லா` எழுதியபின். பாவ்லா எழுதுவது மிகவும் கடினமானது என்பதோடு மிகுந்த வேதனையளிப்பதுமென நான் எண்ணுகிறேன்.
பதில். நான் பாவ்லாவை எழுதிக்கொண்டிருக்கும்போது என் உதவியாளர் அலுவலகத்துக்கு வந்து, நான் அழுதுகொண்டிருப்பதைப் பார்ப்பாள். என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘’ நீங்கள் இதை எழுதியே இருக்கக்கூடாது.’’ என்பாள். நான் சொல்வேன். ‘’ நான் அழுகிறேன். ஏனென்றால் நான் மீண்டுகொண்டிருக்கிறேன். எழுதுவதென்பது, நான் துக்கம் அனுசரிக்கும் முறை.’’. அந்தப் புத்தகம் கண்ணீரோடு எழுதப்பட்டது. ஆனால், அனைத்தும் குணப்படுத்துகின்ற ஆறுதலளிக்கின்ற கண்ணீர். அது முடிந்த பின்னர், என் மகள் என் இதயத்துக்குள் உயிரோடு வசிப்பதாக, அவளின் நினைவுகள் பாதுகாக்கப்படுவதாக நான் உணர்ந்தேன். அது எழுதப்பட்டதனாலேயே எப்போதும் நினைவுகொள்ளப்படும். பெயர்கள், இடங்கள், மற்றும் விவரங்களையெல்லாம் என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது. அதனாலேயே என் அம்மாவுக்குந் தினமும் கடிதம் எழுதுகிறேன். பாவ்லாவைப்பற்றி, என் வாழ்க்கையையும் இணைத்து எழுதும்போது, அதை எப்போதைக்குமான பதிவாகச் செய்துவிடுகிறேன். நான் அதை ஒருபோதும் மறப்பதில்லை. அதுதான் ஆன்மாவின் வாழ்க்கை.
கேள்வி. நான் பாவ்லாவை வாசித்தபோது அது எத்தனை தன் வெளிப்பாடாக இருக்கிறதெனக் கண்டு அதிர்ந்துவிடுகிறேன். அந்த வகையான வேதனையை சாதாரணமாக யாரும் பேசுவதில்லை. உங்களுக்கு அனுபவமாகிற மரணம், நோய், துயரம் எல்லாமே பலருக்கும் ஒரு அருங்கொடையாகிவிடுகிறது.
பதில். எனக்குக் கடிதம் எழுதிப்பகிர்ந்துகொண்ட வாசகர்களோடு நான் இணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். வேதனை உலகம் முழுக்க உள்ளது. வலி, இழப்பு, மரணம் எல்லாவற்றையும், நாம் எல்லோரும் அப்படிக்கப்படியேதான் உணர்கிறோம். மருத்துவர்களிடமிருந்து, அந்தப்புத்தகத்தை வாசிப்பதற்கு முன் நோயாளிகளை எப்படி அணுகியிருந்தார்களோ அதுபோல் இனிமேல் ஒருபோதும் அப்படி இருக்கமுடியாதென்று எனக்குக் கடிதங்கள் வந்துள்ளன. பாவ்லோவோடு தங்களை இணைத்து ஒருமைகண்ட இளையர்கள் முதன்முதலாக அவர்களின் சொந்த மரணத்தைப்பற்றி எண்ணியதாக எழுதியிருக்கிறார்கள். அதிகமான கடிதங்கள் உண்மையான இழப்பு எதனையும் அறிந்திராத, ஆனால், குடும்ப உணர்வு இல்லாதது போன்று அல்லது சமூகத்தின் ஆதரவில்லாதது போன்று உணர்கின்ற மிக இளைய பெண்களிடமிருந்து வந்திருந்தன. அவர்கள் மிகவும் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். பாவ்லா அவளது கணவனோடு ஏற்படுத்திக்கொண்ட ஒரு பிணைப்பினைப் போன்று அவர்களும் ஆணுடனான இணைப்பினைக் கோருகிறார்கள். குழந்தைகளை இழந்த துக்கத்தில் தாமும் துயரத்தினாலேயே இறந்துவிடுவோமோ என்றெண்ணியிருந்ததாகச் சில அம்மாக்கள் எனக்கு எழுதியிருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒருவர் இறப்பதில்லை. பெண்மையின் துயரங்களில் ஒரு குழந்தையின் இறப்பு என்பதுதான் மிகமிகப் பழமையானது. கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்கள் குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். தன்னுடைய எல்லாக் குழந்தைகளும் உயிரோடு வாழவேண்டுமென எதிர்பார்க்க முடிவது யாரோ ஒருசில, கொடுத்துவைத்தவர்களுக்குத்தான் வாய்க்கிறது
கேள்வி. பல மதிப்பீட்டாளர்களும் உங்கள் `பாவ்லா`வை மிகச்சிறந்த நூலெனக் குறிப்பிடுகிறார்கள். பாவ்லாவை எழுதும்போது, இதரநூல்களைப் படைக்கும்போது உணர்ந்த்தைவிடவும் அதிகமாக, ஆழமாகப் பாதிக்கப்பட்டீர்களா?
பதில். ஆம். அதைத்தவிர்த்த மீதியெல்லாமே ஒத்திகை பார்ப்பதாகத்தான் இருந்தது. பாவ்லாவை எழுதி முடித்தபிறகு, மீண்டும் எழுதுவதை மிகக்கடினமானதாக உணர்ந்தேன். அதைப்போன்ற, எனக்கு முக்கியமானதாக இருக்கிற வேறு எதைப்பற்றி எழுதமுடியுமென்ற கேள்வி எனக்குள் இருந்தது. இருப்பினும் மூன்றாண்டுகள் எழுத்துப்பாலைக்குப் ( writer`s block) பின், மீண்டும் என்னால் எழுத முடிந்தது
கேள்வி. படைப்பாளர் எதை எழுத வேண்டுமெனத் தேர்ந்தெடுப்பதாக நினைக்கிறீர்களா அல்லது படைப்பு உங்களைத் தேர்வுசெய்வதாக நினைக்கிறீர்களா?
பதில். கதைகள் என்னைத் தேர்ந்தெடுப்பதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி. ஆக, நீங்கள் முதலாவதாகக் கதைசொல்லி. இரண்டாவதாகத் தான் எழுத்தாளர்.
பதில். ஆம். கதைசொல்வது எளிமையானது. வேடிக்கையுங்கூட.. எழுதுவதில் ஏராளமான வேலை!.
கேள்வி. பத்திரிகையாளர் என்ற பின்னணி உங்களுக்கு உதவிகரமாக இருக்கிறதா?
பதில். என்னுடைய வேலை உணர்வுகளோடுதான் ; மொழிதான் கருவி. கதை எப்போதுமே எனக்கு மிகவும் முக்கியமான ஏதாவதொரு மிக ஆழமான உணர்வு குறித்ததாகவே இருக்கிறது ஒரு இதழாளர் எப்படியொரு திறமைமிக்க முறையில் மொழியைப் பயன்படுத்துவாரோ அந்தவகையில் கதையை எழுத முயற்சிக்கிறேன். உங்களுக்குக் கிடைப்பது மிகக் குறைந்த வெளியும் காலமுமே. அதற்குள் நீங்கள் வாசகரை மடக்கிப் பிடிப்பதோடு, பிடியிலிருந்து அவர் நழுவிவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். மொழியைக் கொண்டு, அதைத்தான் நான் செய்கிறேன்; அழுத்தத்தை, பரபரப்பை ஏற்படுத்துகிறேன். இதழியல் மூலமாக, குறிப்பிட்ட ஒரு பொருள் குறித்து எவ்வாறு ஆய்வு செய்வது, ஒரு நேர்காணல் பேட்டியை எப்படி நிகழ்த்துவது, விஷயங்களை எப்படி கவனித்து, உள்வாங்கிக் கொள்வது, சாதாரணச் சாலை மனிதர்களோடு, எப்படி உரையாடுவது, எனப் பல நடைமுறை விஷயங்களைக் கற்றிருக்கிறேன்
கேள்வி. அனுபவங்களுக்காகத் திறந்து வைத்துக்கொள்வதென நீங்கள் பேசுகிறீர்கள், அதாவது ஒரு மாய உலகத்துக்காக உங்களைத் திறந்து வைப்பதாகக் கூறுகிறீர்களா? உண்மையிலேயே ஆவிகள் (spirits) உட்புகுந்து வார்த்தைகள், பிம்பங்கள் மற்றும் காட்சிகளை உங்களுக்காகக் கூறுகின்றனவா?
பதில். ஆம். ஒரு குறிப்பிட்ட வகையில் அப்படித்தான். அதில் அறிவுசார்ந்த நிகழ்முறை ஒன்றும் இருக்கிறதுதான். ஆனால், கதை சொல்லுதலில் ஏதோ ஒரு மாய மந்திரமும் இருக்கிறது. நீங்கள் இன்னொரு உலகத்துக்குள்ளிருந்து வடித்தெடுக்கிறீர்கள். நீங்கள் கதைகளின் கூட்டுத்தொகுதிக்குள்ளிருந்து எடுக்கும்போது, பிறருடைய கதைகள் உங்கள் எழுத்தின் ஒரு பகுதியாகி உங்கள் கதை முழுமையாகிறது. அப்படிப் பிறருடைய கதைகள் உங்கள் கதையின் ஒரு பகுதியாகும்போது, உங்கள் கதை உங்களுடையது மட்டுமல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் புதிதாக எதையும் உருவாக்கிவிடவில்லை என்றொரு உணர்வு எனக்கிருந்தாலும், மற்றொரு கோணத்தில் சில விஷயங்களை வெளிக்கொணர்கிறேன். அதாவது அவை ஏற்கெனவேயே அங்கே இருக்கின்றன. என்னுடைய வேலை என்பது அவற்றைக் கண்டுபிடித்து எழுத்திற்குக் கொண்டு வருவதுதான். ஆனால், அவற்றை நான் உருவாக்குவதோ சரிப்படுத்துவதோ இல்லை. பலவாறும் என் வாழ்க்கையிலும் என் படைப்புகளிலும் நிகழ்ந்த விஷயங்கள், எதுவானாலும் நிகழக்கூடியவையே என நிரூபணமாகியுள்ளன. நான் எல்லாப் புதிர்களுக்குமாக விரியத்திறந்தே இருக்கிறேன். நீங்கள் நான் செய்வதைப்போல ஒரு நாளில் பல, பலமணி நேரங்கள், தனிமையாக மவுனத்துக்குள் புதைந்திருந்தால் அந்த உலகத்தை நீங்களும் காணமுடியும். நீங்கள் பிரார்த்தனையில் அல்லது தியானத்தில், கன்னிமாடம், துறவியர்மடம், அல்லது வேறு ஏதோ ஒரு அமைதியான இடத்தில் தனிமையில் நேரத்தைச் செலவிட்டால், குரல்கள் கேட்கவும் காட்சிகள் காணவுமான ஒரு நிலையை அடைவீர்கள். ஏனென்றால், தனிமையும் மவுனமும் அந்த விழிப்புணர்வுக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.
சில நேரங்களில் நான் ஏதோ ஒன்றை எழுதுகிறேன். அது முழுக்க முழுக்க எனது கற்பனைதானென்று நடைமுறைசார்ந்த தீர்மானத்திலிருப்பேன். மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பின்னர், அது உண்மையானதெனக் கண்டறிகிறேன். அது நிகழும்போது நான் பயந்து, பதறிவிடுகிறேன். ‘’ இது என்ன? நான் எழுதியதாலா அவை நிகழ்கின்றன? என் வார்த்தைகளில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’’ என நினைக்கிறேன். ஆனால், என் அம்மா, ‘’ இல்லை, நீ எழுதியதால் அல்ல, அவை நிகழ்வது. உனக்கு அத்தகைய சக்தி கிடையாது. அப்படியான ஆணவங் கொள்ளாதே. இதில் என்ன நடக்கிறதென்றால் உன்னால் அவற்றைப் பார்க்க முடிகிறது, மற்றவர்களால் முடியவில்லை, அவ்வளவுதான், இதுவும் ஏனென்றால், இந்தச் சத்தம் மிகுந்த உலகில் அவர்கள் வேறு வேலைகளில் கவனமாக உள்ளனர். அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை.’’ என்கிறார். என்னுடைய பாட்டி கண்ணுக்குப் புலனாகாததையும் காணுந்திறனுடையவர். அவர் எழுதியதில்லையென்றாலும், அவரால் விஷயங்களை யூகிக்க முடிந்தது. தெரியாத சம்பவங்கள், உணர்வுகளுக்குள்ளிருந்து அவரால் (தகவல்கள்) பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. அவர் விழிப்போடிருந்திருக்கிறார். இது அதிகபட்ச விழிப்புடன் இருப்பதைப் பொறுத்ததென்றே நான் உணர்கிறேன்.
கேள்வி. உங்களின் வளர்ப்புத்தந்தை உங்களை ஒரு மித்தோ மேனியாக் ( அதிகமாகப் பொய்பேசும் மனநிலை உளநோயாளி) எனக் கூறியிருக்கிறாரே.
பதில். ஆம். என்னை ஒரு பொய் பேசுபவள் என்றுதான் அவர் சொல்கிறார். ,நான் முதன்முதல் நினைவுக்குறிப்பாக பாவ்லாவை எழுதிக்கொண்டிருந்தேன். நினைவுக்குறிப்புகளில் ஒருவர் உண்மையை மட்டுமே எழுதவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. என்னுடைய தாயும் வளர்ப்புத் தந்தையும் நான் எழுதிய ஒவ்வொரு பக்கத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்தனர். என்னுடைய வாழ்க்கையை, என்னுடைய குழந்தைப்பருவத்தை நான் என்னுடைய பார்வையில் புரிந்துகொண்டதற்கும் அவர்கள் பார்த்ததற்கும் முழுக்க முழுக்க வேறுபாடுகள் இருந்தன. முனைப்பான கூறுபாடுகள், உணர்வுகள், அவற்றையெல்லாம் இணைத்த கயிறுகள் பின்னிய கண்ணுக்குத் தெரியாத ஒரு வலை எல்லாவற்றையும் நான் கண்டேன். இது உண்மையின் மற்றொரு பக்கம்.
கேள்வி. ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் ஒளிமிகுந்த ஒரு நினைவு குறித்து, அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நின்று ஒளிர்வதாகப் பேசுகிறார். நீங்கள் உங்கள் குழந்தைப் பருவச் சம்பவங்களை நினைவுகூர்வதில் வேறுபாடுகள் இருப்பதாக நான் கருதுகிறேன். உதாரணமாக உங்கள் வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்த ஒரு பொறியில் (contraption) நீங்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்ததாக ஒரு பயமுறுத்தும் நினைவு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், உங்கள் வளர்ப்புத் தந்தை அதனை ஒரு மிகச்சரியான பாதுகாப்புக் கருவியென நினைவுகூர்கிறார். நீங்கள் உணர்வுத் தளத்தில் அப்படியாக உணர்ந்ததை ஒருவேளை நினைவுகொள்கிறீர்கள் போலும். உண்மையில் நீங்கள் ஒரு பாதுகாப்பான கருவிக்குள்ளிருக்கும்போது உங்கள் கழுத்தைக் கட்டித் தொங்கவிடப்பட்டதான ஒரு உணர்விலிருந்திருப்பீர்களாக இருக்கலாம்.
பதில். மிகச்சரியாக அப்படித்தான். அதுபோன்ற பல விஷயங்கள் என் எழுத்துகளில் உள்ளன. உதாரணமாக ஒரு கதையை நான் நினைவில் வைத்திருப்பேன், ஆனால், இடம், நாள், நபர் அல்லது பெயரை என்னால் நினைவுகொள்ள முடியாது. ஆனால் அந்தக் கதைபற்றித் தெளிவான ஒரு நினைவு இருக்கும்.
கேள்வி. வேறு சில நபர்கள் தேதி, அவர்கள் அன்று என்ன ஆடை அணிந்திருந்தார்கள் என்பதைக்கூட நினைவுகூர்கிறார்கள்.
பதில். அவர்கள் மெய்ம்மைகளை மட்டும் நினைவு கொள்கிறார்களாக இருக்கலாம். நான் அந்தச் சம்பவத்தால் என்ன கற்பனைக்காட்சிக்குட்பட்டேனோ – என்னுடைய பார்வையிலான உண்மையை மட்டும் நினைவுகொள்கிறேனாக இருக்கலாம்
கேள்வி. ஆனால், முடிவில், ஈவா லூனா நாவலில் போல முதலில் ஒன்றைச் சொல்கிறீர்கள், பின்னர் …….
பதில். ‘’அது அப்படி நிகழவில்லையாக இருக்கலாம்.’’ அது அப்படி நிகழவில்லையாக இருக்கலாமென்றே எப்போதும் நான் உணர்கிறேன். என் கணவர், வில்லியை நான் எப்படிச் சந்தித்தேன் என்பதற்கு என்னிடம் ஐம்பது வகையான தோற்றங்கள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையானவையென என் கணவர் கூறுகிறார்.
கேள்வி. இலத்தீன் அமெரிக்காவின் அரசியல் குழப்பங்களைக் கூறுகின்ற உங்களின் முதல்கட்ட நாவல்களில் அரசாங்கம் நம்பிக்கைக்குரியதாக இல்லாமல் முரண்பாடுகள் கொண்டதாக இருக்கிறது. அதில், நீங்கள் என்ன செய்தாலும் (தலைகீழாக நின்றாலும்) அரசைப் புரிந்துகொள்ள முடியாது என்ற ஒரு காஃப்கா உணர்வு இருக்கிறது. உலகம் எவ்விதத்திலும் சார்புகொள்ளவியலாத ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிகச் சார்பு கொள்ளக்கூடியதாக ஆன்மவுலகம் இருப்பதாக நீங்கள் காண்கிறீர்களா? அந்த முடிவற்ற திட்டம் ஆன்மவுலகத்தில் ஏற்கப்படக்கூடிய ஒன்றாகவும் உண்மையுலகில் அப்படியாகாத ஒன்றாகவும் இருக்கிறதா?
பதில். இது ஒரு கடினமான கேள்வி. ஆன்ம உலகமென்பது நன்மை, தீமை என எதுவுமே இல்லாத ஒரு இடம். நம் கண்களுக்குக் கறுப்பும் வெள்ளையுமாகத் தெரியும் உண்மையான உலகம் போன்றதல்ல அந்த உலகம். அங்கே கண்டிப்பான விதிகளென்று எதுவுமில்லை. அந்தப் பார்வையில், முடிவற்ற திட்டம் – அது ஒரு கிண்டல்- என்னுடைய `முடிவற்ற திட்டம்` என்ற நாவலில், போதகரால் சொல்லப்படுகிற யோசனை. ஆன்மவுலகில் செயல்நோக்கம் மட்டுமே உள்ளது. அது இருக்கிறது, அவ்வளவுதான். அங்கே நன்மை, தீமை என்ற உணர்தல் இல்லை. அங்குள்ள ஒவ்வொன்றுமே ஒரு வகையான அதியுறுதிகொண்டவையாக, அசைவற்ற தன்மையில் இருக்கின்றன. அங்கே விஷயங்கள் இரட்டைத்தன்மைகளோடு, அதாவது மென்மை வாய்ந்ததாக, குவிமையமில்லாததாக இருப்பதால் அது ஒரு பாதுகாப்பான பகுதி. அங்கே நீங்கள் எதிலும் முடிவெடுக்கவேண்டியிருக்காது. .விஷயங்கள் இருக்கின்றன, அவ்வளவுதான், நீங்கள் எப்படியோ அங்கே மிதக்கிறீர்கள் – இதை மிகவும் குறிப்பாகத் தெரிவிப்பது எப்படியென எனக்குத் தெரியவில்லை – நீங்கள் அங்கே இருக்கிறீர்கள், அவ்வளவுதான். அதுவும் மிக, மிக மென்மையான தன்மையில். எனக்கு அது மிக்கப் பாதுகாப்பான ஒரு இடம். அந்த இடத்திலிருந்துதான் கதைகள் வருகின்றன. அதுவே அன்பின் இருப்பிடம்,
இது காலத்துக்கு ஒவ்வாததாக, மிகப் பொருத்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால், அன்பு, வன்முறை என்ற இரண்டு விஷயங்கள் எனக்கு மிகமிக முக்கியமானதாக என் வாழ்க்கையைத் தீர்மானித்திருக்கின்றன. துயரம்,வலி, வேதனை, மரணம் எல்லாமே இருக்கின்றன; ஆனால் அதற்கு மற்றொரு இணையான பரப்பில் வேறொன்று இருக்கிறது. அதுதான் அன்பு. அன்பின் வடிவங்கள் பலவாக இருக்கின்றன. ஆனால், நான் குறிப்பிடுவது நிபந்தனையற்ற அன்பு. உதாரணமாக, நாம் மரத்தை நேசிப்பது போன்றது. மரம் நகர்ந்திருக்க வேண்டுமென்றோ, அல்லது எதையாவது செய்யவேண்டுமென்றோ, அல்லது அழகாயிருக்கவேண்டுமென்றோ நாம் எதிர்பார்ப்பதில்லை. மரம் என்பது வெறுமனே மரம். அது மரம் என்பதால், அதை நாம் நேசிக்கிறோம். அந்த வகையிலேயே நீங்கள் ஒரு விலங்கினை நேசிக்கிறீர்கள். அதே வகையில்தான் நாம் குழந்தைகளை நேசிக்கிறோம். உறவு மேலும் மேலும் சிக்கலானதாக மாறும்போதுதான், அதிகம் எதிர்பார்த்து அதிமாகக் கேட்கிறோம். உங்கள் அன்புக்கு மாற்றாக அல்லது ஏதோ ஒன்று வேண்டுமென்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ அதே அளவுக்கு நீங்களும் நேசிக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் உங்களிடம் இருக்கின்றன.
. அன்பின் உலகமாக இருக்கிற அந்த ஆன்ம உலகில் நிபந்தனைகள் இல்லை. என் பேரன், பேத்திகளை நான் நேசிக்கின்ற அதே வகையிலான அன்பைச் சொல்கிறேன். அவர்கள் மிகச்சரியாக இருப்பதாக நான் எண்ணுகிறேன். அவர்கள் வளர்கிறார்களா அல்லது அப்படியே இருக்கிறார்களா என்பது ஒரு பொருட்டில்லை. ஏனென்றால், அவர்கள் வயதுவந்தவர்களாக, பெரியவர்களாக ஆனபின்பும்,அவர்கள் பிறந்த போது கைகுழந்தைகளாக எப்படியிருந்தார்களோ, அப்படியே அவர்களை என்னால் நோக்கமுடியும். ஆன்மாவுக்கு வயது இல்லை. நான் சொல்ல விரும்புவது அதைத்தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றை ஆழமாகவும் முழுமையாகவும் நேசிக்கும்போது, நாம் அதன் சாராம்சத்தை நேசிக்கிறோம்.
கேள்வி. நீங்கள் மனித சக்திக்கும் அப்பாற்பட்டு உள்ளுணர்வுகளால் மட்டுமே புரிந்துகொள்ளப்படுவதைப் பற்றிப் பேசுகிறீர்களென நினைக்கிறேன். அதாவது விஷயங்களுக்கு மேலாக உயர்ந்து, நடப்பியல் உலகைக் கடந்து அதற்கும் அப்பால் அலைகிற ஒரு மனநிலைக்குச் சென்று உணர்வுகளையும் உணர்வுக் கிளர்ச்சிகளையும் புரிந்துகொள்வது பற்றியது. வேறெந்தப் பண்புகளையும் விட அதிகமாக அந்தப் புரிதலிலேயே உங்கள் நாவல்கள் விவரிக்கப்படுவதாக நீங்கள் சொல்வீர்களா?
பதில். என் படைப்புகளை யதார்த்தவாதப் படைப்புகளாகவே நான் காண்கிறேன். அவற்றை மாய யதார்த்தவாதமென வகைபிரிப்பது வியப்பாகத்தானிருக்கிறது. மெக்சிகோவில் பிறந்திருந்தால் காஃப்கா ஒரு யதார்த்தவாதப் படைப்பாளராக இருந்திருப்பாரெனச் சிலர் கூறுகிறார்கள். ஆக, வகைபிரிப்பது, நீங்கள் எங்கே பிறந்திருக்கிறீர்களென்பதை அந்த அளவுக்குச் சார்புடையதாக இருக்கிறது.
கேள்வி. `அன்பாலும் நிழல்களாலும்` ஐரீன் மற்றும் ஃபிரான்சிஸ்கோ இருவரையும் நாவலின் முடிவில் முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் சிற்றுந்தினுக்குள் ஒருவரையொருவர் `இது யாரென` வியப்புடன் பார்க்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் உடல்ரீதியாக உணர்ந்துகொள்ளவில்லையென்றாலும் ஆன்மாக்களை உணர்ந்துகொள்கின்றனர். இந்த மிக முக்கியமான கூற்று நாவலை மிக யதார்த்தமான ஒன்றாகச் செய்கிறது.
பதில். எனது `அன்பாலும் நிழல்களாலும்` நாவலில், அதிகமாக உணர்ச்சிவசப்படுவதாகவும் அரசியற்படுத்தியுள்ளதாகவும் என்னைக் குற்றம் சொல்கின்றனர். ஆனால், அந்தப் புத்தகத்தின் மீது எனக்கு ஒரு பரிவு உள்ளது. முதலாவதாக, அந்தக் கதை உண்மையானது. சிலியில் நிகழ்ந்து, நான் ஆய்வு செய்திருந்த ஒரு அரசியல் குற்றம் தொடர்பானதுதான் அந்தக் கதையின் மையம். நாவலின் பாத்திரங்கள் உண்மையானவை. மேற்கொண்டு, வில்லியை என் வாழ்க்கையில் கொண்டு சேர்த்ததும் அதுதான் என்பதாலும், எனக்கு முக்கியமானது. வில்லி அந்த நாவலைப் படித்துவிட்டுத்தான் அதன் மீது காதல் கொண்டு, அதைத்தொடர்ந்து என்மீது காதல் கொண்டார். இன்னும் கடைசியாக, எழுதிய சொற்கள் எவ்வளவு சக்தி மிக்கதாகின்றன என்ற விழிப்புணர்வை – நாம் பேசிக்கொண்டிருக்கின்ற அந்த உலகத்திலிருந்து எப்படிப் பெற்றுக்கொள்வதென்றும், விஷயங்களை எப்படித் துலக்கிக் கண்டுபிடிப்பதென்றும் எழுதுவதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற அந்தக் கூட்டுப்புரிதலோடு நாம் இணைக்கப்படாமலிருந்தால் இயலாமற் போயிருக்கும் என்ற விழிப்புணர்வை என் வாழ்வில் கொண்டுவந்ததற்காகவும் அந்த நாவல் எனக்கு முக்கியமானது.
கேள்வி. மிகவும் அடக்கப்பட்ட பின்னணியிலிருந்து வந்திருந்ததால், பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டும் காட்சிகளை எழுதுவதற்குக் கடினமாக இருக்கிறதென ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். ஃபிரான்சிஸ்கோ, ஐரீன் இருவரும் காதல்செய்வதை, கனத்த உருவகப்பின்னணியில் மிகவும் அழகாக, அப்படியே காற்றில் மிதக்கும் தன்மையில் சொல்லப்பட்டிருப்பதை, பிற்கால எழுத்திலுள்ள காட்சிகளோடு ஒப்புநோக்குகையில், பாலுணர்வுக்கான தீனியை எழுதுவதற்குரிய திறமையை வளர்த்துக்கொண்டுள்ளதால் நீங்கள் அந்த அடக்குமுறைத்தன்மையை இழந்துவிட்டதாகச் சொல்வதே சரியெனத் தோன்றுகிறது. இது தெரிந்தே, வேண்டுமென்றே செய்யப்பட்டதா?-
பதில். இல்லை. அது படைப்பைப் பொறுத்ததென்றே நான் நினைக்கிறேன். ஒவ்வொரு படைப்பும் எழுதப்படுவதற்கென அததற்கான தனி வழிமுறையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையும் சொல்லப்படுவதற்கெனத் தனிமுறையைக் கொண்டுள்ளது. நாம் எந்த முறையில், எப்படியான தொனியில் கதைசொல்ல வேண்டுமென்பதை அந்தக் கதையே தீர்மானிக்கிறது. மிகவும் இளையவர்களான ஃப்ரான்சிஸ்கோவும் ஐரீனும் ஆரம்பத்தில் ஒருவர் மீது ஒருவர் காமம் கொண்டவர்களாக இருக்கின்றனர். பின்னர், காதல் கொள்கின்றனர் அவர்கள் பாலுறவு கொள்ளும்போது, உண்மையிலேயே அவர்கள் காதலாகிவிட்டனர். அதைப்போலவே, வாழ்க்கையில், முதன்முதலாக, அடக்குமுறை, வன்முறை, வதை, மரணம் என்ற கொடுமைகளும் அவர்களைத் தீண்டுகின்றன. காதலில் ஈடுபடுவது அவர்களை நரகத்திலிருந்து வாழ்க்கைக்கு, அன்பென்னும் சொர்க்கத்திற்கு மீட்டெடுப்பதாக இருக்கிறது. பிற்காலத்தில் நிகழும் சம்பவங்களால், அவை அழிக்கப்படுகின்றன. காட்சி எதனால் அப்படிச் சொல்லப்படுகிறதென்றால், நான் அந்த உணர்வோடேயே சொல்லியிருந்தாலும் , இல்லாவிட்டாலும், அது யூரிடைசின் புராணக்கதையில் ஆர்ஃபீயஸ், நரகத்திற்குச் சென்று அவனுடைய காதலியை மீண்டும் உயிர்பெறச் செய்ததைப் போன்றதுதான்.
கேள்வி. ஒரு விரிவுரையின் போது, இனிமேல் சிறுகதைகள் எழுதப்போவதில்லையெனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த இலக்கிய வகைமைக்குத் திரும்பவே திரும்பக்கூடாதெனப் பிடிவாதமாகவா இருக்கிறீர்கள்?
பதில். எனக்குத் தெரியாது. நான் ஒரு விஷயத்தை எப்போதுமே செய்வதில்லையெனச் சொல்லியிருக்கக் கூடாதுதான். சிறுகதைகள் உங்களிடம் முழுமையாக வருகின்றன. ஒரு நாவல் என்பது வேலை – வேலை, வேலை, வேலை – பின்னர் ஒருநாள் அது முடிந்துவிடும். அவ்வளவுதான். அது முடிந்துவிடுகிறது. ஆனால், ஒரு சிறுகதை உங்களுக்கு ஏதோ ஒன்று, ஃப்ளூ காய்ச்சல் தொற்றுவதுபோல. சிறுகதைக்குத் தூண்டுதல் தேவைப்படுகிறது. திடீரென மின்னலாக ஒரு தெளிவு, ஒரு சம்பவத்தை முற்றிலும் எதிர்பாராத வேறொரு கோணத்தில் பார்க்கவைக்கிறது. நீங்கள் அதைத் தாண்ட முடியாது. அது உங்களுக்கு நிகழ்கிறது. நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்கிறீர்கள். சிலர் நடனமாடுவதைக் காண்கிறீர்கள். திடீரென்று அவர்களுக்கிடையிலான உறவுகளைப் புரிந்துகொள்ளுகிறீர்கள், அல்லது, அந்த அறையிலிருந்த வேறு எவருக்குமே தட்டுப்படாத ஒன்றை நீங்கள் நுழைபுலங்கொள்கிறீர்கள். அதன் தொடர்ச்சியாக உங்களிடம் சிறுகதையொன்று முகிழ்க்கிறது.
கேள்வி. ஈவா லூனாவின் கதைகள் பற்றிச் சொல்லுங்களேன்.
பதில். அந்தக் கதைகளில் கடைசிக்கதை தவிர மீதியெல்லாமே எனது முந்தைய நாவலின் முக்கியக் கதை மாந்தரான ஈவா லூனாவின் குரலில் எழுதப்பட்டவை. கடைசிக்கதை, ரோல்ஃப் கார்ல் சேற்றில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுமியைக் காண்பதும் அவள் இறப்பதற்கு உதவுவதும் பற்றிய கதை. அது அவரது பார்வையில் எழுதப்பட்டது.அந்தக் கதை கொலம்பியாவில் 1985ல் உண்மையில் நிகழ்ந்த ஒன்று. நெவேடோ ரூய்ஜ் என்ற ஒரு எரிமலை வெடித்துக் கக்கியதில், ஏற்பட்ட சேறு ஒரு கிராமத்தை முழுமையாக மூழ்கடித்துவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போயினர். அநேக உடல்களும் மீட்கப்படாமல், கடைசியாக, அந்தப் பகுதி முழுவதையும் கல்லறையாக, ஒரு புனித இடமாக அறிவித்துவிட்டனர். பலியானவர்களில் ஒமேரா சான்ச்சேஸ் என்ற ஒன்பது வயது சிறுமியும் ஒருவர். பெரிய கறுப்புக் கண்களும் கறுத்துச் சுருண்ட குட்டை முடிகளும் கொண்ட இந்தச் சிறுமி சேற்றில் மாட்டிக்கொண்டு நான்குநாட்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள். அதிகாரிகளால் ஒரு குழாயை உள்ளே செலுத்திச் சேற்றையும் தண்ணீரையும் வெளியேற்றி, அவளைக் காப்பாற்ற முடியவில்லை. இருந்தாலும் ஊடகங்கள் ஹெலிகாப்டர்களில், வானூர்திகளில், பேருந்துகளில் தொலைக்காட்சிப் புகைப்படக்கருவிகளைக் கொண்டுவர முடிந்தது. உலகம் முழுவதுமுள்ள ஊடகப்பார்வையாளர்கள் நான்கு நாட்களுக்கு அந்தப் பெண்ணின் மரண வேதனையைக் கண்டனர்..
கேள்வி. நீங்கள் ஸ்பானிஷ்மொழியில் எழுதுகிறீர்கள். ஆனால், அமெரிக்காவில் ஆங்கிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உலகின் பெரும்பான்மையினர் சாதகமற்றதெனக் கருதும் ஒன்றைச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் உங்கள் திறமையில் வியந்து நிற்கிறேன். இரண்டாம் மொழியில் வசிப்பதை அநேகம் பேர்களும் ஓரங்கட்டப்பட்டதான, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதான நிலையாகத்தான் உணர்வார்கள். .
பதில். ஆனால், அது உயர்வானது. ஆற்றோடு அடித்துச் செல்லப்படுவதை யார் விரும்புவார்கள்? அடுத்த பத்தாண்டுகளில் இந்த நாடு எதிர்கொள்ளவிருக்கிற – குற்றங்கள், வன்முறை, மதிப்புகளின் இழப்பு, குடும்பத்தின் அழிவு, பதின் வயதுக் கர்ப்பம், போதை மருந்துகள், எய்ட்ஸ் – பிரச்னைகளைப்பற்றி ஒருநாள் தொலைக்காட்சியில் அற்புதமான ஒன்றைக் கேட்டேன். யாரோ ஒருவர் சாதாரணத்தினும் மேம்பட்ட ஒன்றைக் கூறினார். ‘’புதிய குடியேற்றவாசிகளுக்கு இந்தப் பிரச்னைகளெல்லாம் இல்லையென்பதைக் கவனித்திருக்கிறீர்களா? முன்காலத்தில், நமது தாத்தாவுக்கும் தாத்தா, முப்பாட்டனார்களெல்லாம் எப்படியான ஒரு வலிமையோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்தார்களோ, அதுபோன்ற கருத்துக்களும் வலிமையும் கொண்டு அவர்கள் வருகிறார்கள். ஓரங்கட்டப்பட்டதாக இருப்பதென்பது புதிய குடியேற்றவாசியாக இருப்பதைப் போன்றது. ஓரங்கட்டப்படுவதை ஏதோ எதிர்மறைத் தீமையெனக் கருதி அதிலேயே உட்கார்ந்திருக்காமல் அதனை நேர்த்திசையான ஒன்றாக மாற்றிக்கொண்டால், அது மிகுந்த வலிமை அளிக்கிற ஒரு அற்புதமான ஊற்றுக்கண்ணாகிவிடும்.
கேள்வி. இலக்கியத்தில் பெண்குரல்பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். அந்தப் பார்வையை உள்வாங்கியே நீங்கள் வெற்றிகரமாக எழுதியிருக்கிறீர்கள். `முடிவற்ற திட்ட`த்தில் ஆண்குரலில் எழுதுவது கடினமாக இருந்ததா?
பதில். இல்லை, அதில் எந்தக் கடினமும் இருப்பதாக நான் காணவில்லை. `ஆவிகளின் வீட்`டிலும் ஆணின் பார்வையில், ஆணின் குரலில் எழுதியிருக்கிறேன். அந்தப் படைப்பில் எஸ்டெபன் ட்ரூபா விவரிக்கிறார். `முடிவற்ற திட்ட`த்தில் அது எனக்கு எளிதாக இருந்தது. ஏனென்றால், எனது கணவரையே வழிகாட்டியாகப் பெற்றிருந்ததுதான். ஆணா, பெண்ணா எனப் பால்வகையில் பார்க்கும்போது வேறுபாடுகளைவிட ஒற்றுமையே அதிகமாயிருப்பதை நான், பின்னர்தான் உணர்ந்தேன். இன்றியமையாத தேவை அடிப்படையில், மனிதர்கள் ஒன்று போலவே ஒத்திருக்கின்றனர். ஆனால் ஒப்புமைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்குப் பதிலாக நாம், வேற்றுமைகளிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என் கணவர் வில்லி கார்டோன் அடிப்படையில் அமைந்த அந்த முக்கிய ஆண்பாத்திரத்துக்குள் நான் புகுந்தபோது, முப்பது வருடங்களுக்கும் மேலாக அவருடன் வாழ்ந்ததைவிடவும் அதிகமாகப் புரிந்துகொண்டேன்.
கேள்வி. நாம் ஏற்கெனவே தொடங்கிய நல்லதொரு இடமாகிய ஆவிகளின் உலகத்துக்கே திரும்பிவிடலாமெனத் தோன்றுகிறது. ஆவி உலகத்தின் பண்பமைவாக பால்வகையற்றிருக்குமென்பதையும் சேர்த்துக் கொள்வீர்களா?
பதில். ஆன்ம உலகில் இனம் அல்லது வயது ஒரு கேள்வியாக இல்லாததைப் போலவே பால்வகைப்பாடும் ஒரு கேள்வியாக எழ வாய்ப்பில்லை. என் வாழ்நாள் முழுவதும் பெண்ணியப் பிரச்னைகளுக்காகப் போராடும் ஒரு பெண்ணியவாதியாகவே இருந்திருக்கிறேன். இளமையாக இருந்தபோது, மிகுந்த ஆக்ரோஷத்தோடு போராடுவேன். அப்போது நான் ஒரு போராளியாகவே இருந்தேன். நாம், ஆண்களும் பெண்களும் புத்தாய்வு மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாததும் நம்மை நெருக்கத்தில் கொணர்வதுமான விஷயங்கள் குறித்து அதிகமான விழிப்புணர்வுடன் உள்ளேன். அதற்காக என்னைத் தவறாக எதைபோட்டுவிடாதீர்கள். நான் ஒரு பெண்ணியவாதி தான். அதில் பெருமை கொள்கிறவளும்தான்.
கேள்வி. திறனாய்வாளர்கள் உங்கள் எழுத்து நடையினை மாய யதார்த்தவாதமென வரையறை செய்கிறார்கள். உங்களின் எல்லாப் படைப்புகளும் அந்த வகையைச் சேர்ந்தவையாகுமா?
பதில். ஒவ்வொரு கதையும் சொல்லப்படுவதற்கென ஒரு தனிவழியைக் கொண்டுள்ளதாகவும் ஒவ்வொரு கதை மாந்தருக்கும் தனிக்குரல் இருக்கிறதென்றும் நான் நினைக்கிறேன். மேலும் நீங்கள் ஒரே வகைமுறையை மீண்டும் மீண்டும் கைக்கொள்ளமுடியாது. `ஆவிகளின் வீட்`டில் நிரம்பி வழிகிற மாய யதார்த்த வாதம், `அன்பாலும் நிழல்களாலும்` என்ற என்னுடைய இரண்டாவது நாவலில் இல்லவேயில்லை. ஏனென்றால் சால்வடார் ஆலெண்டே கொலைக்குப்பின்னர் நிகழ்ந்த ஒரு அரசியல் குற்றத்தை என்னுடைய இரண்டாவது நாவல் அடிப்படையாகக் கொண்டது. அதனாலேயே அது ஒரு இதழியல் தொடர்வரலாறு. முடிவற்ற திட்டம், அஃப்ரோடைட், அதிர்ஷ்டத்தின் மகள், செபியாவின் ஓவியம் ஆகியவற்றில் மாய யதார்த்தவாதம் இல்லை; ஆனால், குழந்தைகளுக்கான முதல் நாவலான மிருகங்களின் நகரத்தில் நிறையவே இருக்கிறது.
சிலவேளைகளில் மாய யதார்த்தவாதம் பொருத்தமாயிருக்கிறது. வேறு சில வேளைகளில் அப்படி இல்லை. எதுவாக இருந்தாலும் மாய யதார்த்தவாதத்தின் அடிப்படை மூலங்களை, இலத்தீன் அமெரிக்கா மட்டுமென்றில்லாமல் உலக முழுதுமுள்ள இலக்கியங்களில் காணலாம். ஸ்காண்டிநேவிய வீரகாவியங்கள், ஆப்பிரிக்கக் கவிதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியம், இனச் சிறுபான்மையினரால் எழுதப்பட்ட அமெரிக்க இலக்கியம் ஆகியவற்றிலும் நீங்கள் அதைக் காணலாம். சல்மான் ருஷ்டி, டோனி மாரிசான், பார்பரா கிங்சால்வர் மற்றும் ஆலீஸ் ஹாஃப்மேன் போன்றோர் அந்த நடையினைப் பயன்படுத்துகின்றனர்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சில காலத்துக்கு இலக்கியத்தில் தருக்க முறை சார்ந்த நடைமுறையியல் அணுகுமுறை நிலவியது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடித்து நிலைக்கவில்லை. அது ஏனென்றால் வாழ்க்கை புதிர்கள் நிறைந்ததாக இருக்கிறது. அந்தப் புதிர்களைப் மேலும்மேலுமாகப் புத்தாய்வு செய்வதாகவே இலக்கியத்தின் நோக்கம் இருக்கிறது. அது, உண்மையில் உங்கள் எல்லைகளை விரிவடையச் செய்கிறது. கனவுகள், காட்சிகள், முன்னனுமானங்களை உங்கள் தினசரி வாழ்க்கையில் அனுமதித்துக்கொண்டால், ஒரு எழுத்தாளராக யதார்த்தம் விரிவடைவதாகத் தோற்றமளிக்கும்.
கேள்வி. நீங்கள் வழக்கமற்ற ஒரு அசாதாரணக் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் பெரியப்பா சால்வடார் ஆலெண்டே பற்றிப் பேசுவீர்களா? உங்கள் வாழ்க்கையில் அவரது தாக்கம் எந்த முறையில் செயல்பட்டிருக்கிறது?
பதில். அவர் மீது எனக்கு ஒரு மாட்சிமை மிக்கப் போற்றுதலுணர்வு இருந்த போதிலும் அவர் இறக்கும் வரையில், அவரது தாக்கம் ஏதும் என் வாழ்க்கையில் இருந்ததாக நான் நினைக்கவில்லை. 1973ல் சிலியில் இராணுவக் கலகம் நிகழ்ந்தபோது, அவரல்ல, அந்தக் கலகம்தான் ஏராளமான சிலி மக்களின் வாழ்வினை மாற்றிவிட்டது. அது மக்கள்தொகையில் பாதிப்பேரைப் நினைத்துப்பார்க்கவியலாதபடிப் பெருமளவில் பாதித்துவிட்டது
சால்வடார் ஆலெண்டே எனது தந்தையின் முதல் ஒன்றுவிட்ட சகோதரர். வார இறுதிகளில், சில விடுமுறைக் காலங்களில், அவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவரோடு சேர்ந்து வசித்ததில்லை.
இராணுவக் கலகத்துக்குப் பின்னர்தான் அவருக்கு ஒரு வரலாற்றுப் பக்கம் இருக்கிறதென உணர்ந்தேன். கலகத்தைத் தொடர்ந்து அவரது பெயர் சிலி முழுவதுமாகத் தடை செய்யப்பட்டது. நான் வெனிசுலாவுக்குச் சென்றபோது, என்னுடைய பெயரைச்சொன்னதுமே நான் சால்வடார் ஆலெண்டேக்கு உறவினரா எனக் கேட்பார்கள். அவர் ஒரு இதிகாசப் பிம்பமாகக் கதாநாயகனாக மாறியிருந்தார்.
கேள்வி. எப்போதாவது சால்வடார் ஆலெண்டே பற்றி ஒரு நூல் எழுதுவீர்களா?
பதில். இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. வாழ்க்கை வரலாறு எழுதுவதில் நான் அவ்வளவு திறமையாக இல்லை. இந்த இனத்தில் என்னால் மெய்ம்மை சார்ந்து புறநிலைவயமாக இருக்க முடியாது.
கேள்வி. விதி அல்லது கர்மாவில் நம்பிக்கை கொள்கிறீர்களா?
பதில். நான் விதியை நம்புகிறேன். ஒரு கைச் சீட்டுகளால் நாம் இயக்கப்படுகிறோமென்றும் நாம் அந்த வாழ்க்கை விளையாட்டினை நம்மால் முடிந்தவரை சிறப்பாக விளையாட வேண்டுமென்றும் சீட்டுகள் எப்போதுமே குறியிடப்பட்டவைதாம் என்றும் நம்புகிறேன்.
கேள்வி. உங்கள் பெரியப்பாவுக்கு நிகழ்ந்தது விதிவயப்பட்டதென நம்புகிறீர்களா?
பதில். ஆம். ஆனால், அதற்காக, அவரைக் கொன்றவர்களைக் குற்றம் சொல்லக்கூடாதென்ற அர்த்தம் இல்லை. கொலைகாரர்களையும் கொடுமைக்காரர்களையும் குற்றம் சுமத்தவேண்டும் என்பதில், அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டுமென்றும் என்பதிலும் நம்பிக்கையோடிருக்கிறேன்.
கேள்வி. நீங்கள் சிலிக்கு எப்போதாவது திரும்பிச் செல்வீர்களா?
பதில். ஒவ்வொரு ஆண்டும் அம்மாவைப் பார்க்க நான் சிலிக்குப் போகிறேன். அங்கே இருப்பதைச் சுகமானதாகவும் உணர்கிறேன். ஆனால், அமெரிக்காவில் எனக்கொரு வீடு இருக்கும்போது, சிலியில் தங்கி வாழ முடியுமென நான் நினைக்கவில்லை. என் மகனும் பேரப்பிள்ளைகளும் இங்கே அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் சிலியை இழந்துவிட்டதாக, அல்லது தவறவிட்டுவிட்டதான உணர்வு எனக்கு உண்மையிலேயே இல்லை. ஏனெனில், எப்போது வேண்டுமானாலும், நான் நினைத்தால் அங்கு செல்ல முடியும் என்பதால்தான்.
கேள்வி. உங்கள் புத்தகங்களை எப்போதுமே சனவரி 8ல்தான் எழுதத் தொடங்குகிறீர்கள். அது ஏன் அப்படி?
பதில். 1981, சனவரி 8 ல் நான் வெனிசுலாவில் வாழ்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய அன்புத் தாத்தா மரணப்படுக்கையிலிருப்பதாக எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்கள். நான் அவருக்காக ஒரு கடிதம் எழுதத் தொடங்கி அது எனது முதல் நாவல், ஆவிகளின் வீடானது. அந்தத் தேதியை அதிர்ஷ்டநாளாக நான் தொடங்குமளவுக்கு முதலிலிருந்தே அது எனக்கு ஒரு அதிர்ஷ்ட நூலாக இருந்தது.
கேள்வி. புதிய நூலை எழுதத் தொடங்கும் முன் நிகழ்த்துகிற சடங்குகள் பற்றி ஏதாவது பேச முடியுமா?
பதில். சனவரி 8 எனக்கு ஒரு புனித நாள். நான் அன்று எனது அலுவலகத்திற்குத் தனியாக அதிகாலையிலேயே வருகிறேன். ஆவிகளுக்காகவும் இஷ்ட தேவதைகளுக்காகவும் சில மெழுகுத்திரிகளை ஏற்றுகிறேன். கொஞ்ச நேரம் தியானம் செய்கிறேன். எப்போதும் கைவசம் புதிய பூக்களும் நறுமணத்திரிகளும் வைத்திருக்கிறேன். அந்தக் கணத்தில் தொடங்குகின்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நான் என்னை முழுமையாகத் திறந்து வைக்கிறேன். நான் எதை எழுதப் போகிறேனென்று எனக்குத் தெரியவே தெரியாது. சில மாதங்களுக்கு முன்புதான் நான் ஒரு நூலை முடித்து, வேறு ஏதாவதொரு திட்டத்திலிருப்பேன். ஆனால், ஏற்கெனவேயே இரண்டுமுறை நடந்திருந்தது போல, நான் கணிணி முன் அமர்ந்து அதை இயக்கத் தொடங்கியதும் வேறு ஏதோ ஒன்று வெளிவரும். நான் எதையோ கருக்கொண்டிருந்தது போல, அதுவும் யானைக் கர்ப்பமாக வெகுநாட்களாக அது அங்கேயே இருந்து வளர்ந்து நான் முழுமையாக என்னைத் தளர்த்தி, எழுதுவதற்குத் தயாரான போது அது வெளிவருவதைப்போல நிகழ்கிறது .நான் அந்தப் பரவச நிலையில் வேறு யாரோ என்வழியாக எழுதுவது போல முதல் வாக்கியத்தை எழுத முயற்சிக்கிறேன். முதல் வாக்கியம் தான் அந்த முழுப்புத்தகத்தையும் தீர்மானிக்கிறது. அது என்னுடைய பாத்திரங்களின் வழியாகப் புகுந்து தேடிக் கண்டடைய வேண்டிய, முன்பின் தெரிந்திராத ஒரு பிரதேசத்துக்குள் நுழைவதற்கான ஒரு வாயில். மெதுவாக, நான் எழுத, எழுத கதை, நான் அங்கேயே இருந்தாலும், அது, தானாகவே மலர்ந்து தன்னை வெளிப்படுத்துகிறது. அது நிகழ்கிறது, அவ்வளவுதான்.
முதலிலேயே ஒரு வரை கோட்டுத் திட்டம், யாரிடமாவது எழுதுவது குறித்து ஒரு உரையாடல், எழுதிக் கொண்டிருக்கும்போதே சில பகுதிகளை வாசித்தல் என்ற வகையிலான எழுத்தாளர் நான் இல்லை. முதல் வரைவு தயாராகும் வரை – அது தயாராவதற்குப் பல மாதங்கள் கூட வழக்கமாக நீண்ட காலம், பிடிக்கும் – அந்தப் படைப்பு எதைப் பற்றியதென்று எனக்குத் தெரியாது. நான் ஒவ்வொரு நாளும் வெறுமனே உட்கார்ந்து, கதையை வெளியேற்றிக் கொண்டிருப்பேன். அது முடிந்துவிட்டதென நான் நினைக்கும்போது அதை அச்சிட்டு, முதன் முதலாக வாசிக்கிறேன். அந்த நேரத்தில்தான் கதை எதைப்பற்றியதென்று எனக்குத் தெரிய வருகிறது. கதையோடு தொடர்பற்ற எல்லாவற்றையும் வெட்டியெறியத் தொடங்குகிறேன்
கேள்வி. புதிதாக முயற்சிக்கும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனைகளைச் சொல்ல விரும்புவீர்கள்?
பதில். எழுதுவது ஒரு தடகள வீரராவதற்கான பயிற்சியைப் பெறுவது போன்றதுதான். அதிலிருக்கிற ஏராளமான பயிற்சியினையும் வேலையினையும் முடிக்க வேண்டுமேயென யாரும் நினைக்கமாட்டேனென்கிறார்கள். தடகள வீரர் தினமும் பயிற்சி செய்வதைப் போல எழுத்தாளர் தினசரி எழுத வேண்டும். எழுதுகின்ற அநேகமும் பயன்படப் போவதில்லை யென்றாலும் அதைச் செய்ய வேண்டியது இன்றியமையாதது.
நான் என்னுடைய இளம் மாணவர்களுக்கு எப்போதும் சொல்வது, தினசரி ஒரே ஒரு பக்கமாவது நல்லதாக எழுதுங்கள் என்பதுநான். அந்த வருட முடிவில் அவர்களிடம் குறைந்தது 360 பக்கங்களாவது நல்லதாகத் தேறும். அது ஒரு படைப்பாகிவிடும்.
எழுதுவதன் செயல்பாடுகளை நான் யாரோடும் பகிர்ந்து கொள்வதில்லை. முதல் வரைவு முடிந்ததும், வெகுசிலரிடமே நான் அதைக் காட்டுகிறேன். ஏனென்றால், என்னுடைய இயல்பூக்கத்தில் என்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மேலும் என் எழுத்தில் பல கைகள் இருப்பதை நான் விரும்புவதில்லை.
கேள்வி. நம் நாட்களின் கூட்டுத்தொகையைப் படித்த பலரும் தாப்ராவின் நகைகளை அவர்கள் எங்கு பெற முடியுமெனக் கேட்கிறார்கள்
பதில். http://tabra.com என்ற அவளுடைய வலைத்தளத்தில் தேடிக்கொள்ளுங்கள்.
கேள்வி. என்னிடம் கையெழுத்துப் பிரதியொன்று இருக்கிறது. அதை நீங்கள் வாசித்துப் பதிப்பிக்க உதவிசெய்ய முடியுமாவெனக் கேட்கலாமா என்று நினைக்கிறேன்.
பதில். வருத்தம் தெரிவிக்கிறேன். என்னால் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க முடியாது. வேறொன்றுமில்லை, எனக்கு நேரம் கிடையாது. அப்படியே அதைச் செய்தாலும் அப்படிச் செய்வதில் பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. எப்படியானாலும் அதைப் பதிப்பிக்க என்னால் முடியாது. அப்படியான சக்தி, அதிகாரம் எனக்கு இருக்கவேண்டுமேயென ஆசைப்படுகிறேன்!
பதிப்பகத் தொழில் – குறிப்பாக அமெரிக்காவில் –மிகவும் சிக்கல் வாய்ந்ததாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தில், நீங்கள் நன்கு பிரபலமான ஒரு எழுத்தாளராக இல்லாமலிருந்தால், ஒரு முகவர் இல்லாமல் அதைப் பதிப்பித்துவிட முடியாது. நீங்கள் ஒவ்வொரு வருடமும் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டிகளை, அதுவும் களத்திலிருக்கின்ற அனைத்து இலக்கிய முகவர்களின் முகவரியும் கொண்டவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். உதவிகரமான இரண்டு நூல்கள் : How to Get a Literary Agent by Michael Larsen and The Guide to Literary Agentsby Don Prues. நீங்கள் அவற்றை நூலகத்திலோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான புத்தகக் கடையிலோ கண்டுகொள்ளலாம். மின்னஞ்சல் மூலம் இணையதளத்தில் பெற கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்
Book Passage
51 Tamal Vista Blvd.
Corte Madera, CA 94925
(415) 927-0960
தமிழாக்கம். ச. ஆறுமுகம்.
மலைகள் இணைய இதழ், மார்ச் 02, 2013 இதழ் 21 இல் வெளியானது.
No comments:
Post a Comment