அய்யோ-பாவம்` அத்தை A Poor-Aunt Story
ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami
ஆங்கிலம் : ஜே. ரூபின் J.Rubin
தமிழில் ச. ஆறுமுகம்.
ஹாருகி முரகாமி
தமிழ் மொழிபெயர்ப்பாளர் : ச. ஆறுமுகம்.
•
ஹாருகி முரகாமி: 12. 01. 1949ல் ஜப்பானில் பிறந்தவர். 33 வயதுக்குப் பிறகு மராத்தான் ஓட்டத்துக்குப் பயிற்சி பெற்றார். 23. 06. 1996ல் அல்ட்ராமராத்தான் என அழைக்கப்படும் ஜப்பான் நாட்டின் ஹொய்க்கொடோவிலுள்ள சரோமா ஏரியைச்சுற்றி 100கி.மீ ஓடும் போட்டியில் வெற்றி பெற்றார் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பின் நவீனத்துவப் படைப்பாளர். அவரது புனைவுகள் மற்றும் புனைவுகளற்ற படைப்புகள் அனைத்தும் திறனாய்வாளர்களின் பாராட்டுதல்களையும் குறிப்பிடத்தக்க பரிசுகளான செக் நாட்டின் ப்ரான்ஸ் காப்ஃகா பரிசு மற்றும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் பரிசு ஆகியவற்றோடு மற்றும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தன. 2007ல் கிரியாமா பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தபோது அதனை வாங்க மறுத்துவிட்டார். செப்டம்பர் 2007 ல் லீக் பல்கலைக்கழகமும் ஜூன் 2008ல் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகமும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இதுவரை இவரது 12 நாவல்களும் 50 கதைகள் அடங்கிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரை மற்றும் புனைவுகளற்ற படைப்புகளாக 6 நூற்களும் சப்பானிய மொழியில் வெளியாகி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வரின் அனைத்துப் படைப்புகளுடன் வேறு 18 படைப்பாளர்களின் சில படைப்புகளையும் இவர் சப்பானிய மொழிக்கு மாற்றம் செய்துள்ளார். இவரது படைப்புகளில் எள்ளலும் சர்ரியலிசம் எனப்படும் மீயதார்த்தமும் காணப்படும் அதே நேரத்தில் பராதீனம் மற்றும் தனிமை ஆகியன மையப்படுத்தப்படுகின்றன. அவரது படைப்புகள் சமகாலத்தில் மனித மாண்புகளும் மதிப்புகளும் சரிந்து வருவதை விமர்சனம் செய்கின்றன. இவரது படைப்புகள் அல்பேனியன், அரபிக் ஆர்மேனியன் என 44 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதை A Poor-Aunt Story என்ற பெயரில் ஜப்பானிய மொழியிலிருந்து ஜே ரூபின் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, The New Yarker இதழில் வெளியானது. http: // web.archieve.org/ வலைத்தளத்திலிருந்து பெற்ற பிரதியே தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் அருமையான, ஒரு அழகிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் – ஜூலையின் முதன்முதலான ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்தான் – அது தொடங்கியது. வானத்தின் தூரத்து மூலையில் இரண்டோ மூன்றோ துண்டு மேகங்கள் வெள்ளை நிறத்தில் மிகமிகச் சிறியனவாக மிகுந்த கவனத்தோடு இடப்பட்ட காற்புள்ளி, அரைப்புள்ளிகளைப்போலத் தெரிந்தன. கதிரின் ஒளி எந்தத் தடையுமின்றி மொத்தமாகப் பூமிக்குள் இறங்கியது. ஜூலையின் அரசாட்சியில், புல்வெளியில் தூக்கியெறியப்பட்ட சாக்லேட் தாளின் கசங்கிய வெள்ளிப் பரப்பு கூட ஏரியின் அடியில் கிடக்கும் பளிங்குப் படிகம் போலப் பெருமையோடு மினுமினுத்தது. அந்தக்காட்சியைப் போதுமான அளவுக்கு, நெடுநேரம் அதையே கவனித்துக்கொண்டிருந்தால் கதிரின் ஒளி, மற்றொரு வகை ஒளியை, ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருந்தியிருக்கும் சீனதேசத்துப்பெட்டி போலப் பொதிந்திருப்பதை. நீங்கள் காணலாம். அந்த உள் வெளிச்சத்தை உண்டாக்கியதாகத் தோன்றும் எண்ணற்ற மகரந்தத் துகள்கள், அசைவற்றதாகத் தோன்றும் அந்தத் துகள்கள், முடிவாகப் பூமியின் மேல் படியும் வரை வானத்தில் மிதக்கும்.
நான் ஒரு தோழியுடன் மெல்ல உலவிவரச் சென்றிருந்தேன், வீட்டுக்குத் திரும்பும் வழியில், நாங்கள் மெய்ஜி நினைவு படக் காட்சியகத்தின் வெளிமைதானத்தில், நீர்க்குட்டையின் அருகில் அமர்ந்து எதிர்க்கரையில் அமைக்கப்பட்டிருந்த இரு வெண்கல ஒற்றைக்கொம்புக் குதிரைகளை நீருக்கு மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். தென்றல் ஒன்று ஓக்மரத்தின் இலைகளை அசைத்து, குட்டையின் மேற்பரப்பில் மெல்லிய அலைகளைத் தோற்றுவித்தது. காலம் தென்றலைப் போல நகர்வதாகத் தோன்றியது : அசைவதும் நிற்பதுமாக, நிற்பதும் அசைவதுமாக. சோடா டப்பாக்கள் தண்ணீருக்குள், மூழ்கடிக்கப்பட்ட ஏதோ ஒரு பழங்கால நாகரீகத்தின் அழிவுச் சின்னங்கள் போலப் பிரகாசித்தன. எங்கள் முன்பாக சீருடையில் ஒரு மென்பந்து அணி, மிதிவண்டியில் ஒரு சிறுவன், வளர்ப்பு நாயை நடத்திச் செல்லும் ஒரு முதியவர், துள்ளலோட்டத்திற்கான கால்சட்டையோடு ஒரு இளம் வெளிநாட்டவர், என எல்லோரும் எங்களைக் கடந்து சென்றனர். புல்லின் மீதிருந்த ஒரு பெரிய கைப்பெட்டி வானொலியிலிருந்து வந்த இசையின் மெல்லிய தூண்டல்கள் எங்களை ஈர்த்தன : விரைவில் உலரப்போகும் ஒரு காதல் குறித்து ஒரு இனிய பாட்டு. அதன் இராகத்தை நான் கண்டுகொண்டதாக உணர்ந்தேன்; என்றாலும் அது நிச்சயமானதாக இருக்காது. எனக்குத் தெரிந்த ஒன்று போலவே ஒலித்தது. என் வெற்றுக்கைகள் சூரிய ஒளியில் அமைதியாக நனைந்து ஊறிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அப்போது அது கோடைகாலமாக இருந்தது.
இது போன்ற ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில், அய்யோ பாவம் அத்தை ஒருவர் எதனால் என் இதயத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும்? இது குறித்து எனக்கு எந்தச் சிந்தனையுமில்லை. பார்வை எட்டும் தூரத்துக்கு அய்யோ பாவம் அத்தை யாரும் இருப்பதாகத் தெரியவில்லை; அப்படி ஒருவர் அங்கே இருப்பதாக நான் கற்பனை செய்யுமளவுக்கும் எதுவும் இல்லை. ஆனாலும் அய்யோ பாவம் அத்தை எனக்குள் வந்தார்; வந்தாரோ இல்லையோ உடனே போய்விட்டார். அவர் என்னுள் இருந்த நேரம் ஒரு நொடியில் நூற்றிலொரு பங்கு மட்டுமே. அவர் நகர்ந்தபோது எனக்குள் வினோதமான மனித உருவிலான வெற்றிடத்தை விட்டுச்சென்றார். அதாவது யாரோ ஒருவர் விரைந்து சன்னலில் தோன்றி மறைவது போல நான் உணர்ந்தேன் – நான் சன்னலுக்கு ஓடி தலையை வெளியே நீட்டிப் பார்த்தேன், ஆனால் அங்கு யாருமே இல்லை.
அய்யோ பாவம் அத்தை ?
உடனிருந்த தோழியிடம் சில வார்த்தைகளைச் சொல்ல முயற்சித்தேன். ‘’ அய்யோ பாவம் அத்தை ஒருவரைப் பற்றி எழுத விரும்புகிறேன்.’’ என்றேன், நான்.
அய்யோ பாவம் அத்தையா? அவள் சிறிது ஆச்சரியப்பட்டதாகத் தோன்றியது. ‘’ ஏன் ஒரு அய்யோ பாவம் அத்தை ?’’
அது ஏனென்று எனக்குத் தெரியாது. ஏதோ சில காரணங்களுக்காக, என்னைப் பற்றிக்கொள்ளும் சில விஷயங்கள் எப்போதுமே நான் புரிந்து கொள்ளாத விஷயங்களாகவே இருந்தன. நான் சிறிது நேரம் எதுவும் பேசாமல், எனக்குள் இருந்த மனித உருவிலான வெற்றிடத்தின் விளிம்பு வழியாக என் விரலை ஓடவிட்டேன்.
‘’ அது போன்ற ஒரு கதையை யாராவது படிக்கவிரும்புவார்களா என்ன? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.’’ என்றாள், எனது கூட்டாளி.
‘’ உண்மைதான், அதை எப்படிச் சொல்வது, ம்ம்…..நீங்கள் சொல்வது போல, அது ஒரு நல்ல வாசிப்புக்கு உகந்ததாக இருக்காதுதான்’’ என்றேன், நான்.
‘’ அப்படியானால், அது போன்ற ஒரு விஷயத்தைப்பற்றி ஏன் எழுதவேண்டும்?
‘’ எனக்கு அதை சரியாகச் சொல்லத் தெரியவில்லை.’’ என்றேன் நான். ‘’அய்யோ பாவம் அத்தை ஒருவரின் கதையை ஏன் எழுத விரும்புகிறேனென்று விளக்குவதற்காகவே அந்தக் கதையை எழுதவேண்டும். ஆனால் கதையை எழுதி முடித்துவிட்ட பிறகு அதை ஏன் எழுதினேனென்று விளக்கவேண்டிய அவசியம் இருக்காது. இல்லை, இருக்குமா?’’
அவள் சிரித்துக்கொண்டே, ஒரு கசங்கிய சிகரெட்டை அவள் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பற்றவைத்தாள். அவள் சிகரெட்டுகள் எப்போதுமே கசங்கித்தான் இருந்தன, சிலசமயம் பற்றிக்கொள்ளாதபடி மோசமாக; ஆனால் இது பற்றிக்கொண்டது.
‘அய்யோ பாவம் அத்தைகள் யாராவது உங்கள் உறவினராக இருக்கிறார்களா? அவள் கேட்டாள்.
‘’ ஒருத்தருமில்லையே’’ என்றேன், நான்.
‘’ நல்லது. எனக்கு இருக்கிறார்கள். அச்சு அசலா அப்படியே. ஒருவர். மெய்யாலும், மிகமிக உண்மையான விஷயம். இன்னும் சொல்லப்போனால், நான் சில வருடங்கள் அவரோடேயே வாழ்ந்திருக்கிறேன்.
நான் அவள் கண்களைப் பார்த்தேன்; அவை எப்போதுமில்லாதபடிக்கு அமைதியாக இருந்தன.
‘’ ஆனால், அவரைப்பற்றி எழுத நான் விரும்பவில்லை. அது மட்டுமல்ல. அந்த அத்தையைப் பற்றி ஒரு வரி கூட எழுத மாட்டேன்.’’ என்றாள் அவள்.
அந்தக் கைப்பெட்டி வானொலி முதலாவதைப் போலவே வேறொரு இராகத்தை இசைக்கத் தொடங்கியது; ஆனால், இது எதுவென்று என்னால் கொஞ்சம் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘’ உங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு அய்யோ பாவம் அத்தை கூட இல்லை; ஆனாலும் நீங்கள் ஒரு அய்யோ பாவம் அத்தையின் கதையை எழுத விரும்புகிறீர்கள். எனக்கோ ஒரு அய்யோ பாவம் அத்தை இப்போதும் உண்மையாக, உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒருவர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை.’’
நான் தலையாட்டினேன். ‘’ அது ஏன் அப்படி என்பதுதான் என்னுடைய ஆச்சரியம்.’’
அவள் ஏதோ ஒன்றைச் சொல்ல வருவதுபோல் தலையைச் சிறிது சாய்த்தாள்; ஆனால் எதையும் சொல்லவில்லை. அவள் முதுகு என் பக்கமாக இருக்க அவளது நீண்டு மெலிந்த கைவிரல்களை தண்ணீருக்குள் அளைந்திருக்க அனுமதித்தாள். அது, என் கேள்விகள் அவளின் விரல்கள் வழியே தண்ணீருக்கடியில் அழிந்துபோன நகரத்துக்குச் செல்வதைப்போல் தோன்றியது.
நான் அது ஏனென ஆச்சரியப்பட்டேன். அது ஏனென ஆச்சரியப்பட்டேன். அது ஏனென ஆச்சரியப்பட்டேன்.
‘’ உங்களுக்கு உண்மையைச் சொல்வதெனில்,’’ எனத் தொடங்கிய அவள், ‘’ என்னுடைய அய்யோ பாவம் அத்தையைக் குறித்து சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்; ஆனால் அதை என்னால் சரியான வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னால் அது முடியாதது, ஏனென்றால், ஒரு உண்மையான அய்யோ பாவம் அத்தையை எனக்குத் தெரியும் என்பதுதான்.’’ என்றாள். அவள் உதட்டைக் கடித்தாள். ‘’ அது கடினம் – நீங்கள் உணர்வதைப்போல் தோன்றுவதைவிட அதிகக் கடினமானது.’’
அந்த வெண்கல ஒற்றைக்கொம்புக் குதிரைகளை நான் மீண்டும் கவனிக்க ஆரம்பித்தேன். காலம் அவற்றைப் பின்தள்ளிவிட்டுச் செல்வதைக் கோபத்தோடு எதிர்ப்பது போல் அவற்றின் முன் குளம்புகளைத் தூக்கிக் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. அவள் சட்டையின் விளிம்புகளை உருவிக்கொண்டிருந்தாள். ‘’ ஒரு அய்யோ பாவம் அத்தையைக் குறித்து நீங்கள் எழுத முயற்சிக்கப் போகிறீர்கள்.’’ என்ற அவள், ‘’ நீங்கள் இந்தக் கடினமான வேலையை மேற்கொள்ளவிருக்கிறீர்கள். இப்போதே அதை உங்களால் செய்ய முடியுமா என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு உண்மையான அய்யோ பாவம் அத்தை கூட உங்களுக்கில்லை.’’ என்றாள்.
நான் ஒரு நீண்ட பெருமூச்சை ஆழ்ந்து இழுத்து வெளிப்படுத்தினேன்.
‘’ கஷ்டம்,’’ என்றாள், அவள்.
‘’ அது, சரிதான்,’’ என்ற நான், ‘’ நீ சொல்வது சரியாக இருக்கலாம்.’’ என்றும் சொன்னேன்.
அவள் அப்படியே இருந்தாள்.
ஹூஹ், ஒரு பாடலின் வரிகளைப்போல.
உங்கள் உறவுகளில் ஒரு அய்யோ பாவம் அத்தை இல்லாமலிருக்க வாய்ப்புண்டு, இருக்கவும் செய்யலாம். எப்படியிருந்தாலும் நமக்குள் ஏதோ ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. ஆனால், நீங்கள் யாருடைய திருமணத்திலாவது ஒரு அய்யோ பாவம் அத்தையைக் குறைந்த பட்சம் பார்த்தாவது இருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு புத்தக அலமாரியிலும் யாருமே புரட்டாத ஒரு புத்தகம் இருப்பதுபோல, ஒவ்வொரு துணிமணி அலமாரியிலும் அணியவே இல்லாத ஒரு சட்டை இருப்பது போல, ஒவ்வொரு திருமண வரவேற்பிலும் ஒரு அய்யோ பாவம் அத்தை இருப்பார்.
அவரை அறிமுகப்படுத்த வேண்டுமேயென்று யாரும் கவலைப்படுவதில்லை. அவரிடம் பேசுவதற்கு யாரும் இல்லை. அவரைப் பேசுமாறு யாரும் கேட்பதில்லை. அவர் ஏதாவது ஒரு மேஜையின் அருகில் உட்கார்ந்திருப்பார், ஒரு காலியான பால் குப்பியைப் போல. அவருடைய இறைச்சிச் சாற்றினை (சூப்) சோகமான மெல்லிய சப்தத்தோடு சிறுகச்சிறுக உறிஞ்சிக்கொண்டிருப்பார். அவருடைய கறிகாய்த் துண்டுகளை மீன்கரண்டி கொண்டு எடுத்துச் சாப்பிடுவார். குளிர்பனிப்பாகு வரும்போது கரண்டி இல்லாமலிருப்பது அவர் ஒருவராகத்தான் இருப்பார்.
திருமணப் படச்சுவடியை எடுத்துப் புரட்டும்போது அவருடைய புகைப்படம் அங்கிருக்கும். அதெல்லாம் சரி. ஆனால் அவருடைய உருவம் மட்டும் மூழ்கடிக்கப்பட்ட பிணம் சிரிப்பது போல இருக்கும்.
‘’ என்னங்க! இங்கே பாருங்களேன், இந்த அம்மா யாருங்க? இரண்டாவது வரிசையில் கண்ணாடி போட்டிருக்கிறார்களே, அவர்களைத்தான் கேட்கிறேன்.
‘’ கவலைப்படாதே, அது ஒருத்தருமில்லை,’’ இளங்கணவர் சொல்கிறார், ‘’ எனக்கு அத்தை முறை வேண்டும். அய்யோப் பாவம், அவர்கள்.’’
பெயர் இல்லை. ஒரு பாவப்பட்ட அத்தை, அவ்வளவுதான்.
எல்லாப் பெயர்களும் ஒருநாள் மங்கி மறையத்தானே போகின்றன என்பது உண்மைதான். இறந்த மறுகணமே பெயர் இல்லாமல் போகும் நபர்கள் இருக்கிறார்கள். வேறு சிலரின் பெயர்கள், பழைய தொலைக்காட்சிப் பெட்டியைப் போலத் திரையில் பனிப்புள்ளிகள் விட்டுவிட்டு மினுக்கும், பிறகு ஒரேயடியாக நின்றுவிடும். மேற்கொண்டும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் இறக்கும் முன்பேகூட அவர்களின் பெயர்கள் மறைந்துபோகும் – அய்யோபாவம் அத்தைகள். நானேகூட அடிக்கடி அய்யோபாவம் அத்தைகளைப் போன்ற பெயரற்ற நிலைமைக்கு ஆளாகிவிடுகிறேன். புகைவண்டி நிலையத்தின் பரபரப்பில், விமான நிலையத்தில் என் பெயர், என் பணிப்பெயர், என் முகவரி எல்லாமே திடீரென்று என் மூளையில் இல்லாமல் போய்விடுகின்றன. ஆனால் இது நீண்ட நேரத்திற்குத் தொடர்வதில்லை: அதிகமிருந்தால் ஒரு, ஐந்து அல்லது பத்து நொடிகள்.
சில நேரங்களில் இப்படியும் நிகழ்கிறது : ‘’ என்னதான் என் வாழ்வு, உங்கள் பெயரை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன், ஒன்றும் முடியவில்லை.’’ ஒரு சிலரின் அங்கலாய்ப்பு.
‘’ விட்டுவிடுங்கள். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். ஒரு பெயரில் என்ன இருக்கிறது, அதிகமாக எதுவும் இல்லை’’.
இருந்தாலும் அவர் திரும்பத் திரும்ப உதடுகளைச் சுட்டிக்கொண்டு, ‘’அது இங்கேயே இருக்கிறது, நாக்கு நுனியிலேயே, சத்தியமாகச் சொல்கிறேன், அது இங்கேயே இருக்கிறது.’’
என் இடது பாதத்தில் பாதி மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்படி, என்னை மண்ணுக்குள் புதைத்து விட்டிருப்பதுபோல் நான் உணர்கிறேன். மனிதர்கள் அதில் தடுக்கி விழுந்து, மன்னிப்பு கேட்கத் தொடங்குகிறார்கள். ‘’ நான் சத்தியமாகச் சொல்கிறேன், அது இங்கேயே இருக்கிறது. நாக்கு நுனியிலேயே’’
இழக்கப்பட்ட பெயர்கள் எங்கே செல்கின்றன? இந்த நகரத்தின் திகைக்கவைக்கும் சிக்கலில் அவை உயிரோடிருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவே. இருந்தாலும் அவற்றில் சில உயிரோடிருந்து, இழக்கப்பட்ட பெயர்களின் நகரத்துக்கான பாதையைக் கண்டுபிடித்துச் சென்று, அங்கே ஒரு சிறிய அமைதியான சமூகத்தைக் கட்டும். ஒரு இத்தனூண்டு நகரம். நுழைவாயிலில் ‘’ அலுவல் தவிர்த்தோர் உள் நுழைய அனுமதி இல்லை’ என்ற வாசகம். அலுவலின்றி உள்ளே நுழையத் துணிந்தோர் அததற்குத் தக்க அளவிலான மிகச் சிறிய தண்டனையைப் பெறுவர்.
அதனால்தானோ என்னவோ எனக்கு ஒரு சிறிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு அய்யோ பாவம் அத்தை – சிறியதாக ஒருவர் – என் முதுகில் ஒட்டிக்கொண்டார்.
ஆகஸ்டு மாதத்தின் நடுவில்தான் அவர் அங்கே இருப்பதை நான் முதன் முதலில் உணர்ந்தேன். அவருடைய இருப்பு குறித்து என்னை எச்சரிக்க எதுவும் குறிப்பாக நிகழ்ந்துவிடவில்லை. மிகச் சாதாரணமாக ஒருநாள் அதை உணர்ந்தேன்: என் முதுகில் ஒரு அய்யோ பாவம் அத்தை இருப்பதாக. அது ஒன்றும் மகிழ்ச்சியற்ற உணர்வாக இல்லை. குறிப்பிடத் தக்கவாறு அவர் ஒன்றும் கனமாக இல்லை. அவர் என் தோள்கள் மேலாகக் கெட்ட சுவாசம் எதையும் ஊதிவிடவில்லை. அவர், என் முதுகில், ஒரு நிழலைப் போல ஒட்டிக்கொண்டிருந்தார், அவ்வளவுதான். அவர் அங்கிருப்பதைத் தெரிந்துகொள்ள மற்றவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியிருந்தது. உண்மை. நான், என்னுடைய வசிப்பறையைப் பகிர்ந்தளித்திருக்கிற பூனைகள், முதல் சில நாட்களுக்கு அவர்மீது சந்தேகப்பார்வைகளை வீசின; ஆனால் அவற்றின் எல்லைப் பகுதிக்குள் நுழையும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லையெனப் புரிந்துகொண்டதிலிருந்து, அவரது இருப்புக்குப் பழகிவிட்டன.
அவர் எனது நண்பர்கள் சிலரைப் பதற்றப்பட வைத்தார். நாங்கள் மதுவகைகளுடன் மேஜையில் அமர்ந்திருப்போம்; அவர் என் தோள்கள் மீதிருந்து எட்டிப்பார்ப்பார்.
‘’அவர் அச்சந் தருவதாக இருக்கிறார்,’’ என்று ஒரு நண்பர் சொன்னார்.
‘’அவரைப்பற்றி கவலைப்படாதீர்கள். அவர், அவருடைய சொந்த காரியங்களைப் பார்க்கிறவர். அவர் எந்தத் துன்பமும் இழைக்காதவர்.’’
‘’தெரியும், தெரியும். ஆனால் இப்படியொரு மன அழுத்தத்தைக் கொடுப்பவரென்று தெரியாது.’’
‘’ அப்படியென்றால் அவரைப் பார்க்காமலிருக்கப் பாருங்களேன்.’’
‘’ யாஹ், நான் நினைத்தேன்.’’ தொடர்ந்து ஒரு பெருமூச்சு. ‘’ எங்கு போய் இது மாதிரி ஒன்றை முதுகில் வாங்கிக்கொண்டீர்கள்?’’
‘’ நான் எங்கும் போனதாக அர்த்தமில்லை. சில விஷயங்களைப்பற்றி சிந்தித்துக் கொண்டேயிருந்தேன், அவ்வளவுதான்’’.
அவன் தலையைத்தலையை ஆட்டினான்; மீண்டும் பெருமூச்சு விட்டான். ‘’ ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அது உன்னுடைய தனியான ஆளுமை. எப்போதுமே நீ இப்படித்தான்.’’
‘’ஹ்ஹ—ஹஹ்’’
‘’அடுத்த ஒருமணி நேரம் நாங்கள் பெரிய அளவில் கிளர்ச்சி எதுவும் இல்லாமலேயே பலமுறை விஸ்கியை விழுங்கினோம்.’’
‘’சொல்லு, எனக்குச் சொல்லு,’’ என்ற நான், ‘’அவரைப் பற்றி அப்படியென்ன வருத்தம்?’’ என்று கேட்டேன்.
‘’ எனக்குத் தெரியாது. ஆனால், என் அம்மா என்மீது ஒரு கண் வைத்திருப்பதைப் போல் இருக்கிறது’’
அவரை என்னால் பார்க்கமுடியாதிருந்தது. ஆனால் பலரும் சொல்லும் அடையாளங்களைக் கொண்டு பார்த்தால், நான் முதுகில் சுமக்கும் அய்யோ பாவம் அத்தைக்கு ஒரு தனிப்பட்ட நிரந்தர உருவம் எதுவும் இல்லை; ஆவியால் செய்யப்பட்டவர் போல், அவரைப் பார்க்கின்ற நபர்களுக்கேற்ப அவர் உருவை மாற்றிக்கொள்வதாகத் தெரிந்தது.
ஒரு நண்பனுக்கு அவர், அவனுடைய நாய் அகிட்டாவாகத் தோன்றினார். அந்த நாய் உணவுக்குழல் புற்றுநோயினால் இறந்திருந்தது. ‘’எப்படியானாலும், அது அதன் கடைசிகாலத்திலிருந்தது என்பதை நான் உணர்ந்தேன். பதினைந்து வயது, ஆனால் எப்படி ஒரு பயங்கரமான சாவு, பரிதாபம், பாவப்பட்ட பிறவி.’’
‘’ உணவுக்குழாயில் புற்றுநோயா?’’
‘’ ஹ்ம். உண்மையிலேயே அது பயங்கர வலி. அதனுடைய அழகான குரலை அது அப்போது அநேகமாக இழந்திருந்தது; அதால் செய்யமுடிந்ததெல்லாம் அழுது ஊளையிட்டதுமட்டுந்தான். நான் ஒரேயடியாகத் தூங்கவைத்து விடலாமென்றுதான் இருந்தேன். ஆனால் என் அம்மா அப்படிச் செய்யவிடவில்லை.’’
‘’ ஏன், அப்படிச் செய்யக்கூடாதாமா?
‘’ யாருக்குத் தெரியும் இந்த இழவெல்லாம்? அந்த நாயை இரண்டு மாதம், குழாய் மூலம் சாப்பாடு ஏற்றி உயிரோடு வைத்திருந்தோம். வீட்டுக்கு வெளியே அந்தக் கொட்டகையில். கடவுளே! என்ன ஒரு நாற்றம்?’’
அவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
அது ஒரு நாய் மாதிரி இல்லை. அதனுடைய சொந்த நிழலைக்கண்டே பதறியது. அதனருகில் யார் போனாலும் குரைத்தது. உண்மையிலேயே ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத பிறவியாகிவிட்டது. எப்போதும் ஒரே சத்தம். உடம்பு முழுக்கச் சிரங்கு வேறு’’.
நான் தலையாட்டினேன்.
‘’அது ஒரு சிள் வண்டாகப் பிறந்திருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும். தலையே வெடித்துப்போகிற மாதிரி அலறியிருந்தால் கூட யாரும் ஒன்றும் சொல்லியிருக்கமாட்டார்கள். உணவுக்குழாய்ப் புற்றும் வந்திருக்காது.’’
அவர் என் முதுகில் அப்போதும் இருந்தார்; பிளாஸ்டிக் குழாய் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் நாயாக.
எனக்குத் தெரிந்த நிலம், வீட்டுமனைகள் ஏஜென்ட் ஒருவருக்கு என்னுடைய அய்யோ பாவம் அத்தை, அவரது பழைய தொடக்கப்பள்ளி ஆசிரியையாக இருந்தார்.
‘’ அது 1950 ஆகத்தான் இருக்கும், கொரியப் போரின் முதல் வருடம்,’’ எனச் சொல்லிவிட்டு, வியர்த்திருந்த அவரது முகத்தை ஒரு கனத்த துண்டால் துடைத்துக்கொண்டார். ‘’ இரண்டு வருடம் தொடர்ச்சியாக அவர் எனக்கு ஆசிரியையாக இருந்தார். அந்தக் காலத்தில் அவரை மீண்டும் பார்ப்பதுபோல இருக்கிறது. சரியாகச் சொன்னால், அவரை முழுவதுமாகத் தவற விட்டுவிட்டேன் என்பதில்லை. அவர் இன்னும் இருப்பதை நான் மறந்தே போனேன்.’’
பனிக்கட்டிக் குளிரில் ஒரு குவளை பார்லித் தேயிலை பானத்தை அவர் எனக்கு அளித்த விதம், நான் என்னவோ அவரது பழைய தொடக்கப் பள்ளி ஆசிரியைக்கு ஏதோ ஒருவகையில் உறவு என்பது போல அவர் நினைத்திருப்பாரெனத் தோன்றியது.
‘’ நினைத்துப் பார்த்தால் அவரே ஒரு துயரக்கதை. திருமணமான வருடத்திலேயே அவது கணவர் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அவர் ஒரு போக்குவரத்துக் கப்பலில் இருந்தார். டமார், எல்லாம் போய்விட்டது. 43 வயதிருக்கலாம். அதன்பிறகு அவர் பள்ளி ஆசிரியையாகவே காலம் கழித்தார். 1944ன் விமானத் தாக்குதலில் கடுமையான தீக்காயங்களுக்காளானார். முகத்தின் இடது புறம் முழுவதுமாக முழங்கை வரையில்’’. அவர் கன்னத்திலிருந்து இடது முழங்கை வரை ஒரு வட்டம் போட்டுக் காட்டினார். பின்னர் குவளைத் தேயிலையை அப்படியே குடித்துவிட்டுத் தன் முகத்தை மீண்டும் துடைத்துக்கொண்டார். ‘’பரிதாபமான பிறவி. அதற்கு முன்னால் அழகாக இருந்திருக்க வேண்டும். அது அவருடைய ஆளுமையையே பாதித்துவிட்டது. அவர் இப்போது உயிரோடிருந்தால் எண்பதுக்குப் பக்கம் இருக்கலாம்.’’
அதே நேரத்தில், சீப்பிலிருந்து பற்கள் உதிர்ந்து விழுவதைப்போல என் நண்பர்கள் என்னை விட்டு ஒவ்வொருவராக ஒதுங்க ஆரம்பித்தார்கள். ‘’ அவன் ஒன்றும் கெட்ட பையன் இல்லை, ஆனால் என்னுடைய சோகமான அம்மாவை நான் மீண்டும் பார்க்கவிரும்பவில்லை,’’ –அல்லது உணவுக்குழல் புற்றிலிறந்த நாயை, அல்லது தீக்காயத் தழும்புகளுடனான தொடக்கப் பள்ளி ஆசிரியையை – ‘’ அவனைப் பார்க்கும் போதெல்லாம்.’’ என்று அவர்கள் சொல்லலாம்.
ஒரு பல்மருத்துவரின் நாற்காலியைப் போல, வெறுக்கப்படாமல், ஆனால் எல்லோராலும் தவிர்க்கப்படுவதாக நான் உணரத் தொடங்கினேன். யாராவது நண்பர்கள் தெருவில் தட்டுப்பட்டாலும், சீக்கிரம் உருவிக்கொண்டு ஓடுவதற்கான காரணங்களைச் சொன்னார்கள். ‘’ எனக்குத் தெரியாது,’’ ஒரு பெண் மிகுந்த கஷ்டத்தோடு ஆனால் மிக நேர்மையாக ஒத்துக்கொண்டாள். ‘’இப்போதெல்லாம் உங்கள் பக்கத்தில் இருப்பது நிரம்பக் கடினமாக இருக்கிறது. உங்கள் முதுகில் ஒரு குடை மாட்டுகிற கொக்கி அல்லது வேறெதுவோ இருந்தாலும் இவ்வளவுக்குப் பொருட்படுத்தமாட்டேன்.’’
ஒரு குடை மாட்டுகிற கொக்கி.
நண்பர்கள் என்னைத் தவிர்க்கையில், ஊடகங்களால் அவர்களுக்குத் தேவையான அளவுக்கு என்னிடம் செய்திகள் பெற முடியவில்லை. ஒவ்வொரு நாளும் செய்தியாளர்கள் வருவார்கள், என்னையும் அத்தையையும் படம் பிடிப்பார்கள், அவரது புகைப்படம் சரியாக வரவில்லையெனக் குறைப்படுவார்கள்; என்மீது இலக்கற்ற கேள்விகளைப் பொழிவார்கள். நான் அவர்களோடு ஒத்துழைத்தால், அய்யோ பாவம் அத்தையைப்பற்றி ஒரு விளக்கத்திற்கு அல்லது புதியதொரு கண்டுபிடிப்புக்கு அது என்னை இட்டுச் செல்லுமென்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், அவர்களோ என்னைக் களைப்படையச் செய்தார்கள்.
ஒருமுறை நான் ஒரு காலைக்காட்சியில் தோன்றினேன். அவர்கள் என்னை அதிகாலை ஆறுமணிக்கே படுக்கையிலிருந்து இழுத்துத், தொலைக்காட்சி நிலையத்துக்குக் காரில் கொண்டுவந்து, பயங்கரமான காப்பியை எனக்குள் நிரப்பிவிட்டிருந்தார்கள். என்னைச் சுற்றிலும் நான், புரிந்துகொள்ள முடியாதவர்கள் புரிந்துகொள்ள இயலாத காரியங்களைச் செய்துகொண்டிருந்தனர். நான் சென்றுவிடலாமா என்று நினைத்தேன். ஆனால், அதைச் செயல்படுத்த என்னைத் தயார்படுத்திக்கொள்ளுமுன், அடுத்தது என்னுடைய முறையென்று சொல்லிவிட்டார்கள். புகைப்படக்கருவிகள் செயல்படாதபோது காட்சியின் தொகுப்பாளர், ஒரு திமிர்பிடித்த எரிச்சல்மிக்கவர், விபச்சாரி மகன், எதுவும் செய்யாமல் அங்கே சுற்றியிருந்தவர்களைக் குதறிக் கொண்டிருந்தார். ஆனால் படக்கருவியின் சிவப்பு விளக்கு எரியத்தொடங்கிய கணத்திலேயே முகம் முழுக்கப் புன்னகையும் அறிவுத்தோற்றமுமாகிவிட்டார்: உங்கள் கணிப்புக்கு மத்திய வயதுள்ள ஒரு அருமையான நபர்.
‘’ இப்போது நமது தினசரி சிறப்பு நிகழ்ச்சிக்கான நேரம். ‘’ வெளியே வேறென்ன இருக்கிறதெனப் பார்’’.படக்கருவிக்கு அவர் அறிவித்தார். ‘’ இன்றைய நமது விருந்தினர் திரு ……………. அவர் தனது முதுகில் அய்யோ பாவம் அத்தை ஒருவர் இருப்பதைத் திடீரெனக் கண்டுபிடித்தார். இதுபோன்ற குறிப்பிட்ட பிரச்னை அநேகமாக யாருக்கும் வருவதில்லை. இன்று நமது விருந்தினரிடம் இது எப்படி ஏற்பட்டது, இதனால் எந்த மாதிரியான சிரமங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்’’. என் பக்கமாகத் திரும்பிய அவர் தொடர்ந்தார், ‘’ உங்கள் முதுகில் அய்யோ பாவம் அத்தை ஒருவர் இருப்பதை எந்தவகையிலாவது சிரமமாகக் கருதுகிறீர்களா?’’
‘’ நல்லது, இல்லை,’’ என்ற நான், ‘’ நான் இதை நிச்சயமாகச் சிரமம் என்று கூறமாட்டேன். அவர் கனமாக இல்லை. அவருக்கு நான் உணவு கொடுக்கவேண்டியதும் இல்லை.’’
‘’முதுகின் கீழ்ப்புறத்தில் வலி இல்லையா?’’
‘’ இல்லை. அதுபோல எதுவும் இல்லை.’’
‘’ அவர் அங்கே ஒட்டிக்கொண்டதை நீங்கள் எப்போது கண்டுபிடித்தீர்கள்?
ஒற்றைக்கொம்பு வெண்கலக் குதிரைகள் நிற்கும் நீர்க்குட்டை அருகில் அன்று மாலை நடந்ததை நான் சுருக்கமாகக் கூறினேன்; ஆனால், என்னுடைய கருத்தை அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
‘’ வேறு மாதிரிச் சொல்வதென்றால்,’’ என்ற அவர் தொண்டையைச் சரிசெய்துகொண்டார். ‘’ நீங்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் அருகில் குட்டைக்குள் பதுங்கியிருந்த அவர், உங்கள் முதுகைப் பிடித்துக்கொண்டார். அப்படித்தானே?
‘’ இல்லை.’’ என்று சொல்லிவிட்டுத் தலையை வேகமாக அசைத்து அப்படியல்ல என்றும் காட்டினேன்.
இதற்குள்ளே போய் நான் எப்படி மாட்டிக்கொண்டேன்? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் திகில் கதைகள் அல்லது வேடிக்கைகள் மட்டுமே.
‘’ அய்யோ பாவம் அத்தை ஒரு பேயோ பிசாசோ அல்ல.’’ நான் விளக்குவதற்கு முயற்சித்தேன். ‘’அவர் எங்கும் ‘பதுங்கி’யிருப்பதில்லை, அவர் யாரையும் ‘பிடித்தாட்டு’வதுமில்லை. அய்யோ பாவம் அத்தை என்பது வெறும் வார்த்தைகள், அவ்வளவுதான்’’. என்றேன் நான். ‘’ வெறும் வார்த்தைகள், .’’
யாரும் எதுவும் பேசவில்லை. நான் இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டும்.
‘’ வார்த்தை என்பது மனதோடு பிணைக்கப்பட்டது. அது ஒரு மின் கற்றையைப் போல. நீங்கள் ஒரே விசைத்தூண்டலில் அது வழியாக அனுப்பிக்கொண்டேயிருந்தால், அங்கே ஏதோ ஒருவகையான தாக்கம், ஒரு விளைவு ஏற்பட்டே தீரும். ஒவ்வொரு தனிநபருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவு. என்றாலும் என்னுடையதில் ஏற்பட்ட தாக்கம் என்பது ஒருமாதிரியான எதோடும் சாராத தனித்த இருப்பு போன்ற உணர்வு. என் முதுகில் ஒட்டிக்கொண்டுள்ளது, உண்மையில் ‘அய்யோ பாவம் அத்தை’ என்ற வார்த்தைத் தொடர் மட்டுந்தான். – அந்த வார்த்தைகள் எந்தப் பொருளும் அற்றவை, உருவமில்லாதவை. அதற்கென்று ஒரு பெயர் வேண்டுமென்றால், நான் அதைக் கருத்தாக்க அடையாளம் அல்லது அது மாதிரி ஏதோ ஒன்று என அழைக்கலாம்.’’
தொகுப்பாளர் குழம்பிவிட்டதாகத் தெரிந்தார். ‘’ அதற்கென்று ஒரு பொருளோ உருவமோ இல்லையென்கிறீர்கள்.’’ என்று எடுத்துக்கூறிய அவர், ‘’ ஆனால் நாங்கள் தெளிவாகப் பார்க்கிறோம் …. ஏதோ ஒன்று……ஒரு உண்மையான உருவம் உங்கள் முதுகில் இருக்கிறது. மேற்கொண்டும் அது எங்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையான ஒரு பொருளைத் தருகிறது.’’
நான் தோள்களைக் குலுக்கிக்கொண்டேன். ‘’ அப்படித்தான், ‘’ என்றேன். ‘’ அது அடையாளங்களின் செயல்பாடுதான். ’’
நிகழ்ச்சித் தொகுப்பாளரின் இளம் பெண் உதவியாளர், ‘’ அப்படியென்றால்,’’ என்று சொல்லிச் சூழலை எளிதாக்கும் நம்பிக்கையில் இடைமறித்தார். ‘’ இந்த உருவம், அல்லது உயிருள்ள ஒன்று, அல்லது அது என்னவாகவேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள் விரும்பினால் அதைத் துடைத்துவிட முடியும்.’’
‘’ இல்லை, என்னால் அது முடியாது.’’ என்றேன். ஏதோ ஒன்று ஒருமுறை முகிழ்த்துவிட்டால் அது என் விருப்பத்திலிருந்தும் ஒரு தனித்த தொடர் இருப்பை மேற்கொள்கிறது. அது ஒரு நினைவைப் போன்றது. ஒரு நினைவை நீங்கள் மறக்க விரும்பலாம், ஆனால் அது உங்களால் முடியாதது. இதுவும் அது மாதிரியேதான்.’’
திருப்தியடையாததுபோல அவள் பேசிக்கொண்டேயிருந்தாள் :’’நீங்கள் குறிப்பிடும் இந்த நடைமுறை, ஒரு வார்த்தையைக் கருத்தாக்க அடையாளமாக மாற்றுகின்ற, அல்லது ஏதோ ஒன்று என்னாலும் முடியுமா?’’
‘’ அது எப்படிச் செயல்படுமென என்னால் சொல்ல முடியாது; ஆனால் கொள்கையளவில் உங்களாலும் முடிகிற ஒன்றுதான்.’’ என்று நான் பதில் அளித்தேன்.
இப்போது தொகுப்பாளர் களத்தில் இறங்கினார். ‘’ நீங்கள் சொல்வது, கருத்தாக்கம் என்ற வார்த்தையை நான் ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால் கருத்தாக்கத்தின் பிம்பம் என் முதுகில் ஏற்படும், அப்படித்தானே?’’
‘’ கொள்கையளவில் குறைந்தபட்சம் அது நிகழ முடியும்.’’ நான் இயந்திரத்தனமாக அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். வலுவான வெளிச்சமும் நிலையத்தின் கெட்ட காற்றும் எனக்குத் தலைவலியை ஏற்படுத்தத் தொடங்கின.
‘’ கருத்தாக்கம் என்பது எதைப்போலத் தெரியும்?’’ தொகுப்பாளர் துணிச்சலாகக் கேட்டது வந்திருந்த விருந்தினர் சிலரிடம் சிரிப்பை வரவழைத்தது.
எனக்குத் தெரியாதென்று நான் சொன்னேன். நான் சிந்திக்க விரும்பிய ஒன்றல்ல அது. என் கைகள் ஒற்றை அய்யோ பாவம் அத்தையாலேயே நிரம்பியிருந்தது. உண்மையில் அவர்கள் யாரும் இதில் எது குறித்தும் எந்தக்குறையும் காணவில்லை. அவர்களின் அக்கறையெல்லாம் அடுத்த வணிக நிகழ்ச்சி வரை உரையாடலை விறுவிறுப்பு குறையாமல் கொண்டுசெல்லவேண்டுமே என்பதில்தான்.
மொத்த உலகமும் ஒரு கேலிக்கூத்துதான். தொலைக்காட்சி நிலையத்தின் கண்ணைப் பறிக்கும் பிரகாசத்திலிருந்து காட்டுக்குள்ளிருக்கும் துறவியின் பர்ணசாலை வரை ஒரே விஷயத்திற்குத்தான் வந்து முடிகின்றன. இந்தக் கோமாளிகளின் உலகத்தில் அய்யோ பாவம் அத்தையை முதுகில் சுமந்து திரிந்த நான்தான் எல்லோரைவிடவும் பெரிய கோமாளியாக இருந்தேன். அந்தப் பெண் சொன்னதே சரியாக இருக்கலாம்: ஒரு குடை தாங்கியோடு நான் நன்றாக இருந்திருக்க முடியும்தான். இரண்டு மாதங்களுக்கொரு முறை நான் அதற்குப் புதிய வர்ணம் பூசி விருந்துகளுக்கு எடுத்துச் செல்லலாம்.
‘’ எல்ல்ல்லாம் சரிதான்! உங்களுடைய குடைதாங்கி இந்த வாரம் இளஞ்சிவப்பாக இருக்கிறது.’’ என்று யாரோ ஒருவர் சொல்லலாம்.
‘’ ஆமாம், நிச்சயமாக’’ என்று பதில் சொல்வேன். ‘’ அடுத்த வாரம் பிரித்தானிய பசுமைப் போட்டிக்குப் போகப்போகிறேன்.’’ என்பேன்.
முதுகில் ஒரு இளஞ்சிவப்புக் குடைதாங்கியுடனிருக்கும் வாலிபனோடு படுக்க விரும்பும் பெண்களுக்குள் ஒருவேளை போட்டி ஏற்படலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக என் முதுகிலிருப்பது குடைதாங்கியல்ல, ஒரு அய்யோ பாவம் அத்தைதான். நாட்கள் செல்லச்செல்ல மக்களுக்கு என்மீதும் முதுகிலிருக்கும் பாவப்பட்ட அத்தை மீதும் ஆர்வம் குறைந்து போயிற்று. பூங்காவில் என்னுடனிருந்த தோழி சொன்னதுதான் சரி: அய்யோ பாவம் அத்தைகள் மீது அக்கறை கொள்பவர் எவருமில்லை.
‘’ நான் உங்களை டி.வியில் பார்த்தேன்.’’ என் தோழி சொன்னாள். நாங்கள் மறுபடியும் அந்தக் குட்டையின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நான் அவளைக் கடந்த மூன்று மாதங்களாகச் சந்திக்கவில்லை. அப்போது இளங்கூதிர் காலமாக இருந்தது. காலம் அத்தனை வேகமாக ஓடுகிறது. . நாங்கள் இவ்வளவு நீண்ட நாட்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் இருந்ததில்லை.
‘’ நீங்கள் சிறிது சோர்வாகக் காணப்பட்டீர்கள்.’’
‘’ஆமாம். அப்படித்தான் இருந்தேன்.’’
‘’ நீங்கள் நீங்களாகவே இல்லை’’.
நான் தலையாட்டினேன். அது உண்மைதான். அப்போது நான் நானாக இல்லைதான்.
அவள் முழங்கால் மேலிருந்த குளிர்காலச்சட்டையின் விளிம்பினை மடிப்பதும் பிரிப்பதுமாக இருந்தாள்.
‘’ஆக, கடைசியில் நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக ஒரு அய்யோ பாவம் அத்தையைப் பெற்றுவிட்டீர்கள்.’’
‘’ஆமாம்.’’
அவள் முழங்கால் மேலிருந்த குளிர்காலச்சட்டையை, மடியிலிருக்கும் பூனையைத் தடவிக்கொடுப்பதைப் போல வருடிக்கொண்டே புன்னகைத்தாள்.
‘’ இப்போது அவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டீர்களா?.’’
‘’ கொஞ்சந்தான் என்று நினைக்கிறேன்.’’
‘’ அது உங்களுக்கு எழுதுவதற்கு ஏதாவது உதவியாக இருக்குமா?’’
‘’ஊகூம்,’’ என்று தலையை அசைத்தேன். ‘’ ஒன்றுமே இல்லை. இப்போது எழுதத் தூண்டும் எண்ணம் சிறிதுகூட இல்லை. என்னால் அதை ஒருபோதுமே செய்ய முடியாது போலிருக்கிறது.’’
அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
‘’ அப்பாடா, ஒரு வழி கிடைத்துவிட்டது.’’ என்றாள், கடைசியில். ‘’ நீங்கள் ஏதாவது கேள்விகளைக் கேளுங்கள். நான் கொஞ்சமாவது உங்களுக்கு உதவப் பார்க்கிறேன்.’’
‘’ அய்யோ பாவம் அத்தையைக் கரைத்துக் குடித்தவராகவா?’’
‘’ஹ்ஹி-ஹி’’ அவள் சிரித்தாள். ‘’சரமாரியாகக் கேளுங்கள். அய்யோ பாவம் அத்தை கேள்விகளுக்கு இப்போதே பதில் சொல்ல விரும்புகிறேன், அப்புறமென்றால் எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விடலாம்.’’
எங்கிருந்து தொடங்குவதென எனக்குப் புரியவில்லை.
‘’ சிலவேளைகளில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,’’ என்ற நான், ‘’எந்தமாதிரியான ஆட்கள் அய்யோ பாவம் அத்தைகளாக ஆகிறார்கள்? அப்படியாகவேவா பிறந்தார்கள்? அல்லது அய்யோ பாவம் அத்தைகள் ஆவதற்கெனப் பிரத்யேகமான நிலைமைகள் ஏதும் இருக்கின்றனவா? ஆட்களை, அய்யோ பாவம் அத்தைகளாக மாற்றக்கூடிய ஏதாவது ஒருவகை மூட்டைப்பூச்சி இருக்கிறதா?’’
அவை மிகநல்ல கேள்விகள் என்பது போல அவள் பலமுறை தலையாட்டினாள்.
‘’எல்லாம்தான், எல்லாமே ஒரே விஷயம் தான்’’ என்றாள், அவள்.
‘’ ஒரே விஷயமா?’’
’ஹ்ஹி-ஹி, நல்லது, கவனியுங்கள். ஒரு அய்யோ பாவம் அத்தைக்கென, ஒரு அய்யோ பாவம் குழந்தைப் பருவம் இருந்திருக்கும். அல்லது அப்படி இல்லாமலும் இருந்திருக்கலாம். அது ஒரு விஷயமே அல்ல. பல கோடி விளைவுகளுக்கான பல கோடி காரணங்கள் இந்த உலகைச் சுற்றி மிதந்துகொண்டிருக்கின்றன. வாழ்வதற்கும் பல கோடி காரணங்கள், அதுபோலவே சாவதற்கும் பலகோடி காரணங்கள். அப்படிக் காரணம் சொல்வதற்காகப் பலகோடி காரணங்கள். அது மாதிரி காரணங்கள் எத்தனை வேண்டுமானாலும் எளிதாகச் சொல்லிவிடலாம் தான். ஆனால், நீங்கள் கேட்பது அது மாதிரி ஒன்றல்லவே, இல்லையா?’’
‘’நல்லது. நான் எதையும் யூகிக்கவில்லை.’’ என்றேன்.
‘’ அவர் இருக்கிறார். அவ்வளவு தான். உங்கள் அய்யோ பாவம் அத்தை இருக்கிறார். நீங்கள் அந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்; அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் இருக்கிறார். அதுதான் அய்யோ பாவம் அத்தை என்பது. அவர் வாழ்வதென்பதே அவருக்கான காரணம். நம்மைப் போலவேதான். நாம் இங்கே, இப்போது வாழ்கிறோம், அதற்கென்று தனிப்பட்ட காரணம் அல்லது அடிப்படை ஏதுமில்லையே.’’
நாங்கள் குட்டையின் அருகிலேயே நெடுநேரம் பேசவுமில்லாமல் அசையவுமில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தோம். கூதிர்காலத் தெளிந்த கதிரின் ஒளி அவள் முகத்தில் நிழல்களைத் தோற்றுவித்தது.
‘’நல்லது. உங்கள் முதுகில் நான் என்ன பார்க்கிறேன் என்று கேட்கப் போவதில்லையா?’’ என்றாள், அவள்.
‘’ என் முதுகில் என்ன காண்கிறீர்கள்?’’
‘’ ஒன்றுமில்லை.’’ புன்னகைத்த அவள், ‘’ உங்களை மட்டுமே பார்க்கிறேன்.’’ என்றாள்.
‘’நன்றி.’’ என்றேன், நான்.
காலம் எல்லோரையும் நசுக்கிவிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதன் இடி போன்ற அடி.யோ, நம்மில் பலருக்குக் கிடைத்தது மிக மென்மையாகத்தான். நம்மில் சிலருக்கு அடி விழுந்ததேகூடத் தெரியாது. ஆனால், அய்யோ பாவம் அத்தையில் காலத்தின் கொடுமையை நாம் உண்மையாகவே காண முடியும். ஆரஞ்சுப் பழத்தில் ஒரு துளி கூடத் தங்கிவிடாமல் பிழிந்தெடுப்பது போல் காலம், அய்யோ பாவம் அத்தையைப் பிழிந்தெடுத்துவிட்டது. அய்யோ பாவம் அத்தையை நோக்கி என்னைக் கவர்ந்திழுத்தது, அவரது முழுமை தான், அதாவது முழுமையான பூரணத்துவம்.
அவர் எஃகு போன்று பனிக்கட்டியாலான மாட்சிமை மிக்க பனிப்பாறைக்குள் முழுவதுமாகப் புதைக்கப்பட்ட ஒரு பிணம் போல. பத்தாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட வெயிலால் மட்டுமே அந்தப் பனிப்பாறையை உருக்க முடியும். குளிர்காலத்துக்கு முன்பாகவே முடிக்கவேண்டியிருந்த சில வேலைகளுக்காகத் திரும்ப அழைக்கப்பட்டிருந்ததால், கிராமத்துத் தொடர்வண்டி ஒன்றில் முதுகில் என் அய்யோ பாவம் அத்தையோடு ஏறினேன். பிற்பகல் நேரத்தில் எல்லா கிராமத்துத் தொடர்வண்டிகளையும் போலவே அது காலியாக இருந்தது. கடந்த கொஞ்சகாலத்தில் நகரத்துக்கு வெளியே நான் செல்லும் முதல் பயணமென்பதால் ஓடிக்கொண்டிருக்கும் இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறு இருந்தேன். காற்று தெளிவாக சுறுசுறுப்பாக இயங்கியது. குன்றுகள் இயற்கைக்கு மாறான பசுமையோடிருந்தது. தடங்களின் ஓரமாக இங்கும் அங்குமாக மரங்கள் பிரகாசமான சிவப்புப் பெர்ரிகளோடிருந்தன.
திரும்பி வருகையில் என் இருக்கைக்கு அடுத்த இடைவழிக்கு எதிராக வெறுந்தோலாகத் தெரிந்த முப்பது முப்பந்தைந்து வயதிருக்கும் ஒரு பெண்ணும் அவளுடைய இரு குழந்தைகளும் இருந்தனர். மூத்த, பெண் குழந்தை ஆழ்நீலத்தில் கம்பளி உடையும் சாம்பல் நிறத் தொப்பியில் சிவப்பு ரிப்பனுமாக, மழலையர் பள்ளியின் சீருடையில் அம்மாவின் இடதுபக்கம் இருந்தாள். அம்மாவின் வலதுபக்கத்தில் பையன் அமர்ந்திருந்தான். அவனுக்கு வயது மூன்று இருக்கலாம். அம்மாவைப் பற்றியோ அல்லது அவள் குழந்தைகளைப் பற்றியோ தனித்துக் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை. அவர்களின் முகங்கள், ஆடைகள் எல்லாமே வழக்கமானவையாக, மிகச் சாதாரணமாக இருந்தன. அம்மா ஒரு பெரிய கட்டுப்பொதியைப் பிடித்திருந்தாள். அவள் சோர்வாகத் தெரிந்தாள்; இப்போதெல்லாம் தாய்மார்கள் சோர்வாகத்தானே தெரிகிறார்கள். அவர்களைத் தொடர்வண்டியில் நான் மிக அரிதாகத்தான் பார்த்திருக்கிறேன்.
அப்படியொன்றும் நீண்ட நேரம் ஆகிவிடவில்லை; அதற்குள் அந்தச் சிறுமியின் சப்தம் வழிநடையைத் தாண்டி எனக்கு வந்துசேர்ந்துவிட்டது. அவள் குரலில் ஒரு கூர்மை, அவசரமாகக் கவனிக்குமாறு கோரும் வேண்டுதல் இருந்தது.
பின், அந்த அம்மா, ‘’ ரயிலில் வரும்போது அமைதியாக இருக்க வேண்டுமென்று நான் உனக்குச் சொன்னேன்!’’ என்று சொன்னதைக் கேட்டேன். அவள் கட்டுப்பொதியின் மீது ஏதோ ஒரு வார இதழைத் திறந்து பரப்பியிருந்தாள்; அதிலிருந்தும் கண்களை அகற்ற மனமில்லாதது போல் தெரிந்தது.
‘’ஆனால், அம்மா, அவன் என் தொப்பியை என்ன செய்கிறான், பார்,’’ என்றாள், அந்தச் சிறுமி.
‘’வாயைச் சும்மா மூடு!’’
சிறுமி ஏதோ பேச வாயெடுத்தாள், ஆனால் மென்று விழுங்கிக் கொண்டாள். அந்தச் சிறு பையன், அவள் அணிந்திருந்த தொப்பியைக் கையில் வைத்திருந்தான். அவன் அதைக் கசக்குவதும், தேய்ப்பதும், இழுப்பதுமாக இருந்தான். அவள் கைகளை நீட்டி அதைப் பறிக்க முயன்றாள்; ஆனால் அவனோ அதை அவள் கைக்கு எட்டாதபடி வைத்திருக்கும் தீர்மானமான முடிவோடு தன்னை முறுக்கிப் பின்நீட்டிக்கொண்டான்.
‘’ அவன் என் தொப்பியை கிழிக்கப்போகிறான்,’’ என்ற, சிறுமியின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.
அம்மா வெறுப்போடு இதழிலிருந்தும் கண்களை உயர்த்தித், தொப்பியைப் பறிக்கக் கையை நீட்டி, நீட்டிப் பார்த்தாள். ஆனால் பையன் இருகைகளாலும் இறுகப்பற்றிக்கொண்டு அதைக் கொடுக்க மறுத்தான். ‘’அதை வைத்துக் கொஞ்ச நேரம் விளையாடட்டும்,’’ என்று அவள் சிறுமிக்குச் சொன்னாள். ‘’அவனுக்குச் சீக்கிரமே அலுத்துவிடும்,’’ என்றும் சொன்னாள். சிறுமி சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை; ஆனால், அவள் மேற்கொண்டும் வாதிக்க முயலவில்லை. அவள் உதடுகளை மடித்துக் கடித்துக்கொண்டு, தம்பியின் கைகளிலிருந்த தொப்பியையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் மாற்றுமனச்சாய்வில் தைரியமான பையன் சிவப்பு ரிப்பனை வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்கினான். அப்படிச் செய்வது அக்காவின் ஆத்திரத்தைக் கிளறுமென்று அவனுக்குத் தெரியும். அது என்மீதும் அதே விளைவை ஏற்படுத்தியது. இடைவழியைத் தாண்டிச் சென்று, அவன் கைகளிலிருந்து தொப்பியைப் பறிக்கத் தயாராகிவிட்டேன்.
சிறுமி அமைதியாகத் தம்பியையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் ஏதோ திட்டத்திலிருக்கிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். பிறகு, எழுந்து நின்ற அவள் திடீரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்; அதிர்ந்த அக்கணத்திலேயே, தொப்பியைப் பறித்துக்கொண்டு, இருக்கைக்குத் திரும்பி, அமர்ந்தும் விட்டாள். அம்மாவும் மகனும் என்ன நடந்ததென மூச்செடுக்கும் இடைவேளைக்குள் அவள் அதை அவ்வளவு வேகமாகச் செய்து முடித்தாள். தம்பி ஓவெனச் சத்தமிட, அம்மா சிறுமியின் ஆடையற்ற முழங்காலில் படாரென்று அறைந்தாள். பின், அவள் திரும்பிப் பையனைச் சமாதானப்படுத்த முனைந்தாள்; ஆனால், அவன் கத்தி அழுதுகொண்டேயிருந்தான்.
‘’ஆனால், அம்மா, அவன் என் தொப்பியைக் கெடுத்துக் கொண்டிருந்தான்.’’ என்றாள், சிறுமி.
‘’ என்னிடம் பேசாதே.’’ என்றாள், அம்மா. ‘’ நீ இனிமேல் என் பிள்ளை இல்லை.’’
சிறுமி தலைகுனிந்தாள்; அவள் தொப்பியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘’என் பக்கத்தில் இருக்காதே, தொலைவாகப் போய்விடு.’’ என்றவள், ‘’ அங்கே போ,’’ என் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையை நோக்கி அவள் கைநீட்டினாள்.
சிறுமி வேறுபக்கம் பார்த்தாள்; அம்மாவின் நீட்டிய விரலைக் காணாததுபோலிருக்க முயன்றாள். ஆனால், அதுவோ, காற்றின் மத்தியில், அந்தரத்தில் உறைந்துவிட்டதுபோல் என் இடது பக்க இருக்கையைச் சுட்டிக்கொண்டேயிருந்தது.
‘’ போய்க்கொண்டே இரு.’’ அம்மா இறுக்கிக்கொண்டேயிருந்தாள். ‘’ நீ இனிமேல் இந்தக்குடும்பத்தில் ஒருத்தி கிடையாது.’’
நடப்பது நடக்கட்டுமென்று, சிறுமி தொப்பியோடு எழுந்தாள்; அவளுடைய பள்ளிப்பையையும் எடுத்துக்கொண்டு அந்த நடைவழியின் குறுக்காக இழுத்து இழுத்துப் பெரும் சிரமத்துடன் கடந்து எனக்கு அடுத்து அமர்ந்தாள். அவள் தலை குனிந்தே இருந்தது. மடிமீதிருந்த தொப்பியின் விளிம்பினைத் தன் பிஞ்சுவிரல்களால் நீவிச் சரிசெய்ய முயன்றாள். இது அவனுடைய தப்பு என்று அவள் மனத்தில் நிச்சயமாக ஓடிக்கொண்டேயிருக்கும். அவன் என்னுடைய தொப்பியின் சிவப்பு ரிப்பனைக் கிழித்தி.ருப்பான். கண்ணீர் அவள் கன்னங்களில் கோடுகளாக இறங்கியது.
அநேகமாகச் சாயங்காலம் ஆகிவிட்டது. வண்டித்தொடரின் மேற்கூரையிலிருந்து மங்கிய மஞ்சள் வெளிச்சம் துயரமிக்க ஒரு விட்டில் பூச்சியின் இறக்கைகளிலிருந்து உதிரும் தூசியைப் போல் இறங்கி, பயணிகளின் வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுக்கப்படுவதற்காக அந்தரத்தில் அமைதியாகச் சுழன்றது. நான் என் புத்தகத்தை மூடினேன். கைகளை முழங்கால் மூட்டுகளின் மீது வைத்துக்கொண்டு நீண்ட நேரமாக உள்ளங்கைகளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதுபோலக் கடைசியாக எப்போது என் கைகளை ஆராய்ந்தேன்? புகைபடிந்த ஒளியில் அவை இரக்கமற்று இறுகி,, என் கைகளைப் போலவே இல்லாமல் அழுக்கானவையாகக் கூடத் தெரிந்தன. அவற்றின் தோற்றம் எனக்குள் துயரத்தை நிரப்பியது; இந்தக் கைகள் யாரொருவரையும் மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை; யாரொருவரையும் காப்பாற்றப் போவதில்லை. என் பக்கத்தில் தேம்பிக்கொண்டிருக்கும் சிறுமியின் தோள் மீது கைவைத்து, அதன் மூலம் அவள் சரியாகவே செய்திருக்கிறாள், தொப்பியை அப்படிப் பறித்து, அழகான ஒரு பணியை நிறைவேற்றி முடித்திருக்கிறாள் என ஆறுதல் சொல்ல விரும்பினேன். ஆனாலும் நான் அவளைத் தொடவோ பேசவோ இல்லை. அது அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தி, மேலும் பயங்கொள்ளச் செய்துவிடும். போதாதற்கு என் கைகள் வேறு அழுக்காக இருந்தன.
நான் தொடர்வண்டியை விட்டு இறங்கிய நேரத்தில், குளிர்காலத்தின் மிகக்குளிர்ந்த காற்று ஒன்று வீசிக்கொண்டிருந்தது. சீக்கிரமே கம்பளி ஆடைப் பருவம் மாறி கனத்த குளிர்காலக் கோட்டுகள் எங்கள் உடல்மீதிருக்கும். எனக்காகப் புதிய கோட்டு ஒன்று வாங்குவதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் முயற்சியில், நான் கோட்டுகளைப் பற்றிச் சிறிது சிந்தித்தேன், படிகளை விட்டிறங்கி, வெளி வாசலுக்கே வந்து விட்டேன்; அய்யோ பாவம் அத்தை என் முதுகிலிருந்து மறைந்துவிட்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன்.
அது எப்போது நடந்ததென்று எனக்கு எதுவும் தெரியாது. அவர் எப்படி வந்தாரோ அப்படியே போய்விட்டிருக்கிறார். அவர் முன்பு எங்கு வசித்திருந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார். நான் மீண்டும் அசலான நானாகிவிட்டேன்.
ஆனால், என்னுடைய அசலான நான் என்பது என்ன? இனிமேலும் அது அப்படியே நீடிக்குமென்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. இது வேறொரு நான், என்னுடைய அசல் நானை, அப்படியே வலுவாக ஒத்திருக்கின்ற வேறொரு நான், என உணர்வதை எதுவும் செய்ய முடியவில்லை. ஆக, இப்போது நான் என்ன செய்யவேண்டும்? உணர்வுகளின் திசைநோக்கு அனைத்தையும் நான் இழந்திருந்தேன். என் சட்டைப்பைக்குள் கைநுழைத்துத் தேடி, அங்கிருந்த சில்லறைக் காசுகள் எல்லாவற்றையும் கட்டணத் தொலைபேசிப்பெட்டிக்குள் செலுத்தினேன். ஒலிப்புகள் எட்டு. ஒன்பது. அப்புறம் தான் அவள் பதில் அளித்தாள்.
‘’ நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.’’ அவள் கொட்டாவியோடு பேசினாள்.
‘’ சாயங்காலம் ஆறு மணிக்கேவா?’’
‘’ நேற்று ராத்திரி முழுவதும் வேலை. இப்போதுதான், இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் முடித்தேன்’’
‘’ அய்யய்யோ! உங்களை எழுப்பவேண்டுமென்று நினைக்கவில்லை. என்றேன். ‘’ இது உங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால், நீங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறீர்களா என்று பார்க்கத்தான், உங்களை அழைத்தேன். அவ்வளவுதான். மெய்யாகத்தான் சொல்கிறேன்.’’
அவள் தொலைபேசிக்குள் புன்னகைப்பதை என்னால் உணர முடிந்தது.
‘’ நன்றி. அதுதான் உங்களுடைய அருமை.’’ என்றாள், அவள். ‘’ கவலைப்படாதீர்கள். இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். உயிரோடிருப்பதற்காகத்தான் கடைசி மூச்சையும் இழுத்துப்பிடித்து வேலைசெய்துகொண்டிருக்கிறேன். அதனால்தான் சாகிற மாதிரியான களைப்பு. சரிதானா? இப்போது நீங்கள் சரியாகிவிட்டீர்களா?’’
‘’ஆமாம், இப்போது சரியாகிவிட்டேன்.’’
‘’ உங்களுக்குத் தெரியும்,’’ ஏதோ ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வதுபோல் சொன்னாள்.’’ வாழ்க்கை மிகவும் கடினமானது.’’
‘’ ஆமாம், எனக்குத் தெரியும்.’’ அவள் சரியாகத்தான் சொன்னாள். ‘’ இன்று இரவு என்னோடு விருந்து சாப்பிட விரும்புவீர்களா?’’ நான்தான் கேட்டேன்.
அவள் உதட்டைக் கடிப்பதும் சுண்டுவிரலால் புருவத்தைச் சுரண்டுவதையும் அவளின் மவுனத்தில் உணர முடிந்தது.
‘’இப்போதே இல்லை.’’ ஒவ்வொரு எழுத்தையும் அழுத்திச் சொன்னாள். ‘’ நாம் பிறகு பேசுவோம். இப்போது என்னைத் தூங்கவிடுங்கள். கொஞ்சநேரம் தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும். நான் தூங்கி எழுந்ததும் உங்களைக் கூப்பிடுகிறேன், சரியா?’’
‘’சரி.’’ என்றேன். ‘’ இரவு வணக்கம்.’’
‘’ உங்களுக்கும் தான், இரவு வணக்கம்.’’
அவள் ஒருநிமிடம் தயங்கினாள்.’’ ஏதாவது அவசரமா ….. ஏதாவது பேசவேண்டுமா?’’
‘’ இல்லை, இல்லை. அவசரம் ஒன்றும் இல்லை. நாம் அப்புறம் மெதுவாகப் பேசிக்கொள்ளலாம்.’’ என்றேன்.
அது உண்மைதான், எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. பத்தாயிரம், இருபதாயிரம் வருடங்கள். நான் காத்திருக்க முடியும்.
‘’ இரவு வணக்கம்,’’ என்று மீண்டும் சொன்ன அவள் தொலைபேசியை வைத்துவிட்டாள். சிறிது நேரம் என் கையிலிருந்த ஒலிவாங்கியையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தாங்கியில் மாட்டினேன். ஒரு கணம் தாமதித்ததும், தாங்கமுடியாத பசியை உணர்ந்தேன். அந்த நிமிடம் எதாவது எனக்குச் சாப்பிடக் கிடைக்காவிட்டால், பைத்தியமாகிவிடுவேன். எதை வேண்டுமானாலும் தின்பேன். எதுவாயிருந்தாலும். யாராவது எனக்கு என் வயிற்றுக்குள் தள்ளுவதற்கு எதையாவது தந்தால், நான் அவர் முன்னால் நான்கு கால்களாலும் மண்டியிடுவேன். அவருடைய விரல்களைக்கூடச் சுத்தமாகச் சூப்பிவிடுவேன். ஆம். நான் உங்கள் விரல்களையும் சுத்தமாகச் சூப்பிவிடுவேன். அதன்பின், வெயிலுக்கும் மழைக்கும் அசையாத ஒரு தண்டவாளத் தாங்கு கட்டையைப்போலக் கிடந்து நான் தூங்குவேன். மிகமிக மோசமாக உதைத்தால்கூட என்னை எழுப்ப முடியாது. பத்தாயிரம் வருடங்களுக்கு நான் அயர்ந்து உறங்கிவிடுவேன்.
நான் அந்தக் கட்டணத் தொலைபேசியின் மீது சாய்ந்து மனத்தைக் காலியாக்கிக் கண்களை மூடினேன். அப்போது காலடிச் சத்தங்களைக் கேட்டேன், பத்தாயிரம் காலடிகள். ஒரு அலையைப்போல, என்னை மூழ்கடித்துச் சென்றன. அவை மேலும் மேலும் சென்றுகொண்டேயிருந்தன, காலத்திற்குள் இராணுவநடை. இப்போது அய்யோ பாவம் அத்தை எங்கே? நான் ஆச்சரியமடைந்தேன். அவர் எங்கே திரும்பிச் சென்றிருப்பார்? நான் திரும்பி எங்கே வந்திருந்தேன்?
பத்தாயிரம் வருடங்கள் முடிந்தபோது, தனியாக அய்யோ பாவம் அத்தைகளுக்கென ஒரு தனி சமுதாயம் நடப்புக்கு வந்திருந்தது. – அய்யோ பாவம் அத்தைகளுக்காக அய்யோ பாவம் அத்தைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நடத்தப்பட்ட ஒரு நகர அரங்கம், அய்யோ பாவம் அத்தைகளுக்கென அய்யோ பாவம் அத்தைகளால் ஓட்டப்பட்ட தெருக் கார்கள், அய்யோ பாவம் அத்தைகளுக்கென அய்யோ பாவம் அத்தைகளால் எழுதப்பட்ட நாவல்கள் – அவர்கள் எனக்காக வாயிற் பெருங்கதவைத் திறப்பார்களா?
பின்னர் மீண்டும் அவர்களுக்கு அவைகளெல்லாம் தேவைப்படாமல் போகலாம் – நகர அரங்கம், தெருக் கார்கள், நாவல்கள். அவர்கள் அதற்குப் பதிலாக அவர்களே தயார் செய்த பெரும் புளிக்காடி குப்பிகளுக்குள் அமைதியாக வாழ விரும்பலாம். பத்துப்பத்துகளாக – நூற்றுக் கணக்கில் – ஆயிரக் கணக்கில் வரிசை,வரிசையாக புளிக்காடிக் குப்பிகள் பூமியை மறைப்பதை ஆகாயத்திலிருந்தே நீங்கள் காண முடியலாம். அந்தக் காட்சி உங்கள் மூச்சே நின்றுவிடுமளவுக்கு அவ்வளவு அழகானதாக இருக்கும்.
ஆம். அதுதான் இது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த உலகம் ஒரே ஒரு பாடலை மட்டுமாவது அனுமதிக்குமானால் அதை நான் மகிழ்ச்சியோடு எழுதுவேன்; அய்யோ பாவம் அத்தைகள் உலகத்தின் முதல் அரசவைக்கவி, நான்தான் கவிப்பேரரசு. ஆகாயத்தின் கீழே பரந்த புற்கடலின் மீதிருக்கும் பச்சைக் குப்பிகளின் மீது பிரகாசிக்கும் கதிரொளியைப் புகழ்ந்து நான் பாடுவேன்.
ஆனாலும், இது மிகமிக, மிகமிக அதிகம். 12001 ம் ஆண்டுக்காக, அதிலும் நான் பத்தாயிரம் ஆண்டுகள் காத்திருப்பது என்பது மிகமிக நீண்ட காலம். அதற்கு முன், நான் பலப்பல குளிர்காலங்களுக்குத் தப்பிப் பிழைத்திருக்க வேண்டும்.
ஹாருகி முரகாமி.
ச. ஆறுமுகம் அலைபேசி 9442944347 மின்னஞ்சல் - arumughompillai@gmail.com
‘’
மலைகள் இணைய இதழ் ஜூனலை 18, 2012 இல் வெளியானது
அடவி சிற்றிதழிலும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment