Monday, 11 January 2016

அமெரிக்கச் சிறுதை - எண்ணெய் மிதக்கும் தண்ணீர்’ என்பதன் ஒரே பொருள் - டேவ் எக்கர்ஸ்

 ‘எண்ணெய் மிதக்கும் தண்ணீர்’ என்பதன் ஒரே பொருள் 

ஆங்கிலம் : டேவ் எக்கர்ஸ் Dave eggars

தமிழில் : ச.ஆறுமுகம்.


images (45)






டேவ் எக்கர்ஸ் : சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் அமெரிக்க எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர். அமெரிக்காவின் அதிகக் கவனம்பெற்ற, சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பின்நவீனத்துவப் படைப்பாளர். 12.03.1970ல் பிறந்தவர். இவரது தாயார் இரைப்பைப் புற்று நோயாலும், தந்தை நுரையீரல் புற்றுநோயாலும் 1991ல் மரணமடைந்தனர். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட வேண்டியதாயிற்று. அவரது எட்டு வயதுத் தம்பியை அவரே வளர்த்து ஆளாக்கினார். அவரது சொந்த அனுபவங்களையே வாழ்க்கைக் குறிப்பாகச் சிறிது புனைவும் கலந்து A HEART BREAKING WORK OF STAGGERING GENIUS என்ற பெயரில் 2000 ல் வெளியிட்டார். அது அந்த ஆண்டில் அதிக விற்பனை படைத்துச் சாதனை புரிந்தது. மேலும் அந்த ஆண்டுக்குரிய புலிட்சர் பரிசு தேர்வுப்பட்டியலிலும் இடம் பெற்றது. MIGHT என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2002ல் அவரது முதல் நாவல் You Shall Know Our Velocity வெளியானது. அவரது சிறுகதைகள் How We Are Hungry என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. 2005ல் Surviving Justice : America`s wrongfully convicted and exonerated என்ற பெயரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் முழுவதுமாகக் குற்றத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை மற்றொரு மருத்துவருடன் சேர்ந்து வெளியிட்டார். அதே ஆண்டில் பிரௌன் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் (Honorary Doctor of Letters) வழங்கி கவுரவித்தது. அவரது அடுத்த நாவல் What is What : The Autobiography of Valentino Achack Deng 2006 ல் வெளியானது. அது அந்த ஆண்டின் புனைவுகளுக்கான தேசிய புத்தகத் திறனாய்வுப் பரிசுக்கான தேர்வுப் பட்டியலிலும் இடம் பிடித்தது. ஆறு முதல் பதினெட்டு வயதானவர்களுக்கு எழுத்து மற்றும் பயிற்சிகள் அளிப்பதற்காக லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றை 826 Valencia என்ற பெயரில் ஏற்படுத்தி நடத்திவருகிறார். தனிநபர்களின் அசாதாரணச் சாதனைகளுக்காக வழங்கப்படும் Heinz award 2,50,000 டாலர்களுடன் 2007 செப்டம்பரில் அவருக்கு வழங்கப்பட்டது. 2008 ல் உட்னே ரீடர் இதழ் அவரை ‘’ உலகை மாற்றும் 50 திறமையாளர்கள்’’ பட்டியலில் ஒருவராகச் சேர்த்தது. 8.10. 2013ல் The Circle நாவல் கனடாவிலும் சான்பிரான்சிஸ்கோவிலும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைத்தளங்களைப் பதிவு செய்யும் இவரது கதைகளில் `இன்னொன்று` (Another) சகாராப் பாலைவனத்தில் குதிரைச் சவாரி செய்கிறது. கிளிமாஞ்சரோ சிகரம் ஏறும் குழு ஒன்றின் அனுபவத்தை தாகம் (Quest) பதிவு செய்கிறது. தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள தற்போதய கதையில் கோஸ்டோ ரீக்கா கடற்கரை, கடல் நீரலைவிளையாட்டு பதிவாகியுள்ளது. அவரது சர்க்கிள் நாவல் கூகிள், முகநூல் போன்றதொரு நிறுவனம் உருவாகி தனிமனிதர்களின் அனைத்துத் தகவல்களையும் இணையம் மூலமாகவே பெற்றுக்கொள்வதன் அபாயம் குறித்த சமூகப் பிரச்சினையை முன்வைக்கிறது.
தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது சிறுகதை The Only Meaning of the Oil-Wet Water விண்டேஜ் புக்ஸ் நியூயார்க் (முதல் பதிப்பு 2005) வெளியிட்டுள்ள How We Are Hungry தொகுப்பிலுள்ளது. இக்கதை அமெரிக்க உயர் மத்திய வர்க்க இளைஞர் சமூகத்தின் காதல், திருமணம், மற்றும் பொதுவான வாழ்க்கை குறித்த மனப்போக்குகளை ஆவணப்படுத்தியுள்ளது.
******


பிலார் மணவிலக்கையோ மணவாழ்க்கைத் துரோகத்தையோ மரணத்தையோ பெறப்போவதில்லை. அவள் எதைக் கண்டும் ஓடவில்லை. அவள் ஒருநாள் இரண்டு விமானங்களில், முதலில் சாம்பெய்னிலிருந்து, பின்னர் மியாமியிலிருந்து கோஸ்டா ரீக்காவுக்குப் பறந்தாள். அவளுக்குப் போதிய விடுமுறை இருந்தது. மேலும் அவளுடைய நீண்டநாள் நண்பன் ஹாண்ட் அங்கேயோ அல்லது அருகில் எங்கேயோ இருந்தான். இந்தக்கதையில் அநேகமாக துயரம் எதுவும் இல்லை.
பிலார் : எந்த வகையிலும் அவள் ஒரு லத்தீனியன் அல்லவென்று அவளுக்குத் தெரியும்; ஆனால், அவள் மிக இளம்பிராயத்திலிருந்தே நண்பர்கள் மட்டுமல்ல, முன்பின் அறிமுகமற்றவர்கள் கூட அவள் பெயர் ஒரு லத்தீன் வார்த்தையென்றோ அல்லது லத்தீன் வார்த்தை போன்று ஒலிப்பதாகவோ கூறுவதைக் கேட்டிருக்கிறாள். அதை ஒத்துக்கொள்வதை அவள் எப்போதுமே தர்மசங்கடமாகத்தான் உணர்ந்தாள். ஆனால், அவள் பெயரின் தோற்றுவாய் குறித்தோ, அதன் பொருள் குறித்தோ அல்லது அது தொடர்பான வேறு எந்த விபரங்கள் குறித்தோ அவள் எப்போதுமே அக்கறை கொள்வதில்லையென ஓராயிரம் தடவைகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவளின் நிறம் மரமொன்றின் இளம்பொன்வண்ணத்தை ஒத்தது; எளிதில் நிறமாற்றம் கொள்வது. அவள் தலைமுடியின் கறுப்பு நிறம் அவளிடம் லத்தீன் தன்மை இருப்பதாகச் சொல்லப்படும் உத்தேசக் கருத்தை வலுப்படுத்துகிறது. அவள் ஐரிஷ் என்றும் ஐரிஷ் மட்டுமே என்றும் அவள் பெற்றோர் பலமுறை அவளுக்குச் சொல்லியிருக்கிறார்கள்; வேண்டுமானால் கொஞ்சம் ஸ்காட்டிஷ், மிகச்சிறிய அளவில் ஜெர்மானிய சாயல் ஒருவேளை இருக்கலாம். குதிரைவால் கொண்டையிட்ட தலைமுடியும் நீண்ட கால்களுமாக – ஐந்தரை அடி உயரம் கூட இல்லாத ஒரு பெண்ணுக்கு அவை நீண்ட கால்கள்தாம் – எல்லோருக்கும் தெரிகிற போகஹோன்டாஸ்1 வடிவின் சாயலில் இருந்தாள். ஒவ்வொரு அமெரிக்கரும் விரும்புவது போலவே, அவளும் தனக்கு உள்ளூர் அமெரிக்க ரத்தம் சிறிதளவாவது இருக்கவேண்டும் என விரும்பினாள்; அது வழியாகத்தான், தவறான வழியில் செய்த காரியங்களை மன்னிக்கின்ற, அல்லது, அப்படித் தவறான வழியில் செய்யாமலிருக்கும் பெருந்தகைப் பண்பு பெறக்கூடும். அப்படியல்லாமல் அவள் ஐரிஷாகவோ, ஒருவேளை வெல்ஷாகக்கூட இருக்கமுடியும்; ஆனால் அதை ஏற்பதற்கு அறிவுபூர்வமாக எந்தக் காரணமும் இல்லை; இப்படியாக அவளுக்குத் தெரிந்த அவளுடைய முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எந்தத் துயரத்தையும் அறியாமலேயே அவள் பிறந்தாள்; அதனால்தான் அவள் எதற்கெடுத்தாலும் நன்றியுடன் சிரிக்கவேண்டியிருக்கிறது; கூடவே தோலைச் சுரண்டுவது மூலம் நன்மையான பலவற்றை ஏற்படுத்த அல்லது தோல் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பிலார் இளமையான ஒரு மருத்துவர்; தோல் மருத்துவர். அவளது தொழில் விபரங்கள் இக்கதையில் தலைகாட்டமாட்டா.

பிலார் நடந்தாள் : ஒரு நாட்டியக் கலைஞனைப் போல அவள் கால் பெருவிரல்கள் வடமேற்குத் திசையையும் வடகிழக்குத் திசையையும் நோக்கியபடி.
பிலார் சிரித்தாள் : தொண்டையை அகலமாகத் திறந்து சத்தமாக, விழுங்கப்பட்ட கண்களோடு.
பிலார் அறிவாள் : சில விஷயங்கள் எப்போது நடக்குமென்றும் சில விஷயங்கள் எப்போது நடக்காதென்றும்.

ஹாண்ட் க்ரானடா, நிகரகுவாவில் ஆறுமாதங்கள் வசித்தான்; அப்போது சுற்றுலாப் பயணிகள் எல்லோரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகமூட்டினான். அவன் ‘இன்டெல்’ நிறுவனத்துக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் பணியைப் பிலார் புரிந்துகொள்ள நினைத்தாலும் அவளால் இயலாது; ஏனென்றால் அவளது மூளை அவற்றையெல்லாம்விடச் சுவாரசியமான விஷயங்களால் நிரப்பப்படுவதற்கானது என அவள் நம்பினாள். இன்டெல் மத்திய அமெரிக்காவில் நிலையாக அமர்ந்துகொண்டு ஹாண்ட் மாதிரியான ஸ்பானிஷ் மொழி பேசும் இளம் ஆலோசகர்களை ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் சுழற்சிமுறையில் வேற்று நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. நிகரகுவா இன்டெலுக்கு, என்ன தேவைப்படுமென்பதை, ஹாண்ட் எப்படித் தெரிந்துகொள்ளமுடியுமென்பதைப் பற்றி பிலாரால் கற்பனைசெய்யக்கூட முடியாது; ஆனால் எப்போதும், நல்ல ஊதியம், குறைவான பணிப்பொறுப்பு, மற்றும் விளக்கமுடியாத சில விஷயங்களுக்காக இதுபோன்ற பணிகளிலேயே அவன் மீண்டும் மீண்டும் சேர்ந்துகொண்டிருந்தான். ஹாண்ட்டின் அழைப்பை பிலார் ஏற்றுக்கொண்டாள்; ஆனால் அந்த வாரத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் இருவராலும் ஒத்துப்போக முடியவில்லை. அவன் தொடர்ச்சியாக அங்கேயே இருந்ததில், அந்த நேரத்தில் மட்டும் வெறுப்பாகத் தோன்றிய நிகரகுவாவை விட்டுச்சென்று, கடலலைகளினூடே படகில் மிதந்து நீர்விளையாடியும், சமதளத்து ஈரமணலில் துள்ளிக்கொண்டே ஓடும் பெண்களைப் பார்த்துக்கொண்டும் ஒரு வாரத்தைக் கோஸ்டா ரீக்காவில் கழிக்க விரும்பினான். எல்லோருமே கோஸ்டா ரீக்காவைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால் யாரும் நிகரகுவாவுக்குள் கால் பதித்ததே இல்லையென்று பிலாருக்குத் தோன்றியது. அவள் நிகரகுவாவைப் பார்க்க விரும்பினாள். நிகரகுவா என்ற வார்த்தை அபாயகரமாக ஒலித்தது; அவளுக்கு அது பிடித்தது; நிகரகுவா! அது ஏதோ சிலந்தி வகையின் பெயர் போல இருந்தது. அங்கே, அங்கே போகிறது, மேஜைக்கு அடியில், – நிகரகுவா!
ஹாண்ட் நினைத்ததைச் சாதித்துவிட்டான். அவர்கள் பசிபிக் கடற்கரையின் கோஸ்டா ரீக்காவில் படகில் மிதந்து நீர்விளையாட்டு அயர்வார்கள். ஆனால் அதை அவள் பெரிதாகக் கருதவில்லை. அவள் எல்லோரிடமும் நிகரகுவாவுக்குச் சென்றதாகவே கூறுவாள்.

சான் ஜோஸில் காற்றின் வெம்மை ஒரு வலையைப் போல அவள் மீது படிந்தது. அவள் ஒரு காரை வாடகைக்குப் பிடித்தாள்; உடனேயே, அவள் செல்லவிரும்பிய திசைக்கு எதிர்த்திசையில் நேராக நகரின் மையத்தை நோக்கித் தவறுதலாகச் சென்றாள். வெப்பம் அதிகமாகத் தோன்றியது; தாராளமாகத் தொண்ணூறு டிகிரி இருக்கும். அவள் வணிகப் பகுதிக்குள் சென்றுவிட்டிருந்தாள். வெள்ளைநிற அலுமினிய வண்டிகளில் மலிவான மின்னணுச் சாதனங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். வாடகைக் கார் நிறுவனங்கள், வங்கிகள், மாணவர்கள். கூட்டம் கூட்டமாகப் பாதசாரிகள் நெரிசலின் நடுவில் மெல்லமெல்ல நெட்டித்தள்ளி முன்சென்று கொண்டிருந்தனர். அறுபதுகளின் அலுவலகக் கட்டிடங்கள்- அப்படியே கொண்டுவந்து நிறுத்தப்படும் வகை – எஃகுச் சட்டங்களும் கண்ணாடிகளுமாக மெலிந்து காணப்பட்டன; நினைவில் நிற்காதவையாகவும் இருந்தன. ஐந்து வழிகளோடு அகலமான சாலைதான்; ஆனால் நெரிசல் மிக்கதாக இருந்தது; ஆனாலும் நகர்ந்துகொண்டிருந்தது. அது ஏறத்தாழ 1973 ன் லாஸ் ஏஞ்சல்ஸ் போலத் தோன்றியது. அவள் கொம்பு வாத்தியம் போல் விசித்திரமாக ஊதிக்கொண்டே சான் ஜோஸினூடே வேலையற்றுத் தீவிரமாகப் பயணித்தாள். வெக்கை காரணமாக இருக்கலாம்; ரோட்டோரம் நடப்பவர் கூட்டம் அதிகமிருந்ததாலுமிருக்கலாம். காற்றுத்தடுப்புக் கண்ணாடி வழியாக அவள் பெண்களைப் பார்த்தாள்; அவர்களும் இவளைப் பார்த்தார்கள். மைக்கேல் ஜாக்சனின் ‘’ நான் உன்னோடு ராக் ஆட விரும்புகிறேன்’’ ஒலித்துக்கொண்டிருந்த ஆங்கில மொழிநிலையம்2 ஒன்றைக் கண்டாள்; அவள் மகிழ்ச்சியில் வெடித்துவிடுவாளென்றே நினைத்தாள். கடந்த சில வருடங்களாகவே அந்த இசையைச் சட்டென்று இனங்காண முடிவதில் அவளுக்கு மகிழ்ச்சி; எப்படிக் கிடைத்தாலும் எப்போது கிடைத்தாலும், அது தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் உள்ளுக்குள்ளேயே உணரும் ஒரு ஊமை மகிழ்ச்சி. எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்கப்படும் பொழுதெல்லாம், அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பதிலளித்தாள்; அதுவே சிலரை எரிச்சல் கொள்ள வைத்தது. நகரத்தை நோக்கிப் போக்குவரத்து மிகுந்திருக்க, அவளும் கால், கைகள், கழுத்து எல்லாம் தாளமிட, மைக்கேலுடன் நகர்ந்துகொண்டிருந்தாள்; அவள் அவரைச் சந்தித்தால் அவரை விரும்புவாளென அவளுக்குத் தெரியும்; அவள் அவரைப் புரிந்துகொள்வாள்; அவருடைய சமையலறையில் நின்றுகொண்டு காரணம் எதுவும் இல்லாமலேயே சிரிப்பாள்; சிரித்துக்கொண்டேயிருப்பாள்.

ஹாண்ட் ஏற்கெனவேயே : பிலாரின் நீண்டநாள் தோழிகள் மூவரைக் காதலித்திருந்தான்; எல்லாவற்றையும் அவள் அறிவாள்.

ஹாண்ட் விட்டுச் சென்றுவிடுவான் : இந்த உலகத்தை, அதிலிருக்கிற எல்லோரையும். விண்வெளியில் ஒருசில நிமிடங்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும்.

ஹாண்ட் அழுதான் : தவறாகக் கைதாகிச் சிறையிடப்பட்டு நாற்பது வயதுக்கு மேல் விடுதலையாகி எவ்விதப் பகைமையுமின்றித் தெருவில் திரியும் மனிதர்களைப்பற்றி வாசித்தபோது.
***
அவள் நகரத்தை விட்டு வெளியேறும் வழியைக் கண்டுபிடித்தாள்; நேராக மேற்கு நோக்கி, விமான நிலையச் சுங்க வாயில் வழியாக இருவழிப்பாதை வளைவுகளைச் சுற்றிக் கடந்து, அந்த மலை தேசத்தின் நூற்றுக்கணக்கான திருப்பங்கள் வழியாக மிகமிக மெதுவாகச் செல்லும் லாரிகள், டிரக்குகள் பின்னாகக் காத்திருந்து ஓட்டினாள்;. கிராமப்புறம் வெகு சுத்தமாகப் புல்பூண்டுகளோடு பசுமையாக இருந்தது; அங்கு எல்லாமே விற்பனைக்குக் கிடைத்தது. விமானநிலையத்தில் வீடு, மனை, நிலம் விற்றுக் கொண்டிருந்தார்கள்; கார் வாடகை மையத்தில், ஒவ்வொரு எரிவாயு நிலையத்திலும் பளபளக்கும் சுவரொட்டிகள், கையால் எழுதப்பட்ட மனை, நிலம் சொத்து விற்பனை விளம்பரங்கள் – கடற்கரை முன்பாக, தாழ்நிலக் கிராமப்பகுதி எனச் சாலையோரங்களில் எல்லா இடங்களிலும் மனைகளும் நிலங்களும் கிடைக்கின்றன. மத்திய அமெரிக்காவில் மிக உறுதியான, கணிக்க முடிகிற, மிகுதியான சுற்றுலா நேசமுள்ள ஒரு நாட்டை அமைத்துக்கொண்டதில் கோஸ்டாரீக்கர்கள் பெருமிதம் கொண்டனர். இப்போது அது முதிர்ந்துவிட்டது; எல்லாவற்றையும் சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். பேருந்துகளும் எஸ் யு வி3 கார்களும் பெருத்து நெடுஞ்சாலை முழுதும் வீங்கிக் கிடந்தன. பிலார் பழங்காலப் பாடாவதி கார்களையும் மரச்சட்டம் பொருத்திய பழ டிரக்குகளையும் எதிர்பார்த்தாள்; ஆனால் அவை அரிதாகவே இருந்தன.
வானம் விண்வெளி, மற்றும் சுத்தமான கறுப்பு டயர்களோடு அழகாகப் பளபளக்கும் புதிய கார்களுமாக இந்த நாடு இசைபாடிக் கொண்டிருந்தது; அங்கே வெப்பமிருந்தது; ஆனால் கதிருக்கும் மரங்களின் மணிமுடிகளுக்கும் நடுவில் இலைகளின் மேலாகக் கறுப்பு நிழல்கள் படிய, மேகங்கள் விரைந்துகொண்டிருந்தன.

தாழப்பறக்கும், விரைந்தசை மேகங்கள் : வாழும் விருப்பம் எமக்கில்லை.

மேடும் பள்ளமுமாய் மரமுடிக்கோளங்கள் : உண்மையாக இருக்கலாம்.

தாழப்பறக்கும், விரைந்தசை மேகங்கள் : நாங்கள் கடலுக்கும் கூடச் செல்ல முடியாது.

மேடும் பள்ளமுமாய் மரமுடிக்கோளங்கள் : தன்னிரக்கம் என்பது ஈட்டுத்தொகை இல்லாத முதலீடு.
தாழப்பறக்கும், விரைந்தசை மேகங்கள் : நாங்கள் ஒரு தும்பியைப் போல இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்; கவர்ச்சியாக இருக்கலாம்; உண்மையில் அழகுதான்; ஆனால் கண்மூடித் திறக்கும் நேரத்தில் இறந்தவராகிவிடுவோம். நாங்கள் பேய்கள்; ஆவிகள்; மாயத்தோற்றங்கள்.

மேடும் பள்ளமுமாய் மரமுடிக்கோளங்கள் : வீண் கலக்கம் வேண்டாமே.

தாழப்பறக்கும், விரைந்தசை மேகங்கள் : எங்கள் முடிவை நாங்கள் ஏற்கெனவே அறிவோம்.

மேடும் பள்ளமுமாய் மரமுடிக்கோளங்கள் : உங்களுக்கு என்ன சொல்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை.

தாழப்பறக்கும், விரைந்தசை மேகங்கள் : ஒரு விஷயம், கடலுக்குச் செல்வது முடியாததென்று நாங்கள் அறிவோம்; இப்படி அலைந்து திரிவதே எங்கள் விருப்பம்.

மேடும் பள்ளமுமாய் மரமுடிக்கோளங்கள் : பறப்பதன் சுகம் பலப்பலவே.

தாழப்பறக்கும், விரைந்தசை மேகங்கள் : ஆனால் நினைவுகள் அதற்குப் பொருத்தமற்ற கூட்டாளி.
* * *
ப்ளயா அட்லாவில் ஹாண்டைச் சந்திக்க பிலார் சென்றுகொண்டிருந்தாள்; ஏனென்றால், அங்கேதான் அலைகள் மிகப் பெரிதாக இல்லாமல், மன்னிக்கும் பண்போடு, இதமான வெப்பத்தோடு, கடற்கரை அநேகமாகக் காலியாக இருந்ததாக ஹாண்ட் சொல்லியிருந்தான். கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அந்தக் கடற்கரை என்னவோ காலியாகத்தான் தெரியுமென அவன் சொன்னான். ஒரு பெரிய சமதளமான ப்ளயா, என அவன் சொல்லியதுமே அவள் கெஞ்சினாள்; அவளுக்குத் தெரியும், கடற்கரை என்ற பொருளில் ஹாண்ட் ப்ளயா என்று சொல்வான், அந்தக் கடற்கரை ஸ்பானிஷ் பேசும் நாட்டிலிருந்தால் ப்ளயா என்றுதான் சொல்வான்.

பிலார் ஏன் கோஸ்டா ரீக்காவுக்கு வந்தாள் என்பதற்கு நுட்பமான காரணங்களோ அல்லது வலிகளோ, வேதனைகளோ இல்லை. முப்பத்தோராவது வயதிலும் அவள் மணமாகாமல் இருக்கிறாள். அவளுடைய நீண்டநாள் நண்பர்கள் ஒரு சிலரில் ஹாண்ட் இன்னும் திருமணம் ஆகாதவன். அதிலும் அவளுடன் இதுவரை படுக்காத கவர்ச்சியான ஒரே பழைய நண்பன். ஐந்து வாரங்களுக்கு முன் அவள் ஹாண்ட்டோடு தொலைபேசியில் பேசி முடித்தபோதே ஆல்ட்டாவில் அவனோடு படுக்கப் போவதாக அவளுக்குத் தெரியும்; விமானத்தில் வரும்போதும், கடற்கரைக்குக் காரோட்டி வரும்போதும், அது அவளுக்குத் தெரியும்.

இப்படித்தான் நடக்குமென்று கணித்தது குறித்து அவள் துயரம் கொண்டாளா? அது காதலுணர்ச்சியற்றதாகவா இருந்தது? அது அப்படியல்லவென அவள் முடிவெடுத்தாள். பாலுறவு மற்றும் அது போன்ற சில விஷயங்கள் – மக்கள் விருப்பமற்று வருத்தப்படுவதாகப் பாசாங்கு செய்கிற விஷயங்கள் – முடிவெடுப்பதைப் பற்றியதல்ல; ஏற்கெனவே முடிவெடுத்த பாதையில் உங்களைச் செலுத்துவது குறித்ததாகும்.

ஒல்லியாக, பெரிய வாயுடன், சுத்தமானவனாக, அவள் விரும்பியவாறே அவன் இப்போதும் தோற்றமளிக்கவேண்டுமென்ற முடிவுக்கும் நம்பிக்கைக்கும் அவள் வந்துசேர்ந்தாள். முதல் நாளை நண்பர்களாக நினைத்து, வெறுமையாகக் கைகளை மட்டும் தொட்டுக்கொண்டு கழித்துவிடுவார்கள். இரண்டாவது நாளில் இரவுவிருந்தின் போது மது அருந்துவது, அதன் பின்னும் அருந்துவது, உடுப்புகள் இல்லாமல் அச்சமூட்டும் நீர்விளையாட்டில் அயர்ந்து, அதன்பின் அனுபவ அடிப்படையில் பண்பட்ட வகையில் இருவரும் சேர்ந்து படுத்துறங்குவார்கள். இந்த அளவுக்கு அது நிச்சயமானது, ஏனெனில் பிலார் இதுபோன்ற காரியத்தை முன்பு டொரோன்டாவில் மார்க்குடனும், சான்டியாக்கோவில் ஏஞ்சலாவுடனும் செய்திருக்கிறாள்; இந்த ஏற்பாடுகளில் சிறிதளவும் வேறுபடாது; அதன் பின்னர் நடக்கவிருப்பவை மட்டுமே மாறுதலுக்குரியவை. அது ஹாண்ட்டோடு நடந்துமுடிந்த பின்பும், ஒருவருக்கொருவர் மீதான அன்பிலும் மரியாதையிலும் மிகமிகக் குறைவான மாற்றமே இருக்கும்: அவள் மிகுந்த எச்சரிக்கையோடு கவனமாக இருந்தாள்; அவனுக்கு நீளமான கயிறு விடப்பட்டிருந்தது. மார்க்குடனான பின்னர் அந்த வாராந்திர முடிவைக் குறித்து அவன் அடிக்கடி பேசுவதை அவள் சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. இரண்டுமே வேடிக்கையானவைதாம் – ‘’ நான் உன்னை அம்மணமாகப் பார்த்தேனே!’’ – அது அவனுக்கு ஏதோ ஒருவகையில் தனிப்பட்ட முறையில் இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள உதவியாக இருந்திருக்கவேண்டும் – ‘’ அந்த வாரமுடிவில் நீ என்ன ஆடை அணிந்திருந்தாய்? எனக்கு இன்னொருதடவை சொல்லேன். பொறு, கொஞ்சம் பொறு ………’’ – ஆனால், அது மீண்டும் ஹாண்டுடன், மிகச் சன்னமானதாக அது வேறு எப்படியும் தோற்றங்கொள்ளாதிருந்தால் ஒருவேளை மறக்கக்கூடியதாக இருக்குமென அவள் அறிவாள். ஆனால் அவர்கள் பாலுறவைத் தொடர விரும்புவார்களா? அது மட்டுந்தான், எளிய ஆனால் ஒரே கேள்வி. அது பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது : அவன் நாக்கினால் அற்புதம் ஏதேனும் படைப்பானா? அவனுடைய அம்மண உடல் துன்பமிழைக்கும் ஏதோவொரு வகையில் மாறுபட்டிருக்குமா? அம்மணமாக இருக்கும்போது அவன் அசைவுகள் அருவருப்பாக இருக்குமா? அவன் அழுவானா (மார்க்) அல்லது உணர்ச்சியற்றுப் போவானா (ஏஞ்சலா)? அவன் கால்கள் மிகவும் மெலிந்து, வெளிறியிருக்கலாம் அல்லது அவனுடைய அது கருஞ்சிவப்பாக, அல்லது ஒல்லிக்குச்சியாக, அவன் வாய் கூட —-

இக்கதை பிலாரும் ஹாண்டும் காதலில் வீழ்வதைப் பற்றியதல்ல.
* * * *

ஆல்ட்டாவை நெருங்கியபோது இரட்டைவழிகளாக இருந்த சாலை மேடு, பள்ளங்கள், ஆழக்குழிகள் நிறைந்து தூசி கிளப்பும் ஒற்றைச் சாலையாக மாறிப்போனது. கார்கள் இப்படியும் அப்படியுமாகச் சென்று, தள்ளாட, உள்ளேயிருந்தவர்கள் கைகளைக் கூரையில் இறுக்கிப் பற்றினர். இதுபோலப் பத்து மைல் தூரம், மரங்களும் வயல்களும் வழிவிடச் சந்தைகளும் கடைகளும், இதுதான் ஆல்ட்டா என உறைக்கும்போது நேரம் மணிக் கணக்கில் கடந்துவிட்டதாக உணர்ந்தாள். பழரசக் குளிர் பான அருந்தகமும் கலைப்பொருள் காட்சியகமும் இணைந்த ஒன்று Forget It, Sue எனக் கண்ணில் பட்டது. அதற்கடுத்து ஒரு மறு உருவாக்க நிலையம். மேலும் அதிக மனைகள் விற்பனைக்கு. ஊர் இன்னும் பழமையாகவே இருந்தது; சாலை இன்னும் தூசியைக் கிளப்புவதாக இருந்தது. காலணி இல்லாத வெற்றுக்கால் சிறுவர்கள் பைக்குகளிலும் மொபெட்டுகளிலும் கார்களை மிஞ்சி வேகமெடுத்து சாலைக் குழிகளில் நன்றாக நீந்திச் சென்றனர்; பெண்களோ மளிகைப்பொருட்கள் நிறைந்த நீலப்பட்டையிட்ட நெகிழிப்பைகள் கைகளைப் பூமியை நோக்கி இழுக்கச் சென்றனர். ‘’ பெஸ்ட் வெஸ்டர்ன்’’ இப்போது தான் கடந்தது. ரோட்டின் வலது பக்கத்தில் அடர்த்தியற்ற தோப்பு ஒன்று கடற்கரையை மறைத்தது. சமதளமாக அகன்றிருந்த கடற்கரையின் சிற்றலை தவளும் முகத்துவாரத்தில் அழுகும் மரக்கட்டைகள் சிறுசிறு படகுகளாகப் பரந்து கிடந்தன.
அவர்கள் சந்திப்பதாக ஒத்துக்கொண்ட ஹோட்டல், ஷாங்ரி லா எனப் பெயர்கொண்டது. அது பெயரற்ற ஒரு பிரதானத் தெருவிலிருந்தது. அந்த நகரம், அதன் எந்தத் தெருவுக்கும் பெயரிட்டிருக்கவில்லை; ஆனால் அங்கு மூன்று நகர்த்தொகுதிகளின் நீளத்துக்கு ஒரு பிரதானமான வழி இருந்தது. அநேகமாக அந்த நகரத்தின் அனைத்துக் கடைகளும் விடுதிகளும் அதில்தான் இணைந்துநின்றன. குன்றின் மேலிருந்த தூயவெள்ளைநிற ஷாங்ரி லா, ‘ட்டீல்’ வாத்து4 வண்ண நீலப்பச்சை வானப் பின்னணியில் ஒரு நினைவுச்சின்னம் போல் ஒளிர்ந்து மினுமினுத்தது. அது, ஓணான் வகைப்பட்ட பல்வண்ண இகுவானாக்கள், பாம்புகள், சுண்டெலிகள் நிறைந்த ஒரு சிறு தோட்டத்தைத் தொங்கவிட்டிருந்தது. அதன் மேல்தளம், தன் உறுதியான முகப்புநாடியைப் பெருங்கடலை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தது.
உரிமையாளர், நல்ல உடற்கட்டுடன் வெயிலில் கறுத்திருந்த ஹான்ஸ் என்ற ஜெர்மானியர்; பிலாரிடம் அறைச்சாவியைக் கொடுத்து ஐந்தாம் எண் அறைக்கு வழியையும் சொல்லியனுப்பினார். படிகளின் மேலேறும்போதும், பின்னர் மேல்தளம் வழியாக, அழகுநீர்த்தொட்டித் தடாகத்தைக் கடக்கும் போதும், இடதுபக்கம் இயற்கையோடு முரண்பட்டுப் பெரும் ஏளனப் பார்வையோடு பசிபிக், தலைக்கு மேலே தயங்கும் கதிர், களிப்புடன் நீர்விளையாட்டுப் பலகைகளைச் சுமந்து செல்லும் அலைகள், அவள் உண்மையில் அந்த உணர்வுகளைப் பெற்றிருந்தாள், கணநேரம், அது அவளுடைய தினசரிச் செயல்கள் அல்லவே, உண்மையில் அவள் இன்னும் சிகாகோவில், ஏன் விஸ்கான்சினிலேயே, இப்படியாகக் கற்பனையில் ஆழ்ந்திருந்தாள் – அதாவது அவள் ஒரு மங்கலான பிற்பகலில் வெண்டீஸில்5 சாலட்-பார் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, இதுபோலப் பகல்கனவு காணும் வழக்கத்தை வரித்துக் கொண்டிருந்தாள். இந்தக் கணத்தில் அவள் கனவு நனவாகுமெனவே தோன்றிற்று. ஒரு பூனைக்குட்டி சுருண்டு படுத்திருப்பதைப் போலிருந்தது, அந்த நீர்க்குட்டை; அதன் ஓரங்களில் கையால் வண்ணம் தீட்டப்பட்ட ஆரஞ்சும் நீலமுமான தரை ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன; அதைச் சுற்றிக்கொண்டு அவள் வெற்றுக்காலில் நடந்துகொண்டிருக்கிறாள்; வைக்கோல் தரைவிரிப்பின் மீது கிடந்த இரு தேக்குநிற நீர்விளையாட்டுப் பலகைகள் மீது நடந்து, அவளுடைய அறைக்குச் சென்றுகொண்டிருக்கிறாள்; வழியில் பலநிறப் பல்லிகள் ஒலித்தியங்கும் மேற்கூரைகொண்ட நீளமான கூடத்தைக் கடக்கிறாள்; அந்த அறை இருப்பதோ, கோஸ்டா ரீக்காவில் மலையும் கடலும் அருகருகிலிருக்கும் ஒரு ஹோட்டலில்! பன்னிரண்டு வருடங்களாக அவளுக்கு அறிமுகமாகி, உயிரோடும் இருக்கிற நண்பன் ஹாண்ட், அதுமட்டுமல்ல அவன் இப்போது அந்த அறையில் தங்கியிருக்கிறான்.
* * *
நெடுநேரமாகக் கார் ஓட்டியதில் அவளின் பின்புறம் நனைந்திருப்பது குறித்து, ஒருவேளை ஹாண்ட் அந்த ஈரத்தைக் கண்டு திகைத்துப்போவானோ என்று பிலார் கவலைப்பட்டாள். ஆனால் அவள் கதவைத்திறந்ததும் இருவரும் ஒருவரையொருவர் இழுத்து அணைத்துக்கொண்டதும்தான் தெரிந்தது, அவளைப் போலவே அவனும் ஈரமாக இருந்தான். அவன் அன்னாசிப்பழமும் வியர்வையும் கலந்த மணத்தைக் கொண்டிருந்தான். தோளின் மேல் அவன் தாடை வெப்பமாக இருந்தது; அவன் தலைமுடியோ, நசநசத்திருந்தது.
‘’ இங்கே குளிர் காற்றுக் கருவி இல்லை,’’ என்றான், அவன். அதைத் தொண்டைக்குள்ளேயே ஸ்பானிஷ் உச்சரிப்பில் சொன்னான். அப்படிப் பேசுவதை அவன் நிறுத்திக்கொள்வானென்று அவள் நம்பினாள்.

‘’ ஓ’’ என்றாள், அவள்.

‘’ ஆமாமாம், இங்கே ரொஒஒஒம்பச் சூஊஊஊடாகத்தான் இருக்கிறது.’’ என்று சொன்ன அவன், பெருமூச்சு விட்டு, அடங்கிப் போனான்.

உயர்ந்த கூரையுடன், நல்ல வெளிச்சமான அந்த அறைக்குள், ஒரு சமையலறை, காலை உணவுக்காக ஒரு சிற்றிடம், சில படிகள் உயரத்தில் ஒரு படுக்கையறையும் இருந்தது. மேலே நூல் நூற்றுக்கொண்டிருந்த மின்விசிறி ஒன்று ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று சுற்றுக்கும் ஒரு நூலை இழுத்து ‘டிக்’ என்றது. மேல்தளம், அழகுநீர்த் தடாகத்தை நோக்கி, பின் நகரத்தை நோக்கி, அதற்கும் பின்னாகப் பெருங்கடலை நோக்கித் தன் பார்வையை வீசிக்கொண்டிருந்தது. அவளால் இவற்றையெல்லாம் நம்பமுடியவில்லை.

‘’ அற்ப்ப்புதமாக இருக்கிறது,’’ என்றாள் அவள்.

‘’ எனக்குத் தெரியும்,’’ – அவன் சாதாரணமாக எப்படிப் பேசுவானோ அதுபோல, ஆறாவது கிரேடு வகுப்பில் அவர்கள் முதன்முதலில் சந்தித்தபோது எப்படிப் பேசிக்கொண்டிருந்தானோ அப்படியே பேசினான். அவர்களுடைய இரு பள்ளிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, அவர்கள் இருவரும் உறுதியான, கரடுமுரடான மேஜைகளில், பந்துகளைத் தவறிக் கீழே போடமாட்டோமென்ற நம்பிக்கையில் மௌனப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். கோஸ்டா ரீக்காவில் அவள் என்ன இழவைச் செய்து கொண்டிருக்கிறாள்? அவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்?

தரை முழுதும் பளபளக்கும் தரை ஓடுகள். எங்கு பார்த்தாலும் பளபளக்கும் ஓடுகள். அவள் ஹோட்டல்களில் கம்பள விரிப்பை எதிர்பார்த்து வந்திருந்தாள்.

‘’ஓட்டுத் தரை! இங்கே இதெல்லாம் சர்வ சாதாரணம். டெக்சாஸுக்குத் தெற்கே எங்கேயானாலும் இப்படித்தான்.’’ என்றான், ஹாண்ட்.

அங்கே அறையின் ஒரு மூலையிலிருந்த துளையிடுங்கருவி ஒன்று கைப்பிடியுடன் அச்சு அசலாக டில்டோ6 போலவே தோற்றமளித்தது. திறந்த ஜன்னல் வழியாகத் திடீர்க் காற்று ஒன்று குதித்து வாசல் மேலே கட்டியிருந்த இசைமணித்தொடர் ஒன்றைக் குலுக்கியது.

அவள் ஹாண்ட்டை நோக்கி நடந்தாள்; தன் கரங்களை அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவனின் மணத்தை முகர்ந்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டாள்; அவளது பழைய சமையலறையும், அங்கிருந்த சுவர்த்தாளில் வெப்பமும் ஈரப்பதமும் கலந்து குமிழியிட்டதில் தெரிந்த டிஸ்னிக் குள்ளர்களின் தோற்றமும் காட்சியானது.
* * * *

பெட்டிபடுக்கைகளையெல்லாம் அங்கேயே விட்டுவிட்டு, அவர்கள் வெள்ளைக் கல் படிகளில் குதித்துக் குதித்துக் கீழிறங்கினர். வெளியில், விரைந்து மறையும் இளஞ்சிவப்பு வெளிச்சம்; ஒரு சிறு அசைவில் பகல் இரவாக மாறிவிடும் பொழுதினில் அங்கே குதிரைகளைக் கண்டனர். ஹோட்டல் குன்றின் அடிவாரத்திலேயே, நான்கு. ஒன்று சாலையில் அசைவின்றி நிற்க, பக்கத்திலேயே சாலையோர நீண்ட கரும்பச்சைப் புற்களின் நடுவே இரண்டு அமர்ந்திருக்க, நான்காவது குதிரை, வெள்ளை, (மற்றவை கறுப்பு) ஹோட்டலின் செர்ரிக்கதவுக்கு மேற்கில், நீண்டு நேரான புதர்வேலி ஓரமாக, நின்றிருந்தது. பிலாரும் ஹாண்டும் குதிரைகளின் உரிமையாளர்கள் இருப்பார்களா எனச் சுற்றிலும் பார்த்தார்கள். அவற்றுக்கு லாடங்கள் இருந்தன; கடிவாளங்களோ, சேணமோ இல்லை. நான்கு குதிரைகளுமே மெலிந்து தோன்றின. அவை தனித்தேயிருந்தன. ஒவ்வொரு குதிரையும் பிலாரையும் ஹாண்டையும் பார்த்து வெறித்தது.

‘’ நீ வந்துகொண்டிருப்பதை அநேகமாக நான் மறந்தே விட்டிருந்தேன்,’’ என்றான், ஹாண்ட். அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள், நின்றுகொண்டே பேசிக் கொண்டுமிருந்தார்கள்; அதைக் குதிரைகள் கவனித்துக்கொண்டிருந்தன.

‘’ அதற்கு என்ன அர்த்தம்?’’ என்றாள், பிலார். அவள் தலையின் உச்சியில் ஒற்றைவிரலைச் சுழற்றிச் சுழற்றிச் சொரிந்துகொண்டிருந்தாள்.

‘’ எனக்குத் தெரியாது,’’ அவன் ஒரு நிமிடம் திகைத்துப் பின் வாங்கி, அவள் எப்போது வருவாளென எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இடைவெளி ஏற்பட்டுவிட்டதாகவும் விளக்கினான்.

‘’ மறந்தது இன்று மட்டுமா, அல்லது முழுவதுமாகவா?’’

‘’ உன் முடி கறுத்துவிட்டது.’’ என்றான், அவன்.

‘’ நான் இருக்கிற இடத்தில் இப்போது குளிர்காலம். நீ பதில்சொல்லப் போவதில்லை’’

‘’ அது எப்போதுமே இவ்வளவு கறுப்பாகவா இருந்தது?’’

‘’ எனக்குத் தெரியாது. அப்படித்தானே?’’

அவர்கள் குதிரைகளின் அருகாக நடந்தார்கள்; குதிரைகளும் அவர்களைச் சிறிது அக்கறையோடு பார்த்தன. குதிரைகளிடம் எதிர்பார்ப்பதற்கு என்ன இருக்கிறதென்று அவளுக்குத் தெரியாது. அவற்றின் தோற்றத்தில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை; ஆனால் அவை அவளுக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தின; அது ஏனென்றுதான் அவளுக்குப் புரியவில்லை. பாகன்கள் இல்லாமல், வேலியிடப்படாத குதிரைகளை அவள் எப்போதாவதுதான் பார்த்திருக்கிறாள்; அவை பெரியவையாக, கனைத்துக்கொண்டும் எளிதில் அறுத்துக்கொள்ள இயலாதபடி கட்டப்பட்டவையாகவும் இருந்தன. அவர்களுடைய ஹோட்டல் அருகிலேயே அவை இருப்பது புதுமைதான்; அவற்றைக் கண்டு அவள் உற்சாகமடைந்திருக்கிறாள்; ஆனாலும் அவை அங்கிருந்து உடனேயே அகன்றுவிடவேண்டுமென அவள் விரும்பினாள்; ஏனென்றால், அவற்றின் உருவத் தோற்றம் அவற்றுக்கு அகன்று விரிந்த ஆனால் ஒரே குவிமைய அறிவுத்திறன் இருக்கலாமெனக் காட்டுகிறதென்றும், அவை கதவை உடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து, அவர்கள் இருவரையும் கொன்றுவிடலாமென்றும் அவள் கற்பனை செய்தாள்.
‘’ ஒவ்வொரு நாளும் இரவில், கடற்கரையில் ஓடும் பெண் ஒருத்தி இருக்கிறாள்,’’ என்றான், ஹாண்ட்.
அந்தப் பெண்ணைப் பற்றி, அவள் ஓடுவதைப்பற்றி, அந்தக் கதையின் வேறு ஏதாவது ஒரு நூலிழையை, ஹாண்ட் சொல்லுவான் என்று பிலார் சிறிது காத்திருந்தாள். எதுவும் வரவில்லை. அவன் அவளை ஏறிட்டு நோக்கிவிட்டுப் பின், தாழ்த்திக்கொண்டான்.
‘’ நீந்தும்போது, நீ கவனத்தில் கொள்ளவேண்டிய பாறைகள் சில கரைக்கு அருகிலேயே உள்ளன.’’ என்ற அவன், ‘’இப்போது நீந்த வேண்டுமா?’’ என்று கேட்டான். அவள் இல்லையென்றாள். அவள் சாப்பிட விரும்பினாள்.
அழுக்கடைந்த சாலை சிறு கற்களும் பெரிய கற்களுமாக நிறைந்து, நன்கு உறைந்திருந்த இடங்களில் மேடுபள்ளமாகத் தூசிகிளப்புவதாக இருந்தது. அது கடற்கரைக்கு நீண்ட நடையாக அல்ல, மிக நீண்ட நடையாக இருந்தது. தண்ணீரை அடைவதற்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த பின்பும் இந்த ஐந்து நிமிட சாவகாச நடை கொடுமையாகத் தோன்றியது. தாழ்மரக்கிளைப் பின்னல்களில் இடித்துக்கொள்ளாமல் ஒருமுறைக் கூனிநடந்தபோது கடற்கரை, அகன்று சமதளமாகத் தெரிந்தது; அலைகள் முற்றிலுமாக இல்லை. ஒரு பெண் உடற்பயிற்சித் துள்ளல் செய்தாள்; அவளுடைய நாய் அருகிலேயே கட்டப்பட்டு, நாய் ஆட்டுவிக்கும் பாவை போல அவள் தோற்றமளித்தாள். அவர்களின் பிம்பங்கள் கரையில் தளர்வாகத் தோன்றின; மணலின் ஈரத்தில் அவை அடிக்கடி காணாமல் போய்த் திரும்பின. ஆனால், இதுவன்றி அங்கே காலியாக இருந்தது; அது நல்லதாகவும் இருந்தது.
‘’ இது அந்தப் பெண்ணா?’’ பிலார் கேட்டாள்.

‘’ அப்படித்தான் நினைக்கிறேன்.’’

‘’ இந்தக் கடற்கரையில் இரவில் ஓடுகிற வேறு பெண்கள் இருக்கிறார்களா?’’

‘’ நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் இருட்டாக இருந்தது.’’
பிலாருக்கு வயிற்றை உடைந்த கண்ணாடியால் குத்திக் கிழித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
* * *

ஹாண்ட் கலப்படமற்ற நல்ல மரபு முறையில் பிறந்து வளர்ந்தவன். நல்ல உயரம், நல்ல உடற்கட்டு, பரந்த உறுதியான மார்பு, திண்ணிய கரங்கள் நேர்த்தியாக இளந்தவிட்டு நிறத்தில் இருந்தன. உயர்நிலைப் பள்ளியில் அவன் நீச்சல் வீரனாக இருந்தான். ஆனால் அவனிடம் ஒரு நாட்டுப்புறக் கிறுக்குத்தனம் இருந்ததை அவனைத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவனித்திருந்தார்கள்; அவன் எல்லா நேரத்திலும் அப்படியல்ல – ஏதாவது ஒரு விஷயம் அவனது மனதுக்குள் பற்றிக்கொள்ளும்போது மட்டும் அவன் அப்படி முயன்று கொண்டிருப்பான்; ஆனால் அதன் அவசரத்தைப் பிறருக்குச் சொல்லாமலேயே, அதாவது லஸ்ஸீயும் கிணறும்7 போல. அவன் மனம் விரைவாகப் புரிந்துகொண்டு உடன் செயலாற்றும் திறமைகொண்டது; நல்ல தூக்கத்தில் கூட மேம்போக்காகத் தூங்கக்கூடியது – ஆனால் அவன் எவற்றையெல்லாம் மிக முக்கியமான உண்மைத் தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் எனக்கருதுவானோ அவற்றைக் கடுமையாக மறுதலிக்கும் முரணாக ஒரு குடைச்சல் எப்போதும் அவன் மூளைக்குள் இருந்தது. அடக்கமாகத் தோன்றும் அவனுடைய ஆண்மைத் தோற்றம் ஒருவிதத்தில் அழகானதுதான; ஆனால் அதன் சில குணாம்சங்கள் – அவனது நாடியில் மெல்லிய ஒரு பிளவு, எப்போதுமே தளர்வாகத் தொங்கும் அவனது துளையிடப்பாத காதுகள், இளம் பொன்னிறத் தலைமுடியில் அங்கங்கே சில நரைக்கோடுகள் – அவனுக்கு நல்வாய்ப்புகளைக் கொடுத்தன என்பதை அவன் நன்கறிவான். கிருதாக்கள் வரும், போகும்; இப்போது திரும்பியுள்ளன; இது ஒரு தவறுதான்.
அவன் கடந்த சில வருடங்களில் பல இடங்களுக்கும் வெகுவாகப் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறான். ஒருமுறை, அவர்கள் இருவருக்கும் நண்பராக இருந்து இப்போது இறந்துவிட்ட ஒருவரோடு ஒருவாரத்துக்குள் இந்த உலகத்தின் பாதியைச் சுற்றி வந்துவிட்டான்.
அவர்கள் இரவு விருந்துக்குத் தோதான இடத்தைத் தேடிக்கொண்டே அந்தப் பிரதானத் தெருவில் கால்களைத்தேய்த்தவாறு நடந்தனர். அங்கே ‘மியாமி ஹெரால்ட்’ நாளிதழ் விற்கும் ஒரு சிறிய ஸ்டால் சென்ற வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியிருந்தது. சில சிறிய வீடுகள்;. பறவைகள் மற்றும் குரங்குகளுக்கான ஆடைகள், துவாலைகள் மட்டுமே விற்கும் ஒரு கடை; கூரையில் கிறிஸ்துமஸ் விளக்குகள் தொங்கவிடப்பட்ட ஒரு உணவு விடுதியை அவர்கள் கண்டனர். விடுதி முழுவதும் அமெரிக்கப் பதின்பருவத்தினர் நிரம்பியிருந்தனர்; எல்லோரும் வளர்ந்தவர்களாக, பையன்கள் குமர்களைவிட உருவத்தில் பெரியவர்களாக இருந்தனர். அளவில் பெரிய டி – ஷர்ட்டுகள் அவர்கள் மார்புகளை மறைத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. பிலாரும் ஹாண்டும் இருக்கையில் அமர்ந்தனர். அவர்கள் கால்களுக்கடியிலிருந்து வளமான மயிரடர்ந்த சாம்பல் நிறப் பூனை ஒன்று தகரக்கூரைக்குப் பாய்ந்தது.

அந்த மேஜைக்கான பெண்-பணியாள் வந்தாள். அவள் ‘ப்யோனஸ் நோச்சஸ்8 – - நல்லிரவு – என்றாள். அவர்கள் பதிலுக்கு ‘ப்யோனஸ் நோச்சஸ்’ கூறினர். ஹாண்ட் ஸ்பானிஷில் ஏதோ கூறியதும் அந்தப் பெண்-பணியாள் சத்தமாகச் சிரித்தாள். அவள் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, அவன் மீண்டும் ஸ்பானிஷில் பேசினான்; அவளோ பின்னும் அதிகமாகச் சிரித்தாள். அவள் ஒரு நொடி, தன் கைகளால் மேஜையைப் பிடித்துக்கொண்டு முன்பக்கமாகச் சாய்ந்தாள். அவள் பிலாரை ஊன்றி நோக்கினாள்; அது அவளுக்கு உற்சாகமான நேரமாக இருந்தது. அங்கே என்ன நிகழ்ந்ததென பிலாருக்கு எந்த யூகமும் இல்லை. ஹாண்ட் என்ன சொல்லியிருப்பான்? அவன் ஒரு கலகக்காரன்.
‘’ நீ அவளிடம் என்ன சொன்னாய்?’’ அவள் சென்ற பிறகு பிலார் கேட்டாள்.
‘’ யார்?’’
‘’ அந்தப் பெண்-பணியாள். அப்படியென்ன வேடிக்கை?’’
‘’ ஒன்றுமில்லை, நிஜமாகத்தான்.’’
‘’ நீ அவளைக் கொன்றுகொண்டல்லவா இருந்தாய். என்ன சொன்னாய்?’’

ஹாண்ட் விளக்கம் சொல்லமாட்டான். பிலார் அப்படியே விட்டுவிட்டாள், அவர்களுக்கிடையே சில விஷயங்கள் ஒருவருக்கொருவர் அறியக்கூடாததாக இருந்தன. அதனால்தான் அவள் அப்படியே விட்டுவிட்டாள். அவர்கள் கோழிக்கறியும் சோறும் உண்டனர்; அங்கே வைக்கப்பட்டிருந்த முக்கோண வடிவிலான சிறிய நீலநாப்கின்களால் வாயைத் துடைத்துக்கொண்டனர். பூனை திரும்பி வந்து ஹாண்டின் முழங்காலின் முன்பக்கமாக உரசியது; முன்னும் பின்னுமாக மீண்டும் மீண்டும், ‘இது சரியில்லையே’ என உணரத் தலைப்படுமாறு உரசியது.

பாடாத பாடலொன்று, ஹாண்டுக்காக
நீ! உன்னைப் பற்றிச் சில,
என்னை உந்தித்தள்ளும் உன் அகன்ற இடுப்பு போல.
ஆனால், புன்னகைக்கும் உன் இதழ்கள் என்னைக்
கொல்கின்றன. உன் தவிட்டுநிறத் தோள்கள்
என்னைப் பூமியிலிருந்து சில அங்குலம் தூக்கி நிறுத்துகின்றன.
உன் முகத்தில் உரத்து அறைய வேண்டும், நான்.

சேர்ந்திசைக்குழு:
உன் முதுகில் துள்ளியேறிக் குதிரை ஓட்டவேண்டும், நான்
உன் முதுகில் துள்ளியேறிக் குதிரை ஓட்ட வேண்டும், நான் உன் முதுகில் துள்ளியேறிக் குதிரை ஓட்டவேண்டும், நான்.
எந்தச் சிறு தேசத்தையும் வழிநடத்தும் தலைவன், நீ
விரும்பினால், ஆனால் நீ விரும்புவதில்லை
ஏனெனில் உன்னில் பாதித் தனிவகை, ஒற்றை மனிதனாக.
ஆனால், இப்போதும் உன்னிடம் ஒரு ஈர்ப்பு, ஒரு தலைமை
மாந்தனாக, முன்னர்த் தச்சனாக இருந்த நடிப்புக் கலைஞனாக,
தன்னோடு எப்போதும் இருக்கும் நண்பர்களோடு
வாரமுடிவுகளில் இப்போதும் லக்ரோஸ் விளையாடும் வீரனாக.
நான் நினைக்கிறேன், உன் இதழ்கள் மிகமிக மென்மை,
உன் கண்களின் அமைப்பு மிகமிக நெருக்கம்
நம் குழந்தைகள் அழகற்றுப் பிறக்கலாம்.
ஆனால் நீயொரு ஆண்மகன், உன்னைப் போல வெகுசிலரே உலகிலுண்டு.
சேர்ந்திசைக்குழு:
உன் முதுகில் துள்ளியேறிக் குதிரை ஓட்டவேண்டும், நான்
உன் முதுகில் துள்ளியேறிக் குதிரை ஓட்டவேண்டும், நான்
உன் முதுகில் துள்ளியேறிக் குதிரை ஓட்டவேண்டும், நான்.

அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, மேஜையைவிட்டு எழும் முன்பாக ஹாண்ட் இப்படிச் சொன்னான்: ‘’ நான் நினைக்கிறேன், எனக்கு கொத்துக்கறி சமைக்க வேண்டும் போலிருக்கிறது.’’

பிலார் தகரக்கூரை மீதிருந்த பூனையைக் கவனிப்பதாகப் பாசாங்கு செய்தாள்.

‘’ கொத்துக்கறி செய்யச் சின்னச் சின்ன கருவிகள் இருக்கின்றன, நீ அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.’’ என்றான், அவன். ‘’ கொத்துக்கறிக்கென மெல்லிய உறைப்பைகள் இருக்கின்றன. அதை வாங்கிக்கொள். உனக்குத் தேவையான கறிவகைளை அதற்குள் அடைத்துக்கொள்ளலாம். மாட்டுக்கறி, பன்றிக்கறி, கொழுப்பு, வாசனைப்பொருட்கள். நீ எப்போதாவது கொத்துக்கறி செய்திருக்கிறாயா?’’ பிலார் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்தாள். ஹாண்ட், அவன் தோற்றத்தால், அறிவுத்திறமையால், பித்துக்குளித்தனத்தால், பற்றிக்கொள்ளும் தன்மையால் அவளை அசையவிடாமல் கட்டிப்போட்டான்.

‘’ இதுமாதிரி உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதெல்லாம் எப்படிச் செய்யவேண்டுமென்று நொடியில் கற்றுக்கொள்ளலாம். ப்ரெட்செல், உப்பு பிஸ்கெட் வேண்டுமா. அல்லது கதவுகளா. சாதாரண மக்களால் அதையெல்லாம் எப்படிச் செய்ய வேண்டுமெனக் கற்றுக்கொள்ள முடியும். தலையணைகள். என் அம்மா கடந்த வருடம் தலையணை செய்யத் தொடங்கினார்கள்.’’
* * *
அவர்கள் அந்தப்பாதை வழியாகவே திரும்பி நடந்தார்கள். அமெரிக்கர்கள், கனடியர்கள், ஸ்விஸ் மக்கள் தெருவின் குறுக்கும் மறுக்குமாகச் சென்றார்கள்; சிலர் சிறிது நின்று திறந்தவெளி மது அருந்தகத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் கல்லூரிக் கூடைப்பந்து நிகழ்ச்சிகள் தெளிவில்லாமல், ஒலியில்லாமல் இருந்தாலும் கவனித்தார்கள். வெள்ளைப் பருத்தியாடையிலிருந்த, வெயிலில் கறுத்த தம்பதியினர் பரிசுப்பொருட் கடையில் கூடைகளை வருடிக் கொண்டிருந்தனர். கட்டணத் தொலைபேசிகள் இரண்டில் ஒன்றுக்காக இருப்புப் பலகைகளில் நீர்விளையாட்டுக்காரர்கள் காத்திருந்தார்கள். பன்னிரண்டு வயதுப் பாலகர்கள் பரந்த வெள்ளைப் புன்னகையுடன் ஒவ்வொரு பைக்கிலும் மூன்று மூன்று பேர்களாகப் பறந்து சென்றனர்.

அவள் ஹாண்டுடன் படுத்துறங்குவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக எண்ணிக்கையிட்டாள்: ஏனெனில் அவனுடன் உறங்குவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தாள்; அவனை அம்மணமாகப் பார்க்கவேண்டுமென அத்தனை ஆவல்; ஏனெனில் அவள் அவனைக் காதலித்தாள்; ஏனெனில், அவனுடன் உறங்குவதென்பது நிரம்பவும் இயற்கையானது மட்டுமல்ல, அது அவள் அவன் மீது கொண்டிருந்த தந்தைப்பாசத்தின் நல்லதொரு நீட்சியாகவும் இருக்கும்; ஏனெனில், அதில், அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், பின்னர் இருவரும் இணைவது குறித்துப் பேசிக்கொள்வதற்கும் நல்லதொரு வாய்ப்பு இருந்தது; ஏனெனில், இது, சிறியது மற்றும் அச்சமுறுவது போன்று, விஷயங்கள் குறித்த ஒருவரின் ஆர்வத்தை அவள் மறுத்ததில்லை; அப்படி இருக்கவும் அவள் எப்போதும் விரும்பியதில்லை; ஏனெனில் அவளின் விலா எலும்புகள் நொறுங்கும் ஒலி கேட்குமளவுக்கு அவள் மார்புகளை இறுக்கக்கூடிய உண்மையிலேயே அற்புதமான கரங்களும், திண்தசைத்தோள்களும் அவனுக்கு இருந்தன; ஏனெனில் அவனை விட்டு அகன்றிருக்கும்போது அவளுக்கு அவன் மீது அவ்வளவு அதிகமான ஈர்ப்பில்லை – குளியல் தொட்டியிலிருக்கும் போதோ அல்லது படுக்கையில் நீட்டிச் சமதளமாகப் படுத்திருக்கையிலோ அவனைப் பற்றி அவள் நினைத்ததேயில்லை – ஆனால் அவன் முன்னிருக்கும்போது நடக்கவோ, சாப்பிடவோ அவள் விரும்பவில்லை, இதமான ஒரு மென்வெள்ளைப் போர்வைக்குள் அவனோடு நிர்வாணமாக இருக்கவே விரும்பினாள். அவள் அவன் தோள்களைப் பற்றிக்கொள்ள விரும்பினாள்; அவனோடு பனிச்சறுக்காட விரும்பினாள்; அவனுக்குக் குழந்தை பெற்றுப் பெயரிட விரும்பினாள்; அவனே அவளின் குழந்தைகளுக்குத் தந்தையாக, தனக்கும் தந்தையாக, சகோதரனாக இருக்கவேண்டுமென விரும்பினாள்; இவையெல்லாம் அவளுக்குப் பரந்த சுதந்திரத்தோடு வேண்டும்; அவள் வேற்று மனிதர்களோடு உறங்கிவிட்டு, வீட்டுக்கு வந்து, அவர்களைப்பற்றி ஹாண்டுக்குச் சொல்லவேண்டுமென விரும்பினாள். அவள் ஹாண்டோடு ஒரு வாழ்க்கையும் அதே நேரத்தில் வேறு மூன்று நபர்களோடு சமகாலத்தில் வாழவும் விரும்பினாள்.

ஹோட்டல் முன்பு குதிரைகள்: பொறுமையாக, ஆனால், அலுவலை வலியுறுத்திக் காத்திருப்பது போலப் புல்லின் நடுவே இரண்டு அமர்ந்திருந்தன; அவற்றில் வெள்ளைக்குதிரை, குழந்தைகளின் படுக்கையறையின் மேற்கூரை நட்சத்திரத்தைப் போல மங்கலாக மினுமினுத்தது. மூன்றாவதும் நான்காவதும் புதர்வேலி ஓரமாக ரோட்டில், கறுப்பு மயிர் பளபளக்க நின்றுகொண்டிருந்தன.

குதிரைகள்: நாம் திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை.
அழுக்குச் சாலைக் குதிரைநிழல்களில் ஒன்று : என்னால் முடிந்ததை அதிகமாகச் செய்ய விரும்புகிறேன்.
குதிரைகள்: இந்த உலகை உதைத்து மூன்றாகக் கிழிக்கும் மூர்க்கத்தை நாங்கள் விரும்பி வேண்டுகிறோம்,
அழுக்குச் சாலைக் குதிரைநிழல்களில் ஒன்று : உங்களுக்கு உதவும் நிலையில் நான் இல்லை.
குதிரைகள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு தீப்பொறிதான்.
அழுக்குச் சாலைக் குதிரைநிழல்களில் ஒன்று : அது நிகழும்போது சொல்லுங்கள், என்ன செய்யவேண்டுமென்று. நான் உங்களுக்கு நேராகப் பின்னால்தான் இருக்கிறேன்.

‘’இயேசுவே,’’ என்றாள், பிலார்.
‘’அவை இங்கேயே வசிக்கும் போல.’’ என்றான், ஹாண்ட்.

குதிரைகளுக்கெனக் குறியீட்டு மதிப்பு எதுவும் இல்லை.
* * *
பிலார் அவனோடு அங்கே தங்கியிருப்பது குறித்து, அவளது உணர்வுகளை இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, அல்லது அடிக்கடி ஹாண்டுக்கு விளக்க விரும்பினாள். அவர்கள் ஒரே கூரையின் கீழ் வெதுவெதுப்பான அறையில் ஒன்றாகச் சேர்ந்தே இருந்தார்கள். அந்த வயதில் அவர்கள் இருவரும் உயிரோடிருப்பார்களென்ற நிச்சயம் அவர்கள் இருவருக்குமே இல்லையென்றாலும் அவர்கள் இருவரும் உயிரோடிருந்தார்கள் – மனிதர்கள் விமானங்களில் பறக்கிறார்கள், அதிகமாகக் குடித்துவிட்டு கார் ஓட்டுகிறார்கள், ஒவ்வொரு முறையும் ஒருவருக்கொருவர், குடும்பம் அல்லது நண்பர்களை விட்டுச் செல்லும்போது, அதுவே கடைசியாக இருந்துவிடுமோ எனத் தோன்றுகிறது; இறப்பது அல்லது காணாமல் போவதென்பது சிலவழிகளில் மிக யதார்த்தமாகப்படுகிறது. அவள் இன்னும் முதிர்ந்துவிடவில்லை – அவளுடைய தாய்,தந்தையர் எப்போதும் வீட்டிலேயே இருக்கிறார்கள்—மனிதர்கள் தூர இடங்களுக்குச் செல்வார்கள், ஏன், இந்தப் பூமி முழுதுங்கூடப் போய்வருவார்கள், வாழ்க்கையை எங்கோ தொடங்கி எங்கோ முடிப்பார்கள், பின்னும் ஒருவரையொருவர் மீண்டும் கண்டுகொள்வார்கள் என நினைத்துக்கொண்டாள்.

அவள் வாழைப்பழங்களை உரசிக்கொள்ள விரும்பினாள். பூனைகளின் முகத்துக்கு நேராகக் குடைகளை விரித்துக்காட்டி அவற்றை மிரண்டு கத்தவைக்க விரும்பினாள். அந்த அறைக்குள் ஹாண்டுடன் அவள் எப்படி உறங்கமுடியும்? வேறுவழியில்லை. இது மட்டும் அந்த மாதிரி சரியான நேரமாக இருந்தால், பலவழிகளிலும் நினைவுகொள்ளத் தக்கவகையில் எல்லா இடத்திலும் கண்ணாடிகள் இருக்கவேண்டுமென்பாள்.

ஆனால் அது அந்த இரவாக இருக்காது, ஏனெனில், அவன் இன்னும் அவளது நெற்றியில் முத்தமிடவில்லை. ஆனால் அது நிகழும். நாளை அவர்களில் யாராவது ஒருவர் மற்றவரை அணைத்துக்கொள்ள ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்; நீண்டநேரம் அப்படியே தழுவிக்கொண்டு, அங்கே இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறதென்பதற்கான குரலிசைத்துக் கொண்டிருப்பார்கள்; அப்போது அவன் சில அங்குல தூரம் தன்னை இழுத்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தம் பதிப்பான். மீதமெல்லாம் அதன்பின் நிகழும். அவனுடைய அது அறையெங்கும் பறப்பதாகக் காட்சிப்படுத்தினாள்; பின்னர், அது அவளுக்குள்ளாக, உள்ளும் வெளியுமாக வேகமாக அசைந்துகொண்டிருந்தது. அவன் தலை மட்டும் சுவற்றில் ஒட்டியிருந்தது.

ஹாண்ட் கீழ்ப்படுக்கையிலும் பிலார் மெத்தையிலுமாக சிள் வண்டுகளின் ஒலித்துடிப்பிற்கும், மேலே வயதாகிப்போன மின்விசிறியின் டிக்-டிக்கிற்கும் ஈடு கொடுத்துத் தூங்கிப்போனார்கள்.
* * *

காலை உற்சாகத்தோடு வந்தது. அவர்கள் ரொட்டியை வாட்டி டோஸ்ட் செய்தனர். கதிரொளியில் அந்த அசுத்தச் சாலை வெள்ளையாகத் தெரிந்தது. பிலாரின் வண்ணப்பூச்சு கழுவிய கண்களைப்போல எல்லாமே வெண்ணிறத்தில் ஒளிர்ந்தன.

ஓலை வேய்ந்த கூரைக் குடிசையைப்போலக் கட்டப்பட்டிருந்த ஒரு இருளடைந்த கடையில் அவர்கள் இரண்டு நீர்விளையாட்டுப் பலகைகளை வாடகைக்கு எடுத்தனர். ஆரஞ்சுநிறத் தலைமுடியும் நீள்வட்ட முகமும் கொண்ட ஆஸ்திரேலியப் பெண் பொன்னிற மணலுக்கு அப்பால் கடலுக்குச் செல்லும் சுருக்குவழியை தெருவின் குறுக்காகக் காட்டினாள்.

அவர்கள் அசுத்தமாக இருந்த வெண்ணிறச் சாலையைக் குறுக்காகக் கடந்து சாம்பல் போன்ற மென்மணற்பாதையில், பின்னிக்கிடந்த சிறுமரங்களின் ஊடாக, ஒரு தகரக்கூரை வீட்டைக் கடந்து, பலகைகளைச் சுமந்து சென்றார்கள். கடற்கரை இடதுபக்கமும் வலது பக்கமுமாகச் சமதளமாகப் பரந்து, பருமணலாக, அலைகள் தாழ்ந்தபோது கருந்தவிட்டு நிறத்தில் கார்கள்நிறுத்தும் ஒரு மைதானமாகத் தெரிந்தது. கடலை ஒட்டிப் ஈரப்பருமணல் பரந்த நீலவானத்தை மகிழ்ச்சியோடு விரிதளத்து வெண்பஞ்சு மேகங்களோடு பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
டஜன் கணக்கில் நிறைய நீரலை விளையாட்டாளர்கள் ஏற்கெனவேயே கடலுக்குள் சென்றுவிட்டனர், அவர்களுக்குக் கொஞ்சம் முன்பாகப் பத்துப்பேர்; இன்னும் பத்துப்பேர் ஒரு நூறு கஜம் தூரத்தில் இருந்தனர். அலைகள் இல்லாத ஆழமற்ற, முழங்கால் தண்ணீரில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரம்ப நீர்விளையாட்டாளர்கள் உடற்பலகைகளில் கரை அருகிலேயே மிதந்துகொண்டிருந்தனர். பிலார் ஹாண்டின் முதுகில் நீர்க்காப்புத்தைலத்தைத் தடவினாள்; அதையே அவன் அவளுக்குச் செய்தான். அவளுக்குள் ஒரு நினைவோட்டம். அவனைப் பாருங்களேன், திண்மைசேர்ந்த முகம், நாடியே இல்லாமல் ஒரு மனிதன் என்ன செய்வானென்றெ அவள் வியந்தாள். அவன் முதுகு திடமாக ஆனால் வழவழப்பாக இருந்தது. அவன் கழுத்தின் வளைவு கழுகின் அலகு போல் கூடத் தோன்றும். அவன் கழுத்தினை ஆயிரமாயிரம் நிறைவேறுகின்ற உறுதிமொழிகளைக்கொண்ட, அழகுநிறைந்த எதிர்காலத் தலைவர்கள் நிரம்பிய உலகமாக அவள் உணர்ந்தாள்.
* * *

பிலாரால் நீரலைப்பலகையை நன்கு செலுத்தமுடியாது. அதன் குட்டைத் துடுப்புகளை அவளால் இயக்க முடியும். பலகையின் குளிர்ந்த வழவழப்பான நெகிழிநார்க் கண்ணாடிப்பரப்பில் முகத்தை வைத்துப் படுத்துக்கொண்டு ஓய்வெடுக்க முடியும். அது அவளுக்கு நல்ல வசதியாக இருக்கும். அலைகள் வரும்போது அவளால் சிலவற்றை மட்டுமே செய்ய முடியும். அவளால் நிமிர்ந்து உட்காரவும், எழுந்து நிற்கவும், வலதுபக்கமாக மட்டும் சிறிது திரும்பவும் முடியும். ஆனால் ஒருசில நொடிகளுக்கு மட்டுமே அப்படி நிற்க முடியும்.

கரையின் அருகில் இன்று அவளுக்கு எல்லாமே அதிகக் கடினமாகவே இருந்தது. பலகையைச் சரியாகப் பிடித்திருக்கிறோமா என்று கவலைப்பட்டாள். வாடகைப் பலகையை அடுக்கிலிருந்து உருவி எடுக்கும்போது சரியாகச் செய்தோமா என்றும் கவலைகொண்டாள். பலகையை எடுத்து வரும்போது அதன் உட்குழிவான பகுதி இடுப்புநோக்கி இருக்குமாறா அல்லது வெளிப்புறம் நோக்கி இருக்குமாறு எடுத்துச் செல்லவேண்டுமா என்று வியப்புற்றாள். நீரலைப் பலகையை அலைகளின் மீது ஓட்டும்போது செலுத்துபவரின் தவறாலோ, பலகையின் கோளாறாலோ பலகை தனியாக நழுவிச் சென்றுவிடாமலிருக்க அதில் பொருத்தப்பட்டிருந்த வெல்க்ரோ கணுக்கால் வாரினைக் கடையிலேயே அல்லது மணல்பகுதிக்கு வந்தபோது, அல்லது கணுக்காலளவு நீருக்குள் வந்தபின் அவள் காலில் கட்டிக்கொள்ள வேண்டுமா என்று கவலைப்பட்டாள். பலகையைத் தரையில் வைக்கும்போது அதன் அடிப்பாகத்துத் துடுப்பு மேல்நோக்கி இருக்குமாறா அல்லது கீழ்நோக்கி இருக்குமாறு வைக்கவேண்டுமா என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இவற்றில் எதையாவது தவறாகச் செய்து விட்டால் நகைப்புக்குரியவளாக அல்லது சுட்டிக்காட்டப்படுபவளாக ஆகிவிடுவோமே என்பதில் கவனமாக இருந்தாள்.

அதனால், அவள் பிறரைக் கவனித்துப் பார்த்தாள். மற்றவர்கள் அடுக்கிலிருந்து வாடகைப் பலகைகளை எப்படி உருவி எடுத்தார்கள் என்பதைக் கவனித்தாள். அதை எப்படிப் பிடித்தார்கள், எப்படிச் சுமந்து சென்றார்கள், எப்போது கணுக்கால் வாரைக் கட்டிக்கொண்டார்கள் என்பதையெல்லாம் கவனித்தாள். அவர்கள் செய்தது போலவே அவளும் செய்தாள் என்றாலும் எல்லோருமல்ல, ஆனால், பலருக்கும், எல்லாமும் தெரிந்திருக்கவில்லைதான். எல்லோருமே பொழுதுபோக்காகச் செய்பவர்கள்தாம், ஆனால் எல்லோருமே எல்லாம் தெரிந்ததுபோல நடிக்க முயல்கிறார்கள். அதனால்தான், சொந்தமாக அல்லாமல் பலகைகளை வாடகைக்கு எடுக்கிறார்கள். அதனால்தான் பொறுமைமிக்கச் சிறிய அலைகளுள்ள ஆல்ட்டாவுக்கு நீர்விளையாட வருகிறார்கள்.
* * *
கடவுள் : குகைகள் எப்படியோ அப்படித்தான், நீயும் எனக்கு அடிமை.
பெருங்கடல் : வாய்ப்பே இல்லை. ஒப்பிட வேண்டாம்.
கடவுள் : உன்னை உருவாக்கியதே நான்தான்.
பெருங்கடல் : நிரூபித்துக்காட்டுங்கள்.
கடவுள் : நான் உன்னை அடக்கி ஒடுக்குவேன்.
பெருங்கடல் : நடந்திருக்கலாம், எப்போதோ ஒருமுறை, ஆனால் இப்போது முடியாது.
கடவுள் : எனக்கா சவால் விடுகிறாய்?
பெருங்கடல் : எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.
கடவுள் : நான் அங்கேயே வந்து உன்னை உறையச் செய்வேன், நொறுக்கிவிடுவேன். .
பெருங்கடல் : சிறகுகளைப்போல நானே பரந்துவிரிவேன். நான், கோடானு கோடி நுண் இறகுகள். எனக்குள் என்ன நிகழ்ந்திருக்கிறதென உங்களுக்கு எதுவும் தெரியாது.
* * *
பிலாரும் ஹாண்டும் கடலுக்குள் நடந்துவந்தார்கள்; காற்றின் வெப்பமே நீரிலும்; ஹாண்ட் பாதியாக வளைந்து குனிந்து தலையை நுரைக்குள் நுழைத்தான்.

நனைந்த முடியோடு எழுந்தான். முகத்தில் விழுந்த முடியைப் பின்னால் தள்ளிக்கொண்டே பிலாரை நோக்கினான். நனைந்தால் சிலர் அழகாகத் தெரிவார்கள் என்பதை பிலார் அறிவாள்.
‘’ தண்ணீர் நல்ல வெதுவெதுப்பாக இருக்கிறது.’’ என்றாள், அவள்.
‘’ எனக்குத் தெரிந்ததில், இதுதான், அருமையான தண்ணீர்,’’ என்றான், அவன்.
அவர்கள் நீருக்குள் விட்டு விட்டு அளைந்து, அளைந்து நடந்தார்கள். அலைகள் என்னவோ பெரியதாக இல்லைதான்; என்றாலும் அவள் நினைத்ததைவிட, அது களைப்பூட்டுவதாக இருந்தது. ஒருவழியாகச் சமதளமான நீருக்கு வந்துவிட்டார்கள்.

மீண்டும் அவள் சோர்ந்துவிட்டாள். பின்பக்கம் இரு தோள்களும் வலித்தன; காட்சிச்சாலைக்குள் கால்களைப் பிடித்துக்கொண்டு தளர்ந்து நடக்கும் குழந்தைகளைப்போல தரையைத் தேய்த்துக்கொண்டு நடந்தாள்.

பிலாரும் ஹாண்டும், அவரவர் பலகைகளின் இருபக்கமும் கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்து அலைகளை எதிர்பார்த்துத் தொடுவானத்தை நோக்கிக்கொண்டிருந்தனர்.

ஐந்தடி உயரத்தில் ஒரு நல்ல அலை வந்தது. வலுவும் விரைவும் மிக்க இரண்டே உந்தலில் ஹாண்ட் அலையின் மேலே இருந்தான். அவன் கரையை நோக்கி விரைவதை பிலார் கவனித்துக்கொண்டிருந்தாள். பின்னாலிருந்து பார்க்கும்போது அவன் ஒரு வேகமிக்க மின்படியேற்றியில் ஏறிச் செல்வதுபோல் தோன்றியது. அல்லது ஒரு நகரும் விசைவாரில் என்றும் சொல்லலாம். அலை தூக்கிச் செல்லும் ஒரு விசைவார். அலையின் உச்சியில் உருளும் கோளம் மட்டுமே பின்னாலிருந்து தெரிந்தது. அவனுடைய கீழ்ப்பாதியை அந்தக் கோளம் மறைத்தது. அவள் கவனிக்க, கவனிக்க அவன் சென்றுகொண்டேயிருந்தான். நீர்ப்பலகை மீது நிற்கும் தோற்றம் அவனுக்கு மிக அழகாகப் பொருந்தியிருந்தது. அவன் நன்கு நிமிர்ந்து நின்றான்; முழங்கால் மூட்டுகள் மிகமிகக் குறைவாகவே மடங்கியிருந்தன; முழு உடலும் ஒரு நேர்கோட்டு விட்டமாக அவன் பின்சாய்ந்து நின்றான்.
பின்னர், அவன் துடுப்புகளை வேகவேகமாக இயக்கிப் புன்னகையோடு திரும்பி வந்தான். அவளுக்கு அடுத்தாற்போல் பலகையைக் கொணர்ந்து நிறுத்தி, அதில் ஏறி அமர்ந்தான்.
‘’ மிகமிக நன்றாக இருந்தது.’’ என்றான், அவன்.
‘’ பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போல அழகாகத் தோன்றியது.’’ என்றாள், அவள்.

அவன் என்ன செய்தாலும் அது பிலாருக்குப் பிடித்திருந்தது. ஆனால், அப்போதைக்கு அவள் உட்கார்ந்துகொண்டிருப்பதோடு திருப்திப்பட்டாள்; அல்லது நீர்ப்பலகையில் படுத்துக்கொள்வதில் கூட. அரை நாளாக அவள் இந்த நகரத்திலிருக்கிறாள். காலையில் கண்விழித்து ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்; அவள் அங்கேயே தண்ணீரின் மேலேயேகூட ஓய்வெடுக்கத் தயாராகிவிட்டாள். அவள் பலகையில் கால்களை நீட்டி, ஈரத்தில் குளிர்ந்த அதன் பாலேட்டு வெள்ளையாகப் படிந்திருந்த அழுக்கு மணல் அவள் முகத்தில் அழுத்தக் கன்னத்தை வைத்துப் படுத்தாள். தண்ணீர், பலகையின் மேல் மென்மையாக வந்து அவளை முத்தமிட்டது. அவள் அங்கேயே தூங்கிவிடலாந்தான். அந்தப்பலகை மீதே கூட வாழ்ந்துவிடலாம், தோள்பட்டைகளைச் சரித்துக்கொண்டே. முகத்தை அங்கே ஓய்வாகச் சாய்த்ததற்கும் இளம் வயதில் அவள் அம்மாவின் மடியில் முகம் புதைத்தற்கும் எந்த வித்தியாசமும் அவளுக்குத் தோன்றவில்லை; அவளுடைய மிகப் பெரிதல்லாத மார்பகங்கள் அந்தப் பலகையில் தட்டையாக அழுந்தியதற்கும், அவை ஆண்களின் முதுகில் பதிந்து தட்டையாக அழுந்தியதற்கும் எந்த உணர்ச்சி வேறுபாடும் அவளுக்குத் தெரியவில்லை. அப்படியே ஆண்கள் வயிற்றின் மீதும், அவர்களின் முதுகுகளில் மார்பகங்கள் பதித்தும், படுத்துறங்க அவள் விரும்பினாள். ஆனால் அது நிறைவேறவில்லை. அவள் அந்த மாதிரிக் குப்புறப் படுத்த நிலையில் உறங்கியதே இல்லை; ஆனால் அவள் அதைச்செய்து பார்க்க விரும்பினாள். ஒரு கண்ணால் ஹாண்டைப் பார்க்க அவளால் முடிந்தது. அவன் அப்போதும் நேராக நிமிர்ந்து தொலைதூரத்தைத் துளைத்துக் கொண்டிருந்தான். கடற்கரையின் வலதுபக்கத்தில் வெகுதூரத்தில் புதர்ச்செடிகளின் நிறத்தில் மலையொன்று சிதறிய உடல் போலக் கிடந்தது.

‘’ இவற்றில் ஏதாவது ஒன்றில் நீ போகப்போகிறாயா? அல்லது எப்படி உத்தேசம்?’’ கடலுக்குள் தலைமூழ்கும் முன் அவன் கேட்டான். மூழ்கி மீண்டும் அழகாக, காட்சிப்பொம்மையின் உருட்டிய தலைபோல எண்ணெயில் தோய்ந்த தோற்றத்தில் மேலெழுந்தான்.
‘’ சரி. ஆனால், …’’ என்று அவள் இழுத்தாள்.
‘’ வேண்டுமானால் பின்னாலிருந்து தள்ளட்டுமா’’ என்றான், அவன்.
‘’ ஹா, ஆமாம், ஹா,’’ என்றாள்.

இப்போது அவள் முயன்றேயாக வேண்டும். அவள் மீண்டும் எழுந்து உட்கார்ந்தாள். பலகையின் இருபுறமுமாகக் கால்களைத் தொங்கவிட்டு, முன்னும் பின்னும் அசைத்து ஆட்டியபடி, அவர்கள் நீலத்தொடுவானத்தை நோக்கி, அலைமேட்டின் வருகையைக் கவனித்துக் காத்திருந்தார்கள்.

அலைமேடு ஒன்று வந்துகொண்டிருந்தது.
‘’ இதைப் பிடித்துக்கொள்’’ என்றான், அவன்.
‘’ எனக்குத் தெரியும்.’’ என்றாள் அவள்.

அவள் பலகையைத் திருப்பி, மார்பை அதில் பதித்து, துடுப்புகளை அசைக்கத் தொடங்கினாள். மூன்று உந்தல்கள்; அவள் அதே வேகத்தில் இருந்தாள். அலை நெருங்கும்போது, அதன் போக்கில் தன்னை எடுத்துச் செல்ல ஏதுவாக அசைவை நிறுத்தினாள். சுருட்டி மடங்கும் காகிதச் சப்தத்தோடு அலை வந்தது. ஒரு அடி, மூன்றடி, ஐந்தடி உயரத்துக்கு அவள் எழுந்தாள். அவளை, அலை அதன் கண்ணாடி வளைவுக்குக் கொண்டு சென்றது; மேலேமேலே இழுத்து அவளுக்கடியில் கூர்மையாகச் சுருண்டதால் அவள் துடுப்புகளைக் கடும் வேகத்தில் அசைத்தாள். இரு கைகளையும் ஒரேநேரத்தில் அசைத்து இன்னும் இரண்டு உந்தல்கள்; அவள் கீழ்நோக்கிச் சறுக்கத் தொடங்கினாள். கீழ்நோக்கி இறங்குவதன் முக்கியத்துவத்தை அவள் உணர்வாள். அவள் போதிய வேகம் காட்டாமலிருந்தால், அல்லது சரியான நேரத்தைத் தவறவிட்டால், அலை அவளுக்கடியில் வேகமாகக் கடந்து சென்றுவிடும்; அவள் அதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான், தவறவிட்ட பேருந்தின் பின்புறம் தூரத்தில் சுருங்கிப் புள்ளியாவதைப் பார்ப்பது போல. ஆனால், அவள் வேகமாக இருந்தால், அல்லது சரியான கணத்தில் உந்தித்தள்ளினால், அவளும் அலையோடு சறுக்கி, அவள் பலகை ஒரு கார் அல்லது குதிரை போலாகும்; அவள் துள்ளி எழுந்து நின்றால், பலகை இரட்டை அகலத்தில் பாலேடு போன்ற வழவழப்புள்ள உறுதியான இரும்பு உத்திரமாகிவிடும்.

அந்த அலையை அவள் மேற்கொண்டாள். பலகை உறுதியானது; அவள் துள்ளியெழுந்து நின்று அலையோடு கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் – அவள் பேருந்தில் ஏறிவிட்டாள். நுரை, வேகம், வெள்ளைத் தளத்தின் முண்டியடிப்பு என எல்லாக் கலவரங்களும் அவளுக்குக் கீழே நிகழ்ந்தன. ஆனந்தப்பரவசக் கணமொன்று அவளுக்குக் கிடைத்தது – நிமிர்ந்து நின்றுகொண்டு, சூரியனை, பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக்கிடக்கும் அல்லது சிதறிக் கிடக்கும் ஒரு உடலைப்போன்ற ஒரு மலையைப் பாருங்கள் – அடுத்த கணம், அவள் செய்யவேண்டியதை உணர்ந்தாள்; அலை வலது பக்கம் உடைந்து சிதறிக் கொண்டிருந்தது; அவள் இடது பக்கம் திரும்பவில்லையெனில் நேராக உடையும் அலைக்குள்தான் செல்ல வேண்டுமென்பதை அவள் உணர்ந்தாள்; அவளால் திரும்ப முடிந்தால் ஒரு முழு நிமிடத்துக்கு நின்றுகொண்டே பயணிக்க முடியும்; திறமையானவர்கள் நீளப் பலகைகளில் நின்றுகொண்டு, நடந்துகொண்டு, சாவதானமாக முன்னும் பின்னும் நடந்து, பயணிப்பதைப் பார்த்திருக்கிறாள்- சிறந்த நீர் விளையாட்டாளர்கள் கைகளைப் பின்கட்டிக்கொண்டு, கடலின் அப்போதைய தன்மைக்கேற்ப முன்னும் பின்னுமாக நடை பயில்வார்கள், நல்ல அலையின் மீதான நீளப்பலகை அத்தனை உறுதியானது, அவர்கள் தீயின் முன்புகூட தரைவிரிப்பில் நாற்காலியிட்டு அமர்ந்துவிடுவார்கள் – அவள் மட்டும் அந்த அறிவியலைப் புரிந்து கொண்டால் அவளாலும் நிகழ்த்தமுடியும்-

உடைவுக்கு அப்பால் இன்னும் இருந்த ஈரக் கண்ணாடி வளைவைப் பின்தொடர, அவள் இடதுபக்கம் திரும்பும் முயற்சியில், சிறிது பின்சாய்ந்து பலகையின் இடது பக்கத்தில் கணுக்கால்களால் அழுத்தம் கூட்டி அதன் முனையை அலையின் வளைகண்ணாடிக்குள் செலுத்த உந்தினாள் –

முடிந்துவிட்டது. பலகை அவள் பின்னாலிருந்தது; குதிரை குப்புறத் தள்ளிய மேய்ப்பனாக ஆனாள். அலைநுரைக்குள் தலைகுப்புற விழுந்த அவள் கீழே, கீழே சென்று கொண்டிருந்தாள். கடலடிநீரின் சப்தம் அவள் காதுக்குள் பூகம்பமாக வெடித்தது. ஒரே இருட்டு; எல்லாமே அராஜகமாக இருந்தது. அவள் உந்திக் கணநேரத்தில் நீர் மேல் தலைகாட்டிப் பலகையைத் தேடினாள். விடுதலையை விரும்பிய அது, அவள் கணுக்காலில் பிணைக்கப்பட்டிருந்ததால் பின்புறமாக மேலெழும்பி, வானத்தை நோக்கிக் குதித்து, மீண்டும் விழுந்து, அதற்குள் அமைதியாகியிருந்த கடலின் நீலப்பச்சை மீது மிதந்தது. ஆனால், அவள் அதைப் பிடித்துவிட்டாள். ஒரு நன்மை, ஒரு தீமை – மீதிநாள் எதிரெதிர் உச்சமாக இருக்கும். அவள் அதற்கு மேல் இரண்டு அல்லது மூன்றுமுறை அலைமீது சென்றாள். அவர்கள் அங்கே எவ்வளவு நேரம் செலவிட்டார்கள் என்பது ஒரு பொருட்டேயல்ல. பலகையாடிக்கொண்டே, ஹாண்ட் அவளுக்காகக் காத்திருந்தான்.

இந்தக் கதை நீர்விளையாட்டையும் பற்றியது; சிறிது அதிகமாகக் கூட.

மலைகளையும் அலைகளையும் விட மனிதர்கள் ஒன்றும் சுவாரசியமானவர்கள் அல்ல.
* * *

பிற்பகலில், அந்தக் கடுமணல் கடற்கரையில், காற்று பாம்பாகச் சீறும் ஒலியோடு, அவர்களின் சான்ட்விச் மீது மணல் தூவிக்கொண்டிருக்க, பிலாரும் ஹாண்டும் வெயிலுக்காகக் கண்களைச் சுருக்கிக்கொண்டு கடலைப் பார்த்தார்கள். அவர்கள் அந்தப் பெருங்கடலுக்குள் நாள் முழுதும் மிதந்தார்கள்; இப்போது தாங்கள் நடிக்காத நாடகம் ஒன்றைக் கவனிக்கும் கலைஞர்களைப் போல அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பெருங்கடலுக்கு அவர்கள் தேவைப்படவில்லை.

ஹாண்ட் கைகொட்டத் தொடங்கினான்.

‘’ நான் இன்று முழுதும் இரண்டு நிமிடங்களுக்கொருமுறை கை தட்டிக்கொண்டே இருக்கப்போகிறேன்.’’ என்றான், அவன்.

பசு மேய்ப்பர் தொப்பி அணிந்த ஒரு நீர்விளையாட்டுக்காரர் கடலுக்குள் சென்றார்.
‘’ அந்த நிறுவனத்தில் நீ என்ன செய்கிறாய்?’’ பிலார் கேட்டாள்.
‘’ ஆலோசனை சொல்கிறேன். மனவளம் பகர்கிறேன். அவர்களுக்கு என் மூளை பிடித்திருக்கிறது.’’
‘’ அது சரி. இங்கேயே மீண்டும், மீண்டும். ஏன்?’’
‘’ என்னுடைய ஸ்பானிஷ் மொழி. மேலும் நானேதான் இங்கே வேண்டுமென்றேன். இதற்குப் பணம்தான் முக்கிய காரணம். எங்களுக்கு அமெரிக்க ஊதியம் கிடைக்கிறது; ஆனால் செலவோ வேறெங்கேயும்விடப் பாதிதான்.’’
‘’ இன்டெல் சரி. ஆனால் இங்கேயே ஏன்? கொரியாவிலோ வேறெங்காவதோ கூடாதா?’’
‘’ நாங்கள் கொரியாவிலும் இருக்கிறோம். அங்கே மிகப் பெரிய அமைப்பு. ‘’
‘’ நாங்கள் என்றா சொன்னாய்?’’
‘’ இல்லையே.’’
‘’ நீ அப்படித்தான் சொன்னாய்!’’
அந்தப் பசுமேய்ப்பு நீர்விளையாட்டாளர், அருமையான ஒரு அலைமீது, பாய்ந்து வந்துகொண்டிருந்தார்.
ஹாண்ட் கைதட்ட மறந்து விட்டிருந்தான். அவள் அதைக் கவனத்தில் கொள்ளவேண்டுமா என பிலார் கேட்டாள்; அதிகமான கைதட்டல்களைக் கொண்டுவந்தது, சும்மா ஒரு பொழுது போக்குக்குத்தான் என்று தெரிந்திருந்தாலும், பிலார் அப்படி வாதிட்டாள்.
’ நீ கைதட்ட மறந்துவிட்டாய்,’’ என்றாள். அவள்.
‘’ கேட்டுக்கொள், ஒரு நிறுவனம் என்ற வகையில் எனக்கும் அவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் ‘சிப்’ தயாரிக்கிறார்கள். ‘சிப்’ நல்லது. அவர்கள் க்ரானடாவில் ஏன் இருக்கிறார்கள் என்றால் குறைந்தபட்சம் இந்த நகரில் தொழிலாளர்கள் படித்தவர்களாக இருக்கிறார்கள்; நன்கு வேலை செய்பவர்கள். கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளன; நல்ல விமான நிலையம், போக்குவரத்துக்கேற்ற சாலைகள், தொலைத்தொடர்பு வசதிகள், வளமான, வலுவான வங்கிகள், விலைவாசி குறைவு, க்ரானடாவுக்குள் மட்டுமாவது நல்ல வசதிகள் – மேலும் இங்கே இன்டெல் சங்கங்களை முளையிலேயே தவிர்த்துவிடுகிறது, லாரிகள் விஷயத்தில் கூட, இதெல்லாந்தான். அதிகமாகப் பல நிறுவனங்கள் போர்ட்டோ ரீக்காவிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு காரணம், அங்கே சங்க நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு. அடிப்படையில் பார்த்தால் அதே தொழிலாளர்கள் தாம், ஆனால், உலகில் யாரும் இந்தப்பகுதியில் நிறுவனங்கள் அமைக்கமாட்டார்கள், சங்கங்களோடு மாரடிக்க முடியாதென்பதற்காகவே.

பின்னர், அவன் ஒரு முழு நிமிடமும் விடாமல் கைதட்டிக்கொண்டிருந்தான்.
* * *

மீண்டும் குதிரைகள் வெளியே, ஆனால், முகப்புத்தோட்டத்திற்கு நீரூற்றிக் கொண்டிருந்த ஜெர்மன் பெண்ணின் கடுநீல வீட்டின் முன்பாக, சாலையில் மெல்லச் சாவதானமாக நடை போட்டுக்கொண்டிருந்தன. கறுப்புக்குதிரைகள் மூன்றில் ஒன்று ரோட்டில் புரண்டு உடம்பைத் தேய்த்துக்கொண்டே, எத்தனைமுறை என்று எண்ணிக்கொள்வதுபோலத் தலையைத் தலையை ஆட்டியது.
‘’ தண்ணீருக்குத் தேடுகிறது,’’ ஹாண்ட் சொன்னான்.
பிலார் அறைக்குச் சென்று வாயகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொணர்ந்தாள். ஹாண்ட்டின் முகம் நம்பிக்கையற்றிருந்தது. அவள் குதிரையை நோக்கி நடந்தாள். அது பின்வாங்கிக் குன்றின் மீது தாவிச் சென்றது. அவள் தண்ணீர்ப் பாத்திரத்தை வயிற்றளவில் தாங்கி நின்றாள்.

ஹாண்ட் அவளை ஆறுதல்படுத்த அவளிடம் வந்தான். அவள் தோள்களைத் தழுவி அணைக்கத் தூக்கிய அவன் கைகள் தண்ணீர்ப்பாத்திரத்தைத் தட்டக், குப்புறக் கவிழ்ந்து, அவள் சட்டை நனைந்தது.
‘’ ஓஉப்ஸ்’’ என்றான், அவன்.
அவள் அவன் வாயிலேயே, நல்ல ஒரு அறை, அறைந்து விட்டு, ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தாள். அவன் அவளைத் தூக்கிக்கொண்டான்; அவள் இடுப்பைத் தன் தோளுக்கு உயர்த்தித் தட்டாமாலை சுற்றினான். அவளோ, அவன் முதுகில் குத்தினாள்.
* * *

அங்கே எங்கு பார்த்தாலும் உயிர்ப்பிராணிகள்தாம். காலுக்கடியில் எப்போதும் ஏதாவது ஊர்ந்து கொண்டேயிருக்கும் – பல்லி, பாச்சை, சில்வண்டு, சுண்டெலி. அங்கே பல்நிறப் பல்லிவகை இகுவானாக்கள் இருந்தன. அவை மரச்சட்டங்கள் மீதும் காடுகளிலும் விரைந்தோடி மறைவதை அவர்கள் கண்டனர். அவர்களின் ஹோட்டலின் கீழ் இருந்த காட்டில் ஒரு இகுவானாவைப் புதர்கள் அகற்றும் ஒரு மஞ்சள் வாகனம் துரத்திச்செல்வதை அவர்கள் கண்டிருந்தனர்.

சந்தையிலிருந்த பெண்ணின் தலைமுடி பொன் வண்ணத்தில் தாவரக் கட்டிவெண்ணெய் மேல் அடர்த்தியாகத் தூவிய ரொட்டித்துகள்கள் போல் இருந்தது. சந்தையிலிருந்த உறைபனிப்பெட்டியிலிருந்து பிலாரும் ஹாண்டும் ஐஸ் க்ரீம் வாங்கினார்கள்; அதன் மேலிருந்த பளபளக்கும் நெகிழித்தாளைக் கிழித்து முதலில் சாக்லேட்டைத் தின்றுவிட்டுப் பின் வெண்குளிர் ஐஸ்க்ரீமைத் தின்றனர். வெயிலில் அது மென்மையாகியிருந்தது.
* * *
அடுத்திருந்த ‘ எல் ஜார்டின் டெல் ஈடன்’ ஹோட்டலின் பின்புறச்சந்து வழியாக அவர்கள் துள்ளலோட்ட நடையில் இருண்ட அசுத்தச் சாலை வழியாக, மரங்களின் அக்குள்களில் தொழில்நுட்பத்தை இகழும் ஒலிபெருக்கிகள் மறைக்கப்பட்டு, தூண்களின் இடைவெளிகளில் கிறித்துமஸ் விளக்குகள் தளர்வாகத் தொங்கும் ரோட்டுக்கு வந்தனர். அநேகமாக எல்லா விடுதிகளும் அப்போதும் திறந்திருந்தன; அவற்றோடு இணைக்கப்பட்டிருந்த மது அருந்தகங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கட்டணத் தொலைபேசிகளை, உள்ளூர்ப் பெண்களை அடுத்துப் பொறுமைகாத்து நின்ற நீர்விளையாட்டாளர்களை, வெறுங்கால்த் தளர்நடையினரைக் கடந்து ரோட்டின் முடிவில் திறந்த நுழைவாயிலில் பாதி இதயமும் பாதி பூமிக்கோளமுமான முத்திரை, தாழ்வாகத் தொங்கவிடப்பட்டிருந்த பூமி மது அருந்தகத்துக்குள் அவர்கள் நுழைந்தனர்.

உள்ளேயிருந்தவர்கள் மதுவைக் கையிலேந்தியிருந்தனர்; சட்டையற்ற, மெலிந்த, மங்கல்நிற நீர்விளையாட்டினர், வெள்ளையர், கறுப்புக்கயிறுகளால் முடிந்த தலைமுடி, வெறுங்கால்களோடு அல்லது ரப்பர் காலணிகளோடு, நூலாலான கைவளைகளும் மணிகளாலான மாலைகளும் அணிந்த இளைஞர்கள்; பெண்களோ இன்னும் பலவகையினராயிருந்தனர். ஏராளமான நீர்விளையாட்டுப் பெண்வகையினர், ஸ்காண்டிநேவியன் இனத்து ஊர்சுற்றிகள் – வெண்பொன்னிறக் கூந்தல், பிகினி மார்க்கச்சை, நெகிழி எண் கைக்கடிகாரம், அதிகமாக வெயில் காய்ந்த உடல்.

பிலாரும் ஹாண்டும் மது வழங்கும் மேஜை முன்பு இடுப்புக்கு இடுப்பு ஒட்டிநின்று, மிகக் குளிர்ந்த இம்பீரியல் மது அருந்தினர். முதல் இரு கோப்பை விரைவில் காலியானது – அப்போதுதான் எவ்வளவு வெக்கையாக இருந்ததென்றும் அவர்கள் எவ்வளவு தாகத்தோடிருந்தனரென்றும் உறைத்தது. மூன்றாவது கோப்பையும் கையுமாகக் கடலை நோக்கியிருந்த மேல்தளத்துக்குச் சென்றனர். இருட்டு அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. அவர்கள், நண்பர்களின் குழந்தைகளைப் பற்றியும், பீட், ஏப்ரல், அவர்களது ஒரே பிரசவத்து மூன்று குழந்தைகள் பற்றியும் பேசினர். கடந்த முறை ஏப்ரலையும் பீட்டையும் ஹாண்ட் பார்த்தபோது, அவர்கள் மூன்று குழந்தைகளையும் பதினைந்தே வயதான குழந்தைக் காப்பாளரிடம் விட்டுவிட்டு, வெளியில் இரவைப்பிரிய மனமில்லாமல் அதிகாலை மூன்றுமணி வரை தங்கிவிட்டனர். அவர்கள் வீட்டுக்கு வந்தபோது அந்தக் குழந்தைக்காப்பாளர் கழிவறையில் நல்ல தூக்கத்திலிருந்தாள். அவர்களது காலணிகள் ஒன்றோடொன்று கலந்து ஒரு புறம் குவியலாகக் கிடந்தன.

‘’ கழிவறையிலா?’’ பிலாரின் கேள்விக்கு ஹாண்ட் பதிலெதுவும் சொல்லவில்லை; ஒருவேளை அது அவனுக்குக் கேட்காமல் இருந்திருக்கலாம். கதையின் பல தகவல்களை அவன் சொல்லாதிருந்தது பிலாரைக் கோபமூட்டியது. ஆனால் இசையின் ஒலி திடீரென அதிகமாகவே, அவர்கள் ஒரு நிமிடத்துக்கு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கடற்கரையில், நாய் ஒன்று, அதைவிடச் சிறிய நாய் துரத்த சுற்றிச் சுற்றி ஓடியது.

ஹாண்ட் பிலாரைத் தன் பக்கமாக இழுத்துச் சேர்த்தணைத்துக்கொண்டான்.
‘’ நீ வந்தது, நல்லது.’’ என்றான், அவன். அதை ஒத்துக்கொண்டு அவளும் முனகினாள். அவன், அவள் தலையின் உச்சியில் முத்தமிட்டான்.
* * *

ஹோட்டலில் அவர்களின் அறை முன்பு ஒரு எறும்புதின்னி இருந்தது.

‘’ இது எறும்புதின்னி அல்ல’’ என்று சொல்லிக்கொண்டே ஹாண்ட் குனிந்து பார்த்தான். ‘’ இது ஒரு ஸ்லோத்,’’( தென் அமெரிக்கத் தேவாங்கு வகைப் பிராணி) என்றான்.

‘’ ஸ்லோத்துகளுக்கு இதுபோல மூக்கு கிடையாது,’’ என்ற பிலார், ‘’ இது போல நீளமூக்கு’’ என்றாள்.

அது அசையவில்லை, ஆனால் அதன் கரடுமுரடான மேல்தோல் மேலும் கீழுமாக ஏறி இறங்கியதிலிருந்து அது மூச்சுவிடுவதை அவர்களால் பார்க்கமுடிந்தது.

‘’அவை சிலநேரங்களில் இப்படித்தான் இருக்கின்றன,’’ என்ற ஹாண்ட், ‘’ ஏன், இங்கேயே கூட அவை இப்படித்தான் இருக்கின்றன. அதனுடைய கால் விரல்களைப் பார் – அவை இதைப் போல் மூவிரல் கொண்டவை – ‘’ என்றான்.

‘’ என்ன பேசுகிறோம், எதைப்பற்றிப் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாய்.’’ என்றாள். ஹாண்ட் வாயைத் திறந்து மூடினான்.
‘’ அது ஒரு எறும்புதின்னியாகவும் இருக்கலாம்.’’ என்றான்.

அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அதனுடைய நீண்ட மூக்கிலிருந்து வடிந்த ஒரு பிபிசுப்பான திரவம், இரத்தமும் சளியும் கலந்து நீண்ட ஓட்டுத்தள அறைவழி நெடுகிலும் கோடிழுத்திருந்தது.

பிலார் ஒரு தட்டில் பால் எடுத்து வந்தாள். அது பாலை நோக்கி எந்த அசைவையும் காண்பிக்கவில்லை.

‘’ அது செத்துக்கொண்டிருக்கிறது, இல்லையா?’’ என்றாள், அவள்.
‘’ எனக்குத் தெரியாது. எங்கேயும் அடி பட்டிருக்கவில்லை. அந்த நீள மூக்கிலிருந்துதான் இரத்தம் வருகிறது.’’

அவர்கள் அந்த விலங்கினை வெளியிலேயே விட்டுவிடுவதென முடிவெடுத்தார்கள். ஆல்ட்டாவில் எங்கும் விலங்குகளுக்கான மருத்துவமனை இல்லை. மேலும் அதை உள்ளே வைத்திருந்தாலும் குணமாகிவிடப்போவதில்லை.

‘’ ஆனால், இந்தச் சனியன் எப்படி இங்கே வந்து சேர்ந்தது?’’ ஹாண்ட் கேட்டான். ‘’ அதற்கு நடக்கவே முடியவில்லை. இத்தனை படிகளையும் எப்படி ஏறிவந்தது? அது பல வாரங்களுக்கு முன்பே புறப்பட்டு வந்துகொண்டிருக்கும். அது ஏன் நம்முடைய அறைக்கதவுக்குப் பக்கத்தில் வந்து நிற்க வேண்டும்? இது ரொம்பவும் அதிசயமாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு காரணமிருக்கும். நாம் அதை உள்ளே கொண்டுபோவோம்.’’
ஆகவே, அவர்கள் அதை உள்ளே கொண்டுசென்றார்கள். ஹாண்ட் தான் அதைச் செய்தான்.
‘’ நல்ல கொழுத்த ஒரு பெரிய பூனையைத் தூக்கியது போலிருந்தது என்றான்.
இப்போது அந்த எறும்புதின்னி கதவுக்குப் பக்கமாக இரு நாற்காலியின் கீழ் கிடந்தது. பிலார் அதன் அருகில் மீண்டும் பால்த்தட்டை நகர்த்தினாள். இன்னொரு தட்டில் தண்ணீரையும் வைத்தாள். அந்த விலங்கு இறந்துவிட்டது போல் தோன்றியது.

‘’இன்று இராத்திரியே இறந்துவிட்டால், வீச்சமடிக்கும்,’’ என்றாள், பிலார்.
‘’ அது சாகாது,’’ என்றான், அவன்.

ஹாண்ட் அவளுடைய படுக்கையில் அமர்ந்தான். பிலார் அவன் முன்பாக நின்றாள். அவளுடைய குட்டைக் கால்சராயை முன்பக்கமாகப் பிடித்து அவளைத் தன்பக்கமாக இழுத்தான். அவள் அவன் மடியில் அமர்ந்து அவன் மீது சாய்ந்தாள். ஆனால் அவனுடையதில் வாயை வைக்க முயன்றபோது அவன் சொன்னான்.
‘’ அது ஓய்வெடுக்கிறது. அது இங்கே வந்ததே, ஓய்வுக்காகத்தான்.’’
* * *

சுவர் எழுத்துகளில் சிந்தனையைக் கிளப்புவதென, பிலார் கருதிய ஒரு வரி, மீண்டும் மீண்டும் குளியலறை, கழிவறைகளில் அவள் கண்களில் பட்டது : கடவுளைக் கண்டுபிடித்தது பாலுணர்வு.

அந்தச் சொற்களைக் கண்ட ஒவ்வொரு முறையும், பலமணி நேரங்களுக்குப் பின்னாலும் கூட, அவள் உலகத்தை அந்த வழியில் தான் கண்டாள். அவள் அவளுடைய வாழ்க்கையை நேசித்தாள், ஆனால், பரவச அனுபவத்தினை உடலின் தூண்டுதலாலேயே பெறத்தொடங்கியிருந்தாள்.

பிலாரும் ஹாண்டும் அருகருகிருந்து மெதுவாக முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பிலார் அவனை இன்னும் அழுத்தமாக முத்தமிட, அவன் முதுகுபடத் தள்ளி, அவன் மார்பில் நின்று நடனமாட விரும்பினாள்; ஆனால் அது முடியாதது. ஏனெனில் அப்போது அவர்களால் பேசமுடியாது; மேலும் அவர்கள் அந்நியர்கள்; அவள் தொடர்ந்து அவனை அமைதியாக முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்; அவர்கள் முகத்துக்கு நேராக முகம் வைத்துப் பக்கவாட்டில் படுத்து விசாரணையிலிருந்தனர். அவர்கள் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருந்தனர்; இது வேலைக்காகுமா என்று இருவருமே எண்ணினார்கள்; விறுவிறுப்பை விரைவில் பெறுவார்களென இருவருமே நம்பினர்.
‘’ ஹை’’ என்றாள், அவள்.
‘’ ஹேய்’’ என்றான், அவன். ‘’ நாம் கதவைத் திறந்து வைக்கவேண்டும். ஒருவேளை அவன்(அது) வெளியில் செல்ல விரும்பினால்.’’
அவன் எழுந்து, கதவைச் சிறிது இடைவெளி இருக்குமாறு திறந்துவிட்டு, படுக்கைக்குத் தாவினான். அவள் அவனைத் தன் கால்களால் சுற்றினாள்; அவன்மீது குதிரையில் இருபக்கமும் காலிட்டு அமர்வது போல ஏறியமர்ந்து அசைந்தாள். அவளுடைய தெளிவான காட்சியில் அவன் படு கிழவனாக, இறந்தவனாக, வெகு தொலைவில் தெரிந்தான். அவள் குனிந்து அவன் முகத்தை இருகரங்களாலும் பற்றி, ’’ இந்த முகம்,’’ என்றாள். அது தங்கமுலாம் பூசிய பாறையைக் கையில் ஏந்தியதைப் போலிருந்தது.

அவர்கள் ஆடைகளைக் களைந்தார்கள். அவள் அவன் மீது படுத்து அவனுடைய மார்புக்குழியில் ஒரு காதை வைத்தாள். அவனுக்குள்ளிருந்த திரவம் ஷக்-அஷுக்கா எனச் சென்று அவளை மீண்டும் மீண்டும் முத்தமிட்டது.
* * *

அவள் இதற்கு முன் எப்போது சுவாசக்கருவியோடு மூழ்கிக் கடல் கண்டிருக்கிறாள்? ஃப்ளோரிடாவில், எல்லாமே விலைக்குக் கிடைக்கும் மற்றோர் இடமான பென்சகோலா அருகில் பொழுதெல்லாம் மழைபெய்த ஒரு நாளில், அப்பாவுடன் எப்படியானாலும் பரவாயில்லையென, வாடகைக் கருவிகளுடன் ஒரு நூறு கஜம், அதுவும் கடலுக்குள் எழுப்பப்பட்டிருந்த அலைத் தடுப்புச்சுவர்களுக்கு அருகில் மட்டும் சென்றிருந்தாள்.

அப்போது அவர்கள் எதையும் பார்த்திருக்கவில்லை; எல்லாமே ஒரு மங்கலான இருட்டாக இருந்தது. ஆனால், இப்போது, இங்கேதான், கடலுக்குள் மூழ்கிச்சென்று பார்க்க வேண்டியதெல்லாம் இருந்தது. பவளப்பாறை மங்கிய நிறத்திலிருந்தது. அங்கே மீன்கள் கூட்டங்கூட்டமாக இல்லை. தனித்தனியாக நீந்தின; அநேகமாக நீலமீன்கள்; கடும் ஆரஞ்சுநிறத்தில் சில சிறிய மீன்கள்; ஒரு சிவப்பு நிற மீன் செவுள்ப் பகுதியிலிருந்து வால் முடிய கறுப்பும் வெள்ளையுமான பட்டைகளுடன் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பளீர் மஞ்சளில் ஒன்று பிலாரின் முகமூடிக்குள் புகுந்து அவளோடு இணைந்துகொள்ள விரும்பியது; அது அவளையே பின்தொடர்ந்து முகமூடி மூக்கின் மீது தொற்றிக்கொண்டது.

இருவர் அமரக்கூடிய, எஸ்கிமோ படகுபோல் தோன்றுகின்ற, காற்றூதப் பருக்கும் மிதவை ஒன்றில் அவர்கள் அமர்ந்து, சூரியன் மறையும் காட்சியை இன்னும் அருகாகக் காணலாமென நம்பி, வளைகுடாவிலிருந்த ஒரு தீவை நோக்கித் துடுப்பிழுத்தனர். அவர்கள் மிதவையைத் தீவுக்குள் இழுத்தனர். தீவு அவர்கள் எதிர்பார்த்தது போல் மணல் மூடியதாக இல்லை; ஆனால் சிப்பிகளும் சோழிகளுமாக இருந்தது. கரையிலிருந்து பார்க்கும்போது அந்தத்தீவு வெள்ளையாகத் தெரிந்தது. தீவின் வெள்ளை நிறம் அந்தச் சிப்பிகள், சோழிகள்தான். கோடிக்கணக்கானவை; அவற்றின் வடிவங்களும் வகைகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. பிலாரும் ஹாண்டும் ஒவ்வொரு முறை அடியெடுத்து வைக்கும்போதும் அவற்றில் பத்துப்பன்னிரண்டு உடைந்தன. பசிபிக்கை நோக்கியவாறிருந்த தீவின் கடைசி எல்லையில் இறங்கியிருந்த கூட்டம் பெலிக்கன் பறவைகள் போல் தோன்றின; ஆனால், அவை பெலிக்கன் இல்லை; பெலிக்கனைவிடவும் அழகுத் தோற்றம்; அவற்றின் எண்ணிக்கை ஐம்பது இருக்கலாம். அவை நின்றிருந்த பரப்பு எரிமலைக்குழம்புபோல, ஆனால், மேலும் இளகிய தோற்றத்தில் பிசுபிசுப்புடனும் கருகிய தசையின் நிறத்திலும் இருந்தது.

மிதவையிலிருந்து மீண்டும் நீர்மூழ்கும் உடைக்கு மாறினர். சுவாசக் கருவியின் நெகிழிக்குழாயை, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்த அதனைத் தம் வாயில் பொருத்திக்கொண்டனர். அதன் குளிர்ந்த துடுப்புகளோடு பாதுகாப்பாகக் கடலுக்குள் மூழ்கினர்.

தளத்திலிருந்த எல்லா மீன்களும் அலைகளால் முன்தள்ளப்படுவதும் பின்னிழுக்கப்படுவதுமாக அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. கடலே அவற்றின் வாழிடமாக இருந்தாலும் அடிநீர் ஓட்டத்துக்கு அவை சிறிதும் பழகிக்கொள்ளாதது போலவே தோன்றியது. மழையின்போது, குழப்பத்திலிருப்பது போலவும் ஆனால், காரோட்டும் கலிபோர்னியர்களைப் போல எச்சரிக்கையாக இருப்பது போலவும், அவை தோற்றமளித்தன. பிலாரின் கைகள் அவளை முன்தள்ள, முகமூடியின் முன்புறம் ஒளிரும் கதிரில் தேவதைத்தோற்றத்தை அளித்தது. அவள் தன்னை ஒரு தேவதையெனக் கருதிக்கொண்டாள். ஆனால், இந்த மீன்கள் அங்கே என்ன செய்தன? அவை இந்தச் சோரம்போன அலைகளால் எங்கே தள்ளி, எங்கே இழுக்கப்பட்டன? அங்கே எங்கும் வாழ முடியாது. பவளப்பாறை மங்கல் நிறத்தில் மலட்டுத் தரிசாக இருந்தது. ஆனால் அந்த ஒளிரும் மீன்கள் பிறரால் பார்க்கப்படவும், எங்கும் அலைக்கழிக்கப்படவும், உண்ணப்படவும் மட்டுமே உயிர்வாழ்கின்றன. அவளுக்குத் தெரிந்த மனிதர்களைப் பற்றி எண்ணினாள்; அவள் தனக்குத்தானே உவம, உருவகங்களைக் கற்பித்துக் கொண்டாள். கடவுள் அவரது கற்பனையில் கண்டவாறு, கதிரவன் எண்ணற்ற, நேரொளிக்கதிர்களால், நீர்ப்பரப்பினைத் துளைத்தான். அவள் படங்களிலும் செல்லப்பிராணிகள் விற்பகங்களிலும் கண்டிருந்தவாறு தண்ணீர் முழுவதும் மீன்கள் நிறைந்திருந்தன.
அவர்கள் எதிரெதிர் சுவர்களைப் பார்த்தவாறுதான் கண்விழித்தார்கள்; ஆனால், அவர்கள் கணுக்கால்கள் பிணைந்திருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் புன்னகைத்தார்கள். ஹாண்ட் கையை நீட்டி அவள் மூக்கைத் திருகியெடுப்பதுபோல் பற்றினான். கடந்த இரவு எந்தக் குழப்பமுமின்றி, நன்றாகவே நிகழ்ந்தது. அதனால் அவர்கள் இருவரும் இனிமேல் சேர்ந்து உறங்குவதைத் தொடரலாமென பிலாருக்குத் தோன்றியது. அது இப்படி நிகழும்: இரவில் அவர்கள் இருவரும் பல் துலக்கிவிட்டு படுக்கையில் அமர்ந்து, மெல்லிய போர்வையினடியில் ஒருவரோடொருவர் கால்களைச் சுற்றிக்கொள்வார்கள்; இருவரும் ஒருவரைநோக்கி ஒருவராகப் பாய்ந்து கட்டிக்கொள்வார்கள்; கண் தெரியாத பாவனையில் தடவும் குழந்தைகளைப்போல அவர்களின் கரங்கள் தேடிக்கொண்டிருக்கும்.

பிலாரின் இடதுபக்கத்தில் வாயு ரக விமானம் போன்ற உடலில், வரிகளிட்ட மூன்று சிறிய சுறாக்கள் வந்தன. அவை அவளை நோக்கியே வந்தன. அவள் அமைதியாக இருந்தாள்; பாதுகாப்பாகச் சமாளித்துவிடலாமென அவளுக்குத் தெரியும். அவள் தீவுக்கரையை நோக்கித் தலையைத் திருப்பினாள்; அவளின் கால்த்துடுப்புகள் வேகவேகமாக அசைந்து சுறாக்களிடம் விடைபெறுவதாகத் தெரிவித்தன; அவளின் கைத்துடுப்புகள் தென்றலிலாடும் கைக்குட்டைகளைப் போல் தோன்றின. கரையின் அருகில் ஆழமற்ற வெதுவெதுப்பான நீருக்குள் பாசிபடிந்த பாறைகளின் மேல் கால்கள் வழுக்க நின்று ஹாண்டை எதிர்பார்த்தாள்; அவனை எங்கும் காணவில்லை; அவன் சுறாக்களால் தாக்கப்பட்டுவிடாமலிருக்கவேண்டுமேயென நினைத்தாள். கதிர் மறையும் காட்சி இளஞ்சிவப்பில் தோன்றி, சிந்திச் சிதறிய நீர்ச்சாயம் போல் பரந்துகொண்டிருந்தது. அந்தத் தீவில் அவன் மீது அமர்ந்து, மறையும் கதிரைக் காண அவள் விரும்பினாள்.

ஆனால் அந்தத்தீவில் வேறொரு மனிதன் இருந்தான். அவள் இதற்கு முன்னால் அவனைக் கண்டதில்லை; அல்லது அவன் இப்போதுதான் தலை காட்டினான். கண்ணுக்கெட்டிய தொலைவில் ஹாண்ட் இல்லை; ஆனால் இந்த மனிதன், சிறிது தூரத்துக்குள்ளேயே, அவளுக்குக் கையசைத்து, அவளை நோக்கி நடைபோட்டான். சுமார் நாற்பது வயதிலிருந்த அவன் ஒரு சிறிய நீச்சல் உடையணிந்திருந்தான்; நியான், வெள்ளிச் சட்டகத்தில், பிரதிபலிக்கும் ஆடிகளிட்ட வெப்பம் தடுக்கும் கண்ணாடி அணிந்து காணப்பட்டான். அவள் சுறாக்களுக்குப் பயப்படாமல் மீண்டும் தண்ணீருக்குள் குதித்தாள்.
கரைக்குத் திரும்பிச் செல்லும்போது, நகரத்து மனிதர்களின் கவனத்தை ஈர்க்குமாறு ஆடையணிந்ததற்காக ஹாண்ட் அவளைக் கடிந்துகொண்டான். அந்த நகரத்து மனிதர்களைப் பற்றி அவர்கள் இருவருமே போதிய அளவு தெரியாதவர்கள், அதனால் அவர்கள் மீது நம்பிக்கை கொள்வதும் முடியாதது.

‘’ இரையாகக் காட்சியளிப்பது எத்தகையதென நான் எப்போதுமே வியப்பதுண்டு’’ என்றான், அவன். அவனருகில் அவள் நடந்துகொண்டிருக்கும் போது, அந்த நகரத்து மனிதர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அவன் மிக விரிவாகப் பேசினான். பகுதித் தானியங்கித் துப்பாக்கி ஒன்றைச் சுமந்து வங்கி வாசலில் நின்றிருக்கும் ஒரு காவல் ஊழியர், பிலாரும் ஹாண்டும் அந்த வங்கியினுள் செல்லும்போதும் வெளிவரும்போதும் அல்லது வங்கியருகில் நடந்துசெல்லும்போதும் பிலாரையே மேலும் கீழும் பார்ப்பதாக அவன் சொன்னான். மார்க்கச்சை அணிய வேண்டாமென அவள் எப்படி முடிவுசெய்தாள்? என்று அவன் தெரிந்துகொள்ள விரும்பினான். அவளைப் பயமுறுத்துவதற்காக இல்லையெனச் சொல்லிவிட்டு, ஆனாலும் ஆண்கள் தினசரி பார்க்கும் பெண்களில் சிலர் மீது இச்சைகொள்கிறார்கள் என்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களில், தாக்கும் நபருக்கு ஓரளவு அல்லது சிறிதளவாவது அறிமுகமான பெண்களே தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என்றும் அவன் சொன்னான். எனவே, இதுமாதிரியான மனிதர்களின் வெறிப்பார்வை அவள் மீது விழாமல், அவள் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டுமென்றான் – அவன் அந்த வார்த்தையையே பயன்படுத்தினான். அவள் பேச்சிழந்து போனாள்; கடுஞ் சீற்றம் கொண்டாள்; குழம்பி, அவமானமாக உணர்ந்தாள்; அவனைத் தடியால் அடித்து உதைத்து, அவன் தலை மேல் ஏறி நடனமாட விரும்பினாள்.

‘’ உன் முகம் ஏன் இப்படியாகிறது? குழப்பிக்கொள்ளாதே, பயப்படாதே! நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன், பிலார்,’’ என்றான், அவன்.

ஒரு பிரன்ஹா மீனைப்போல அவளின் கீழ்த்தாடை நீண்டு பற்கள் வெளித்தெரிந்தன. அவளாகத்தான் அப்படிச் செய்தாள். அவன் சொன்னதால் ஏற்பட்ட கோபத்தை விடவும் அவள் அதிக கோபம் கொண்டது, `அது எப்படி இருந்ததோ அப்படித்தான் எப்போதுமே இருக்கிறது, இப்போதும், இனிமேலும், என்பதி`ல்தான்: அவள் சுதந்திரமாக இல்லை. எதுவாக இருந்தாலும் அவள் அறிவுறுத்தப்படுவாள். அவனை உடனடியாக வேறுவகை மனிதனாக அவள் வகைப்படுத்த வேண்டும். தெளிவாகத் தெரிவது என்னவெனில், இது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது, அதிகப்படியாக வேறெதுவும் இல்லை.
* * *

மாலை நேரங்களில் கதிர் கடலுக்குள் விழுந்து வானம் விரைந்து இருண்டுவிடும். தோற்கவசப் பெருச்சாளிகள் (armadillos) அவர்களின் தளத்துக்குக் கீழே, தெருவிளக்கினடியில், உயரமான புற்களின் நடுவில் அவற்றின் பளபளக்கும் மேலோடுகள் தெரிய ஓடி மறைந்தன. பிலாரும் ஹாண்டும் படுக்கும் கட்டிலின் கீழே சிதறிக்கிடக்கும் துணுக்குகளை எறும்புப் பட்டாளங்கள் சுற்றிலும் பற்றிக்கொண்டு கதவுக்கு, அதன் அடியில், கண்ணுக்குத்தெரியாத இடங்களுக்கு என நகர்த்திச் சென்றன. திரைக்கதவுக்கு மேலிருந்த சுவரில் வீட்டுப்பல்லிகள் மேலும் கீழுமாக, அறையின் மத்தியிலிருந்த உத்திரத்துக்குச் செல்வதும் வருவதுமாக வளைந்து வளைந்து ஊர்ந்தன; அந்த உத்திரம் அவற்றின் வீடு போலத் தெரிகிறது. பகலில் தூசிகள் தெரியும் வெள்ளை ஒளிப்பட்டை அங்கு நடுங்கித் துடிக்கவேயில்லை; எல்லா நாட்களிலும் மூன்று அல்லது நான்கு மேகங்கள் மிதந்தன.

அந்தச் சில நாட்களுக்கு மட்டும் பிலாரும் ஹாண்டும் திருமணமானவர்கள். அவர்கள் நீர்ப்பலகையாடிய பின்னர், பலகைகளின் துடுப்பு மேல் நோக்கி இருக்குமாறு அவற்றைக் கடுமணலில் கிடத்திவிட்டு, அந்தச் சமதளக் கடற்கரையில் அமர்ந்து, வட்ட வடிவ நொறுக்குத் தீனி வகைகளைத் தின்று ஃபாண்டா குடித்தனர். அவர்கள் பருப்புகளையும் பிஸ்கட்டுகளையும் தின்றுகொண்டே கடல்நீரை வேடிக்கை பார்த்தனர். தின்று முடித்தபின் அவள் தலை அவன் மடியிலிருக்க இருவரும் ஒரு குட்டித் தூக்கம்; ஒருமணி தேரத்தில் மீண்டும் அவர்கள் கடலுக்குள் பலகையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கடலுக்குள் தண்ணீர் கறுப்பாக மாறும்வரை இருப்பார்கள்; பின்னர் கதிர் கடலுக்குள் மறையும்வரை இருப்பார்கள்; அப்போது கறுப்புநிறத் தண்ணீரில் ஆரஞ்சு வண்ணப் பட்டைகள் விட்டுவிட்டுத் தெரியும்.

இரவில் நீர்விளையாட்டாளர்கள் வெறுங்கால்களோடு, ஆனால், ஒருவாறாகக் கடைசியில் அலசிக் கழுவப்பட்ட, பஞ்சு பஞ்சாகப் பறக்கும் தலைமுடிகளோடு தெருக்களில் திரிந்தனர்; ஆஸ்திரேலியத் தம்பதியரால் வாடகைக்கு நடத்தப்பட்ட இணையதள நிலையம் ஒன்று அங்கு இருந்தது. தம்பதிகள் ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்துகொண்டு, அவர்களுக்குக் கவர்ச்சியாகத் தோன்றியவர்களை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே நடந்தனர். அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம். அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்களெனத் தெரிந்துகொள்ள எந்த வழியுமில்லை.

ஒவ்வொரு இரவிலும் உணவுக்குப் பின்னர், முகத்தில் பாதி கருகியிருந்த ஒரு மனிதனிடம் ஐஸ்க்ரீம் வாங்கினார்கள். கருகியிருக்கலாம், அல்லது முகமே அப்படியாக இருக்கலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய,பெரிய பருக்களும் மருக்களுமாக அவன் முகம் ஒரு காட்டுப் பன்றியின் பின்புறம் போல இருந்தது. நிலவு வழக்கமாகவே வெள்ளைக் களிம்புப் பின்னணியில் மஞ்சள்நிறமாக இருந்தது.

இடம்பெயரும் பெரியபெரிய ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவதைக் காண அவர்கள் ஒரு இரவில் சென்றார்கள். பிறந்த மேனிக்கு உலராத திரவப்பசையோடு, மென்மை மாறாமல் நூற்றுக்கணக்கான இளம் முட்டைகள். அந்த மாபெரும் உயிரினம் ஒவ்வொரு முறை முட்டைகளிட்டதும் மணலை அந்த வளைக்குள் சிதறித் தெளித்தபோது அவர்கள் அதன் பின்புறமாக நின்று கவனித்தார்கள்.

சில வேளைகளில் தெருவில் குழப்பம் நிலவியது. சில நாட்களில் வரிப்பந்து விளையாடும் சப்தம் கேட்கும். ஆனால் அதற்கான திடல் கண்ணில் படவில்லை; ஒருமுறை அதைத் தேடிப்பார்த்தும் எங்கும் காண முடியவில்லை. கடற்கரையை ஓவியமாகத் தீட்டிக்கொண்டிருக்கும் ஒரு நபரைக் கண்டார்கள். அவர்கள் பார்ப்பதையும் பேசுவதையும் அவர் விரும்பினார். பிலடெல்பியாவிலிருந்து வந்த அவருக்கு ஒரு வருடம் முழுக்கக் கெட்டதாக இருந்திருக்கிறது. சட்டச் சிக்கலான ஒரு மணவிலக்கு; ஒரு நண்பனின் மரணம்; அதுவும் அவன் தாஹோவில் ஒரு பனிச்சறுக்குப் பயணத்தின்போது கொல்லப்பட்டிருந்தான்.

ஒருமுறை அவர்கள் கிளர்ச்சியின்றிச் சேர்ந்துறங்கினார்கள்; அது அருவருப்பாக இருந்தது. அவர்கள் காதலர்கள் அல்ல; ஆனால் ‘ட்விஸ்டர்’ (பிள்ளையார் பந்து) விளையாடும் நண்பர்கள். மறுநாள் மீண்டும் அவர்களது அசலான திட்டத்துக்குத் திரும்பினார்கள். அவர்கள் கொஞ்சமாகக் குடித்துவிட்டு உணர்நிலைக்குச் சற்று கீழே, வரம்புகள் ஏதுமில்லை என்ற உணர்வுடன் படுக்கைக்குச் சென்றனர். தூரத்திலிருந்து அவர்களைக் கவனிக்கும் யாரோ ஒருவர் கேட்கலாம்: அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் பேசினார்கள்? அதன் பதில்: அவர்கள் முதிர்ந்தவர்களாக இல்லையென்றாலும், மிக முதிர்ந்த நட்பின் இதமான உணர்வோடு பேசினார்கள். அவன் அவளை எப்படித் தொட்டுணர்ந்தான்? நயமற்று. ஏனெனில் அவன் செயல்நயம் அற்றவனாகவும் அவள் குறைகாண்பவளாகவும் இருந்ததால். அவள் அவனை எவ்வாறு முத்தமிட்டாள்? தண்ணீரில் குதிக்காமலேயே குளத்தின் அடித்தளம் செல்ல முயற்சிக்கும் பெண்ணைப் போல, விரக்தியின் விளிம்பில், பட்டும் படாமலும்.

அவர்கள் நடக்கும்போது, அவர்களின் காலணிகளுக்குள் வழக்கமாகச் சிறு கற்கள் ஏறிக் கொண்டன. ஏனெனில் ரோட்டில் சிறுசிறு கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன; அவர்களின் காலணிகளோ இறுக்கமின்றியிருந்தன.
* * *

அவர்களுக்கென எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை; பிலார் வீட்டுக்கும், ஹாண்ட் கிரானடாவுக்குமாக, பிற்பகலில், ஆல்ட்டாவிலிருந்து செல்லவிருந்தார்கள். அதனால், அவர்கள் முன்னதாகவே பலகைகளை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு, ஒன்பதுக்கெல்லாம் கடலுக்குள் இருந்தனர். அது சிக்கலில்லாத நாளாக இருந்தது.

அவளுக்கு முன்பாகவே ஹாண்ட் கடலுக்குள் சென்றுவிட்டான்; அவள் நல்ல சூடேறி உடல் வறளும் வரைக்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தடுப்புச் சுவர்களைக் கடந்து பலகையாடினாள். அதற்குள் நான்கு பெரிய அலைகள் எழுந்து வந்து குடிகாரர்களைப்போலக் குலைந்து சிதறிப்போயின. ஒவ்வொரு முறையும் பலகைமீதே அமர்ந்திருக்கும் நம்பிக்கையில் பலகையின்மூக்கை அலைக்குள் நுழைக்கவேண்டியிருந்தது; அல்லது முன்னதாகவே அலைக்குள் குதித்துச் சரணடைந்து, விட்டுச் சென்ற பலகை மீளும் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. மிகவும் சோர்வாக இருந்தது.

ஹாண்ட் மீண்டும் ஒரு பெரிய அலைமீது பயணித்தான்; பிலார் மட்டும் அதில் செல்ல முயற்சித்திருந்தால், அது அவளை நொறுக்கித் தள்ளியிருக்கும். அவன் கரையை நோக்கி அலையை விட வேகமாகச் செல்வதாகத் தோன்றியதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அலைகள் மீது பயணிக்கும் சிலர், வேறு பயணிகள் இல்லாதபோது, அலைகளைவிடவும் மிகுந்த வேகத்தில் செல்வதை அவள் கண்டிருக்கிறாள். ஹாண்ட் அந்த அலையை மிகச் சரியான கணத்தில் பிடித்து, இடதுபக்கமாக, அதன்மீது, மேலும் மேலுமாக, அவன் பொழிமுகத்தை நோக்கிப் பறந்தான். அது முடிவேயில்லாதது போல் தோன்றியது. குறையே இல்லாத முற்றுமுழுமை. அவன் பிலாரை நோக்கிக் கையசைத்தான். அவள் பதிலுக்குக் கையாட்டினாள். நீர்விளையாட்டிலிருக்கும் யாரொருவருக்கும் கையசைப்பது அருமையானதென பிலார் நினைத்தாள். அவன் கையாட்டுவதை, தொடர்ந்து கையாட்டுவதை, பலகையை விரைந்து, சிறிதாகத் திருப்புவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் அவனைக் காதலித்திருப்பாள், இருக்கலாம்.

அவள் மீண்டும் எழுந்து உட்கார்ந்து, நீலப்பரப்பில் எழும் மேடுகளுக்காகக் காத்திருந்தாள்.

இக்கதையில் பதிலளிக்கவேண்டிய கேள்வி என எடுத்துக் கொண்டால், அது ஒன்றல்ல, பலவாக இருக்கும். இவைதாம் அந்தக் கேள்விகள். இவற்றையெல்லாம் அனுமதிக்குமளவுக்கு உலகம் எப்படி நல்லதாக இருக்க முடிகிறது? இவர்களை இப்படியே எவ்வளவு காலத்துக்கு அனுமதிப்பது? இத்தனை மைல்கள் தெற்கே பயணித்து, ஒரு மாறுபட்ட இடமாக இருந்தாலும், நல்ல வசதியான இந்த இடத்தில், மீண்டும் சந்திக்க அனுமதிப்பது? முதல் முறையென்று நிர்வாணமாக இருவரும் சேர்ந்திருக்க அனுமதிப்பது? அவர்களின் பெற்றோர் என்ன நினைப்பார்கள்? அவர்களின் நண்பர்கள் என்ன நினைப்பார்கள்? யாரொருவராவது மறுப்பார்களா? அவர்களுக்காக யார் திட்டமிடுவார்கள்? நாம், வாழ்க்கையில் முக்கியமான, ஆனால், யாரையும் துன்புறுத்தாத முடிவுகளை எத்தனை முறை மேற்கொண்டுவிட முடியும்? யாருக்கும் துன்பம் விளைக்காத வகையிலிருந்தால், எந்த ஒரு நேர்வுக்கும் அல்லது தேர்வுக்கும், சரி அல்லது ஆம் என்று சொல்ல வேண்டிய கட்டாயக் கடப்பாட்டில் தான், இருக்கிறோமா? நாம் அப்படியும் இருக்கலாம்தான். நாம், இங்கே ‘துன்புறுகிற’ என்ற வார்த்தையை இக்கதை போன்ற நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டுதான் பேசுகிறோம். ஏனென்றால், அவர்கள் தவறு செய்யும்போது, ஏதோ ஒரு பெரிய மிருகம் வெகு தூரத்திலிருந்து பாய்ந்து வந்து உங்கள் மார்பில் குத்துவது போல நீங்கள் உணரலாம்.
* * *

இரண்டு மணி நேரத்தில் அவள் இரு அலைகளை எதிர்கொண்டிருந்தாள். இப்போது அவள் அலைகளிடம் எச்சரிக்கையாக இருந்தாள். அலைகளின் மீது பயணிப்பதைக் காட்டிலும் அவற்றைச் சமாளிப்பதில் அதிக கவனம் கொண்டாள்; அலைகளைச் சமாளிப்பதைக் காட்டிலும் அவற்றைப் பார்த்தாலே போதுமென நினைத்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்புச் சுவர்களுக்கு அப்பால் நீர்ப்பலகை மேல் மிதந்து கொண்டிருக்கவே விரும்பினாள். ஒவ்வொரு அலைப்பயணமும் முடிந்தபின், திரும்பி, வருவது, சுவர்களைக் கடந்து வருவது, மிகச் சிரமமாக இருந்தது.

அவள் கைகள் மிகவும் மெலிந்தவையாக, பசையில் தோய்த்த மர ஆணிகள் போலத் தோன்றின.அழுதுவிடும்படியாகத் தோள்கள் வலித்தன. இவ்வளவு கடினமாக, அதிலும் குறிப்பாக இங்கே இப்படி இருப்பது, சரியல்ல. அலைகள் அவளுக்குச் சிறிது முன்பாகவே சிதைந்து, உயரமும் வலிமையும் கூடிய நுரைகளோடெழுந்து அவளை உருட்டிவிட்டுக் கடந்து செல்லும். பலகையிலிருந்தும் தூக்கியெறியப்பட்ட அவள், திக்குமுக்காடி, முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, வாய்க்குள்ளும் மூக்கிலும் ஏறிய தண்ணீரைத் துப்பிப் பீய்ச்சியடித்து பலகையின் மீது திரும்பக் குதித்தேறி இரண்டு மூன்று முறை துடுப்பசைத்து, பத்தடி முன்னே வந்ததும் பறிபோய், மீண்டும் பலகையிலிருந்தும் தூக்கியெறியப்பட்டாள்.

கண்களை மூடிக்கொண்ட அவள், மீண்டும் திறந்து மூடினாள். இந்த வாழ்க்கைக்கு அவளால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்; அல்லது நடப்பவை நடக்கட்டுமென ஏற்றுக்கொள்ளவும் முடியும். எல்லாவற்றையும் அவளால் அறிய முடிந்தாலும், முடியாவிட்டாலும் அனைத்தின் மீதும் இப்போதும் கூட அவளுக்குப் பிடிமானம் இருந்தது. அந்த நிமிடம், இறைநம்பிக்கையுள்ள, அதிலும் சிந்தனைவயப்படும் ஒரு நம்பிக்கையாளர், கடவுளின் படைப்பு குறித்தும் அது எவ்வளவு அருமையானதாக இருந்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிற கணமாக இருந்திருக்கும். வலதும் இடதுமாக முழுமையான அலைகள் வந்தன. இடதுபக்கம், வெகுதூரத்தில், நீளமான உயரமற்ற வேகம் குறைந்த ஒரு அலையின் மீது பயணித்துக்கொண்டிருந்த பசு மேய்ப்பர் தொப்பி அணிந்த மனிதனின் உரத்து நீண்ட உற்சாகக் கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. ஊசிமுனையில் வெற்றிகொள்வது எப்படி என்று ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்த, அவளுடைய தேவாலயக்குழு மனிதனை பிலார் நினைத்துக்கொண்டாள். அவள் வளைந்த ஆணுறுப்புகள் குறித்தும் சிந்தித்தாள். நம்மைச் சுற்றிலுமிருக்கிற இயற்கையில் கடவுள் இருப்பதாக, இயற்கையாக உருவாகியிருக்கிற யதார்த்த உலகமாகக் கடவுள் இருப்பதாகக் கற்பித்தவர்களை எண்ணிப் பரவசப்பட்டாள். உயிருள்ளவை அனைத்திலும் கடவுள் இருப்பதாக, உயரமான புற்களிலும் அருவிகளில் தோன்றி முடியும் நீர்த்திவலைகளிலும் கடவுள் இருப்பதாக, கடவுளே அழகு என்றும் சொல்வார்கள். அதுபோன்ற விஷயம், கண்ணால் காண்பவற்றில் கடவுள் இருப்பதான கருத்து அவளுக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் எல்லாவற்றையும் கண்ணால் காண்பதை அவள் விரும்பினாள். அப்படிக் காண்பவற்றில் அவள் விரும்புகிற அனைத்தும் இருப்பதாக நம்பிக்கை கொள்ள விரும்பினாள். இங்கே அனைத்தும் இருக்கிறது, அது புலனாகக் கூடியது, கண்களே ஒருவகையில் மதகுருவாக, கடவுளுக்கும் பிறவற்றுக்கும் இணைப்பாக, எனத் தோன்றும் எண்ணங்களை அவள் விரும்பினாள்.

அவள் ஹாண்ட்டை நோக்கினாள். அவன் அநேகமாகப் பொழிமுகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்; பலகைப் பயணத்தை நிறுத்தி, அதிலிருந்தும் இறங்கினான்; அங்கே தண்ணீர் முழங்காலளவே இருந்தது. அவன் ஒரு நிமிடம் நின்று, மறைவுப்பகுதிகளை இறுக்கியிருந்த நீச்சல்உடையைத் தளர்த்திச் சரிசெய்துகொண்டான். பின்னர், அவன் துள்ளித்துள்ளிச் சென்றான்; தலைமுடியை நீருக்குள் நனைத்தான்; இந்த அலையோட்டத்தில் அவனது தலைமுடி காய்ந்துவிட்டதா? நம்பமுடியாதது. இன்னும் சிறிது நேரத்திற்கு அவன் திரும்பப் போவதில்லை.

ஆனால், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒற்றைக் கடவுள் யூகத்தை, அல்லது சமூகப்படிநிலைகளின் திணிப்பினை அவள் ஏற்பதில்லை. அந்தக் கடவுள், ஒன்றுக்கொன்று எதிர்மறையான உச்சங்கள், பிரிவுகள், உட்பிரிவுகள் மற்றும் வெளிப்படையாகப் புலனாகாத பல்வேறு கண்டனங்களுக்கு வழிவகுக்கும் மறைமுகத்தேர்வுகள் கொண்ட அமைப்பு ஏற்பட ஏதுவாகிறது. அதனால் பிலாரின் உலகத்தில் அது மாதிரியான கடவுளுக்கு இடமில்லை; அதுபோலவே மனித எல்லை கடந்த தெய்வமும் – அப்படியெனில் கடவுள் எதற்காக? எண்ணெய் மிதக்கும் தண்ணீர் கடவுள் அல்ல. அதில் ஒருசிறிதும் புனிதம் அல்லது ஆன்மீகம் இல்லை. அதுவோ எண்ணெய் மிதக்கும் தண்ணீர்; கைகளை விட்டு அளைந்தபோது, அது முழுமையான பூரணத்துவம் கொண்டதென பிலார் உணர்ந்தாள்; அது அவளது உள்ளங்கைகளை மீண்டும் மீண்டும் முத்தமிட்டது; முத்தமிடுவதை அது நிறுத்தப்போவதில்லை; அதுவே ஏன் போதுமானதாக இல்லை?

அவளுடைய பலகை அப்போது ஒளி மங்கிக்கொண்டிருந்த கதிரை அநேகமாக நேருக்குநேர் நோக்கியிருந்தது. மங்கும் கதிர், கடல்நீரின் எண்ணெயைப் போன்ற தோற்றத்தை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருந்தது. அதன் நிறத்தைப் பொன்னிறமும் பச்சையும் இருளும் கலந்ததைவிடப் புதிய ஒன்றாக மாற்றிக்கொண்டிருந்தது. கதிர் பெரியதாக, வழக்கத்திற்கு அதிகமான மூவுருத் தோற்றத்தில் தெரிந்தது. கதிரொளி கடலைப் பொன்னாக மாற்றாத இடங்களில், தண்ணீர் கருமை நிறத்திலிருந்தது. தண்ணீர் மெல்லச் சூடேறிக்கொண்டிருந்தது. வலது, இடதுபக்கங்களில் நீர்விளையாட்டாளர்கள் கரை நோக்கி, மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் தோற்றம் கணத்துக்குக் கணம் தேய்ந்து நிழலுருவங்களாகிக்கொண்டிருந்தது.

அவள் பலகையில் எழுந்து இருபுறமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்து, கைகால்களை முன்னும் பின்னுமாக அசைத்தாள். அவள் அலைமீது செல்ல விரும்பவில்லை. தெளிவற்ற கறுப்பு உருத்தோற்றங்களின் சவாரியில் அலைகள் அவளுக்குப் பின்னால் அசைந்துகொண்டிருக்க, அவள், அங்கேயே அப்படியே நெடுநேரம் உட்கார்ந்திருக்க விரும்பினாள்; அப்படியே உட்கார்ந்து, தொலைவை வெறித்துக்கொண்டு, தண்ணீர் இன்னும் அதிகமாகப் பொன்னிறம் கொள்ளும் வரை காத்திருக்க விரும்பினாள்.

கதிர் மறைந்து, தண்ணீர் கறுப்பானதும் வருகின்ற கடைசி அலையில் அவள் பயணித்து உறங்குவாள். முதுமையில் அவள் எப்படி உணர்வாள் என்பதை இப்போதே அறிவதாக உணர்ந்தாள். அவள் மேலும் நகர்வதற்கு மிகவும் களைப்புற்றிருந்தாள். மீண்டும் கடலுக்குள் சென்றால், கரைக்குத் திரும்ப முடியாதென்பதை அவள் அறிவாள்; ஏனெனில் அவள் கைகள் பசையில் தோய்த்த மர ஆணிகளாக மாறிப் போவதாக உணர்ந்தன.
* * . *

மாலை மயங்கிய நேரத்தில் அவர்கள் நகரத்திலிருந்து புறப்பட்டனர். கயிறு போன்றிருந்த சாலை முழுவதுமாகக் குண்டும் குழியும் நிறைந்து, சுற்றுலாப் பயணிகளின் எஸ்.யு.விக்கள் வரிசை வரிசையாக, அவற்றின் வாடகை நிறுவனங்களுக்கு விசுவாசமாக, சேற்றுக்குட்டையைச் சுற்றிக்கொண்டு செல்ல எச்சரிக்கையாகக் காலெடுத்து வைக்கும் யானைகளைப்போல, மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. அவர்கள், அவற்றைக் கடந்து, கருநீலத்தில் விருந்தளிக்கும் கதிர் மறைவினை விட்டுச் சென்றுகொண்டிருந்தனர். அழுக்குச் சாலை, கப்பிச்சாலையாகி, முடிவில் குண்டுகுழிகளற்ற தார்ச்சாலையானது. ஆனாலும் இரண்டே வழிகளாகக் குன்றுகளைச் சுற்றியும் அவற்றின் மீது ஏறி இறங்கியும் சென்றது. ஆனால் நீண்ட விரல்களின் தலைமேல் ஜரிகை சுற்றியிருந்த மரங்கள் அமைத்த அழகிய பந்தலின் கீழேயே எப்போதும் சென்றது.

இரவு மைக்கறுப்பானதும், அவர்கள் காரின் வெளிச்சம் மிக அதிகமென அவர்கள் உணர்ந்தார்கள்; எதிர்வரும் கார்கள் படு உற்சாகத்திலிருப்பதாக நினைத்து, மின்னல் அடித்தன. அவர்கள் பதிலுக்கு அவர்களின் முழு ஒளியும் காட்டி மின்னலடித்தனர்; அதற்குப் பழிவாங்குவதற்காக கார்கள் மீண்டும் ஒளியடித்தன. இது போல நூறு தடவைகளுக்கும் மேலாக நிகழ்ந்தன. சிறிது நேரத்திலேயே அவர்கள், அதைத் தங்கள் யோசனையற்ற செயலின் விளைவெனக் கருதி வெறுத்தார்கள்; கண்களில் ஏற்பட்ட கூச்சமும் அழுத்தமும் தாங்கமுடியாததாக இருந்தது. எல்லாம் அந்தக் கார்களின் விளக்கொளி மின்னல், அந்தக் கடும் பாய்ச்சலொளியின் கோபம். ஆனால், ஒரு நொடியில் அனைத்தும் மறைந்து சாலை மீண்டும் இருட்டாகிவிடும். அவர்கள் 110 கி.மீ வேகத்தில் தலைதெறிக்கச் சென்றார்கள்; அந்த அமெரிக்க வேகம் சாலையோர நடைப்பயணிகளையும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் சீற்றம் கொள்ளச்செய்தது; கடந்து செல்கின்ற கணத்தில் மட்டுமே, மனிதர்கள், கார்விளக்கின் ஒளி பளிச்சிட்டு மறைவதைப்போலத் தென்பட்டார்கள்; அநேகமாக அவர்கள்மீது மோதிவிடுவதுபோலத் தோன்றும்; அடுத்து மீண்டும் இருளாகிவிடும். இடைவெளியின்றித் தொடர்ச்சியாக இதர வாகனங்களுக்கு வழிவிடாமல் மெல்ல ஊர்ந்த கார்களையும், சரக்கு வாகனங்களையும் அவர்கள் சுற்றிக்கொண்டு சென்றார்கள்.
* * *

முன்னாள் இரவில் காற்று அதிகமாகி வெளியில் அமைதி குலைந்திருந்தது; அவர்கள் அப்போதுதான் படுத்துத் தூங்கியிருந்தார்கள்; இருவரும் முன்பின்னாக ஒட்டி, ஹாண்டின் முழங்கால், பிலாரின் முழங்காலுக்குப் பின்னாகப் படுத்திருந்தார்கள். பலத்த சப்தம் ஒன்று கேட்டது. ஹாண்ட் எழுந்து உட்கார்ந்தான்; பிலார் என்னவென்று பார்க்க அசைந்தபோது, அவளைப் படுத்திருக்குமாறு, கையமர்த்திச் சைகை காட்டினான். அவன் தன்னைப் பாதுகாப்பதைப் பார்க்க விரும்பிய அவள், அப்படியே படுத்துக்கொண்டாள். அவள் பயந்து விட்டாளா? ஆம். அப்படி எதுவும் ஆகாதென்றாலும் – அந்த வங்கி மனிதன் துப்பாக்கியோடு வந்து, ஹாண்ட்டைக் கொன்றுவிட்டு, அவளைக் கற்பழிப்பது – அதை நினைத்த மாத்திரத்திலேயே பதறிப்போனாள். ஹாண்ட் அவளை ஆறுதல் படுத்தினான்.
ஹாண்ட் அந்த அறையின் முன் வாசலுக்கு வந்து அண்ணாந்து பார்த்து சத்தத்தின் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டான். அது, படுக்கைக்கு நேர்மேலாக இருந்த ஒரு திறப்பு. அங்கே ஆகாய வெளிச்சத்துக்காக ஒரு கூரைச்சன்னல் இருந்திருக்கிறது; அதைக் காற்று இழுத்துத் தள்ளிவிடவே அந்தத் திறப்பு ஏற்பட்டுள்ளது. கூரையிலிருந்த அந்தச் சதுரத் திறப்பின் வழியே, பிலார், இரவின் கருமையைப் பார்க்கமுடியும். ஹாண்ட் படுக்கைக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் இருவரும் ஆடைகளின்றி நண்பர்களாகப் படுத்திருந்தார்கள். வாசலில் யாராவது வருகிறார்களா எனப் பார்க்க விரும்புவதாக ஹாண்ட் சொன்னதற்கு, கூரையில் ஒரு திறப்பு இருப்பது, மகிழ்ச்சியளிப்பதாகப் பிலார் சொன்னாள்.

குறிப்பு :
போகஹோன்டாஸ் – 1595 – 1617க்குள் 21 வயதே வாழ்ந்த ஒரு உள்ளூர் அமெரிக்கப்பெண்.
மொழி நிலையம் – ஆங்கிலம் கற்பிக்கும் நிலையம் Language House
எஸ் யு வி – விளையாட்டுப் பந்தயக் கார்கள் Sport Utility vehicles
‘’ ட்டீல்’’ வாத்து – Eurasian Teal – Colour Blue-green.
வெண்டீஸ் – பழங்கால ஹாம்பர்கர்கள் என்னும் துரித உணவகம்
டில்டோ – பெண்கள் சுய இன்பக் கருவி
லஸ்ஸீயும் கிணறும் – Lassie – தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் வரும் ஒரு பெண் நாய்
ப்யோனஸ் நோச்சஸ் – ஸ்பானிய மொழிச்சொல் – நல்லிரவு (முகமன்)

மலைகள் இணைய இதழ் நவம்பர் 18, 2013 இல் வெளியானது.

No comments:

Post a Comment